பொலிஸ் அதிகாரத்தை பறிக்கும் முயற்சிகளை ஈ.பி.டி.பி. எதிர்க்கும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரத்தினை இல்லாமல் செய்வதற்கு அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் தக்கவைக்கப்பட வேண்டும் என்பதுடன் மேலதிக அதிகாரங்களையும் பெற்றுகொள்ளும் வகையில் ஈ.பி.டி.பி. தொடர்ச்சியாக உறுதியுடன் செயற்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரத்தினை மீளப்பெறுவதற்காக உதய கம்பன்பிலவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தத்திற்கான தனிநபர் பிரேரணை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், “அரசியல் ரீதியான நோக்கங்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பிலவினால் இந்த தனிநபர் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது. இது நாடாளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் நிறையப் படிமுறைகளை தாண்டி வரவேண்டியிருக்கின்றது. தற்போதைக்கு அது சாத்தியமில்லை என்றே கருதுகின்றேன்.

ஒருவேளை, இந்த முயற்சி தொடர்ந்தும் முன்னகருமாக இருந்தால், நாம் உருவாக்கி வைத்துள்ள தேசிய நல்லிணக்கத்தினை பயன்படுத்தி, அதனை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.