அறிவுள்ளவர்கள் நிர்வகித்திருந்தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது – மத்திய வங்கி ஆளுநர்

நாட்டின் பொருளாதாரத்தை அறிவுள்ளவர்கள் நிர்வகித்திருந்தால் நாடு இவ்வாறான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்காது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (19) மாத்தறை ராகுல கல்லூரியின் 100வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் கலந்து கொண்டபோதே இந்த கருத்தினை முன்வைத்திருந்தார்.

மேலும் அவர் “தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எடுக்கப்படும் கடினமான தீர்மானங்களை மக்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் கூட, முடிவெடுப்பவர்களும், கொள்கை வகுப்பாளர்களும் சரியான திறன்களைக் கொண்ட சரியான நபர் நீண்ட காலமாக அந்த பதவிகளில் பணியாற்றியிருந்தால், நாம் இந்த நிலையை அடைந்திருக்க மாட்டோம்.

தகுதியானவர்களுக்கு சரியான இடம் கிடைத்தால்தான் வளர்ந்த நாடுகள் வளரும்.

இல்லாவிட்டால், தனக்கு உரிய இடம் கிடைக்காத திறமைசாலி, தன் திறமைக்கேற்ப போட்டி போட்டு முன்னேற முடியாத சமூகத்தில் இருந்தால் அது வெற்றியாக கருதமுடியாது.

மத்திய வங்கியின் ஆளுநர் என்ற வகையில் நான் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். நாங்கள் மிகவும் கடினமான காலங்களில் இருக்கிறோம். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது எளிதல்ல. இதற்கு கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும்”என தெரிவித்திருந்தார்.