மின்கட்டணம் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் – காஞ்சன

நாட்டின் மின் உற்பத்திக்கான கேள்வி,மின்கட்டணம் தொடர்பில் இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு காலத்தின் தேவைக்கமைய செயற்படவில்லை. இந்த ஆணைக்குழுவை ஸ்தாபிக்காமல் இருந்திருக்கலாம்.

நடைமுறைக்கு சாத்தியமான வகையில் மின்சார கட்டணம் தற்போது திருத்தம் செய்யப்படவில்லை. மின்கட்டணத்தை மீண்டும் திருத்தம் செய்வதற்கான பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள்,மின்சார கட்டணத்தை நடைமுறைக்கு சாத்தியமாகும் வகையில் திருத்தம் செய்யாவிட்டால் இந்த சேவை துறைகளை முன்னெடுத்து செல்ல முடியாது என மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மத தலங்களை மாத்திரம் இலக்காக கொண்டு மின்கட்டணம் திருத்தம் செய்யப்படவில்லை.மாற்றுத்திட்டங்களை செயற்படுத்தும் வரை மத தலங்களுக்கான மின்கட்டணம் தொடர்பில் அவதானம் செலுத்த முடியாது எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு, நீர் வழங்கல் அமைச்சு ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

எரிபொருள் மற்றும் மின்விநியோக கட்டமைப்பில் காணப்படும் நெருக்கடிக்கு எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒப்பீட்டளவில் தீர்வு காண அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.மத தலங்களுக்கான மின் கட்டண திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சியின் உறுப்பினர் ரவூப் ஹக்கீம் உரையாற்றியுள்ளார்.

அனைத்து சேவைத்துறைகள் மற்றும் வீட்டுபாவனையை உள்ளடக்கிய வகையில் மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.மத தலங்களை மாத்திரம் இலக்காக கொண்டு மின்கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.

2013 ஆம் ஆண்டுக்கு பிறகு தான் தற்போது மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டது,இருப்பினும் 2014 ஆம் ஆண்டு 25 சதவீதத்தால் மின்கட்டணம் குறைபக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் நுரைச்சோலை அனல் மின்நிலையம் தேசிய மின்கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டதால் மின்னுற்பத்திக்கான கேள்வி குறைக்கப்பட்டு மின்கட்டணம் 25 சதவீதத்தால் குறைக்கப்பட்டது.

இருப்பினும் கடந்த காலங்களில் மின்சாரம் தொடர்பில் கொள்கை ரீதியிலான தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை,மின்னுற்பத்திக்கான கேள்வி அதிரிக்கப்பட்ட போதும்,அரசியல் காரணிகளுக்கான மின்கட்டணம் திருத்தம் செய்யப்படவில்லை,இதன் பொறுப்பை ஆட்சியில் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்க வேண்டும்.

தேவையான நேரத்தில் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கும்,குறைப்பதற்கும் விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு அதிகாரம் இல்லை.

அரசாங்கத்திற்கும் அந்த அதிகாரம் இல்லை.இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு மின்கட்டணம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் காணப்பட்ட போதும் ஆணைக்குழு பொறுப்புடன் செயற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு மின்கட்டணம் திருத்தம் மாத்திரமல்ல மின்பாவனை கேள்வி தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.இந்த ஆணைக்குழு ஸ்தாபிக்கபடாமலிருந்திருந்திருக்கலாம்.

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் பணிகள் முறையாக இடம்பெறவில்லை.விடயதானம் தொடர்பில் திறனற்றவரை ஆணைக்குழுவின் தலைவராக பதவி வகிக்கும் போதும் போது சிறந்த மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது,

இலங்கை பொதுபயன்பாட்டு ஆணைக்குழு 2013 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் மின்கட்டணத்தை திருத்தம் செய்யாத காரணத்தினால் 2022 ஆம் ஆண்டு மின்கட்டண திருத்தம் ஊடாக மக்கள் மீது பாரிய சுமையை சுமத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இலங்கை மின்சார சபையின் பரிந்துரைகளுக்கு அமைய மின்கட்டணத்தை அதிகரிக்க இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை.கடந்த ஜனவரி மாதம் ஒரு கிலோகிராம் நிலக்கரியின் விலை 24 ரூபாவாக காணப்பட்டது,ஆனால் தற்போது 114 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

மறுபுறம் டீசலின் விலை 431 ரூபாவாகவும்,உராய்வு எண்ணெயின் விலை 320 ரூபாவாகவும் உயர்வடைந்துள்ளது ஆகவே நடைமுறைக்கு சாத்தியமாகும் வகையில் இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு மின்கட்டணத்தை திருத்தம் செய்யவில்லை.

ஆகவே மின்கட்டணத்தை மீண்டும் திருத்தம் செய்யாமல் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதே உண்மை.24 மணித்தியாலமும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க வேண்டுமாயின் அமுல்படுத்த வேண்டிய திட்டம் தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிக்கை சமர்ப்பித்துள்ளது.தற்போதைய செலவுகளுக்கமைய ஒரு மின் அலகு உற்பத்திக்கு 56.90 ரூபா செலவாகுகிறது,ஆனால் ஒரு அலகு மின்சாரத்திற்கு 29 ரூபா அறவிடப்படுகிறது.

ஒருமாத மின் உற்பத்திக்கு மாத்திரம் 889 பில்லியன் ரூபா செலவாகும் நிலையில் ,மின் கட்டணம் அறவிடல் ஊடாக 400 பில்லியன் ரூபா கிடைக்கப் பெறுகிறது,செலவுக்கும்,வருமானத்திற்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றன.

ஆகவே மின்கட்டணம் மீண்டும் திருத்தம் செய்யப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவுறுத்தியது,அதற்கமைய மின்கட்டணம் திருத்தம் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோக கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டும் எதிர்தரப்பினர் எவ்வித மாற்றுத்திட்டங்களையும் இதுவரை முன்வைக்கவில்லை. வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையால் எரபொருள் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதே உண்மை,இதனை ஒருபோதும் மறுக்கவில்லை.

நாடு இயல்பான நிலையில் உள்ளது என ஒரு தரப்பினர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.நாடு வங்குரோத்து நிலை அடைந்து விட்டது என்பதை உத்தியோகப்பூர்வமாக அறிவித்ததன் பின்னர கடன் அடிப்படையில் எரிபொருள் வழங்க எவரும் முன்வருவதில்லை.இதுவே உண்மை.

மிகவும் நெருக்கடியான நிலையில் தான் எரிபொருள்,எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது.அமைச்சு மட்டத்திலான முறையான முகாமைத்துவத்தினால் தற்போது எரிபொருள் விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது.

ஊடகங்கள் தவறான விடயங்களை சமுகமயப்படுத்தகின்றன.கி.யு ஆர் முறைமை எதிர்வரும் மாதம் முதல் இரத்து செய்யப்படும் என வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும்.

எரிபொருள் விநியோகத்தை முகாமைத்துவ அடிப்படையில் முன்னெடுத்து செல்ல வேண்டும்.புதிய திட்டத்திற்கமைய 65 ஆயிரம் முச்சக்கர வண்டிகளுக்கு 10 லீற்றர் பெற்றோலையும்,பதிவு செய்யப்பட்டுள்ள 17 ஆயிரம் பேருந்துகளுக்கு 80 அல்லது 90 சதவீதமளவில் டீசலையும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.கோட்டா அடிப்படையில் தொடர்ந்து எரிபொருள் விநியோகிக்கப்படும்.

மின்கட்டணத்தை செலுத்த முடியாத காரணத்தினால் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது என எதிர்தரப்பினர் முன்வைத்துள்ள விடயம் முற்றிலும் அடிப்படையற்றதாகும். மின்விநியோக துண்டிப்பது தொடர்பில் எனக்கு தீர்மானம் எடுக்க முடியாது.

ஆனால் சுகாதார சேவையில் மின்விநியோகம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் போது உணர்வு பூர்வமாக அவதானம் செலுத்துமாறு மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன். சுகாதாரத்துறை சேவை பாதிக்கப்பட்டால்,அது பாரதூரமான விளைவை ஏற்படுத்தும்.

மத தலங்களுக்கான மின்கட்டணம் குறித்து தனித்த தீர்மானங்களை எடுக்க முடியாது,எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் நாடளாவிய ரீதியில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 134 விகாரைகளின் மாத மின்கட்டணததை இலங்கை மின்சார சபை செலுத்தியது,ஆனால் புதிய கட்டண திருத்தத்தின் போது 134 விகாரைகளின் மின்கட்டணத்தை இலங்கை மின்சார சபை செலுத்த கூடாது,அவர்களே செலுத்த வேண்டும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்தது,அதற்கமையவே ஒருசில விகாரைகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஒருசில விகாரைகளின் மின்கட்டணத்தை அவர்களே செலுத்த வேண்டும் என மகாநாயக்க தேரர்களும் தெரிவித்துள்ளார்கள்.

மின்சார துறையில் மாற்று திட்டங்களை செயற்படுத்தும் வரை மின்கட்டண திருத்தம் குறித்து அவதானம் செலுத்த முடியாது.காலத்தின் தேவைக்கு அமைய எரிபொருள் மற்றும் மின்சார கட்டணம் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை விருப்பமில்லாத வகையில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.