மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் – கம்மன்பில

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் நாட்டின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படும். ஆகவே மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் ஏற்பாடுகள் முழுமையாக இரத்துச் செய்யப்பட வேண்டும்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 22ஆவது திருத்த யோசனையை எதிர்வரும் வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பேன் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் அதிகாரத்தை இரத்து செய்யும் வகையில் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில முன்வைத்த இருபத்திரெண்டாவது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரங்களை நீக்கும் வகையில் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை கொண்டு வருவதற்காக பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில கடந்த ஆண்டு ஜூலை மாதமளவில் பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தார்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திக் பிரதான அம்சமாக மாகாண சபைத் தேர்தல் முறைமை,பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் காணப்படுகின்றன.பொலிஸ் அதிகாரத்தை நீக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவே முதன் முறையாக தனிநபர் பிரேரணையை சமர்ப்பித்துள்ளார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை திருத்தம் செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில,

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தினால் தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தலாம் என ஜனாதிபதி குறிப்பிடுவது அடிப்படையற்றது.13ஐ அமுல்படுத்தினால் தற்போது உள்ள நல்லிணக்கம் கூட பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும்.பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் தமிழ் தலைமைகளுக்கு கிடையாது.பிரச்சினைகளை புதிதாக உருவாக்கி அதனூடாக அரசியல் இலாபம் தேடிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

13 ஆவது திருத்தத்துக்கு அமைய பொலிஸ் சேவை மாகாண பொலிஸ் தேசிய பொலிஸ் என இரண்டாக வேறுப்படுத்தப்படும்.தேசிய பொலிஸ் அதிகாரிகள் மாகாணங்களுக்குள் இருக்கும் பொலிஸ் சீருடை அணிய அனுமதி வழங்கப்படமாட்டாது. அதற்காக மாகாண முதலமைச்சரின் அனுமதி பெற வேண்டும். பிரிவினைவாதிகளை தாக்க பாதுகாப்பு தரப்பினர் பிரிவினைவாதிகளிடம் அனுமதி கோர வேண்டும்.

இந்தியாவின் கடும் அழுத்தத்தின் ஊடாகவே இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அதனூடாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டது.இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் காணி மற்றும் பொலிஸ் விவகாரங்கள் தொடர்பில் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் தான் மாநிலங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய அரசியலமைப்பின் 256 மற்றும் 257 அத்தியாயங்களில் மாநில அரசாங்கம் இந்தியாவுக்கு எதிராக செயற்படும் போது அதில் தலையிடும் அதிகாரம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அரசாங்கத்தின் தலையீட்டுடன் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தத்தில் இலங்கைக்கு எதிராக மாகாணங்கள் செயற்படும் போது அதில் தலையிடும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு என்ற ஏற்பாடுகள் ஏதும் உள்ளடக்கப்படவில்லை.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நகர்வுகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை முழுமையாக வழங்கினால் இலங்கை இராணுவத்துக்கும்,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொலிஸுக்கும் இடையில் எதிர்காலத்தில் முரண்பாடுகள் தோற்றம் பெறலாம். பொலிஸ் நியமனத்தில் மாகாண முதலமைச்சரின் தலையீடு காணப்படும். ஆகவே இது தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.

13 ஆவது திருத்தத்தில் பொலிஸ் அதிகாரம் என்பதொன்று இருப்பதால் தான் தமிழ் தலைமைகள் அதனை முழுமையாக அமுல்படுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரத்தை முழுமையாக இரத்து செய்யும் வகையில் நான் சமர்ப்பித்த தனிநபர் பிரேரணை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே 22 ஆவது திருத்த யோசனை சட்டமூலத்தை அடுத்தவாரம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பேன் என்றார்.