வடக்கு கிழக்கு காணி விடுவிப்பு தொடர்பில் எதிர்வரும் 15ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அந்தக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் காணி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
இங்கு அரசியல் கைதிகளின் நீதி விவகாரங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையை வழங்குமாறு கலந்துரையாடலில் கலந்து கொண்ட நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.