தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஜனாதிபதியின் பேச்சுவார்த்தையை பாராட்டுகிறோம்: பாப்பரசரின் பிரதிநிதி

வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பு போன்ற முயற்சிகள் ஊடாக நல்லிணக்கத்தை எட்டுவதற்கு அதிகாரிகள் எடுக்கும் முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம் என பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதி பேராயர் பிறைன் உடைக்குவே ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மடு திருத்தலத்தின் ஆவணி திருவிழாவில் இன்று (15) கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரை நிகழ்த்துகையில்,

இத்திருப்பலியில் கலந்து கொள்ளும் சகோதர சகோதரிகலே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். திருத்தந்தை உங்கள் நாட்டை அன்பு செய்கிறார். 2015 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி திருத்தந்தை இந்த நாட்டிற்கும் இத்திருப்பதிக்கும் மேற்கொண்ட திருத்தூது பயணத்தை அவர் மிகவும் பாராட்டுகின்றார்.

அன்றைய நாளில் அவருக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட மடு மாத திருச் சொரூபத்தை அவர் இன்று வரை போற்றுகின்றார். உலகம் போற்றும் இத்திருத்தலத்தில் அன்று அவர் ஆற்றிய உரையை நோக்கி இன்று எனது சிந்தனைகள் செல்கிறது.

அவர் அன்று கூறிய பல விடயங்களில் கீழ் கண்ட அவருடைய வார்த்தைகளை இங்கே தருகின்றேன். மரியன்னை என்றும் உங்களோடு இருக்கிறார். அவர் ஒவ்வொரு வீட்டினுடைய அன்னை. காயப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களினதும் அன்னை.

ஒரு அமைதியான இருப்பை நோக்கி திரும்புவதற்கு நாடுகின்ற அனைவரினதும் அன்னை பிரகாசிக்கின்ற இந்த இலங்கைத்தீவில் உள்ள தன் பிள்ளைகளை அவர் ஒருபோதும் மறக்க வில்லை. எவ்வாறு மரியா சிலுவையில் தொங்கிய தனது பிள்ளையை விட்டு விலகாது நின்றாறோ அவ்வாறே துன்புறும் தனது இலங்கை நாட்டு பிள்ளைகளை அவர் விட்டு விலகுவது இல்லை.

நம்முடைய பரிசுத்த தாயான மரியா தன்னுடைய இத்தீவின் பிள்ளைகளை மறப்பதில்லை. அவரின் பரிந்துரை ஊடாக நீதி, நல்லிணக்கம், அமைதி எங்களுக்கு கிடைப்பதாக.

உடல் ரீதியான உணர்வு ரீதியான வடுக்களை விட்டுச் சென்ற 26 வருடங்கள் நீடித்துச் சென்ற உள்நாட்டு போரின் தாக்கங்களை நாம் மறந்து விட முடியாது. பல தடவைகளில் இந்த போரைப் பற்றி நான் கேள்விப்பட்டு இருக்கின்றேன். வாசித்தும் இருக்கின்றேன். எனினும் 2 வாரங்களுக்கு முன்னர் யாழ். மறை மாவட்டத்திற்கு நான் மேற்கொண்டிருந்த மீட்புப்பணி விஜயத்தின் போது மக்கள் மீதும், கைவிடப்பட்ட வீடுகள் மீதும் உடமைகள் மீதும் போரின் தாக்கம் எவ்வாறு இருந்தது என்பதை இன்னும் ஆழமாக பார்ப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. மீண்டும் ஒரு போர் வேண்டாம். இன, மத, மொழி, சாதி கருத்து போன்ற வேற்றுமைகளுக்கு அப்பால் அன்பும், அமைதியும் சகிப்புத்தன்மையும் நிலை பெறுவதாக.

வெறுப்பும், விரோதமும் வேண்டாம். ஏனெனில் சமாதானம் என்பது ஓர் இல்லாத நிலை அன்று. இது நல்லிணக்கத்திற்கான நேரம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான பயணங்கள். வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஜனாதிபதியுடன் சந்திப்பு போன்ற முயற்சிகள் ஊடாக நல்லிணக்கத்தை எட்டுவதற்கு அதிகாரிகள் எடுக்கும் முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம்.

அதேவேளை ஒரு வாரத்திற்கு முன்னர் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தெளிவாக குறிப்பிட்டது போல அனைவரும் நன்கு அறிந்த குழப்பமான விடயங்களை போதுமான அளவில் தீர்த்து வைக்கும் வகையில் இந்த செயன்முறைகள் அமையும் என நாங்கள் நம்புகிறோம்.

மூன்று வருடங்களுக்கு முன் நான் இலங்கைக்கு வந்த போது இந்த நாட்டின் பல பாகங்களுக்கும் நான் விஜயம் செய்தேன். இலங்கை மக்கள் பொதுவாக நல்லவர்கள். சகிப்புத்தன்மை கொண்டவர்கள். குறைவாக உள்ள சிறு குழுவினர் உங்கள் மீது எதிர் மறையாக செல்வாக்கு செலுத்தவோ, உங்களை திசை திருப்பவோ அனுமதிக்க வேண்டாம்.

பல்வேறு சமயங்களை சார்ந்த சமையத்தலைவர்கள் அன்பையும், சகோதரத்துவத்தையும், நோக்கிய சரியான கொள்கையை நோக்கி மக்களை வழி நடத்துவதில் முன்னனி பங்கு வகிக்க வேண்டும். எந்த ஒரு சமையத்தலைவரும் தமக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பங்கள், மதிப்பு, சலுகைகள் போன்றவற்றை பயண்படுத்தி மற்றைய சமையங்களை இழிவு படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நாம் முன்னுதாரணமாக திகழ்ந்து வழிநடத்த வேண்டும். நாம் ஒன்றினைப்பின் முகவர்களாக திகழ வேண்டுமே தவிர பிரிவினை வாதத்தின் முகவர்களாக அல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுமக்களை வன்முறையாளர்களாக்கி ஆட்சியைக் கைப்பற்ற ஜே.வி.பி சதி – ஜனாதிபதி ரணில்

நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி பொதுமக்களை வன்முறையாளர்களாக்கி ஆட்சி கவிழ்ப்பு சதியில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைமையிலான குழு ஈடுப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் பிரபல ஊடகம் ஒன்றும் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சி கூட்டத்தில் இந்த விடயங்களை தெரிவித்த ஜனாதிபதி, அரச கவிழ்ப்பு சதி தொடர்பான புலனாய்வு அறிக்கை மற்றும் வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டார். மேலும் குறித்த சதி திட்டம் தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்க விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவை ஸ்தாபிப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

ஆளும் கட்சி கூட்டத்தில் மேலும் கருத்து தெரிவித்து ஜனாதிபதி கூறுகையில்,

நாட்டில் காணப்படும் வறட்சியை அடிப்படையாக கொண்டு குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியும் பிரபல ஊடகம் ஒன்றும் வன்முறைகள் ஊடாக ஆட்சி கவிழ்ப்பு சதியை முன்னெடுத்து வருகின்றன. கடந்த ஆண்டை போன்று மக்களை வன்முறையாளர்களாக்கி வீதியில் இறக்கி அரச எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறை போராட்டங்களின் இறுதி இலக்கு ஆட்சி கவிழ்ப்பு சதியாகும். இதனை மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான குழுவே முன்னெடுக்கின்றது. சதித்திட்டத்திற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. புலனாய்வு அறிக்கைகளும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த வீடியோ ஆதாரங்களை அவதானியுங்கள். ஆதாரங்களை உள்ளடக்கிய அறிக்கையையும் பாருங்கள். மீண்டும் நாட்டை வன்முறைக்குள் கொண்டுச் செல்ல இடமளிக்க முடியாது.

எனவே ஜே.வி.பியின் ஆட்சி கவிழ்ப்பு சதி குறித்து கவனத்தில் கொள்ள விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவை எதிர்வரும் நாட்களில் நியமிக்க உள்ளேன். பாதுகாப்பு தரப்புகளுக்கும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடிகளிலிருந்து நாடு தற்போது ஒரு சுமூகமான நிலைக்கு வந்துள்ளது. பொருளாதார மறுசீரமைப்புகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மக்களின் முழுமையான ஒத்துழைப்புகள் பொருளாதார மறுசீரமைப்புகளுக்கு கிடைத்துள்ளன. பல்வேறு மக்கள் நலசார்ந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு, அனைத்து வழிகளிலும் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல முயற்சிகளை முன்னெடுத்துள்ளேன்.

இவற்றை சீரழித்தும் நாட்டின் அமைதியை சீர்குலைக்கவுமே முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. வறட்சியை காரணம் காட்டி மக்களை வன்முறைக்குள் தள்ளுவதற்கு இடமளிக்க முடியாது. விவசாயத்திற்கு தேவையான நீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விவசாய நடவடிக்கைகளுக்கு என கூறி சமனல குளத்திலிருந்து ஒரு மாதத்திற்கு முன்பதாகவே தண்ணீர் விடுவிக்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்டதொரு செயல்பாடாகும்.

எனவே சமனல குளத்திலிருந்து தண்ணீரை விடுவித்தமை குறித்து முழுமையான அறிக்கையை கோரியுள்ளேன். யார்? எந்த நோக்கத்திற்கு இதனை செய்தார்கள் என்ற முழுமையாக விசாரணைகளை முன்னெடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன். அநாவசியமான காலப்பகுதியில் சமனல குளத்தின் நீர் விடுவிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை அதிகாரிகள் ஏற்கனவே முறையிட்டுள்ளனர்.

உடவலவ நீர்தேக்கத்தில் தண்ணீர் பிரச்சினை ஏற்படாததொரு தருணத்தில் சமனல குளத்திலிருந்து எவ்வாறு நீரை விடுவிக்க முடியும். இது குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதே போன்று உடவலவ நீர்தேக்கத்தினால் பயனடைகின்ற 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தில், 13 ஆயிரம் ஏக்கர் நெல் செய்கைக்கும் ஏனைய 12 ஆயிரம் ஏக்கர் ஏனைய பயிர் செய்கைக்குமே ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில், 25 ஆயிரம் ஏக்கரிலும் நெல் பயிரிட்டமையானது, யாருடைய ஆலோசனைகளின் பேரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்ற பிரச்சினையும் அங்குள்ளது.

இந்த விடயம் குறித்தும் தனித்து விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஜனாதிபதி நாடாளுமன்றில் உரை

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் புதன்னன்று விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

இதன்படி பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை எவ்வாறு பகிர்வது என்பது தொடர்பில் இந்த விசேட உரையின் போது ஜனாதிபதி தெளிவுபடுத்தவுள்ளார்.

இதேவேளை 13 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சித்தாலும் எதிர்க்கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளும் இவ்விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வராமையானது ஜனாதிபதியின் அந்த முயற்சிகளுக்குத் தடையாக அமைந்துள்ளதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

13 ஆவது திருத்த அமுலாக்கம் தொடர்பிலான பிரேரணை அடுத்த வாரம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான அரசாங்கத்தின் பிரேரணையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை விடுத்து இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி பல சுற்று கலந்துரையாடல்களை நடத்தியதுடன் வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு சர்வகட்சி மாநாட்டிற்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

அரசியலமைப்பில் உள்ளடங்கியுள்ள 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு தமக்கு எதிர்ப்பு இல்லையென்றாலும், நாட்டில் பெரும்பான்மையினரால் எழுந்துள்ள கரிசனை காரணமாக ஆரம்பத்தில் பொலிஸ் அதிகாரம் இல்லாமல் 13வது திருத்தத்தை அமுல்படுத்த ஜனாதிபதி முன்வந்துள்ளார்.

இந்தப் பிரச்சினையை அரசியலாக்காமல் விரைவில் தீர்த்து வைக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருப்பதால், இந்தப் பிரேரணைகளை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆராய்ந்து இந்த விடயம் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது விசேட உரையின் போது மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான யோசனைகளையும் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்னவை நியமித்து வர்த்தமானி வெளியீடு

பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம் எதிர்வரும் ஜுலை மாதம் 9ஆம் திகதி முதல் மூன்று மாதங்களுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்தை அடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியை சந்தித்துத் கலந்துரையாடினார் இம்மானுவேல் மக்ரோன்!

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினார்.

ஒரு மணித்தியாலம் பதினைந்து நிமிடங்கள் நீடித்த இந்த கலந்துரையாடலில் நட்புரீதியான மற்றும் பயனுள்ள இருதரப்பு விடங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது.

சர்வதேச தொடர்புகளில் பிரான்ஸின் ஈடுபாட்டிற்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி, காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தல், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு மற்றும் இந்து – பசுபிக் வலய பிரச்சினைகள் தொடர்பில் வழங்கப்படும் ஒத்துழைப்புக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

அண்மையில் பிரான்ஸில் நடைபெற்ற புதிய உலகளாவிய நிதி இணக்கப்பாட்டிற்கான மாநாட்டின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தான் நடத்திய கலந்துரையாடல் தொடர்பில் ஜனாதிபதி மக்ரோன் நினைவு கூர்ந்தார்.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிப்பதாக அவர் மீண்டும் உறுதிப்படுத்தியிருந்ததோடு, இலங்கையின் நான்காவது பெரிய கடன் வழங்குனர் என்ற வகையில் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு தனது ஆதரவை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் – சர்வ கட்சி மாநாட்டில் ஜனாதிபதி

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக அனைத்து கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில்ஆரம்பமானது.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்க் கட்சிகளுடன் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் அமுல்படுத்தும் விடயம் என்பதால் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்தார்.

தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புதிய சட்டங்களை இயற்றும் அதிகாரம் தமக்கு மாத்திரமன்றி முன்னைய ஏழு நிறைவேற்று ஜனாதிபதிகளுக்கும் இல்லை என்பதைசுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புதிய சட்டங்களை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளதாக குறிப்பிட்டார்.

நாட்டின் முன்னேற்றத்துக்கான பொருத்தமான முன்மொழிவுகளை தான் கொண்டு வருவதாகவும், ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து பிரதிநிதிகளுக்கும் உள்ளது என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஒன்பது மாகாண சபைகளில் ஏழு மாகாண சபைகள் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அமைந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மாகாண சபை முறைமையை பேண வேண்டுமாயின், ஏற்கனவே உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்திய அவர்,. விவசாயம் மற்றும் சுற்றுலா போன்ற அடிமட்ட நடவடிக்கைகள் உட்பட தற்போது மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

மத்திய அரசாங்கம் நாட்டுக்கான கொள்கைகளை வகுக்கும் அதே வேளையில் அனைத்து துறைகளிலும் அபிவிருத்தி நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான வசதிகளை மாகாண சபைகள் வழங்க வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் – ஐ.நா பிரதிநிதியிடம் ஜனாதிபதி உறுதி

வடக்கு, கிழக்கு மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும் இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளரிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்சுக்கும் (Marc-André Franch) இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்திக்கான பல முக்கிய விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.

நாட்டின் நிதி தொடர்பான சவால்களை முறியடிப்பதற்கும் நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும் கடன் மறுசீரமைப்பிற்கும் ஐ.நா. ஒத்துழைப்பை வழங்குவதாக மார்க் ஆன்ட்ரே தெரிவித்தார்.
இதன்போது வடக்கு – கிழக்கு அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத் திட்டங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐ.நா.. வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு கையளித்தார்.

வடக்கு, கிழக்கு மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும் இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதுமே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

அதற்காக எதிர்காலத்தில் நாட்டில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதில் இலங்கையும் ஐக்கிய நாடுகள் சபையும் நெருக்கமாக செயற்படவும் இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.

தமிழ் மக்கள் தொடர்பிலான இந்தியாவின் நிலைப்பாட்டை ரணிலிடம் உறுதியாக எடுத்துரைத்தார் இந்திய பிரதமர் மோடி

இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயம், இலங்கை அரசியலில் இந்த மாதத்தின் ஆரம்பத்திலிருந்தே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு இன்று நடைபெற்று முடிந்திருக்கிறது.இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருநாள் உத்தியோகபூர்வ பயணமாக இந்தியாவுக்கு சென்றிருக்கிறார்.

ஹைத்ராபாத் இல்லத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மோடி வரவேற்றதோடு, இரு நாட்டு தலைவர்களும் இன்று காலை முக்கியக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்பின்னர் இருநாட்டு தலைவர்களும் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் ஏற்பாடு செய்திருந்தனர்.இந்த சந்திப்பின்போது, தமிழில் வணக்கம் எனவும் சிங்களத்தில் ஆயுபோவன் எனவும் கூறி தனது உரையை பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்தார்.

இலங்கையின் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி, தமிழ் மக்கள் கண்ணியத்துடனும் மரியாதையுடன் வாழ்வதை இலங்கை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்திய – இலங்கைக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் பல உட்கட்டமைப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பில் இருநாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

குறிப்பாக இந்திய வம்சாவளி மக்களான மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் நிறைவடையொட்டி அவர்களின் மேம்பாட்டு உதவும் வகையிலான திட்டத்தையும் இதன்போது மோடி அறிவித்துள்ளார்.தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என்றும் சமத்துவம், நீதி மற்றும் சமாதானத்தை இலங்கையில் உறுதி செய்ய வேண்டும்.

13ஆவது திருத்தச் சட்டத்தை அமல்ப்படுத்துதல், மாகாணசபைத் தேர்தல்களை நடத்துதல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள உறுதி மொழிகளை நிறைவேற்றும் என்றும் இந்தியா எதிர்பார்ப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டதன் பின்னர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதற்தடவை. இது எனக்கும், எனது அரசாங்கத்துக்கும் மிகவும் முக்கியமான சந்திப்பு என இதன்போது இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

“அதிகாரப்பகிர்வின் ஊடாக அதிகாரங்களைப் பகிர்தல் உள்ளிட்ட வடக்குக், கிழக்கின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான யோசனை ஒன்றை இந்த வாரம் நான் முன்வைத்திருக்கிறேன்.

தேசிய ஒருமைப்பாடை ஏற்படுத்திக்கொண்டு இந்த விடயத்தில் இணைந்து செயற்பட வேண்டுமென அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் நான் அழைப்பு விடுத்திருக்கிறேன்.

இது தொடர்பில் பொறுத்தமான சட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் முன்வைக்கும். இது குறித்து இந்திய பிரதமருக்கு விரிவான விளக்கத்தை வழங்கியிருக்கிறேன்.” எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார்

அதிகாரப் பகிர்வுக்கான ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குவதாக இந்திய பிரதமர் தெரிவிப்பு

நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வுக்கான விரிவான திட்டத்துடன் இணக்கத்தை எட்டுவதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்புக்கும் , முயற்சிகளுக்கும் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர பொருளாதார உறவுகள் குறித்து சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் எதிர்கால இந்திய – இலங்கை பொருளாதார பங்காளித்துவத்தின் முக்கியத்துவத்தையும் பிரதமர் மோடியுடனான சந்திப்பில் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மேம்படுத்தப்பட்ட பொருளாதார, உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பாராட்டினார்.

இந்தியாவின் வளர்ச்சி அயல் நாடுகள் மற்றும் இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு சாதகமான தன்மையை ஏற்படுத்தும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பதவியேற்ற பின்னர் இந்தியாவிற்கு தனது முதல் விஜயத்தின் போது, இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் மிகவும் கடினமான காலங்களில், இந்தியா வழங்கிய உறுதியான ஆதரவுக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசாங்கம், இந்திய மக்களுக்கு இதன் போது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

இலங்கையில் அனைவரும் பொருளாதார மறுமலர்ச்சி, நிலையான அபிவிருத்தி, நீதி ஆகியவற்றை அடைவதற்கான தனது அர்ப்பணிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் உறுதிப்படுத்தினார்.

நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வுக்கான விரிவான திட்டத்துடன் இணக்கத்தை எட்டுவதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்புக்கும் , முயற்சிகளுக்கும் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பொருளாதாரப் பங்காளித்துவத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் நவீன இணைப்பு முக்கியப் பங்காற்றுகிறது என்று தெரிவித்த ஜனாதிபதி, அண்மையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட சென்னை மற்றும் யாழ்ப்பாண விமானச் சேவைகள், இரு நாடுகளுக்கும் இடையிலான விமான இணைப்பில் ஒரு முக்கிய மைல்கல் என்று சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்குமிடையில் விமான சேவைகளையும், கப்பல் சேவைகளைகளையும் மேம்படுத்த உடன்பாடு காணப்படுவதாகவும், அது சுற்றுலா மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது குறித்து ஜனாதிபதி விக்ரமசிங்க மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கலந்துரையாடினர்.

இலங்கைக்கு வலுசக்தி வளங்களை, குறைந்த விலையிலும், நம்பகமான விநியோகத்தை உறுதி செய்யவும் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு குழாய்களை அமைப்பதற்கும் இதன்மூலம் வலுசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதி விக்ரமசிங்கவின் இந்திய விஜயம், இரு தரப்பு நம்பிக்கையை வலுப்படுத்துவதையும், பசுமை மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களில் இந்தியாவுடன் ஒத்துழைத்துச் செயற்படுவதையும், இலங்கை – இந்திய உறவுகளின் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அதிக திறன் கொண்ட மின் கட்டமைப்பு, ஒன்றோடொன்று இணைக்கப்படுவதால், தடையற்ற இருவழி மின்சார வர்த்தகத்தை எளிதாக்குகிறது. அத்துடன், இது பிராந்தியத்தில் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தவும் நிலையான வளர்ச்சியையையும் ஊக்குவிக்கும்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், மேம்படுத்தவும், தனது இந்திய விஜயம் நல்லதொரு வாய்ப்பாக அமைகிறது என்று ஜனாதிபதி விக்ரமசிங்க தெரிவித்தார்.

போட்டிமிகு உலகில் பரஸ்பர சுபீட்சத்தை நோக்கமாகக் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான புவியியல் மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவில் கல்வித் துறையின் வகிபாகத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி விக்ரமசிங்க, நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்காக புதிய உயர்கல்வி நிறுவனங்களை நிறுவுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

தலைமன்னார் – இராமேஸ்வரம் மற்றும் நாகபட்டினம் – காங்கேசன்துறை இடையேயான படகுச் சேவைகள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் வழிப் போக்குவரத்தை மேலும் பலப்படுத்தும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஏனைய தொடர்புகளையும் ஆராய்வது பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க மேலும் ஊக்கமளிக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது குறித்து ஜனாதிபதி விக்ரமசிங்க மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கலந்துரையாடினர்.

இலங்கைக்கு வலுசக்தி வளங்களை, குறைந்த விலையிலும், நம்பகமான விநியோகத்தை உறுதி செய்யவும் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு குழாய்களை அமைப்பதற்கும் இதன்மூலம் வலுசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகளை வெற்றிகொள்வதில் இந்திய இலங்கை பங்குடமையானது வலுவான மூலாதாரமாக இருந்ததாக இரு நாடுகளினதும் தலைவர்கள் ஏற்றுக்கொண்டிருந்த அதேசமயம், இலங்கை மக்களுக்காகவும் அரசாங்கத்துக்காகவும் முன்னொருபோதுமில்லாத வகையில் இந்தியாவால் தக்கதருணத்தில் வழங்கப்பட்ட ஆதரவுக்காக இலங்கை ஜனாதிபதி அவர்கள் இந்தியாவுக்கு விசேட பாராட்டுகளை தெரிவித்திருந்தார்.

இலங்கையில் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை, பொருளாதார மீட்சி, ஆகியவற்றுக்கான தமது அர்ப்பணிப்பினையும் நம்பிக்கையினையும் இரு தலைவர்களும் இச்சந்திப்புகளின்போது மீள வலியுறுத்தியிருந்த அதேவேளை, நல்லிணக்கத்தினை ஊக்குவிப்பதற்காகவும் நாட்டின் சகல பகுதிகளிலும் உள்ள இலங்கையின் அனைத்து சமூகங்களினதும் நலன்களுக்காக ஸ்திரமானதும் சமமானதும் வலுவானதுமான பொருளாதார வளர்ச்சிக்கான இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் முதலீட்டின் முக்கியத்துவத்தினை அவர்கள் உறுதிப்படுத்தியிருந்தனர்.

மேலும் இந்தியாவின் ஸ்திரமானதும் துரிதமானதுமான பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவை இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, பொருளாதார மீட்சி, புனரமைப்பு பணிகள் ஆகியவற்றுடன் இணைந்து, இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமானதும் ஆழமானதுமான இருதரப்பு பொருளாதார பங்குடைமையை உருவாக்குவதற்கும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குவதாக இரு தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர்.

மேலும், இரு நாட்டு மக்களிடையே நாகரீக உறவுகள், புவியியல் ரீதியான நெருக்கம், கலாசார தொடர்பு மற்றும் புராதன நன்மதிப்பு ஆகியவற்றால் வழங்கப்பட்டுள்ள இணையற்ற நன்மைகளை சுட்டிக்காட்டியதுடன், பகிரப்பட்ட மற்றும் நிலையான பொருளாதார செழுமையை உருவாக்கும் வகையில் ஏற்கனவே உள்ள இணக்கப்பாடுகள் மற்றும் ஏனைய மேலதிக வசதிகளைப் பயன்படுத்துவதற்கான முயற்சியையும் அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

இந்த நோக்கங்களின் அடிப்படையில், இவற்றை செயல்படுத்தும் முக்கிய கருவியாக, சகல பரிமாணங்களிலும் தொடர்புகளை வலுவாக்குவதற்கும் மேம்படுத்துவதற்குமான முக்கியத்துவம் குறித்தும் இரு தலைவர்களும் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதற்கமைவாக; இரு தலைவர்களும் கீழ்வரும் தீர்மானங்களை எடுத்துள்ளனர்.

I. கடல் மார்க்கமான இணைப்பு;

பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் பிராந்திய கப்பல் மற்றும் போக்குவரத்து தொடர்புகளை அதிகரிப்பதனை இலக்காகக் கொண்டு கொழும்பு, திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை துறைமுகங்கள் மற்றும் அவற்றின் உட்கட்டமைப்பு வள அபிவிருத்தியில் ஒத்துழைப்பு வழங்குதல்.

இந்தியாவிலுள்ள நாகபட்டினம் மற்றும் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்தினை மீள ஆரம்பித்தல், இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையிலும் பரஸ்பரம் இணக்கம் காணப்பட்ட ஏனைய இடங்கள் இடையிலுமான கப்பல் போக்குவரத்தினை விரைவில் மீள ஆரம்பிப்பதற்கான பணிகளை முன்னெடுத்தல்.

II. வான் மார்க்கமான தொடர்பு;

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைகளை மீள ஆரம்பித்தமையானது இருநாட்டு மக்களிடையிலுமான உறவுகளை மேம்படுத்தியுள்ள அதேவேளை இச்சேவையினை கொழும்பு வரை விஸ்தரிப்பதற்கும் அதே போல சென்னை மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட இலங்கையின் ஏனைய இடங்கள் இடையிலான தொடர்புகளை விஸ்தரிப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

மக்களுக்கு சிறந்த பொருளாதார பிரதிபலன்களை பெற்றுக் கொள்வதற்காக, பலாலி விமான நிலையத்தின் உட்கட்டமைப்பினை மேலும் அபிவிருத்திசெய்தல் உட்பட சிவில் விமான போக்குவரத்து துறையில் ஒத்துழைப்பினையும் முதலீட்டினையும் வலுவாக்குதல் மற்றும் ஊக்குவித்தல்.

III.மின்சக்தி மற்றும் வலுச்சக்தி இணைப்புகள்;

புதுப்பிக்கத்தக்க சக்தியினை அபிவிருத்தி செய்வதில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளமையானது, இலங்கையின் முக்கியத்துவமிக்க புதுப்பிக்கத்தக்க சக்தியினை அபிவிருத்தி செய்வதற்காக கரையோர காற்றாலைகள் மற்றும் சூரியக்கலங்கள் மூலமான மின்சக்தி உட்பட இலங்கையின் குறிப்பிடத்தக்க புதுப்பிக்கத்தக்க சக்தி ஆற்றலை மேம்படுத்தும், இதன்காரணமாக 2030 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்கள் ஊடாக 70 வீதமான மின் தேவையினை பூர்த்தி செய்வதை இலக்காகக் கொண்டிருக்கும் இலங்கையின் நோக்கம் வெற்றியடைவதனை உறுதி செய்தல்.

இலங்கையில் மின்சார உற்பத்தி செலவினத்தை குறைப்பது மட்டுமல்லாமல் இலங்கைக்கான அந்நியச் செலாவணிக்குரிய நம்பகமான மற்றும் வலுவான தளத்தினையும் உருவாக்கும் நோக்குடன் BBIN நாடுகள் உட்பட இலங்கைக்கும் ஏனைய பிராந்திய நாடுகளுக்கும் இடையில் நேரடியான வர்த்தக மின் சேவைகளை செயல்படுத்துவதற்காக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உயர்வலு மின்சக்தி விநியோகக் கட்டமைப்பினை ஸ்தாபித்தல்.

இலங்கையின் மின் உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி மூலங்களை அதிகரிப்பதனை இலக்காகக் கொண்டு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் ஊடாக பசுமை ஹைட்ரோஜன் மற்றும் பசுமை அமோனியா ஆகியவற்றில் ஒத்துழைப்பினை விஸ்தரித்தல் மற்றும் சம்பூரில் சூரியமின்கல திட்டம் மற்றும் எல்.என்.ஜி திட்டம் ஆகியவை குறித்த புரிந்துணர்வினை துரிதமாக அமுல்படுத்துதல்.

திருகோணமலை எண்ணெய்தாங்கி பண்ணைகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திக்கான தற்போதைய ஒத்துழைப்பானது, திருகோணமலை பிராந்தியத்தில் பரஸ்பரம் நன்மை பயக்கும் ஒத்துழைப்பு திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கான எமது பெருமுயற்சியினை பிரதிபலிக்கின்றது, அத்துடன் கைத்தொழில் மின்சக்தி மற்றும் பொருளாதார செயற்பாடுகள் ஆகியவற்றுக்கான பிராந்திய மற்றும் தேசிய மையமாக திருகோணமலையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கும் இணக்கம் காணப்பட்டது.

இலங்கைக்கு மலிவானதும் நம்பகமானதுமான எரிசக்தி வளங்களின் உறுதியான விநியோகத்தினை உறுதிப்படுத்துவதனை இலக்காகக் கொண்டு இந்தியாவின் தென்பகுதியில் இருந்து இலங்கைக்கு பல்பொருள் பெற்றோலிய குழாய் கட்டமைப்பினை நிர்மாணிப்பதற்கான ஒத்துழைப்பு.

இலங்கையின் மேல்நிலை (UPSTREAM) பெற்றோலிய வளத்துறையினை அபிவிருத்தி செய்யும் இலக்குடன் இலங்கை கரைக்கு அப்பாலுள்ள பகுதிகளில் பரஸ்பர இணக்கப்பாட்டுக்கு அமைவாக கூட்டு அகழ்வு மற்றும் ஹைட்ரோகாபன் உற்பத்தியை மேற்கொள்ளல்.

IV.வர்த்தகம், பொருளாதார மற்றும் நிதி ரீதியான தொடர்பு

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட் பெருந்தொற்று ஏற்பட்டிருந்த காலப்பகுதிகளில் இரு தரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார ஈடுபாடுகள் மிகவும் ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டிருக்கும் அதேவேளை, கொள்கை நிலைத்தன்மை, இலகுவாக வர்த்தகங்களை மேற்கொள்வதை ஊக்குவித்தல், இருதரப்பு முதலீட்டாளர்களுக்குமான வெளிப்படையான அணுகுமுறை ஆகியவற்றின் ஊடாக பரஸ்பர முதலீட்டினை மேற்கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டது.

மேலும் இலங்கை அரசாங்கத்துக்கு சொந்தமான வர்த்தக நிறுவனங்களின் உரித்துமாற்றல் நடவடிக்கைகளிலும் இலங்கையின் பல்வேறு துறைகளிலும் உற்பத்தி மற்றும் பொருளாதார வலயங்களிலும் இந்தியாவிலிருந்து முதலீடுகளை மேற்கொள்வதற்கான வழிவகைகளை உருவாக்குதல்.

புதிய மற்றும் முன்னுரிமைக்குரிய துறைகளில் இருதரப்பு வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை பரந்தளவில் மேம்படுத்துதனை இலக்காகக் கொண்டு பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கலந்துரையாடல்களை மேற்கொள்தல்.

இந்திய ரூபாவை இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக கொடுக்கல் வாங்கல்களுக்கு பயன்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் காரணமாக பரஸ்பரம் நன்மை பயக்கின்றதும் வலுவானதுமான வர்த்தக தொடர்புகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன் வர்த்தக நிறுவனங்களுக்கும் சாதாரண மக்களுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் ஏனைய கொடுக்கல் வாங்கல்களை மேலும் மேம்படுத்துவதற்காக UPI தளத்தினை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் கொடுப்பனவு முறையினை செயல்படுத்துவதற்கு இணங்கப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி மற்றும் ஆட்சி முறையில் இந்தியாவின் துரிதமான டிஜிட்டல் மயமாதல் இந்தியாவில் தற்போது மேற்கொள்ளப்படும் நிலையியல் மாற்றங்களின் முக்கியமான வினையூக்கியாக அமைந்துள்ளது. அத்துடன் பிரஜைகளை மையமாகக் கொண்ட சேவைகளை ஆக்கபூர்வமான வகையிலும் வினைத்திறன் மிக்கதாகவும் இலங்கை மக்களுக்காக வழங்குவதற்கும், இலங்கைக்கான தேவை மற்றும் முன்னுரிமை ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பினை பயன்படுத்துவதற்கும் இணங்கப்பட்டுள்ளது.

V. மக்கள் – மக்கள் தொடர்பு

சுற்றுலா துறையினை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் பௌத்த வளாகங்கள் மற்றும் இராமாயண யாத்திரை, அதேபோல இலங்கையில் உள்ள புராதனமான பௌத்த, இந்து மற்றும் ஏனைய மதங்களின் வழிபாட்டு இடங்கள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துதல் மற்றும் அவற்றினை பிரபலமாக்குதல்.

இலங்கையின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கையில் புதிய உயர் கல்வி மற்றும் தொழில் திறன் பல்கலைக்கழகங்களை ஸ்தாபிப்பதன் ஊடாக இருதரப்பிலும் கல்வி சார்ந்த நிறுவனங்களிடையிலான ஒத்துழைப்பினை கண்டறிவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

விவசாயம், நீர்வளம், தகவல் தொழில்நுட்பம், வர்த்தகம், நிதி மற்றும் முகாமைத்துவம், சுகாதாரம் மற்றும் மருத்துவம், பூமி மற்றும் சமுத்திர விஞ்ஞானம், சமுத்திரவியல், விண்வெளி ஆராய்ச்சி ஆகியவை குறித்தும் அதேபோல வரலாறு, கலாசாரம், மொழிகள், இலக்கியம், மத ரீதியான கற்கைகள் மற்றும் ஏனைய மானிடப் பண்பியல் உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இடையிலான ஒத்துழைப்பினை விஸ்தரித்தல்.

இலங்கை மற்றும் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழுமையினை ஊக்குவிப்பதற்காக திருகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கான தரை மார்க்கமான பிரவேசத்தினை விஸ்தரிக்கும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலத் தொடர்பினை ஸ்தாபித்தல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பல்லாயிரம் ஆண்டுகால உறவினை மேலும் அபிவிருத்தி செய்தல். இவ்வாறான தொடர்பினை ஸ்தாபிப்பது குறித்த ஆய்வு மிகவும் கிட்டிய காலத்தில் ஆரம்பிக்கப்படும்.

இந்த அடிப்படையில், இப்பரந்த பிராந்தியத்திலும் இரு நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழுமையினை உறுதிப்படுத்துவதற்கான இருதரப்பு ஒத்துழைப்புக்கான முக்கியத்துவமிக்க தருணத்தையும் நீண்டகால மார்க்கத்தினை வழங்குவது மட்டுமல்லாமல் மேம்படுத்தப்பட்ட பரஸ்பர நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மைமீது கட்டி எழுப்பப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இந்திய இலங்கை உறவுக்கான எதிர்கால பாதையினையும் வடிவமைக்கின்ற இந்த பகிரப்பட்ட இலக்கினை துரிதமாக எட்டுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இரு தலைவர்களும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கிடையிலான பேச்சுவார்த்தை இன்று வெள்ளிக்கிழமை (21) முற்பகல் டெல்லியில் இடம்பெற்றது.

இரு நாட்கள் விஜயம் மேற்கொண்டு வியாழக்கிழமை (20) இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஹைதராபாத் இல்லத்தில் வைத்து அன்புடன் வரவேற்றார்.

இதன்பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தை ஆரம்பமாகியது. இந்த ஆண்டு இரு நாடுகளும் தூதரக உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில், நீண்டகால இந்திய – இலங்கை இராஜதந்திர உறவுகளை மறுபரிசீலனை செய்து மேலும் வளர்ப்பதற்கு இது பெரும் வாய்ப்பாக அமையும்