கல்வி நிறுவனங்களில் அரசியல்வாதிகளின் அளவுக்கு மீறிய இடையூறே கல்வித் துறையின் வீழ்ச்சிக்குக் காரணம் – ஜனா எம்.பி

கல்வி நிறுவனங்களில் அரசியல்வாதிகளின் அளவுக்கு மீறிய இடையூறே கல்வித் துறையின் வீழ்ச்சிக்குக் காரணம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (01) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வி மற்றும் மகளிர் விவகாரங்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எமது நாட்டின் கல்வித்துறை வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு சவால் விடுக்கக் கூடிய வகையில் பெருமைப்படக்கூடியதாக அமைந்திருந்தது. கல்வி அமைச்சு, மகளிர் சிறுவர்கள் சமூக வலுப்படுத்தல்கள் அமைச்சுக்கள் தொடர்பான நடவடிக்கைகளில் நாம் சுதந்திரத்துக்குப் பின்னர் வளர்ச்சியடைந்துள்ளோமா என வினவுகிறேன்.சுதந்திரத்துக்குப் பின்னரான டொமினியல் காலத்தில் வலு வேறாக்கல் கொள்கை முறையாக கடைப்பிடிக்கப்படு வந்தது.72 ஆம் ஆண்டு குடியரசான பின்னர் கல்வித்துறையில் அரசியல் செல்வாக்கும் அரசியல்வாதிகளின் செல்வாக்கும் அரசாங்க கட்சிகளின் செல்வாக்கும், அவர்களின் அடிவருடிகளின் செல்வாக்கும் பூரணமாக உள்நுழையத் தொடங்கியது. அரசியல் துறையின் அளவுக்கு மீறிய அத்துமீறல் கல்வித் துறையில் நடக்கின்றது.

கல்வியமைச்சின் கீழ் இருக்கின்ற நிறுவனங்களிலும் திணைக்களங்களிலும் தலைவர்கள் முதல் சிற்றூழியர்கள் வரை நியமனம் செய்யப்படுவது சேவை மூப்பின் அடிப்படையிலோ கல்வித் தகைமையின் அடிப்படையிலோ இன விகிதாசார அடிப்படையிலும் அல்ல. குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் விருப்பு வெறுப்புக்கேற்ப பாடசாலை அதிபர் தொடக்கம் நிறுவனங்களின் உயர் தலைவர் வரை நியமனம் செய்கின்றீர்கள். வட கிழக்கின் வாழ் கல்வித் திணைக்களங்களின் செயற்பாடுகள் எம்மால் திருப்திப்படக்கூடிய வகையில் இல்லை. வட கிழக்கு வாழ் அரசாங்க சார்பு அரசியல்வாதிகளை திருப்திப்படுத்தக் கூடியதாக மட்டுமே உள்ளது. பதவியிலுள்ளவர் அடுத்த பதவி உயர்வை எடுப்பதற்காக ஆளும் கட்சி அரசியல்வாதியின் காலில் விழுந்தால் எமது நாட்டின் கல்வியின் நிலை எப்படி உயரும். இப்படியான ஒரு கல்வியினால் எப்படி உயர்ந்த சமுதாயத்தை கட்டி எழுப்ப முடியும்.

பல்கலைக்கழக அனுமதிக்கு மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கபடும் என்பதை வரவேற்கிறேன். தேசிய கல்வி நிறுவனம் 30 வருடங்களாக இயங்குகின்றது. தேசிய கல்வி நிறுவனத்தை வெளிநாடுகளில் காணப்படுவது போன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் பல்கலைக்கழகமாக இணைத்துக் கொள்ள வேண்டும். தேசிய கல்வி நிறுவனத்தில் பல கலாநிதிப் பட்டங்களை முடித்தவர்களும், பாரிய கட்டிடங்களையும் இதர வசதிகளையும் கொண்டிருப்பதால் இலகுவாக பல்கலைக்கழகமானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஒரு பல்கலைக்கழமாக மாற்றிக் கொள்ளலாம். தேசிய கல்வி நிறுவகத்துக்கு 4000 மாணவர்களுக்குப் பதிலாக 8000 மாணவர்களை உள்வாங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிகிறது. ஒரு ஆசிரிய மாணவருக்கு 5000 ரூபா தான் ஒதுக்கப்படுகிறது. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் விலை அதிகரிப்பில் குறித்த தொகை போதாது. அமைச்சர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன். ஜெய்க்கா திட்டத்தினூடாக விசேட தேவையுடையவர்களுக்கான கல்வி பயிலுநர்களுக்கான விண்ணப்பத்தை கோரி இருந்தார்கள். கல்வி அமைச்சுக்கு 09 ஆம் திகதி செப்ரெம்பர் மாதம் குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மாகாண கல்வித்திணைக்களுக்கு 22 ஆம் திகதி நவம்பர் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் விண்ணப்ப முடிவுத் திகதி 23 ஆம் திகதி ஒரு மணிக்கு முதல் விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு 23 ஆம் திகதி காலை 10 மணிக்கே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது . 03 மணித்தியால காலப்பகுதியினுள் எப்படி விண்ணப்பிக்க முடியும்? இது முழு நாட்டிலும் நடைபெற்றுளது. இதனூடாக அவர்கள் ஜெய்க்காவின் குறித்த கல்வி நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் போயுள்ளது என தெரிவித்தார்.