வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த தமிழ் மக்களை சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டவர் கோத்தபாய – விக்கினேஸ்வரன் எம்.பி

வெள்ளைக் கொடியுடன் சரணடையும் தமிழர்களை சுட்டு கொல்லுங்கள் என்று இராணுவ அதிகாரிகள் கூறினர் என பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வாரத்துக்கொரு கேள்விக்கு பதில் அளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கேள்வி :- வெளிநாட்டு உள்நாட்டு சதியின் விளைவே தாம் பதவியிலிருந்து நீங்கியமை என்று முன்னைய ஜனாதிபதி கோதாபய இராஜபக்ச கூறுகின்றாரே! உங்கள் கருத்து என்ன?

பதில் :- துஸ்டர்களைக் கண்டால் தூர விலகுவது நாம் காலம் காலமாக செய்து வரும் ஒரு செய்கையாகும். போர் காலத்தின் போதும் அரசியலில் ஈடுபட்ட காலத்தின் போதும் கோதாபய துஸ்டனாகவே வாழ்ந்து வந்துள்ளார்.

2009ம் ஆண்டு மே மாதத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்ட போது, இராணுவ சிங்கள நண்பர்களுடன் எம்மவர் சிலர் பேச நேர்ந்தது. அவர்கள் கூறிய கூற்று அந்த காலகட்டத்தில் எனக்கு பாரிய அதிர்ச்சியைத் தந்தது.

அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் வெள்ளைக் கொடிகளைக் கையில் ஏந்தி சரணடைந்த தமிழ் மக்களை என்ன செய்ய வேண்டும் என்று முல்லைத்தீவு படையணியினர் வினவிய போது பாதுகாப்பு செயலாளராக இருந்த கோதாபய அவர்கள் சற்றும் சிந்தியாது “அவர்கள் யாவரையும் சுட்டுக் கொன்றுவிடுங்கள் என்று கட்டளை இட்டார்” என்று அந்த இராணுவ அதிகாரிகள் கூறினர்.

இராணுவத்தினர் கைவசம் அன்று இருந்த பல இடங்களில் இன்று இறந்தவர்களின் மனித எலும்புகளும் எலும்புக்கூடுகளும் நிலத்திலிருந்து வெளிவருகின்றன. உண்மையான சர்வதேச விசாரணை ஒன்று நடைபெற்றால் சரணாகதி அடைந்தவர்கள் எவ்வாறு, யாரின் கட்டளைக்கமைய காணாமல் போனார்கள் என்ற விடயம் வெளிவந்துவிடும்.

தமது வீழ்ச்சிக்குத் தமிழர்களையும் முஸ்லீம் மக்களையும் மறைமுகமாகக் குற்றஞ்சாட்டும் கோதாபய அவர்கள் ‘அரகலய’வில் பங்கு பற்றியோர் 99 சதவிகிதமானோர் சிங்கள இளைஞர்களே என்பதை மறந்துவிடக்கூடாது.

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு நடைபெறமுன், எவ்வளவு காலமாக, யாருடன் கூட்டு சேர்ந்து குறித்த சம்பவம் நடைபெற பதவியில் இருந்த சிலர் பிரயத்தனங்களில் ஈடுபட்டனர் என்பது ஒரு சர்வதேச விசாரணை நடந்தால் வெளிவந்து விடும். இந்த சம்பவத்தால் அரசியல் இலாபம் பெற்ற சிங்கள நபர் யார் என்பதை விசாரணை எளிதாகக் காட்டிக் கொடுத்துவிடும். சர்வதேச விசாரணைகள் இங்கு நடைபெறக்கூடாது என்று இன்று பதவியில் உள்ளவர்கள் கூறுவது உண்மைகள் வெளிவந்து விடாது தடுப்பதற்கே.

என் நண்பர் சட்டத்தரணியும் பத்திரிகையாளருமான இலசந்த விக்கிரமதுங்க அவர்கள் எவ்வாறு, ஏன் கொலை செய்யப்பட்டார், பின்னணியில் இருந்தவர்கள் யார் என்று சர்வதேச விசாரணை நடந்தால் எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள். கோதாபய அவர்களின் பங்கு என்ன என்பதையும் சர்வதேச விசாரணை காட்டிக் கொடுத்துவிடும். வெளிநாட்டவர்கள் மற்றும் உள்நாட்டவர்கள் தமக்கெதிராகச் சதி செய்தார்களா என்பதை கோதாபய தன்னிடமே விஸ்வாசத்துடன் கேட்டால் தன் செயல்களே தனது வீழ்ச்சிக்குக் காரணம் என்பதைப் புரிந்து கொள்வார்;.

ஆனால் ‘அரகலய’ இளைஞர் யுவதிகளை கிளர்ந்தெழச் செய்தது கோதாபயவின் முட்டாள்தனமான பொருளாதார நடவடிக்கைகளே. அதிகாரம் இருந்தால் எவர் அறிவுரையையும் பொருட்படுத்தாமல் முட்டாள்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று உலகுக்கு எடுத்துக் காட்டியவர் கோதாபய அவர்களே

. இரசாயன உரங்களைத் தவிர்த்து இயற்கை உரத்தை எமது விவசாயிகள் பாவிக்க வேண்டும் என்பதில் எவரிடத்திலும் இரண்டாவது கருத்து ஒன்று இருக்கமுடியாது. ஆனால் சரியோ பிழையோ செயற்கை உரங்களை நம்பியே விவசாயிகள் அண்மைக் காலங்களில் விவசாயம் செய்து வந்துள்ளார்கள்.

ஆகவே திடீரென செயற்கை உரத்தை வெளிநாட்டில் இருந்து வருவிப்பதைத் தடுத்தால் என்ன நடக்கும் என்று அவர் சிந்தித்துப் பார்த்திருக்க வே வண்டும். சிந்தித்திருந்தால் வரும் இரண்டு அல்லது மூன்று வருடங்களின் பின் செயற்கை உரங்களை வருவிப்பதை நீக்க இருக்கின்றோம்;

அவற்றிற்குப் பதில் பலமான இயற்கை உரங்களை உருவாக்க இப்பொழுதிருந்தே ஆயத்தமாகுங்கள் என்று கூறியிருப்பார். மண்புழு உரம், சாணி உரம், காய்ந்த சருகு உரம் என்று பல விதமான இயற்கை உரங்கள் தற்போது தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பயிர்கள் கூடிய அறுவடையைத் தர எவ்வாறு, என்னவாறான இயற்கை உரங்கள் இனிப் பாவிக்கப்பட வேண்டும் என்று ஆராய்ந்து அவற்றை பெருவாரியாக உள்நாட்டில் தயாரிக்க நடவடிக்கை எடுத்துக் கொண்டு தான் போதிய அறிவிப்புடன் செயற்கை உரங்கள் வருவிப்பதை நிறுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாது சிங்கள மக்களின் வயிற்றில் அடித்துவிட்டு சிறுபான்மையினரின் சதியே தமது வெளியேற்றம் என்று கூறுவது சிறுபிள்ளைத் தனமாகும்.

தனக்கு தேர்தலில் உதவி புரிந்த பணக்காரக் குடும்பங்களுக்கு வரிவிலக்கு கிடைக்கும் வண்ணம் தமது நிதிக் கொள்கைகளை மாற்றியமை சிங்கள மக்களிடையே பலத்த வெறுப்பை ஏற்படுத்தியது. இவை சாதாரண சிங்களக் குடும்பங்களில் இருந்தவர்களுக்கு வெறுப்பையும் கோபத்தையும் உண்டாக்கின.

தமது வயிற்றில் அடிக்கப்பட்டதால் சிங்கள இளைஞர்கள் கோதாபயவுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்ததற்காக சிறுபான்மையினர் மீதும் வெளிநாட்டவர்கள் மீதும் சேறு பூசுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது. அடித்துத் துரத்தப்பட வேண்டிய ஒருவர் என்று சிங்கள மக்களால் அடையாளம் காணப்பட்ட ஒருவரே அவர்களால் விரட்டப்பட்டார்கள்.

அவரின் குடும்பத்திற்குள்ளேயே சதிகாரர்கள் சிலர் இருந்திருக்கக்கூடும். அதனை அவர் ஆராய்ந்து பார்த்து தமது குடும்ப அங்கத்தவருடன் பேச வேண்டும். அதை விட்டு விட்டு “செல்லும் செல்லாததற்கு செட்டியார் இருக்கின்றார்” என்பது போன்று சிறுபான்மையினர் மீது சதிப்பழி போடுவது ஒரு ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஒருவர்க்கு அழகல்ல.

துஸ்டர் ஒருவரை சிங்கள இளைஞர் யுவதிகள் பதவியில் இருந்து நீக்கினார்கள் என்பது தான் உண்மை. அது சதி அல்ல தண்டனை. மனிதப் படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு நிறுத்தப்படுவது அவரின் இந்த நூல் தடுக்கும் என்று கோதாபய அவர்கள் நினைத்தாரானால் கௌரவ மனோ கணேசன் அவர்கள் கூறியது போல் அவரைப் போல வடிகட்டின முட்டாள் ஒருவர் இந்நாட்டில் இருக்க முடியாது.

கோட்டாபய ராஜபக்ச தவறுகளில் இருந்து இன்னமும் கூட பாடம் படிக்காத ஒரு அறிவிலி – மனோகணேசன்

சிங்கள பெளத்தர் பலமடைவது சிறுபான்மையினருக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதாலேயே தனக்கு எதிரான உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் ஒன்றுதிரண்டு அரகலவை நடத்தினார்கள் என்று தன் நூலில் கூறும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வரலாற்று குற்றங்களில் இருந்து இன்னமும் கூட பாடம் படிக்காத ஒரு அறிவிலி என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எழுதியுள்ள ‘சதி’ என்ற நூல் தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் கருத்துக் கூறிய மனோ எம்.பி. மேலும் குறிப்பிட்டதாவது:-

கொழும்பிலும், நாடு முழுக்கவும் நடைபெற்ற அரகலவில் பங்குபற்றிய மக்களில் நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது சதவிகிதத்தினர், 2019, 2020 தேர்தல்களில் மொட்டுச் சின்னத்துக்கு, வாக்கு அளித்தவர்கள். அவர்கள்தான், கோட்டாபயவின் முட்டாள்தனமான, பொருளாதாரக் கொள்கைள் காரணமாக வயிற்றில் பாரிய அடி விழுந்ததுடன் தெருவுக்கு வந்து போராடியவர்கள்.

தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் கூட இவை பிரச்சினைகள்தான். ஆனால், அவற்றையும் மீறிய இன, மத ஒடுக்குமுறைகளால் அவர்கள் துன்பம் அடைந்தார்கள். ஆங்காங்கே ஒரு சில தமிழ், முஸ்லிம் மக்கள் இறுதிக் கால கட்டங்களில் அரகலவில் கலந்து கொண்டார்கள். சில அதிக பிரசங்கி தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் அதீத கற்பனை பண்ணிகொண்டு, “இத்தோடு சேர்த்து இந்நாட்டில் இனவாதத்தையும் ஒழித்து விடுவோம்” என முழங்கியதும் உண்மைதான். “நல்லது நடந்தால் சரி” என நாம் அவர்களை வாழ்த்தியதும் உண்மைதான். அவர்கள் இன்று அரசியல் அரங்கில் அந்த அதிக பிரசங்கி தமிழ், முஸ்லிம் இளைஞர்களைக் காணவில்லை.

எது எப்படி இருந்தாலும், அரகல முழுக்க முழுக்க, வயிற்றில் பாரிய அடி விழுந்ததுடன், தெருவுக்கு வந்த சிங்கள பெருந்திரள் மக்களால் நடத்தப்பட்டது ஆகும். அதுவும் 2019, 2020 தேர்தல்களில் மொட்டுச் சின்னத்துக்கு வாக்களித்த மக்களால் நடத்தபட்டது. இதுதான் உண்மை. சிங்கள – பெளத்தர் பலமடைவது சிறுபான்மையினருக்கு பிடிக்காததாலேயே, அவர்கள் அரகலவை நடத்தினார்கள் என்ற மாதிரி கூறி, உண்மையைத் திரிபுபடுத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குக் கடுமையாகக் கூறி வைக்க விரும்புகின்றேன்” என்றுள்ளது.

என்னை ஜனாதிபதி பதவியிலிருந்து அகற்றுவதற்கான சதி – நூல் வெளியிடும் கோட்டாபய

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னை பதவியிலிருந்து அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சதிகுறித்து நூல்ஒன்றை வெளியிடவுள்ளார்.

அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் 2019 நவம்பரில் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டது முதல் சில உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் தன்னை பதவியிலிருந்து அகற்றுவதில் தீவிரமாகயிருந்தன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி முயற்சிகள் என்ற நூலை வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டு தலையீடு என்பது இலங்கை அரசியலின் ஒரு பகுதியாகிவிட்டது என தெரிவித்துள்ள அவர் இலங்கை சுதந்திரம் பெற்றபின்னர் முதல் 60 வருடங்களில் இந்த நிலை காணப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

என்னை அரசியலில் இருந்து அகற்றுவதற்கான அரசியல் பிரச்சாரம் இலங்கை அரசியலில் புதிய அம்சத்தை கொண்டுவந்தது எனவும் குறிப்பிட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச சுதந்திரத்தின் பின்னர் இலங்கையில் ஆட்சிமாற்றங்கள் அமைதியான முறையிலேயே இடம்பெற்றுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

2022 இல் இடம்பெற்ற சம்பவங்களால் நாட்டின் எதிர்காலத்திற்கு கடும் பாதிப்பு என தெரிவித்துள்ள கோட்டாபய ராஜபக்ச சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட்ட ஆட்;சிமாற்றத்திற்கான நடவடிக்கைகளின் நேரடி அனுபவங்களை தனது நூல் கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்

Posted in Uncategorized

மக்களின் ஆதரவு இன்னமும் எனக்கு இருக்கின்றது – கோத்தபாய ராஜபக்ச

நாட்டு மக்களின் அமோக வாக்குகளினாலேயே நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டேன். சிலரின் கோமாளித்தனமான செயற்பாடுகளால் தான் ஜனாதிபதிப் பதவியில் இருந்து நானாகவே விலகியிருந்தேன். மக்களின் ஆதரவு இன்னமும் எனக்கு இருக்கின்றது. எனினும், ஓய்வு நிலையில் இருக்கும் நான் மீண்டும் அரசியலுக்கு வருவது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆண்டு. அதனால் புதிய கூட்டணிகள் தொடர்பான அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

அந்தக் கூட்டணிகள் தொடர்பில் சிலர் என்னுடனும் பேசியுள்ளனர். எனினும், எந்தக் கூட்டணியுடனும் இணைவது தொடர்பில் நான் முடிவு எடுக்கவில்லை.

நாட்டின் சமகால அரசியல் நிலவரத்தை நான் உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன்.

பலத்த சவாலுக்கு மத்தியில் நாட்டின் முன்னேற்றத்துக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அயராது பாடுபடுகின்றார்.

இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றே தீரவேண்டும். அதை ஒத்திவைக்கும் எண்ணம் எவருக்கும் இருக்கக்கூடாது. – என்றார்.

புதிய இராஜாங்க அமைச்சராக சஷீந்திர ராஜபக்ஷ நியமனம்

நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சஷீந்திர ராஜபக்ஷ இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இதேவேளை விபத்தில் உயிரிழந்த சனத் நிஷாந்த நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக பதவிவகித்திருந்த நிலையிலேயே தற்போது அந்த இராஜாங்க அமைச்சுப் பதவியை ஷசீந்திர ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு கையால் ராஜபக்சர்களை அணைத்தபடி மறுகையால் எம்மை அழைக்காதீர்கள் – மனோகணேசன்

ராஜபக்ஷர்களின் அட்டூழியங்களை மன்னிக்க நாம் தயார் இல்லை. ஆகவே ஒரு கையால் ராஜபக்ஷர்களை கட்டி அணைத்தப்படி மறுகையால் எம்மை சுட்டி அழைக்க வேண்டாம். நாம் இன்று இருக்கும் இடத்தில் செளக்கியமாக இருக்கிறோம். கோட்டாபய ராஜபக்ஷ போனாலும், அவரது பாவத்தின் நிழல் போகவில்லை. சட்டப்படி கோட்டாபய ராஜபக்ஷ 16 ஆம் திகதி நவம்பர் 2019 தேர்தலில் பெற்ற மக்கள் ஆணையுடன்தான் இந்த அரசு நடக்கிறது. அந்த பாவத்தில் எமக்கு பங்கு வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

நாட்டில் உருவாகிவரும் புதிய கூட்டணிகளிடமிருந்து தமது அணியை நோக்கி வரும் அழைப்புகள் பற்றி, தென்கொழும்பு கட்சி அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

நேற்று முதல் நாள் அறிவிக்கப்பட்ட புதிய கூட்டணி நண்பர்கள் என்னுடன் பேசிய போது தெளிவாக ஒன்றை சொன்னேன். ஒரு கையால் ராஜபக்ஷர்களை கட்டி அணைத்தப்படி மறுகையால் எம்மை சுட்டி அழைக்க வேண்டாம் என்று சொன்னேன். நாம் இன்று இருக்கும், ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற இடத்தில் நாம் செளக்கியமாகவே இருக்கிறோம் எனவும் சொன்னேன்.

தமிழ் முற்போக்கு கூட்டணி நினைத்து இருந்தால், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆகிய அடுத்த நாளே அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கலாம். ஆனால், அதை நாம் செய்யவில்லை. ஏனென்றால் பேரினவாதம், ஊழல் ஆகிய இரண்டு பேரழிவுகளுக்கும் ஏகபோக உரிமையாளர்களான ராஜபக்ஷர்களுடன் கலப்பு கல்யாணம் செய்ய தமிழ் முற்போக்கு கூட்டணி தயார் இல்லை. எங்கள் இந்த கொள்கை நிலைப்பாடு காரணமாகத்தான் நாம் இன்று ராஜபக்ஷ ஆதரவு ரணில் அரசாங்கத்தில் இடம்பெறவில்லை.

இன்று இந்த ராஜபக்ஷ ஆதரவு ரணில் அரசில் அங்கம் வகிப்பவர்கள், தாம் ஏதோ வெட்டி முறித்து விட்டதாக தப்பு கணக்கு போட்டு விடக்கூடாது. நாம் அங்கே கொள்கை நிலைப்பாடு காரணமாக இல்லை. ஆகவேதான் நீங்கள் அங்கே இருக்கிறீர்கள். அதுதான் உண்மை. சட்டப்படி கோட்டாபய ராஜபக்ஷ 16ம் திகதி நவம்பர் 2019 தேர்தலில் பெற்ற மக்கள் ஆணையுடன்தான் இன்றுவரை இந்த அரசு தொடர்கிறது. அந்த பாவத்தின் நிழலில் அங்கமான உங்களுக்கு பாவத்தின் சம்பளம் அடுத்த தேர்தலில் கிடைக்கும்.

16ம் திகதி நவம்பர் 2019 முதல் இன்றுவரை, நான்கு வருடங்கள், இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. கடந்த நான்கு வருடங்களாக இந்த அரசாங்கத்தின் பதவிகளில் இருக்கின்ற தமிழ் அரசியல்வாதிகளிடம், நீங்கள் இதுவரை வெட்டி முறித்த சாதனைகளை முடியுமானால் பட்டியல் இடுங்கள் என பகிரங்க சவால் விடுகிறேன். அபிவிருத்தி செய்ய நிதி இல்லை என்பீர்கள். சரி, அபிவிருத்தியை விடுங்கள். அரச நிர்வாகரீதியாக தமிழ் மக்கள் தொடர்பில் நீங்கள் அமைச்சர்களாக, துணை அமைச்சர்களாக, அரசாங்க எம்பிகளாக இதுவரை என்ன செய்து கிழித்துள்ளீர்கள் என பகிரங்கமாக சொல்லுங்கள்? வேண்டுமானால், நாம் ஆட்சியில் இருந்த நான்கு ஆண்டுகளில் நாம் செய்த சாதனைகளையும், இன்று நீங்கள் இந்த நான்கு ஆண்டுகளில் செய்ய தவறிய சீர்கேடுகளையும் நான் பகிரங்கமாக பட்டியல் இடுகிறேன்.

எனவேதான், இந்த புதிய, பழைய பாவங்களின் கூட்டணியில் நாம் இல்லை. நாங்கள் சோரமும் போகவில்லை. பாவமும் செய்யவில்லை. ஆகவே இந்த பாவத்தின் சம்பளம் எமக்கு கிடையாது. எனவே தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற முற்போக்கு அரசியல் இயக்கம், அடுத்து வரும் புதிய அரசாங்கத்தில், புதிய பலத்துடன், நேர்மையாக அங்கம் வகிக்கும் என்றார்.

எதிர்காலத்தில் சஜித் கோட்டாபய போன்று செயற்படக் கூடும் – சரத்பொன்சேகா

முன்னாள் இராணுவதளபதி ஜெனரல் தயாரத்நாயக்காவின் ஆலோசனைகளை பெறுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளதை கடுமையா விமர்சித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவதளபதியுமான சரத்பொன்சேகா எதிர்காலத்தில் சஜித்பிரேமதாச கோட்டாபய ராஜபக்சவின் ஆதரவையும் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் நான் கைதுசெய்யப்பட்டதற்கு முக்கிய காரணமாகஇருந்தவர்களில் ஒருவர் தயா ரத்நாயக்க என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தயாரத்நாயக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நெருங்கிய விசுவாசி அவரின் நம்பிக்கைக்குரியவர் என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படலாம் எனவும் விமர்சித்துள்ளார்.

வீதி விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் பலி

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று வியாழக்கிழமை (25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்துள்ளார்.

இராஜாங்க அமைச்சரும் மேலும் நால்வரும் பயணித்த வாகனம் கொள்கலன் ஊர்தியொன்றுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் சனத் நிஷாந்தவும் அவரது தனிப்பட்ட மெய்ப்பாதுகாப்பு உத்தியோகத்தரும் உயிரிழந்துள்ளதாக ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ராஜபக்ச குடும்பம் பொருளாதார பயங்கரவாதிகளாகச் செயற்படுகின்றது – சஜித் பிரேமதாச

யுத்த வெற்றியை காரணம் காட்டி ஆட்சிக்கு வந்த ராஜபக்ச குடும்பம் பொருளாதார பயங்கரவாதிகளாக செயற்பட்டுவருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹொரவ்பதானையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” யுத்த வெற்றியை காரணம் காட்டியே சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வந்தது. இதன் பின்னர் அவர்கள் பொருளாதார பயங்கரவாதிகளாக செயற்பட்டு நாட்டை அழித்தனர். ஆனால் இன்று பயங்கரவாதிகளை பாதுகாக்கும் ஜனாதிபதியின் நிழலில் ஒழுந்து கொண்டு ராஜபக்ச குடும்பம் சுகபோகங்களை அனுபவித்து வருருகின்றனர். மல உரங்களை கொண்டு வந்து விவசாயத்தை அழித்ததோடு அதிக விலைக்கு நனோ உரங்களை இறக்குமதி செய்து விவசாயத்தை அழித்தனர்.

எனவே இந்த திருட்டு கும்பலை சட்டத்தின் முன் நிறுத்தி, திருடப்பட்ட பணத்தை மீண்டும் எமது நாட்டிற்கு நாம் கொண்டு வருவோம். தற்போதைய ரணில் ராஜபக்ச கூட்டணி அரசாங்கத்தின் ஊடாக விவசாயிகள், மீனவர்கள், ஏழைகள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர், அரச ஊழியர்கள், தொழில் வல்லுநர்கள் என சகல தரப்பினரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.அவர்களை மீட்டு, அனைவருக்கும் சுபீட்சத்தை ஏற்படுத்தும் பொது மக்கள் யுகத்தை உருவாக்கத் தயாராக இருக்கின்றோம்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அதன் சொந்த தலைவர்களாலேயே சிதைக்கப்பட்டுள்ளது – எஸ்.பி. திஸ்ஸநாயக்க

69 இலட்சம் மக்களின் ஆணை மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி கட்டிலில் ஏறிய அரசாங்கம் அதன் சொந்த தலைவர்களாலேயே சிதைக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பெரும்பான்மையான ஆணையை வழங்கிய நிலையில் உருவாக்கப்பட்ட அரசாங்கம் எங்கள் சொந்த தலைவர்களால் சிதைக்கப்பட்டதில் தான் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அதிபருக்கு இருந்தாலும், ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை எவராலும் மாற்ற முடியாது என அவர் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் பிரகாரம் நான்கு வருடங்களின் பின்னர் அதிபர் எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை 69 இலட்சம் மக்களின் ஆணையை பெற்று ஆட்சிபீடமேறிய கோட்டாபய ராஜபக்சவின் சீர்கெட்ட நிர்வாக திறன் காரணமாக சிங்கள மக்கள் கிளர்ந்தெழுந்து பாரிய போராட்டத்தை நடத்திய நிலையில் அவர் ஆட்சிபீடத்தை துறக்கவேண்டிய நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது