நாட்டில் மனித படுகொலைகளுக்கான நீதியைக் கூட  பெறமுடியாது நாம் போராடுகின்றோம் – முன்னாள் தவிசாளர் நிரோஷ்

தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு  அரசு பொறுப்புச் சொல்வதற்கோ அல்லது நீதிக்கான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கோ தயாரில்லை. இந்நிலையில், சர்வதேசத்தின் தலையீடு காத்திரமாக அயைவேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் வலி- கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் குருந்தூர் மலை விவகாரம் மற்றும் மனிதப் புதைகுழிகளுக்கு நீதிவேண்டி இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போராட்டத்தின் பின்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும், இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் பின்பாக அப் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீட்சியடைவதற்காக பௌத்த சிங்கள பேரினவாதத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுப்பர் என தமிழ் மக்கள் நம்பினர். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக என்றாலும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாரிய மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களுக்கு அரசு பெறுப்புச் சொல்லும் என்பதுடன் மீள அவ்வாறாக நடைபெறாமையை பொறுப்புச் சொல்வதன் வாயிலாக உறுதிப்படுத்தி நீதி கிட்டும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் துரதிஸ்டவசமாக தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழ்நிலைகள் உரியவாறு உறுதிப்படுத்தப்படாமல் நாட்டில் பொருளாதார ரீதியிலான சீராக்கங்களுடன் சர்வதேச உதவிகளை அரசு பெற்றுக்கொண்டுள்ளது. இதனை தமிழ் மக்கள் பேரிடியாகப் பார்க்கின்றனர். அடிப்படையில் உள்நாட்டில் நீதியில்லை. நியாயமில்லை. இனரீதியிலான படுகொலைகளுக்கு பாரிகாரங்கள் இல்லை என்ற நிலையில் எமது மக்கள் எப்போதும் நியாயபூர்வமான சர்வதேச தலையீட்டை எதிர்பார்க்கின்றனர்.

இன்றும் குருந்தூர் மலையில் எமது வழிபாட்டு உரிமை கூட மறுக்கப்பட்டுள்ளது. நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுளளது.

யுத்தத்தின் போதும் பின்பாகவும் எமது  மக்கள் அரச அனுசரனையுடன் வழிகாட்டுதல்களுடன்தான் அரச படைகளினால் சித்திரவதை செய்யப்பட்டார்கள், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்கள். படுகொலை செய்யப்பட்டார்கள். இவ்வாறாக இலங்கையில் இடம்பெற்ற இடம்பெற்றுவரும்  வெளிப்படையான உண்மைகளை கருத்தில் கொண்டு இலங்கையுடனான அரசியல், பொருளாதார, கலாச்சார சமூக ரீதியிலான தொடர்புகளில் சர்வதேசம் பொருத்தமான தலையீடுகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.