சரத் வீரசேகர இராணுவத்தில் ரொட்டி சுட்டுக் கொண்டா இருந்தார்? ; முடிந்தால் தமிழ் எம்.பிக்களை கைது செய்யுங்கள் – செல்வம் எம்.பி சவால்

முடிந்தால் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து காட்டுங்கள். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைக்க சொல்வதற்கு சரத் வீரசேகரவுக்கு என்ன உரிமை இருக்கிறது? முடிந்தால் அதை செய்து பார்க்கட்டும் – இவ்வாறு சவால் விட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன். வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கடந்த காலங்களில் பல கருத்துகளைக் கூறியுள்ளார். குறிப்பாக, தமிழ் பிரதேசங்களில் நடைபெறுகின்ற அடக்கு முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கின்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார். மாகாண சபை முறைமையையும் இல்லாது ஒழிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

சரத் வீரசேகர இராணுவத்தில் ரொட்டி சுட்டுக் கொண்டா இருந்தார். ஏனெனில், எங்கள் மக்களின் பிரச்னை என்பது காலம்காலமாக இருந்து வரும் பிரச்னை. தங்களின் பிரச்னைகளை பேசுவதற்கே மக்கள் தமது பிரதிநிதிகளை பாராளுமன்றம் அனுப்புகிறார்கள். தங்களுக்கான அநீதிகளை சுட்டிக்காட்டும் வழியிலும் தான் பாராளுமன்றம் அனுப்புகிறார்கள்.

அந்தவகையில் தங்கள் தேசத்து மக்களின் பிரச்னைகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுகிறார்கள். இவர் யார்? – தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைக்க சொல்வதற்கு இவருக்கு என்ன உரிமை இருக்கிறது? முடிந்தால் அதை செய்து பார்க்கட்டும். சும்மா இராணுவத்தில் இருந்து எதையெல்லாமோ செய்து போட்டு வந்து கொக்கரிக்கக் கூடாது. அவருக்கு சவால் விடுகின்றேன். மக்கள் நலன் சார்ந்து பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்யுங்கள் பார்க்கலாம். அடுத்து என்ன நடக்கும் என்று பார்ப்பீர்கள் – என்றார்.