தமிழ் தலைமைகளுடன் விரைவில் அரசியல் தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை – திஸ்ஸ விதாரண

அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகளுடன் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளோம். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் சாத்தியமற்றதை போன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் அரசியல் தீர்வு சாத்தியமற்றது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தலைமையில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற சர்வக்கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துக் கொண்டேன்.

பாராளுமன்றம் மற்றும் பொது இடங்களில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்து கருத்துரைக்கும் தமிழ் அரசியல் தலைமைகள் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு தொடர்பில் கருத்துரைக்கவில்லை.

ஐக்கிய நாட்டுக்குள் பிளவுப்படாத வகையில் அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது. அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகளுடன் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட எதிர்பார்த்துள்ளோம்.

இரண்டு வருட காலத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ குறிப்பிட்டார். ஆனால் அவர் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படவில்லை. வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினால் அவரால் பதவி வகிக்க முடியாமல் போனது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவினால் புதிய அரசியலமைப்பை உருவாக்க முடியாது என்பதை நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன்.

75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளமை வேடிக்கையாகவுள்ளது. இவரது செயற்பாடுகள் எதிர்காலங்களில் இல்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்கும் வகையில் உள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் வசமுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்,அதற்கு ஆதரவு வழங்குவோம் என்றார்.