இலங்கை தனது அபிவிருத்தி இலக்குகளை அடைய வேண்டுமாயின் நல்லிணக்கம் மிக அவசியம் அலி சப்றி

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவதன் மூலம் இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சகல பிரிவினருக்கும் உண்மையைக் கண்டறிய வாய்ப்பு கிடைக்குமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட வேண்டும் எனவும் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மாத்திரமே அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் தெரிவித்த அமைச்சர், சட்டம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் ஆணைக்குழுவிற்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஆணைக்குழுவின் பணிகளை நிறைவேற்றுவதற்காக சர்வதேச மட்டத்தில் பல விரிவுரைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இடைக்கால செயலகம் அமைக்க ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாகவும் இதன் ஊடாக ஆணைக்குழுவின் பணிகளை விரைவில் தொடங்குவதற்கான அடித்தளத்தைத் தயார்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை தெளிவுபடுத்துவதற்காக புதன்கிழமை (26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பொறுப்புக்கூறல் செயற்பாட்டின் அவசியத்தையும் அதனை ஸ்தாபிப்பதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் விளக்கிய அமைச்சர், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதற்குத் தேவையான அனைத்து விடயங்களையும் மேற்கொள்வதாகவும் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதியின் தொழிற்சங்க விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, மூன்று தசாப்த கால யுத்தத்தினால் இன, மத வேறுபாடின்றி அனைவரும் பாரிய சேதங்களை சந்திக்க நேரிட்டது என்று தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டிய தேவை நாட்டிற்குள்ளும் சர்வதேச ரீதியிலும் எழுந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அதற்காக ஸ்தாபிக்கப்பட்ட பல்வேறு ஆணைக்குழுக்கள் முன்வைத்த யோசனைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

“தென்னாபிரிக்கா போன்ற நாடுகளின் பொறிமுறைகளை ஆராய்ந்து இலங்கைக்குப் பொருத்தமான பொறிமுறையை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியாவிட்டால் நாடு மீண்டும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படும். எனவே சமூகத்தை தெளிவுபடுத்தி இதனைச் செயற்படுத்துவதற்கான ஆதரவைப் பெற வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

சுதந்திரம் பெற்று 20 வருடங்கள் நிறைவடையும் போது நல்லிணக்கத்தின் ஊடாக சிங்கப்பூர் அபிவிருத்தியடைந்த நாடாக மாறியுள்ளதாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அசங்க குணவன்ச தெரிவித்தார்.

இலங்கை தனது அபிவிருத்தி இலக்குகளை அடைய வேண்டுமாயின் நல்லிணக்கம் மிகஅவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஆணைக்குழுவை நிறுவுவதன் மூலம் துரதிர்ஷ்டவசமான யுகம் மீண்டும் ஏற்படாத சூழலை உருவாக்க முடியும் என சுட்டிக்காட்டிய அசங்க குணவன்ச, உள்நாட்டில் வெற்றிகரமான மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பொறிமுறையை உருவாக்கத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காகவே இடைக்கால செயலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் சட்டம் ,கொள்கைப் பிரிவு மற்றும் மக்கள் தொடர்பாடல் பிரிவு ஆகிய மூன்று பிரிவுகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் உரையாற்றிய வண.தம்பர அமில தேரர், கடந்த தேர்தலில் மதவாதமும், இனவாதமும் பாரியளவில் தலைதூக்கியதால், அந்த அனுபவத்தை மக்கள் மறக்க முன் இந்த செயற்பாட்டை மேற்கொள்ளுமாறு கோரிக்கைவிடுத்தார்.

ஜனாதிபதி தற்போது துணிச்சலான தீர்மானங்களை மேற்கொண்டு வருவதாகவும், அவ்வாறே மீண்டும் இவ்வாறான சம்பவம் இடம்பெறாதிருக்க தேவையான கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் தம்பர அமில தேரர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சந்திப்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.