13 ஆவது திருத்தத்துக்கு ரணிலில் காலத்தில் தீர்வு காணப்பட வேண்டும் இல்லையேல் எதிர்கால தலைமுறையினர் பாதிக்கப்படுவார்கள்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு உங்களின் காலத்தில் தீர்வு காணுங்கள்.

இல்லையென்றால் எமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உட்பட எதிர்கால தலைமுறையினர் பாதிக்கப்படுவார்கள். அவ்வாறு நிகழ்ந்தால் நீங்கள் வாழ்ந்தாலும், இறந்தாலும் நிம்மதியாக இருக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நோக்கி குறிப்பிட்டார்.

13 ஆவது திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையாற்றினார்.இதனை தொடர்ந்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்துள்ள யோசனைகளை மீளாய்வு செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். சாதக மற்றும் பாதக விடயங்களை ஆராய்ந்து ஒரு தீர்மானத்தை அறிவிப்போம். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நாங்கள் கொண்டு வரவில்லை நீங்கள் தான் (ஜனாதிபதியை நோக்கி) கொண்டு வந்தீர்கள்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜூவ் காந்தியுடன் இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது நான் உட்பட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புறக்கோட்டை அரச மரத்தடியில் போராட்டத்தில் ஈடுபட்டோம், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் இன்று உயிருடன் இல்லை.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு உங்களின் காலத்தில் (ஜனாதிபதியை நோக்கி) தீர்வு காணுங்கள்.

இல்லையென்றால் எங்களை போல் எமது பிள்ளைகள்,பேரப் பிள்ளைகளும் எதிர்காலத்தில் தாக்குதலுக்கு உள்ளாகலாம். அவ்வாறு இடம்பெற்றால் நீங்கள் வாழ்ந்தாலும்,இறந்தாலும் நிம்மதி இல்லாமல் போகும்.ஆகவே பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன் என்றார்.