யாழில் இருந்து சென்னைக்கு 12ஆம் திகதி முதல் விமான சேவைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் – சென்னை இடையேயான விமான சேவை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆரம்ப பணிகளிற்காக நேற்றைய தினம் சுற்றுலா அதிகார சபையில் இருந்து இரு அதிகாரிகள் யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

மேலும் விமான சேவைக்கான விமான சீட்டுக்கள் இன்று முதல் முற்பதிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு திறக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமானது 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது

அராலியில் கடல் அட்டை பண்ணை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு!

யாழ்ப்பாணம், அராலி பகுதி கடலில் கடல் அட்டைப் பண்ணை அமைப்பதற்கு அங்கிருக்கும் மீனவர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் ஏனைய பகுதிகளில் அட்டைப் பண்ணைகளால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆதரவாக அவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் கடற்றொழிலினையே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்க்கையை நடாத்தி வருகின்றோம். தற்கால பொருளாதார நெருக்கடியால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

இவ்வாறு நாங்கள் பாதிக்கப்பட்டு இருக்கும்போது எமது கடலில் அட்டைப் பண்ணை அமைப்பது என்பது “பனையால் வீழ்ந்தவனை மாடேறி மிதிப்பது” போலாகும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இங்கே வருகை தந்த சிலர் எமது கடலில் அட்டைப் பண்ணை அமைப்பதற்கு பார்வையிட்டுச் சென்றுள்ளார்கள்.

எமது கடலில் இவ்வாறு அட்டைப் பண்ணை அமைக்கும் முயற்சியினை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அத்துடன் இவ்வாறான செயற்பாட்டிற்கு இடமளிக்கவும் மாட்டோம்.

எங்களது கடல் சிறிய கடல். இந்தக் கடலில் பருவகாலத்திற்கு தான் நாங்கள் சிறப்பான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். மற்றைய வேளைகளில் சாதாரண அளவிலேயே எமது மீன்பிடி நடவடிக்கைகள் அமைகின்றன.

இது இவ்வாறு இருக்கையில் அட்டைப் பண்ணைகள் இங்கே அமைத்தால் கடலில் உள்ள வளங்கள் அழியும் சந்தர்ப்பம் உள்ளது.

இறால், நண்டு, மீன் இனங்கள் போன்றன கடற்கரையோரங்களில் தான் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்நிலையில் கரையோரங்களில் அட்டைப் பண்ணைகளை நிறுவுவதால் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும். கடல்வாழ் உயிரினங்கள் நீரோட்டத்தில் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. கடல்வாழ் உயிரினங்கள் அழிந்தால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே தயவுசெய்து எங்களது வயிற்றில் அடிக்காதீர்கள். மீனவர்களை வாழ விடுங்கள்.

தம்பாட்டி, பூநகரி போன்ற கடல்கள் உட்பட பல கடற்பகுதிகளில் அட்டைப் பண்ணைகள் அமைத்ததனால் அப்பகுதி மக்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்கள் பல நாட்களாக போராட்டம் செய்து வருகின்றனர். ஆனால் அவர்களது குரல்களுக்கு செவிசாய்ப்பவர்கள் யாருமில்லை. அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்நிலையை எண்ணி வருந்துகின்றோம். அவர்களுக்கு எங்களது ஆதரவுகளை தெரிவிக்கின்றோம்.

எரிபொருள் பிரச்சினை எமக்கு பாரியதொரு பிரச்சினையாக காணப்படுகின்ற நிலையில் இவ்வாறான அட்டைப் பண்ணைகள் எமக்கு புதிய ஒரு தலையிடியாக மாறியுள்ளது. எனவே உரிய தரப்பினர் மீனவர்களது நிலையை கருத்தில் கொண்டு மிக விரைவில் இதற்கு ஒரு தீர்வினை வழங்க வேண்டும் என்றனர்.

பாகிஸ்தான் தூதுவர் யாழ் நூலகத்துக்கு விஜயம்

யாழ்ப்பாணத்துக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி இன்று புதன்கிழமை (நவ 23) யாழ்ப்பாண பொது நூலகத்தினை பார்வையிட்டுள்ளார்.

 

அதன்போது, யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் உயர்ஸ்தானிகரை வரவேற்றதுடன், யாழ்ப்பாண பொது நூலகத்தின் சிறப்புகள் மற்றும் வரலாற்று ஆவணங்களை காண்பித்தார்.

அதிகாரங்களை பிரதி முதல்வருடன் பகிர மறுக்கும் மணிவண்ணன் – பிரதி முதல்வர் ஈசன் குற்றச்சாட்டு

யாழ் மாநகரசபைக்கென இதுவரையில் ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு சதம் கூட இது வரையில் பயன்படுத்தப்படவில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட பிரதித் தலைவரும் யாழ் மாவட்ட துணை முதல்வருமான துரைராசா ஈசன் தொலைக் காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாநகர சபையில் பிரதி முதல்வருக்கு அதிகாரங்களை தற்போதை முதல்வர் மணிவண்ணன் தரவில்லை. வடகிழக்கிலுள்ள ஏனைய சபைகளில் முதல்வர்கள் அதிகாரங்களை பகிர்ந்து பிரதி முதல்வருக்கு எழுத்து மூலம் வழங்கியுள்ளார்கள். ஆனால் யாழ் மாநகரசபையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவில்லை.

யாழ் மாநகரசபையில் உள்ள நான்கு குழுக்களில் ஒரு குழுவில் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இணைத்துக் கொள்ளவில்லை. 22 ஆசனங்களில் 14 ஆசனங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சொந்தமானது. 50% வீதத்திற்கு மேற்பட்ட ஆசனங்களைக் கொண்ட கூட்டமைப்பின் உறுப்பினர்களை அங்கத்துவர்களாகக் கூட இணைத்து கொள்ளவில்லை. முதல்வர் திட்டமிட்ட வகையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடன் (ஈ.பி.டி.பி) இணைந்து கூட்டமைப்பை புறக்கணித்து வருகிறார்.

ஒரு வட்டாரத்துக்கு 5 மில்லியன் என 135 மில்லியன் ரூபா யாழ் மாநகரசபைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு சதத்தை கூட இது வரையில் பயன்படுத்தப்படவில்லை. அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பில் கூட எம்முடன் இது வரையில் கலந்தாலோசிக்கப்படவில்லை. ஆனால் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) மூன்று உறுப்பினர்களை சந்தித்து முதல்வர் மணிவண்ணன் கலந்துரையாடியுள்ளார் என தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ். மாநகர சபை பிரதி மேயர் துரைராஜா ஈசன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க சபை உறுப்பினர்கள், மாவீரர்களுக்கு இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினர்.

யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் சபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது, “எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் நவம்பர் 27 ஆம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இருப்பினும், யாழ். மாநகர சபையின் அடுத்த அமர்வு மாவீரர் நாள் முடிந்த பின்பே வரவுள்ளதால் இன்றைய அமர்வில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது பொருத்தமாகயிருக்கும்” என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ். மாநகர சபை பிரதி மேயர் ஈசன் முன்வைத்த வேண்டுகோளை ஏற்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ். மாநகர மேயர் ஐ.நா. குழு இடையே சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினருக்கும் யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணனுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாண மாநகர சபையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பும் விவகாரங்கள் திணைக்கள ஆசிய பசுபிக் பிரிவுக்கான பணிப்பாளர் பீற்றர் டியு, அரசியல் விவகார அதிகாரி அல்மா சாலியு, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் ஆகியோர் அடங்கிய குழுவினரே இந்த சந்திப்பின் போது, யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணனை சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பின் நிறைவில், ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினருக்கு, நினைவுச் சின்னமொன்றும் வழங்கிவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் வருகை தந்த ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினர், பல்வேறு தரப்புகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

பலாலி விமான நிலையத்தினை இயக்க இந்தியா ஒருபோதும் தடை இல்லை – பிரேமலால் ஜயசேகர

பலாலி சர்வதேச விமான நிலையத்தினை இயக்க இந்தியா ஒருபோதும் தடை இல்லை என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட துறைமுகங்கள் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர தெரிவித்தார் கடந்த வாரம் கடத்தொழில் அமைச்சர் பலாலி விமான நிலையத்தை இயக்குவதற்கு இந்தியாவே தடையாக உள்ளது என தெரிவித்த கருத்து தொடர்பில் அமைச்சரிடம் வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்,

நாட்டுக்கு பெரும் வருமானத்தை ஈட்டி தந்த காங்கேசன் துறைமுகம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அழிவடைந்து தற்பொழுது பயன்பாட்டில் இல்லை இவ்வாறான சம்பவங்கள் மூலமே எமது நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு நாங்கள் முகம் கொடுக்க வேண்டியுள்ளது

அந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து நாங்கள் மீள வேண்டுமே ஆக இருந்தால்  காங்கேசன் துறை போன்ற பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய இடங்களை நாங்கள் மீள புதுப்பித்து அவற்றை செயல்படுத்துவதன் மூலமே நாட்டுக்கு வருமானம் கிடைக்கும்

தற்போதுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த வேலை திட்டத்தில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார். அதன் காரணமாகவே இன்றைய தினம் காங்கேசன் துறைமுகத்திற்கு நேரடியாக அமைச்சர் என்ற ரீதியில் நான் விஜயத்தினைமேற்கொண்டு இங்கே மேற்கொள்ளப்பட வேண்டிய வேலை திட்டங்கள் மற்றும்  செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பில் நான் ஆராய்ந்து இருக்கின்றேன்

குறிப்பாக இந்திய நாட்டின் உதவியையும் நாங்கள் கோரவுள்ளோம் . ஏற்கனவே நாங்கள் இந்திய நாட்டின் உதவியுடன் சில வேலை திட்டங்களை இங்கே முன்னெடுத்து இருக்கின்றோம். ஆனால் இங்கே பல வேலை திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன அவ்வாறான வேலை திட்டங்களை விரைவில் ஆரம்பித்து மிக விரைவில் இந்த காங்கேசன் துறைமுகத்தினை செயற்படுத்துவதற்கு நாங்கள் முனைகின்றோம்

அதேபோல் பலாலி சர் வதேச விமான நிலையமும் நமக்கு ஒரு வருமானத்தை ஈட்டக்கூடிய ஒரு விமான நிலையம் ஆகும் அந்த விமான நிலையமும் ஓரிரு மாதங்களில் விரைவில் செயற்படுத்தப்படும் குறிப்பாக அமைச்சின் ஒருவர் இந்தியா தான் அந்த விமான நிலையத்தினை செயல்படுத்துவதற்கு தடையாக இருப்பதாக ஊடகவியலாளர் வினவிய போது அது முதலில் அவ்வாறு பிரச்சனை இருந்தது ஆனால் எல்லாம்  பேசி சமரச முயற்சியில் ஈடுபட்டு தற்பொழுது எல்லா விடயங்களும் நிறைவடைந்து விட்டன ஓரிரு மாதங்களில் பலாலி விமான சேவையும் ஆரம்பிக்கப்பட உள்ளது

அவ்வாறு ஆரம்பித்தால் இலங்கையில் உள்ள மூவின மக்களும் குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள மக்களும் ஒன்றிணைந்து இந்த நாட்டில் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும் எனவும் தெரிவித்தார் ஆனால் இவை விரைவில் சாத்தியப்பட வேண்டும் என இறைவன் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 35 ஏக்கர் தனியார் காணியை சுவீகரிக்க அங்கீகாரம்

பிராந்திய கடல் வலயத்தில், இலங்கையை ஒரு பிரதான மையமாக மாற்றுவதையும், இந்தியா மற்றும் இலங்கைக்குமிடையேயுள்ள சுற்றுலாவை மேம்படுத்துவதையும் மையமாகக்கொண்டு, காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக மேம்படுத்தவும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை இடையே. இந்த திட்டம் EXIM வங்கியின் 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியின் கீழ் செயல்படுத்தப்படுகிறது,

இதற்காக இலங்கை துறைமுக அதிகார சபைக்கும் திறைசேரிக்கும் இடையில் கடனுதவி ஒப்பந்தம் 2018 ஒக்டோபர் மாதம் கைச்சாத்திடப்பட்டதுடன் டொலர் கடன் வரி ஒப்பந்தம் 2018 ஜனவரி 10 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.

இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு தரப்பினருக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள திட்ட முகாமைத்துவ ஆலோசனை ஒப்பந்தத்தின் படி, இத்திட்டத்திற்கான மொத்த திட்ட காலம் 39 மாதங்கள் ஆகும்.

அவற்றில், திட்டமிடல் காலம் ஒன்பது மாதங்கள், கட்டுமான காலம் 18 மாதங்கள், மற்றும் குறைபாடு உத்தரவாத காலம் 12 மாதங்களாகும்

தற்போதுள்ள பிரேக்வாட்டரின் மறுசீரமைப்பு (1,400 மீ), தற்போதுள்ள பியர் எண். 1 (அளவு 96 மீ x 24 மீ) மறுசீரமைப்பு, பியர் எண். 2 (தற்போதுள்ள கம்பம் எண். 1 நீட்டிப்பு, அளவு 85 மீ x 24 மீ); மேலும் கடைசியாக, இந்த துறைமுகத்தின் முக்கிய அபிவிருத்திப் பணியானது பிரேக்வாட்டரில் கான்கிரீட் சாலை போன்ற உள்கட்டமைப்பை நிறைவு செய்தல் போன்ற 5 முக்கிய நடவடிக்கைளை ஆகும்.

மேலும், காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அண்மித்த 50 ஏக்கர் காணியை சுவீகரிக்க இலங்கை துறைமுக அதிகார சபைக்கு (SLPA) முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அதற்காக 15 ஏக்கர் பொது காணி மற்றும் 35 ஏக்கர் தனியார் காணயை சுவீகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தனியாருக்குச் சொந்தமான நிலம், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் விதிகளின்படி குறிப்பிட்ட இழப்பீடு செலுத்தி கையகப்படுத்தப்படும் என்பதையும் குறிப்பிடத்தக்கது.

கடும் மழையால் யாழில் 1025 பேர் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 305 குடும்பங்களை சேர்ந்த 1025 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது எனவும் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவி பணிப்பாளர் டி.என் சூரியராஜா தெரிவித்தார்

கரவெட்டி,யாழ்ப்பாணம்,பருத்தித்துறை, மருதங்கேணி,சாவகச்சேரி ஆகிய பிரதேச செயலாளர்கள் பிரிவுகளில் பாதிப்புகள் கூடுதலாக உணரப்பட்டுள்ளன. இதில் பருத்தித்துறைப்பிரதேச செயலர் பிரிவில் அதிகபட்சமாக 201 குடும்பங்களை சேர்ந்த 690 அங்கத்தவர்கள் பாதிப்படைந்துள்ளனர். பொலிகண்டி பொதுநோக்கு மண்டபத்தில் 16 குடும்பங்களை சேர்ந்த 46 அங்கத்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் 24 குடும்பங்களை சேர்ந்து 72 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 54 குடும்பங்களை சேர்ந்த 177 பேரும், யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவில் 25 குடும்பங்களை சேர்ந்த 80 பேரும் கரவெட்டி பிரதேச செயலக பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 7 அங்கத்தவர்களும் பாதிப்படைந்துள்ளன அவர் மேலும் தெரிவித்தார்.