பூகோள அரசியலை தமிழர் தரப்பு தந்திரோபாயமாக கையாளவில்லை – சபா குகதாஸ்

இலங்கைத் தீவின் அமைவு காரணமாக பூகோள அரசியல் மையங் கொண்டாலும் காலத்திற்கு காலம் அதன் வடிவங்களும் நகர்வுகளும் மாறுபட்டதாக அமைந்துள்ளது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் இன்றைய தினம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,

இதனை சிங்கள பிரதான கட்சிகள் கச்சிதமாக கையாள்வதால் மாறி மாறி ஆட்சிக் கதிரைகளை பிடித்துக் கொள்கின்றனர். ஆனால் தமிழர் தரப்பு பகடைக்காய்களாக பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

காரணம் சிங்களத் தரப்பின் இராஜதந்திர நகர்வு கூட தமிழர் தரப்பிடம் இருந்திருக்கவில்லை அத்துடன் தமிழர் தரப்பு மூன்றாம் தரப்பின் தேவைகளை பூர்த்தி செய்யும் தரப்பாக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டதே தவிர தமிழ் மக்களின் பிரதான இலக்கை வெல்லக் கூடிய செயல் முறையை தமிழர் தரப்பு கையாள தவறி விட்டது.

தற்போது மீண்டும் பூகோள அரசியல் இலங்கைத் தீவில் கொதி நிலை அடைந்துள்ளது அத்துடன் பிராந்திய சூழல் நெருக்கடியான நிலைக்குள் தள்ளப்பட்டு செல்கிறது இதனை சிங்கள ஆட்சியாளர்கள் தமக்கு சாதகமாக மாற்ற களத்தில் இறங்கியள்ளனர்.

ஆனால் தமிழர் தரப்பிற்கு மிக சாதகமாக பூகோள அரசியல் மாறி இருக்கிற சூழலில் புலம்பெயர் தமிழர் தரப்பும் தாயக அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து இராஜதந்திர நகர்வை முன் நகர்த்தினால் பிரதான மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

ஏற்கனவே இலங்கையில் இந்தியா, சீனா, அமெரிக்கா, காலூன்றி தமக்கான தளங்களை அமைத்துவரும் போது ரஷ்யா, யப்பான் போன்ற நாடுகளும் நகர்வுகளை ஆரம்பித்துள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் தமிழர் மீதான அடக்குமுறைகள் சர்வதேச ரீதியாக பெரும் அதிர்வலைகளை உருவாக்கி வருகின்றது. அதற்கு மனிதவுரிமைப் பேரவை தீர்மானங்கள் மற்றும் கனடா பிரதமரின் இனப்படுகொலை தின அறிவிப்புக்கள் பிரித்தானிய அவுஸ்ரேலிய இராஜதந்திர நகர்வுகள் அமெரிக்க மற்றும் மேற்குலகின் இராஜதந்திர நகர்வுகளை திரட்சியாக ஒரே நிலைப்பாட்டில் தமிழர் தரப்பிற்கு சாதமாக மாற்ற முடியும் இதுவே தமிழர்களுக்கான அரசியல் அதிகாரங்களை வென்றெடுக்க வழி.

தேசிய சர்வதேச அரசியல் இராஜதந்திர நகர்வுகள் ஊடகவே தமிழின விடுதலையை தமிழர்கள் தமக்கு சாதகமாக மாற்ற முடியுமே தவிர வெறும் அறிக்கை அரசியல் ஊடாக மாற்றிவிட முடியாது.

ஆட்சித் தரப்பின் அதிகார மையத்தை மாற்றியமைப்பதோ அல்லது அமைச்சர்களை மாற்றுவதோ அமைச்சின் பணிப்பாளர்களை மாற்றுவதோ ஒருபோதும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாகாது. மாறாக சிறிய இடைவேளையாக அல்லது இவ்வாறான மாற்றங்களை வைத்து சர்வதேச அழுத்தங்களில் இருந்து தற்காலிகமாக தப்புவதற்கு அரச தரப்புக்கு சாதகமாக அமையுமே தவிர பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பிற்கு பின்னடைவுதான்.

சர்வதேச பூகோள நாடுகளின் தந்திரோபாய இராஐதந்திர நகர்வுகளின் ஊடாக தமிழர்களுக்கான அரசியல் அதிகாரங்களை வென்றெடுப்பதற்கான விலையை தமிழரின் ஆயுத போராட்டமும் அகிம்சைப் போராட்டமும் கொடுத்திருக்கிறது இதனை தமிழர் தரப்புக்கள் ஒற்றுமையாக கையாள வேண்டும் அதுவே தமிழின விடுதலை – என குறிப்பிட்டுள்ளார்.