தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக காணிகள் உடனடியாக விடுவிக்கப்படும் ஒரு சூழல் இல்லாதிருக்கின்றது என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
தண்ணிமுறிப்பு – குருந்தூர்மலையில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகள் தொல்பொருள் திணைக்களத்தால் சுவீகரிக்கப்பட்ட நிலையில் குறித்த காணிகளை விடுவிப்பது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை அரசியல் தலைவர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் அங்கு சென்று நிலைமைகளை அவதானித்தனர்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
குருந்தூர்மலை பிரதேசத்திலே வனவளத் திணைக்களம், தொல்லியல் போன்ற ஆளுகைக்குட்பட்ட காணிகளை விடுவிப்பது சம்பந்தமாக கள நிலவரத்தை அவதானித்தோம்.
இதன் அடிப்படையில், உடனடியாக இந்த நிலங்கள் விடுவிக்கப்படும் சூழல் இல்லாதிருக்கின்றது. மீண்டும் ஜனாதிபதியோடு பேசுகின்ற வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று வந்திருக்கின்ற உயர் அதிகாரிகள் இந்த விடயம் சம்பந்தமாக கூறியிருக்கிறார்கள்.
நாங்கள் மக்கள் இருந்த பூர்வீக காணிகள் என்று உறுதிபட கூறியிருக்கின்றோம். அதனை ஜனாதிபதியிடமும் எடுத்து கூறி விடுவிப்பதற்கான முயற்சியை மேற்கொள்வோம். என்னைப் பொறுத்தமட்டிலே இது உடனடியாக நடக்குமா என்று சந்தேகம் இருக்கிறது – என்றார்.