நௌபர் மௌலவியே பிரதான சூத்திரதாரி, அமெரிக்க புலனாய்வு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது – சரத் வீரசேகர

ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நவுஃபர் மௌலவியே என அமெரிக்காவின் எஃப்.பி.ஐ புலனாய்வு பிரிவும் உறுதிப்படுத்தி இருப்பதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இன்று -19- நாடாளுமன்றில் வைத்து அவர் இதனைக் கூறினார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைகள் நிறைவடையாதுள்ள நிலையில், தமது பதவிக்காலத்திற்குள் குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரங்களை தாக்கல் செய்ய முடியாது போனதாக சட்ட மா அதிபர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக விளக்கமளித்து நாடாளுமன்றில் சரத் வீரசேகர உரையாற்றியபோது இதனைக் கூறினார்.

குற்றவாளிகளை அடையாளம் கண்டு குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதற்கு காலம் எடுக்கும் என்றும், இதற்கு முந்திய பல சம்பவங்கள் தொடர்பிலும் இந்த காலதாமதம் ஏற்பட்டிருந்தது என்றும் அவர் கூறினார்.

இதன்போது உரையாற்றிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், பலர் போலியான குற்றச்சாட்டுகளின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

தடுப்பில் உள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் அஹமட்டுக்கு எதிராக சிறுவர்கள் பலவந்தப்படுத்தப்பட்டு சாட்சியமளிக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

முல்லைத்தீவில் வயலுக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய இராணுவம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு,முள்ளியவளை, புதுக்குடியிருப்பு பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கிராமங்களில் வாழும் மக்கள் பத்து கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் விவசாய செய்கையினை மேற்கொண்டு வருகின்ற நிலையில் வயல் காவலுக்கு கூட செல்வதற்கு படையினர் தடை ஏற்படுத்தியுள்ளதால் வயல் நிலங்களை காட்டு யானைகள் அழித்துவிடும் அபாயம் காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

குறிப்பாக கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம், களிக்காடு, கோடாலிக்கல்லு, போன்ற வயல் நிலங்களுக்கு செல்வதாயின் படையினரின் காவலரண்களை தாண்டியே செல்லவேண்டியுள்ளது.

இந்நிலையில் முள்ளியவளை-நெடுங்கேணி வீதியில் மதவாளசிங்கன்குளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தினர் விவசாயிகளை வயலுக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளார்கள்.
இந்நிலையில் இரவு யானைக்காவலுக்கு செல்லும் விவசாயிகளை படையினர் செல்லவிடாமல் திருப்பி அனுப்பியுள்ளதால் வயல் நிலங்கள் காட்டுயானைகளால் அழிவை சந்தித்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை விவசாயிகள் பலர் தம்மை வயல் காவலுக்கு விடுமாறு கோரி இராணுவ வீதித்தடைக்கு முன்னால் வீதியில் கூடியுள்ளனர். இந்நிலையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினரும் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளருமான க.விஜிந்தன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து அதிகாரிகளுடன் கலந்துரையாடிய குறித்த விவசாயிகள் வயல் காவலுக்கு செல்ல ஏற்ப்பாடு செய்து வருகின்றனர்.

வவுனியா மாவட்ட ரெலோ அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஸ்டிப்பு

முள்ளிவாய்க்கல் தமிழினப்படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட தலைமை செயலகத்தில் சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டது.

இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளிற்கான அஞ்சலி நிகழ்வு வவுனியாவில் அமைந்துள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்றது.

தமிழ் ஈழ விடுலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும்,பாராளுமன்ற உறுப்பினருமான வினோநோகராதலிங்கம் தலைமையில் குறித்த அஞ்சலிநிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது இறுதிப்போரில் கொல்லப்பட்ட அனைத்து உறவுகளின் நினைவாக அகவணக்கம் செலுத்தப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆதரவாளர்கள் மற்றும்,நலன்விரும்பிகள் கலந்துகொண்டிருந்தனர்.

Posted in Uncategorized

மன்னார் மாவட்ட ரெலோ அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிப்பு

முள்ளிவாய்கால் படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவு நாள் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் அனுஸ்டிக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் தமிழர் பகுதிகளிலும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முள்ளிவாய்கால் படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்திலும் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.

ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளரும்,மன்னார் பிரதேச சபை உறுப்பினருமான லுஸ்ரின் மோகன் ராஜ் தலைமையில் இடம் பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள் ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் ஆகியோர் கலந்து கொண்டு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து மாலை அணிவித்து சுடரேற்றி , மலர் துர்வி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்கல் தமிழினப்படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் ரெலோ யாழ்ப்பாணம் தலைமை செயலகத்தில் சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கல் தமிழினப்படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ்ப்பாணம் தலைமை செயலகத்தில் சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டது.

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா நடைமுறை சட்டங்களுக்கு அமைய மிக மட்டுப்படுத்தப்பட்ட உறுப்பினர்களுடன் நடைபெற்றது.

யாழ் மாவட்ட தலைவரும் வலி கிழக்கு தவிசாளருமானா நிரோஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இளைஞர் அணி தலைவர் சபா குகதாசன், யாழ் பிரதி தலைவரும் துணை மேயருமான ஈசன், யாழ் மாவட்ட இளைஞர் அணி தலைவரும் நல்லூர் பிரதேச சபை உப தவிசாளருமான ஜெயகரன், நல்லூர் மாவட்ட பொறுப்பாளரும் நல்லூர் பிரதேச சபை உறுப்பினருமான மதுசூதன் ஆகியோர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

Posted in Uncategorized

முள்ளிவாயக்கால் உயிரிழந்தவர்களிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நாடாளுமன்றில் அஞ்சலி

கடந்த 2009 இறுதி கட்ட போரின் போது இலங்கையின் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்ட இனப்படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (18.05.2021) பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களால் அனுஷ்டிக்கப்பட்டது.

இறுதிக்கட்ட போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினமானது அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு மேற்கொள்ளப்பட்டது.

Posted in Uncategorized

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களிற்கு வலி கிழக்கு பிரதேச சபையில் உணர்வுபூர்வ அஞ்சலி

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை ஈகைச் சுடரேற்றப்பட்டு உணர்வு பூர்வமாக இடம்பெற்றன.

சுகாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அச் சமயத்தில் பிரசன்னமாகியிருந்த பிரதேச சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், பணியாளர்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதாக அனுஸ்டிக்கப்பட்டது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வுகளில், போர் முடிவுறுத்தப்பட்டு 12 ஆண்டுகள் முடிவடைகின்ற போதும் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்டதற்கு நீதி கிட்டவில்லை என்பதை நினைவு கூர்ந்து 12 நிமிடங்கள் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அக வணக்கத்தினைத் தொடர்ந்து பிரதேச சபையின் தவிசாளார் தியாகராஜா நிரோஷ் பொது ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார்.

பிரதேச சபை வளாகத்தில் உள்ள நினைவேந்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடம் சிவப்பு மஞ்சல் கொடிகள் பறக்கவிடப்பட்டு இன ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் 12 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு -யாழ் மாநகர சபையில்.!

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் 12 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்றையதினம் யாழ் மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது.

தற்போதய கோவிட்-19 சுகாதார விதி முறைகளுக்கு அமைவாக யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தலைமையில்,

இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெறௌறுள்ளது.

இதில் தமிழ் ஈழ விடுலை இயக்கத்தின் யாழ் மாவட்ட பிரதி தலைவரும் ,பிரதி முதல்வருமான து. ஈசன் உட்பட பல மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் பின்னர் கருத்து தெரிவித்த முதல்வர் ..

உயிரிழந்த எமது உறவுகளுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்பது அவர்களது இழப்புக்கு நீதியை பெற்று கொடுப்பதாகும் என்று தெரிவித்தார்.

நீதி கிடைக்கும் வரை ஓயாது போராட நாம் உறுதி பூணுவோம் என்றும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

மூன்று இணையத்தளங்களை இலக்குவைத்து சைபர்தாக்குதல்; தமிழ் ஈழ சைபர் படையணி தாக்கியதாக தகவல்

தமிழ் ஈழ சைபர் படையணி என்ற அமைப்பு பல இணையத்தளங்களிற்குள் ஊருடுவி அவற்றை செயல்இழக்கச்செய்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் கணிணி அவசரநிலை குழுவினர் இதனை அறிவித்துள்ளனர்.

மூன்று இணையத்தளங்களை இலக்குவைத்து சைபர்தாக்குதல் இடம்பெற்றதாக அந்த குழு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் இணையத்தளம் இலங்கைக்கான சீன தூதரகத்தின் இணையத்தளம் ரஜரட்ட பல்கலைகழகத்தின் இணையத்தளம் ஆகியன மீது சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

விடுதலைப்புலிகளின் கொடிகளுடன் தமிழ் ஈழம் சைபர் படையணி முள்ளிவாய்க்கால் என குறிப்பிடப்பட்டுள்ளதாகஇலங்கையின் கணிணி அவசரநிலை குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட இணையத்தளங்களை மீள இயங்க செய்துள்ளோம் மேலதிக பாதிப்பினை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் எனஇலங்கையின் கணிணி அவசரநிலை குழுவினர் தெரிவித்துள்ளனர்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியும் பொலிஸார் அனுமதிக்காமல் முறுகல்!

பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டாத வகையிலும் சுகாதார நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ளலாம் என்று நீதிமன்றம் வழங்கிய கட்டளையின் பின்னர், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்துக்கு,தமிழ் ஈழ விடுலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும்,வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளருமான புவனேஸ்வரன்,சட்டத்தரணி தனஞ்சயன் மற்றும் முன்னாள் வட மாகாண சபையின் உறுப்பினர் துரைராசா ரவிகரன், உள்ளிட்ட சிலர் சென்றிருந்தனர்

இதன்போது, குறித்த பகுதியில், பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்த நிலையில், இவ்விடத்துக்குள் செல்ல முடியாது எனத் தெரிவித்த பொலிஸார், அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதையடுத்து, குறித்த தரப்பினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.