நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்க நிபந்தனையுடன் ஆதரவளிக்கத் தயார் – சஜித் பிரேமதாச

நிறைவேற்று அதிகாரஜனாதிபதி முறையை நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்க தயார் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு ஐக்கியமக்கள் சக்தி நிபந்தனையுடன் ஆதரவளிக்க தயார் என தெரிவித்துள்ள அவர் தேர்தலின் பின்னரே இந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஆரம்பத்தில் நிறைவேற்று அதிகாரமுறையை நம்பினோம் ஆனால் சட்டத்தின் ஆட்சிக்கு இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என குறிப்பிட்டுள்ள சஜித்பிரேமதாச இதன் காரணமாக நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை மாற்றிவிட்டோம் என சட்டத்தரணிகள் மாநாட்டில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஜனாதிபதி தேர்தலை அல்லது வேறு எந்த தேர்தலையும் நடத்தாமல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதை எதிர்க்கின்றோம் மக்களின் வாக்களிப்பதற்கான உரிமையை பறிக்ககூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

.நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான பொறுப்பு ஜனாதிபதியின் விசுவாசியொருவருக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள சஜித்பிரேமதாச அவர் சிவில் சமூக உறுப்பினர்கள் சிலருடன் இணைந்து இதனை முன்னெடுத்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் ஏனையவர்களின் நிலைப்பாட்டை அறிவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் அரசமைப்பு சீர்திருத்தங்களிற்கு சரியான தருணம் இதுவென குறிப்பிட்டு வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசமைப்புசீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி குரல்கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அரசமைப்பு பேரவை ஒருபோதும் ஜனாதிபதியின் அடிமையாக மாறாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.