வடக்கு, கிழக்கில் 30ஆம் திகதி போராட்டத்துக்கு முழு ஆதரவு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவிப்பு

வடக்கு-கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் எதிர்வரும் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு ஜனநாயக கூட்டமைப்பினர் முழு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரத்தின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்- எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் உலகெங்கும் நினைவு கூரப்படவுள்ளது. இந்நிலையில் வடக்கில் மன்னாரிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் எதிர்வரும் 30 ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் நீதிகோரி பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே இந்த போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு ஆதரவையும் வழங்குவது மாத்திரமல்லாது எமது உறவுகளுக்கான நீதியை பெற்றிட தேசியத்தின்பால் ஈர்ந்துள்ள அனைவரும் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொள்ள வேண்டும்- என்றார்.

இவ்ஊடகவியலாளர் சந்திப்பில் புளொட் அமைப்பின் இணைப்பாளர் கேசவன், ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் மத்தியகுழு உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம், ரெலோ அமைப்பின் பிரசன்னா இந்திரகுமார், ஜனநாயப் போராளிகள் கட்சி இணைப்பாளர் நகுலேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.