ரணில் ஜனாதிபதி வேட்பாளர் என்பது பொதுஜன பெரமுன கட்சியின் கருத்து அல்ல – நாமல் ராஜபக்ச

எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவே வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளைப் பெற்ற தற்போதைய அமைச்சர்கள் குழுவொன்று கருத்து தெரிவித்த போதிலும் அது கட்சியின் கருத்து அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கன்ஹுவரனெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யார் என்ன சொன்னாலும் அடுத்த அதிபர் பொதுஜன பெரமுன தலைமையிலான பரந்த கூட்டணியில் இருந்து பிறப்பார்.

அதிபருடன் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் எமது எம்.பிக்களும், இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகிப்பவர்களும் ரணில் விக்ரமசிங்கவை அதிபர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். மற்றவர்கள் வேறு பெயர்களை வழங்குகிறார்கள்.

ஆனால் அதைப்பற்றியெல்லாம் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. தமது தனிப்பட்ட கருத்துக்களை முன்வைப்பதற்கு தமது கட்சிக்கு சுதந்திரம் உள்ளதாகவும்,

ஏனைய கட்சிகள் இவ்வாறு எதிர் கருத்துக்களை முன்வைத்தால் கட்சி உறுப்புரிமை கூட தடைசெய்யப்படும் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டதாக எதிர்க்கட்சிகள் கவலைப்பட்டாலும், அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னரே சபாநாயகர் கையொப்பமிட்டுள்ளதாகவும், பிரச்சினை ஏற்பட்டால் சபாநாயகருடன் கலந்துரையாடி முடிவெடுக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தியாவின் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தை நாமல் ராஜபக்ஷ சந்தித்தார்

இந்தியாவின் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சந்தித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ அயோத்தி ராமர் கோவில் பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் தனிப்பட்ட பயணமாக இந்தியாவிற்கு சென்றுள்ளார்.

வீதி விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் பலி

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று வியாழக்கிழமை (25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்துள்ளார்.

இராஜாங்க அமைச்சரும் மேலும் நால்வரும் பயணித்த வாகனம் கொள்கலன் ஊர்தியொன்றுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் சனத் நிஷாந்தவும் அவரது தனிப்பட்ட மெய்ப்பாதுகாப்பு உத்தியோகத்தரும் உயிரிழந்துள்ளதாக ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ராஜபக்ச குடும்பம் பொருளாதார பயங்கரவாதிகளாகச் செயற்படுகின்றது – சஜித் பிரேமதாச

யுத்த வெற்றியை காரணம் காட்டி ஆட்சிக்கு வந்த ராஜபக்ச குடும்பம் பொருளாதார பயங்கரவாதிகளாக செயற்பட்டுவருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹொரவ்பதானையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” யுத்த வெற்றியை காரணம் காட்டியே சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வந்தது. இதன் பின்னர் அவர்கள் பொருளாதார பயங்கரவாதிகளாக செயற்பட்டு நாட்டை அழித்தனர். ஆனால் இன்று பயங்கரவாதிகளை பாதுகாக்கும் ஜனாதிபதியின் நிழலில் ஒழுந்து கொண்டு ராஜபக்ச குடும்பம் சுகபோகங்களை அனுபவித்து வருருகின்றனர். மல உரங்களை கொண்டு வந்து விவசாயத்தை அழித்ததோடு அதிக விலைக்கு நனோ உரங்களை இறக்குமதி செய்து விவசாயத்தை அழித்தனர்.

எனவே இந்த திருட்டு கும்பலை சட்டத்தின் முன் நிறுத்தி, திருடப்பட்ட பணத்தை மீண்டும் எமது நாட்டிற்கு நாம் கொண்டு வருவோம். தற்போதைய ரணில் ராஜபக்ச கூட்டணி அரசாங்கத்தின் ஊடாக விவசாயிகள், மீனவர்கள், ஏழைகள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர், அரச ஊழியர்கள், தொழில் வல்லுநர்கள் என சகல தரப்பினரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.அவர்களை மீட்டு, அனைவருக்கும் சுபீட்சத்தை ஏற்படுத்தும் பொது மக்கள் யுகத்தை உருவாக்கத் தயாராக இருக்கின்றோம்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நாமல் ராஜபக்‌ஷ வலியுறுத்தல்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பாராளுமன்ற உரை தொடர்பில் கடும் விமர்சனம் காணப்படுகிறது. வெறுக்கத்தக்க சொற்களை பயன்படுத்தி எதிர்த்தரப்பினரை சாடுகிறார். ஆகவே, இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடமும், சபை முதல்வரிடமும் வலியுறுத்தியுள்ளோம் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கட்சி என்ற ரீதியில் பலமாக செயற்படுகிறோம். அடுத்த மாதம் இடம்பெறவுள்ள கட்சியின் தேசிய மாநாட்டில் அரசியல் ரீதியில் முக்கிய தீர்மானங்களை அறிவிப்போம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கொள்கை ரீதியில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதும் எமது வேட்பாளரை நாங்கள் அறிவிப்போம். ஜனாதிபதியின் தீர்மானங்கள் நூற்றுக்கு நூறு வீதம் சிறந்தது என்று குறிப்பிட முடியாது. நாட்டில் மீண்டும் அரசியல் நெருக்கடி தோற்றம் பெறக்கூடாது என்பதற்காக ஒன்றிணைந்து செயற்படுகிறோம். தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் நாட்டு மக்கள் அரசியல் ரீதியில் தீர்மானம் எடுக்கலாம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பாராளுமன்ற உரை தொடர்பில் கடும் விமர்சனங்கள் காணப்படுகின்றன. சபைக்கு பொருந்தாத, வெறுக்கத்தக்க சொற்களை பயன்படுத்தி ஆளும் தரப்பின் உறுப்பினர்களை சாடுகிறார், ஆத்திரமூட்டும் வகையில் கருத்துக்களை குறிப்பிடுகிறார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவத்துக்கு எதிர்க்கட்சித் தலைவரே பொறுப்புக்கூற வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுங்கள் அல்லது எதிர்க்கட்சித் தலைவரின் பாராளுமன்ற உரையை நேரலையாக ஒளிபரப்புவதை தாமதப்படுத்துமாறு சபாநாயகரிடமும், சபை முதல்வரிடமும் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

எதிர்க்கட்சியினர் வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்க வேண்டும் – நாமல் ராஜபக்ச

சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்கட்சியினர் வரவு செலவு திட்டத்தை தோற்கடிக்க தெரிந்துக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்களால் வரவு செலவு திட்டத்தில் இருக்கும் பிழைகளை மாத்திரமே சுட்டிக்காட்ட முடியும்.

அதனை தோற்கடிப்பதற்கான உரிமை எதிர்கட்சியினருக்கே இருக்கின்றது என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியின் போது உரம் தொடர்பான விடயத்தில் வாயை மூடிக்கொண்டு இருந்ததால் இறுதியில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

இதேவேளை வரவு செலவு திட்டத்தில் இருக்கும் விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

முடிந்தால் பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களியுங்கள் நாமலுக்கு சஜித் சவால்

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விமர்சிக்கும் நாமல் ராஜபக்ஷ முடிந்தால் வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்து காட்டட்டும்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“நாட்டை அழித்து வங்குரோத்து நிலைக்கு அழைத்துசென்ற ராஜபக்ச குடும்பத்தினர், தமது பாதுகாப்புக்காக ஜனாதிபதி ஒருவரை நியமித்துக் கொண்டனர். அந்த ஜனாதிபதி மீது அந்த குடும்பத்தின் அரச குமாரர் (நாமல் ராஜபக்ச) கோபத்தில் உள்ளாராம். அமைச்சரவை மறுசீரமைப்பால்தான் அவர் கடுப்பில் உள்ளாராம். இவ்வாறு கோபப்படும் அரச குடும்பம், சுகாதார அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின் போது கூட, நாடு குறித்து சிந்திக்காமல் தம்மைப் பற்றி சிந்தித்தே செயற்பட்டது.

எனவே, இவர்களின் நாடகத்தை இனியும் நம்புவதற்கு நாட்டு மக்கள் தயாரில்லை. இவர்கள் எவ்வாறு நாட்டை அதலபாதாளத்திற்கு இட்டுச் சென்றார்கள் என்பது முழு நாட்டிற்கும் தெரியும் , ஜனாதிபதியை விமர்சிப்பது போல் நடித்தாலும் பாதீட்டை ஆதரித்தே வாக்களிப்பார்கள். முடியுமானால் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துக் காட்டுமாறு சவால் விடுக்கின்றேன். ” – என்றார் சஜித்.