அபிவிருத்தி என்ற கவசத்துக்குள் இனத்தின் தனித்துவத்தை சிதைக்க சிலர் முயற்சி- சபா.குகதாஸ் குற்றச்சாட்டு

தமிழர்களின் தனித்துவமான பண்பாடு, கலை கலாசாரங்களை சிதைக்கும் நோக்கிலும், இளைய தலைமுறையை திசை திருப்பும் வகையிலும் தமிழர் தாயகத்தில் முதலீடு செய்யும் நோக்கில் கால் பதித்துள்ள ஒரு சில புலம்பெயர்ந்த முதலீட்டாளர்களின் செயற்பாடு ஆரோக்கியமானதாக இல்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சபா. குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழர் தாயகத்தில் முதலீடு செய்யும் நோக்கில் கால் பதித்துள்ள ஒரு சில புலம்பெயர்ந்த முதலீட்டாளர்கள் தமிழர்களின் தனித்துவமான பண்பாடு கலை கலாசாரங்களை சிதைக்கும் நோக்கிலும் இவற்றை பாதுகாக்க வேண்டிய இளைய தலைமுறையை திசை திருப்பும் வகையிலும் செயற்பட ஆரம்பித்துள்ளமை ஆரோக்கியமானதாக இல்லை.

யுத்தம் கோரமாக நடந்த இடங்களில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்ட மண்ணில் பொழுது போக்கு மையங்கள் என்ற போர்வையில் அந்நிய கலாசார அடையாளங்களையும் அதன் நடைமுறைகளையும் உட் புகுத்தி பல சமூகப் பிறழ்வுகளை ஊக்குவிக்கும் செயற்பாடு மிக வேதனையாக உள்ளது.

அடுத்து, கல்வியில் ஏதோ மிக பின் தங்கிய இனமாக ஈழத் தமிழர்களை காட்டும் வகையில் இனி தாங்கள் தான் பல்கலைக் கழகங்களை நிறுவி கல்வியை ஊக்குவிப்பதாக கதை அளந்து கொண்டு பாரம்பரிய கலைகள் மற்றும் பண்பாட்டை சீரழிக்கும் வகையில் இனத்தை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் செயற்பாடு மிக கவலை அழிக்கிறது.

ஈழத் தமிழர்கள் மத்தியில் சரியான ஒரு மேய்ப்பன் இல்லை என்பதை காட்டும் சம நேரம், ஈழத் தமிழர்களை வைத்து எந்தப் பிழைப்பையும் நடத்தலாம் என்ற எண்ணமும் மேலோங்கி வருவதை காணமுடிகிறது.

சிங்கள ஆட்சியாளரும் சில வெளிச் சக்திகளும் விரும்பும் நிகழ்ச்சி நிரலில் புலம்பெயர் முதலீட்டாளர் என்ற வடிவத்தில் சிலர் கைக் கூலிகளாக மாறியுள்ளனர்.

இனத்தின் ஒற்றுமை மற்றும் தனித்துவ அடையாளங்கள் போன்றவற்றை மாற்றியமைக்கும் அல்லது கொச்சைப்படுத்தும் நோக்கில் தங்களது செயற்பாடுகளை முன்நகர்த்தி வருகின்றனர்.

தாயகத்தில் உள்ள சக்திகளை விமர்சித்து தங்களை புனிதர்கள் போல புதிய தலைமுறைக்கு காட்ட முயல்கின்றனர். ஒரு சில முதலீட்டாளர்கள்.

ஆனால், எமது வலிகள் வேதனைகள் துயரங்கள் எவற்றிலும் பங்கெடுக்காத இவற்றை எல்லாம் மூலதனமாக வைத்து பணம் சம்பாதித்த குழு மீண்டும் பிறிதொரு வடிவில் மீண்டும் பணம் சம்பாதிக்க களம் இறங்கியுள்ளது.

இப்படியான இனப்பற்று இல்லாத வியாபாரிகள் மிக ஆபத்தானவர்கள் என்பதற்கு அப்பால் இனத்தை எதிரியானவன் அழிப்பதற்கு மிகப் பலமாக எதிரிக்கு கைகொடுப்பார்கள் கல்வியில் தமிழர்கள் அனைத்து துறைகளிலும் பிரகாசித்த காரணத்தால் தான் பல்கலைக்கழக தரப்படுத்தல் சிங்களவர்களால் கொண்டு வரப்பட்டது என்ற அடிப்படை வரலாற்றுப் பிரச்சினைகள் தெரியாத விபச்சார வியாபாரிகள் தான் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களை கல்வியில் உயர்த்தப் போகிறார்களாம். இது மிக வேடிக்கையான கதை.

மிகக் கொடிய யுத்தத்திலும் தமிழர்கள் பலமாக வைத்திருந்த துறை கல்வித்துறை தான் இத்தகைய வரலாறுகள் தெரியாது வெளிச் சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் தமிழர்களை மீண்டும் குழப்பி தங்களுடைய தேவைகளை குளிர்காய சிந்திக்கும் தரப்புடன் எதிர்வரும் காலத்தில் பயணிப்பதை புலம்பெயர் முதலீட்டாளர்கள் தவிர்க்க வேண்டும்.

அத்துடன் தமிழர்களின் தனித்துவத்தை சிதைக்கும் முதலீடுகள் வருவதை தமிழ் மக்களும் ஏற்றுக் கொள்ள வில்லை.

ஆகவே தமிழர்களின் இருப்பை பாதுகாக்கும் வகையில் சமூக வளர்ச்சிக்குரிய முதலீடுகளை தமிழர்கள் இரு கரம் கூப்பி வரவேற்கின்றனர் அத்துடன் சிங்கள மற்றும் வெளிச் சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் வரும் புலம்பெயர் முதலீடுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள் எனவும் தெரிவித்தார்.