ஜூனில் ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி ஆகிறார் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, அடுத்த மாதம் நடுப்பகுதியில் பாராளுமன்றத்துக்கு வருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக, கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று(19) கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைத்த நிலையில், குறித்த ஒரு ஆசனத்துக்கான உறுப்பினரைத் தெரிவு செய்வதில், ஐக்கிய தேசிய கட்சிக்குள் இழுபறி நிலை ஒன்று காணப்பட்ட நிலையிலே​யே, ரணில் விக்கிரமசிங்க இத்தீர்மானத்தை எடுத்துள்ளார்.

Posted in Uncategorized

91 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் பாராளுமன்றத்தில் இனறு வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட நிலையில், சட்டமூலம் மீதான மூன்றாம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சட்டமூலத்திற்கு ஆதரவாக 149 வாக்குகளும், சட்டமூலத்திற்கு எதிராக 58 வாக்குகளும் பதிவாகின. அதற்கமைய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் 91 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு சட்டமானது.

சட்டமூலத்தின் முக்கிய சில சரத்துகளுக்கு எதிர்க்கட்சி வாக்கெடுப்பு கோரியும் வாக்கெடுப்பில் தோற்றனர்.

பாராளுமன்றத்தில், நேற்றும், இன்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான இரண்டு நாட்கள் விவாதம் நடத்தப்பட்ட நிலையில் இன்று ஆளும் எதிர்க்கட்சிகளின் வாத விவாதங்களின் பின்னர் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு விடப்பட வேண்டுமா என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் கோரிக்கை விடுத்தார்.

எனினும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஸ்மன் கிரியெல்ல சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு அவசியமில்லை எனவும், ஆனால் எதிர்கட்சியின் எதிர்ப்பை பதிவு செய்துகொள்ளுமாறும் சபையில் தெரிவித்தார்.

ஆனால் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் விஜித ஹேரத் சட்டமூலம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியதற்கு அமைய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

பிற்பகல் 4.30 மணிக்கு கோரம் அடிக்கப்பட்டு 4.35 மணிக்கு இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, இதில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 148வாக்குகளும், சட்டமூலத்திற்கு எதிராக 59 வாக்குகளும் பதிவாகியது.

அதற்கமைய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இதனை அடுத்து கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் நிலையில் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபை உறுப்பினர் விடயத்தில் தற்போது 7 பேரென குறிப்பிடப்பட்டுள்ள உறுப்பினர் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரிக்கப்படுவதுடன் அதில் ஆறுபேர் உத்தியோகப்பூர்வ அதிகாரிகளாக தெரிவுசெய்யப்பட வேண்டும் எனவும் மூவர் ஜனாதிபதியின் நேரடித் தெரிவாக இருக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.

எனினும் அதனை அரசாங்கம் ஏற்க மறுத்ததற்கு அமைய ஆணைக்குழு உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும் என எதிர்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவினால் வாக்கெடுப்பு கோரப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் சரத்திற்கு ஆதரவாக 46வாக்குகளும், எதிராக 147 வாக்குகளும் பதிவாகியது.

அதேபோல் துறைமுக நகரை அரச கூட்டுத்தாபனமாக மாற்றிக்கொள்ள கூட்டுத்தாபனத்திற்கு அரச நிதியில் ஒரு தொகையை முதலீடு செய்யவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்ட வேளையில் அதற்கும் அரசாங்கம் மறுப்பு தெரிவித்தது.

இதனை அடுத்து சட்டமூலத்தின் 23 ஆம் சரத்தில் திருத்தம் வேண்டுமென ஹர்ஷ டி சில்வாவினால் வாக்கெடுப்பு கோரப்பட்டது. அதற்மைய 23 ஆம் சரத்திற்கு ஆதரவாக 46வாக்குகளும் எதிராக 145 வாக்களும் பதிவாகியது.

அதேபோல் சட்டமூலத்தின் 73 ஆம் சரத்தில் கசினோ போன்ற செயற்பாடுகளை கண்காணிக்கும் செயற்பாடு குறித்து எதிர்க்கட்சி வலியுறுத்திய நிலையில் அதனை அரசாங்கம் ஏற்ற மறுத்ததால் அதற்கும் வாக்கெடுப்பு கோரப்பட்டது. அதற்கமைய 73 ஆம் சரத்திற்கு ஆதரவாக 46வாக்குகளும், எதிராக 148 வாக்குகளும் பதிவாகின.

அதனை அடுத்து மேலும் சில சரத்துக்களுக்கு எதிர்க்கட்சி எதிர்ப்பை வெளிப்படுத்திய போதிலும் அதற்கு வாக்கெடுப்பு கேட்கவில்லை. இறுதியாக நீதிமன்ற வியாக்கியானங்கள் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் திருத்தங்களின் பின்னர் மூன்றாம் வாசிப்பின் மீது மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் விஜித ஹேரத் வாக்கெடுப்பு கோரினார். அதற்கமைய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பில் சடமூலதிற்கு ஆதரவாக 149வாக்குகளும் எதிராக 58வாக்குகளும் பதிவாகியது. அதற்கைமைய சட்டம் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

சீனாவிற்கு அதிகாரத்தை கொடுக்க நினைப்பவர்கள் தமிழர்களுக்கு வழங்கியிருந்தால் இரத்த ஆறு ஓடியிருக்காது – ரெலோ தலைவர் செல்வம்

தமிழர்களுக்கும் கிடைக்க வேண்டிய அதிகாரங்களை பகிர்ந்தளித்திருந்தால் இலங்கையில் இரத்த ஆறு ஓடியிருப்பதை தடுத்திருக்க முடியும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், துறைமுக நகர சட்டமூலம் நாட்டின் அரசியலமைப்புக்கு முரண் என நீதிமன்றம் அறிவித்திருக்காவிட்டால், நாட்டுக்குள் வேறு நாட்டுக்குரிய விடயங்கள் இடம்பெற்றிருக்கும். அந்தவகையிலேயே போட்சிட்டி நகர திட்ட உருவாக்கப்பட்டிருக்கின்றது. அன்று எமது பெரியார்கள் சமஷ்டியை கோரி அகிம்சை போராட்டத்தில் ஈடுபட்டபோது, அவர்கள் நய்யப்புடைக்கப்பட்டு, இந்த சபையில் இரத்தம் சொட்டச்சொட்ட தங்களது கருத்துக்களை தெரிவித்தபோது, அந்த அகிம்சைக்கூட மறுக்கப்பட்டது. அதேபோன்று ஆயுத போராட்டம் ஊடாக எமது இனத்தின் விடுதலையை பெறவேண்டும் என சொல்லுகின்றபோது, பயங்கரவாதிகள் பிரிவினை வாதிகள் என எமது மக்களை தெரிவித்து வந்தனர்.

அத்துடன் தற்போது எமது பிரதேசங்களில் எமது விவசாய நிலங்கள் மகாவலி திட்டம் ஊடாக மத்திய அரசாங்கத்துக்கு கீழ் கொண்டுவர திட்டமிடப்பட்டிருக்கின்றது. தொல்பொருள் என்ற பெயரில் செயற்பட்டு எமது பிரதேசத்தில் புத்த விகாரைகளை அமைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. பயங்கரவாத தடைச்சட்டத்தின் பெயரில் இன்று பலர் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஆனால் தற்போது பேசுபொருளாக இருக்கும் போட்சிட்டி என்பது, ஒரு நாட்டுக்குரிய சகல அதிகாரங்களையும் கொண்டிருக்கின்றதாக அமைந்திருக்கின்றது. அப்படியானால் ஏன் அதிகார பரவலாக்கத்தை தரவேண்டும் என்கின்ற எமது தமிழ் இனத்தை பிரித்துப்பார்க்கின்ற, அவர்கள் பயங்கரவாதிகள் என சொல்லும் வகையில் உங்களது சிந்தனைகள் இருக்கின்றன. அத்துடன் மாகாண சபை முறைமையை இல்லாமலாக்கும் திட்டத்தையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. மாகாணசபை சட்டத்தில் இருக்கும் பொலிஸ், நில அதிகாரத்தை கேட்கும்போது பிரிவினைவாதிகள் என எங்களை தெரிவிக்கின்றனர். ஆனால் போட்சிட்டிக்கு ஒரு நாட்டுக்குரிய அதிகாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

அத்துடன் அரசாங்கத்தின் துறைமுக சட்டமூலத்தை சிங்கள மக்களும் எதிர்க்கின்றனர்.அதனால் இந்த நாட்டுக்குள் வேறு ஒரு நாட்டுக்குரிய அதிகாரம் வழங்கும் இந்த சட்டமூலத்தை நாங்களும் எதிர்க்கின்றோம் என்றார்.

 

இலங்கையில் 1000-ஐ கடந்த கொரோனா மரணங்கள்

இலங்கையில் கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்றைய தினத்துடன் 1000-ஐ தாண்டியது.

நேற்று இறுதியான 34 கோவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்றிரவு அறிவித்திருந்தது.

இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் 1015 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நாட்டில் கொரோனா தொற்று காரணமாக 1,47,720 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாரடைப்பு காரணமாக அசாத் சாலி வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மாரடைப்பு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு (18) அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அவர் கவலைக்கிடமான நிலையில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக அசாத் சாலி கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

நௌபர் மௌலவியே பிரதான சூத்திரதாரி, அமெரிக்க புலனாய்வு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது – சரத் வீரசேகர

ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நவுஃபர் மௌலவியே என அமெரிக்காவின் எஃப்.பி.ஐ புலனாய்வு பிரிவும் உறுதிப்படுத்தி இருப்பதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இன்று -19- நாடாளுமன்றில் வைத்து அவர் இதனைக் கூறினார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைகள் நிறைவடையாதுள்ள நிலையில், தமது பதவிக்காலத்திற்குள் குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரங்களை தாக்கல் செய்ய முடியாது போனதாக சட்ட மா அதிபர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக விளக்கமளித்து நாடாளுமன்றில் சரத் வீரசேகர உரையாற்றியபோது இதனைக் கூறினார்.

குற்றவாளிகளை அடையாளம் கண்டு குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதற்கு காலம் எடுக்கும் என்றும், இதற்கு முந்திய பல சம்பவங்கள் தொடர்பிலும் இந்த காலதாமதம் ஏற்பட்டிருந்தது என்றும் அவர் கூறினார்.

இதன்போது உரையாற்றிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், பலர் போலியான குற்றச்சாட்டுகளின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

தடுப்பில் உள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் அஹமட்டுக்கு எதிராக சிறுவர்கள் பலவந்தப்படுத்தப்பட்டு சாட்சியமளிக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

Posted in Uncategorized

முல்லைத்தீவில் வயலுக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய இராணுவம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு,முள்ளியவளை, புதுக்குடியிருப்பு பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கிராமங்களில் வாழும் மக்கள் பத்து கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் விவசாய செய்கையினை மேற்கொண்டு வருகின்ற நிலையில் வயல் காவலுக்கு கூட செல்வதற்கு படையினர் தடை ஏற்படுத்தியுள்ளதால் வயல் நிலங்களை காட்டு யானைகள் அழித்துவிடும் அபாயம் காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

குறிப்பாக கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம், களிக்காடு, கோடாலிக்கல்லு, போன்ற வயல் நிலங்களுக்கு செல்வதாயின் படையினரின் காவலரண்களை தாண்டியே செல்லவேண்டியுள்ளது.

இந்நிலையில் முள்ளியவளை-நெடுங்கேணி வீதியில் மதவாளசிங்கன்குளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தினர் விவசாயிகளை வயலுக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளார்கள்.
இந்நிலையில் இரவு யானைக்காவலுக்கு செல்லும் விவசாயிகளை படையினர் செல்லவிடாமல் திருப்பி அனுப்பியுள்ளதால் வயல் நிலங்கள் காட்டுயானைகளால் அழிவை சந்தித்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை விவசாயிகள் பலர் தம்மை வயல் காவலுக்கு விடுமாறு கோரி இராணுவ வீதித்தடைக்கு முன்னால் வீதியில் கூடியுள்ளனர். இந்நிலையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினரும் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளருமான க.விஜிந்தன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து அதிகாரிகளுடன் கலந்துரையாடிய குறித்த விவசாயிகள் வயல் காவலுக்கு செல்ல ஏற்ப்பாடு செய்து வருகின்றனர்.

வவுனியா மாவட்ட ரெலோ அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஸ்டிப்பு

முள்ளிவாய்க்கல் தமிழினப்படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட தலைமை செயலகத்தில் சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டது.

இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளிற்கான அஞ்சலி நிகழ்வு வவுனியாவில் அமைந்துள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்றது.

தமிழ் ஈழ விடுலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும்,பாராளுமன்ற உறுப்பினருமான வினோநோகராதலிங்கம் தலைமையில் குறித்த அஞ்சலிநிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது இறுதிப்போரில் கொல்லப்பட்ட அனைத்து உறவுகளின் நினைவாக அகவணக்கம் செலுத்தப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆதரவாளர்கள் மற்றும்,நலன்விரும்பிகள் கலந்துகொண்டிருந்தனர்.

மன்னார் மாவட்ட ரெலோ அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிப்பு

முள்ளிவாய்கால் படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவு நாள் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் அனுஸ்டிக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் தமிழர் பகுதிகளிலும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முள்ளிவாய்கால் படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்திலும் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.

ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளரும்,மன்னார் பிரதேச சபை உறுப்பினருமான லுஸ்ரின் மோகன் ராஜ் தலைமையில் இடம் பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள் ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் ஆகியோர் கலந்து கொண்டு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து மாலை அணிவித்து சுடரேற்றி , மலர் துர்வி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

முள்ளிவாய்க்கல் தமிழினப்படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் ரெலோ யாழ்ப்பாணம் தலைமை செயலகத்தில் சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கல் தமிழினப்படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ்ப்பாணம் தலைமை செயலகத்தில் சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டது.

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா நடைமுறை சட்டங்களுக்கு அமைய மிக மட்டுப்படுத்தப்பட்ட உறுப்பினர்களுடன் நடைபெற்றது.

யாழ் மாவட்ட தலைவரும் வலி கிழக்கு தவிசாளருமானா நிரோஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இளைஞர் அணி தலைவர் சபா குகதாசன், யாழ் பிரதி தலைவரும் துணை மேயருமான ஈசன், யாழ் மாவட்ட இளைஞர் அணி தலைவரும் நல்லூர் பிரதேச சபை உப தவிசாளருமான ஜெயகரன், நல்லூர் மாவட்ட பொறுப்பாளரும் நல்லூர் பிரதேச சபை உறுப்பினருமான மதுசூதன் ஆகியோர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.