அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியில் திரள கோரி முன்னாள் போராளி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்

தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் அனைத்து கட்சிகளையும் ஓரணியில் திரள வலியுறுத்தி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் போராளியொருவர் ஆரம்பித்துள்ளார். இன்று (9) காலை முதல் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

புதுக்குடியிருப்பு சந்தியில், இலங்கை வங்கி கட்டிடத்திற்கு அண்மையில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் அனைத்து கட்சிகளும் தமக்கிடையிலான ஆசன பங்கீட்டு பிரச்சினைகளை கைவிட்டு, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை வென்றெடுப்பதற்காக ஓரணியில் திரள வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

சாகும் வரையான போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ள அந்த நபர், இதுவரை நீராகாரமும் அருந்தாமல் போராட்டத்தை தொடர்கிறார். முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த, முன்னாள் போராளியான வேலுப்பிள்ளை மாதவமேயர் என்பவரே போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். தனது தந்தை நாட்டுப்பற்றாளர் கௌரவமளிக்கப்பட்டவர் என்றும், 3 உடன்பிறப்புக்கள் மாவீரர்களாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை ஜனநாயக ரீதியில் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து ஜனநாயகப் போராளிகள் கட்சியினை ஆரம்பித்து ஏழு வருடங்களின் பின்னர் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு இடம்பெற்றது.

இதன்போது கட்சியின் நிருவாகக் கட்டமைப்பு அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன், கட்சியின் கொள்கைப் பிரகடணம் கட்சியின் தலைவரால் வெளிப்படுத்தப்பட்டது. அத்துடன் வருகை தந்த அரசியற் பிரமுகர்களின் வாழ்த்து மற்றும் கருத்துரைகளும் இடம்பெற்றிருந்தன.

இதன் போது கட்சியின் தலைவராக சி.வேந்தன், உபதலைவராக ந.நகுலேஸ், செயலாளராக இ.கதிர், உபசெயலாளராக த.கவியரசன், பொருளாளராக த.விதுரன், தேசிய அமைப்பாளராக க.துளசி, மட்டு அம்பாறை மாவட்ட இணைப்பாளராக ந.நகுலேஸ், வவுனியா மாவட்ட இணைப்பாளராக நெல்சன், திருகோணமலை மாவட்ட இணைப்பாளராக நவமேனன், யாழ் மாவட்ட இணைப்பாளராக கவியரசன், கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளராக கருணாகரன், முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளராக ஆதவன், மன்னார் மாவட்ட இணைப்பாளராக ஜீவா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் தலைமையில் இடம்பெற்ற இத் தேசிய மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் இ.கதிர், தேசிய அமைப்பாளர் க.துளசி, உபதலைவர் ந.நகுலேஸ், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தைச் (ரெலோ) சேர்ந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதராதலிங்கம், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளருமான நிரோஷ் உள்ளிட்ட அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் வடக்கு கிழக்கு மாகாண உறுப்பினர்கள், முன்னாள் போராளிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்புடன் அனைத்து கட்சிகளும் இணைந்து பயணிக்க வேண்டும் -ஜனநாயகப் போராளிகள்

அனைத்து கட்சிகளும் எந்தவித பேதங்களுமின்ற தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்கவேண்டிய தேவையும் சூழ்நிலையும் இன்று ஏற்பட்டுள்ளது என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ப.சாந்தன் தெரிவித்தார்.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் கௌரவிப்பு நிகழ்வு மட்டக்களப்பு வெல்லாவெளியில் அமைந்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சி மட்டு அம்பாறை தலைமைக் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ப.சாந்தன், காரைதீவுப் பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில், வெல்லாவெளி பிரதேச சபை உறுப்பினர் தியாகராஜா, உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர்களை நினைவு கூரும் முகமாக மாவீரர்களின் பெற்றோர், ஜனநாயகப் போரளிகள் கட்சியின் உபதலைவர், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்டோரால் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நினைவுரை, சிறப்புரைகள் இடம்பெற்று பின் மட்டக்களப்பு மாவட்ட மாவீரர்களின் பெற்றொர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கு உதவிகள் மற்றும் தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

மாவீரர் நினைவு வாரத்தை அனுஸ்டிக்கும் முகமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் பல செயற்திட்டங்கள், துயிலுமில்ல துப்பரவுப் பணிகள், மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மாவீரர் குடும்பங்களைக் கௌரவிக்கும் முகமாக மேற்படி நிகழ்வு ஒழங்கு படுத்தப்பட்டு நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தமிழர்கள் இந்த நாட்டில் தங்களை தாங்களே ஆட்சி செய்து தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்பதற்காக பல்வேறு அர்ப்பணிப்புகளை மாவீரர்கள் செய்துள்ளனர்.ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டாலும் தமிழ் மக்களின் உரிமையினை அடைவதற்கான அரசியல் ரீதியான போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவந்தது.அந்த அரசியல் ரீதியான நகர்வுகளில் மாற்றங்கள் ஏற்படவில்லை.

அனைவரும் சிந்தக்கவேண்டும்.எமது மக்களின் அபிலாசைகளில் விளையாடாமல் தமிழ் கட்சிகள் இணைந்து செயற்படவேண்டும்.தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காகவே மாவீரர்களை பெற்றோர் தியாகம் செய்தார்கள்.

தமிழ் தேசிய பரப்பில் செயற்படும் கட்சிகள் அனைத்தும் ஒரு தீர்மானத்தை எடுக்கவேண்டிய நேரம் தற்போது வந்துள்ளது.நான் பெரிது நீ பெரிது என்று பார்க்காமல் தமிழ் மக்களின் விடுதலைக்காக உழைக்கின்றோம் என்று கூறிக்கொள்ளும் அனைத்து கட்சிகளும் எந்தவித பேதங்களுமின்ற தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்கவேண்டிய தேவையும் சூழ்நிலையும் இன்று ஏற்பட்டுள்ளது.அனைவரும் இணைந்து பயணிக்கவேண்டிய காலம் தற்போது கனிந்துள்ளது.

இந்த அழைப்பானது தமிழ் தேசிய கட்சிகளை அடிப்படையாக கொண்டே விடுக்கப்படுகின்றது.தமிழ் பேசும் சிங்கள கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு அல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து பயணிக்கவேண்டிய கட்டாயும் தற்போது ஏற்பட்டுள்ளது.அதற்கான சமிக்ஞையை தற்போது அரசாங்கம் காட்டியுள்ளது.இதனை விடுத்து தனித்து செயற்படமுனைந்தால் மாவீரர்கள் என்ன காரணத்திற்காக அர்ப்பணித்தார்களோ அந்த இலக்கினை அடையமுடியாத நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம்.

தமிழ் கட்சிகளுடன் பேசத்தயார் என ஜனாதிபதி ரணில் அவர்கள் கூறியுள்ள நிலையில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றாகும்போதே சாத்தியமான தீர்வினைப்பெறமுடியும்.நாங்கள் தனித்தனியா பயணித்தால் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளை நோக்கி பயணிக்கமுடியாத நிலையே ஏற்படும்.

இந்த ஆண்டில் அனைவரும் தீர்மானம் ஒன்றை அனைவரும் இணைந்து பயணிக்கவேண்டும்.இம்முறை மாவீரர் தின நிகழ்வுகள் அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களிலும் நடைபெறும்.உங்களது பிள்ளைகளுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவதற்கு உங்களுக்கு உரிமையிருக்கின்றது.

மாவீரர்களை நினைவு கூரும் நாளில் நாங்கள் அற்பசொற்ப சலுகைகளுக்கு சோரம்போகாமல் எமது இலக்கினை அடையக்கூடிய வழிவகைகளை நோக்கி பயணிக்கவேண்டும்.நாங்கள் அனைவரும் ஒருமித்து செயற்படவேண்டிய தேவையுள்ளது.

அனைவருக்கும் வாக்களிப்பதனால் தமிழ் தேசியம் உடைக்கப்படுகின்றது.நீங்கள் வாக்களிக்கும்போது உங்களது பிள்ளைகளை நீங்கள் நெஞ்சில் நிறுத்திக்கொள்ளுங்கள்.உங்கள் பிள்ளைகள் எதற்காக மண்ணில் மரணித்தார்கள் என்பதை நீங்கள் நெஞ்சில் நிலை நிறுத்திக்கொள்ளுங்கள்.

எங்களுக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் கொள்கைரீதியாக எமது அபிலாசைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் ஒன்றுபட்டுசெல்லவேண்டும்.மக்கள் வேறு திசைகள் நோக்கி பயணிக்காமல்,வேறு கட்சிகளுக்கு வாக்களிக்காமல் தமிழ் தேசியத்தினை வெல்லக்கூடிய கட்சிகளுக்கே வாக்களிக்கவேண்டிய தேவையுள்ளது.அதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் அவர்களினால் உருவாக்கப்பட்டது.

யாரின் ஏமாற்று பேச்சுகளுக:கும் இடமளிக்கவேண்டாம்.தெளிவான முடிகளை எடுத்து எமது அபிலாசைகளை பெற்றுக்கொள்வதற்கான பயணத்தில் இணைந்துகொள்ளவேண்டும்.

வவுனியாவில் முன்னாள் போராளிகள் நலன்புரி சங்கம் அங்குரார்ப்பணம்

நாட்டிலுள்ள அனைத்து முன்னாள் போராளிகளையும் ஒன்றினைத்து செயற்படுவதற்காக முன்னாள் போராளிகள் நலன்புரி சங்கம் எனும் ஒன்றை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (13) காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் , ஜனாதிபதி சட்டத்தரணியும் கொழும்பு தமிழரசு கட்சியின் தலைவருமான கே. வி. தவராசா, யாழ் மாநகர மேயர் மணிவண்ணன் , முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் , தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன் , சிரேஸ்ட விரிவுரையாளர் பரந்தாமன் மற்றும் முன்னாள் போராளிகள் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த அங்குரார்ப்பண நிகழ்வில் முன்னாள் போராளிகள் ஒன்றிணைவதில் உள்ள சட்டச்சிக்கல்கள் , முன்னாள் போராளிகளின் அரசியல் பிரவேசம் , தற்போது அங்கம் வசிக்கும் தமிழ் கட்சிகளின் நிலமை , போராளிகளின் நலன்சார்ந்து செயற்படுவது , புலம்பெயர் உதவிகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

பேரினவாத முயற்சிகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் – அருட்தந்தை மா.சத்திவேல்

முன்னாள் போராளிகள் ஏற்கனவே திறந்த வெளி சிறைக்குள் இருப்பதாகவே உணரும் நிலையில், தகவல்கள் திரட்டும் செயற்பாடு சிறைக்குள் இருக்கும் உணர்வையே ஏற்படுத்தும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கையொன்றில் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் போராளிகளின் தகவல்களை நீதி அமைச்சின் கீழ் உள்ள தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலகம் திரட்டுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

எந்த நோக்கத்துக்காக இந்த தகவல்கள் திரட்டப்படுகின்றன என்பது தொடர்பில் முன்னாள் போராளிகள் மட்டுமல்லது பொதுமக்களும் அச்ச உணர்விலேயே உள்ளனர். இது தொடர்பில் நீதி அமைச்சு தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டும் அத்தோடு வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி மக்களுக்குத் தெளிவூட்டல் பெற்றுக்கொடுப்பதோடு பாதிப்பு ஏற்படும் எனின் தடுத்து நிறுத்துவதற்கு கூட்டான செயற்பாட்டிலும் ஈடுபட வேண்டும்.

கொழும்பில் வெள்ளவத்தை போன்ற தமிழர் அதிகமாக வாழும் பிரதேசங்களில் வீடுகளில் தங்கி இருப்போர் தொடர்பாக பொலிஸார் தகவல் திரட்டுகின்றனர் எனவும், அவ்வாறான தகவல் படிவங்களை எவரும் நிரப்பி கொடுக்க வேண்டாம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பகிரங்கமாகக் கூறியதோடு இது தொடர்பில் பொலிஸ்மா அதிபருடனும், ஜனாதிபதியுடன் வினவுவதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது தமிழர்களை அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் தமிழர் பகுதியில் முன்னாள் போராளிகளின் தகவல்கள் திரட்டப்படுகின்றன என்று கூறப்படுகின்றது. முன்னாள் போராளிகள் ஏற்கனவே திறந்த வெளி சிறைக்குள் இருப்பதாகவே உணரும் நிலையில் தகவல்கள் திரட்டும் செயற்பாடு சிறைக்குள் இருக்கும் உணர்வையே ஏற்படுத்தும்.

இது உள ரீதியிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதோடு சுயமாகவே முன்னாள் போராளிகள் தமது ஜனநாயகச் செயற்பாட்டை மட்டுப்படுத்திக்கொள்ள வழிவகுக்கும். இந்த விடயம் மனித உரிமை மீறலாகும். அண்மையில் அரசு கொண்டுவர முனைந்த புனர்வாழ்வு தொடர்பான திருத்தச் சட்டம் சமூகத்தில் எழுந்த சலசலப்பும் மக்களின் எதிர்ப்பும் சட்டச் சிக்கலும் காரணமாகத் தடுத்து நிறுத்தப்பட்டது.

அந்தச் சட்ட அமுலாக்கத்தை வேறு வகையில் நிறைவேற்றுவதற்காக முன்னாள் போராளிகளின் தகவல்கள் திரட்டப்படுகின்றதா. தெற்கின் போராட்டக் குழுவினர் தொடர்ச்சியாகப் பல்வேறு காரணங்களை முன்வைத்து அரசாங்கத்துக்கு எதிரான வீதிப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தங்கள் சகாக்கள் மூன்று பேரையும் விடுவிக்குமாறும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறும் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து வைத்திருக்க முன்னாள் போராளிகளின் தகவல்கள் திரட்டப்படுகின்றதா. இத்தகைய தகவல் திரட்டும் ஏற்பாடு முன்னாள் போராளிகளின் ஜனநாயக ரீதியான மாற்று அரசியல் செயற்பாட்டையும் அது தொடர்பான சிந்தனையையும் தடுக்கும். இது அவர்கள் சார்ந்த குடும்ப உறுப்பினர்களின் சுதந்திர நடமாட்டத்தைக் பாதிக்கும்.

அது மாத்திரமல்ல தற்போது மறைமுகமாகப் படையினரும் புலனாய்வுப் பிரிவினரும் இயங்குகின்ற நிலையில் முன்னாள் போராளிகளின் தகவல்கள் திரட்டும் செயற்பாடு நேரடியாகவே அரச படைகள் தமிழர்களைக் கண்காணிப்பில் வைத்திருக்கவும், தமிழர்கள் வாழும் கிராமங்களைத் திறந்த வெளி புனர்வாழ்வு கிராமங்களாக்கவும் பேரினவாதம் முயற்சிக்கலாம். இது உடனே தடுத்து நிறுத்தப்படல் வேண்டும் என தெரிவித்துள்ளார்.