300 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்வு

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஆணையாளர் நாயகம் 300 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி வர்த்தமானி வௌியிட்டுள்ளார்.

இலத்திரனியல் உபகரணங்கள், உடற்சுகாதார பொருட்கள், உணவுப்பொருட்கள், நிர்மாண பணிகளுக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்ட 300 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளே இவ்வாறு தளர்த்தப்பட்டுள்ளன.

நேற்று (09) முதல் அமுலாகும் வகையில், இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டொலர் பெறுமதி அதிகரிப்பு காரணமாக கடந்த காலங்களில் இறக்குமதிகள் தொடர்பான தடைகள் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது

தமிழ் மக்களின் பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்காமல் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடி புதிய அரசியலமைப்பின் ஊடாக அரசியல் தீர்வை காண முனைந்தால் அதற்கு பூரண ஆதரவை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு தமிழர்களின் தீர்வுக்கான கலந்துரையாடலை முன்னெடுத்தால் அந்தக் கலந்துரையாடல் தோல்வியிலேயே நிறைவடையும் என்றும் தெரிவித்துள்ளார்.

தீர்வு என்ற பெயரில் தமிழ்க் கட்சிகளை இனிமேல் ஏமாற்ற முடியாது என்றும் சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்கள் இந்த விடயத்தில் மிகவும் அவதானமாக உள்ளார்கள் என்றும் சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.

கடன் மறுசீரமைப்புக்கான அடுத்தகட்ட சமிக்ஞை எதனையும் இதுவரையில் சீனா வெளியிடவில்லை

இந்தியா, ஜப்பான் மற்றும் இறையாண்மைக் கடனாளர்களின் பாரிஸ் கிளப் ஆகியவற்றின் நிதித் தலைவர்கள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பின் கலந்துரையாடலுக்காக கூட்டு மாநாட்டை நடத்தியுள்ளனர்.

இந்த மாநாட்டின் ஊடாக இலங்கையின் கடன் பிரச்சினைகளை எவ்வாறு சிறந்த முறையில் கையாள்வது என்பது தொடர்பில் சீனாவிற்கும் ஏனைய கடன் வழங்குநர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

அத்துடன், பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இலங்கையின் கடன் பேச்சுக்களில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இருப்பினும் இதில் சீனா பங்கேற்றிருக்கவில்லை.

‘இலங்கை இன்னும் ஆழமான கடன் நெருக்கடியில் உள்ளது.அதன் நெருக்கடியில் இருந்து இலங்கை விரைவாக வெளிவருவதற்கு விரைவான கடன் மறுசீரமைப்பு விரைவாக தேவைப்படுகிறது’ என்று சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி நிர்வாக இயக்குனர் கென்ஜி ஒகாமுரா கூறினார்.

‘அனைத்து உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களும் பங்கேற்கும் பேச்சுவார்த்தைகள் விரைவாக முன்னேற்றம் காணும் என்று நாங்கள் நம்புகிறோம்.’ என்றும் அவர் தமது எதிர்பார்ப்பினை வெளியிட்டார்.

சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் முதல் இலங்கைக்கு கடன் வழங்கப்பட்டுள்ள நிலையில் முதல் கொடுப்பனவுக்கான மதிப்பாய்வின் மூலம் இரண்டாவது தவணைக்கு முன்னதாக கடன் மறுசீரமைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஒகாமுரா மேலும் கூறினார்.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு கடன் நிவாரணம் வழங்குவதற்கான பரந்த வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியால் நடத்தப்பட்ட வட்டமேசைக் கலந்துரையாடலின்போது சீனாவும் முக்கிய கோரிக்கைகளில் சிலவற்றை மென்மையாக்க ஒப்புக்கொண்ட பின்னரே இந்த மாநாடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மறுசீரமைப்பு விவாதங்களில் சீனா பங்கேற்க விரும்புவதாக இலங்கையின் முக்கியஸ்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் சீனா எந்தவொரு இடத்தலும் பகிரங்கமான கலந்துரையாடலுக்கு தயாரான கருத்தினை வெளியிடவில்லை.

கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மெதுவான முன்னேற்றம் காரணமாக அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இலங்கை மற்றும் சாம்பியா போன்ற நாடுகளை உள்ளடக்கிய பேச்சுவார்த்தைகளில் சீனாவின் வகிபாகம் பற்றிய கவலைகள் பொதுவாக நீடித்துக்கொண்டே இருக்கின்றன.

இவ்வாறான நிலையில் இலங்கை சீனாவுடன் ஒரு தனியான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் பற்றிய பேச்சுக்களை முன்னெடுப்பது பொருத்தமான நகர்வதாக அமையாது என்றும் இந்தச் செயற்பாடு ஏனைய கடன்வழங்குநர்களுக்கு கவலையை ஏற்படுத்துவதாக இருப்பதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரி தெரிவித்தார்.

‘வொஷிங்டனில் நடந்த சந்திப்புகளில், இலங்கையின் கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தாங்கள் இன்னும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக சீன அதிகாரிகள் கூறியுள்ளனர்’ என்று கொழும்பில் உள்ள சீன தூதரகம் டுவிட்டர் பதிவுகள் மூலம் தெரிவித்ததது.

ஆனாலும், அதற்காக அடுத்தகட்ட நகர்வுகளை சீனா எவ்விதாக முன்னெடுக்கப்போகின்றது என்பது சம்பந்தமாக எந்தவொரு சமிக்ஞையையும் சீனா வெளியிடவில்லை.

இவ்வாறான பின்னணியில் இலங்கைக்கு அண்மையில் சீனாவின் யுனான் மாகாண ஆளுநர் வென்க் யூபோ, பிறீமியர் சூகோ போன்ற உயர்மட்டக்குழுவினர்கள் சொற்ப இடைவெளியில் விஜயம் செய்துள்ளனர்.

ஆனால், குறித்த விஜயங்களின்போது ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அதேபோன்று இலங்கையின் கரையோர மாவட்டங்களில் உள்ள வறுமைக்கு உட்பட்வர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டன.

ஆனால், குறித்த குழுவினர்கள் கடன் மறுசீரமைப்பு குறித்து எவ்விதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை. மாறாக, பொதுப்படையில், இலங்கையின் மேம்பாட்டிற்கு உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாக மட்டுமே குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலைமையானது, சீனாவின் உறுதியான நிலைப்பாட்டை தற்போது வரையில் அறிந்து கொள்ள முடியாத சூழலையே ஏற்படுத்தியுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரையில், அதன் மொத்த வெளிநாட்டுக்கடனில் 12சதவீதத்தினை சீனாவுக்கே செலுத்த வேண்டிய நிலைமையில் உள்ளது.

குறிப்பாக, சீனாவிடமிருந்து கடன்களைப் பெற்று நிறுவப்பட்ட மத்தல விமான நிலையம், தாமரைக்கோபுரம் போன்றன எவ்விதமான வருமானங்களையும் பெற்றுக்கொடுக்காத நிலையில் வெள்ளையானைகளாக உருவெடுத்துள்ளன.

இவ்வாறான நிலையில் சீனாவின் கடனை மீளச் செலுத்துவதற்கு இலங்கைக்கு தற்போதைய நெருக்கடியான நிலையில் வழிகளில் எதுவும் இல்லாத சூழலே நீடிக்கின்றது.

முன்னாள் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு

58 வயதான பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காலத்தில் பிரிட்டனில் கொரோனா சட்டங்களை மீறி ஒரு விருந்து உபசார நிகழ்வை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அது குறித்து நாடாளுமன்ற குழு விசாரணை இடம்பெறுகின்றது.

இந்நிலையில் எம்.பி பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதாக நாடாளுமன்ற விசாரணைக் குழுவிடம் இருந்து கடிதம் வந்ததாகமுன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதம் தனக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளதாகவும் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை எதிர்கொள்ள பொதுஜன பெரமுன தயார் – மஹிந்த ராஜபக்‌ஷ

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தமது கட்சி தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஜனாதிபதி தேர்தலுக்கு கூட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை மற்றும் ஒலிபரப்பு அதிகாரசபை சட்டமூலம் குறித்தும் இதன்போது ஊடகவியாளர்களினால் அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

குறித்த சட்டமூலத்தை தான் இதுவரை பார்க்கவில்லை என்றும் தற்போது நாட்டில் சுதந்திரமான ஊடகம் இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

ஐ.எம்.எவ் இன் 62 நிபந்தனைகளில் இதுவரையில் இருபத்தைந்து மட்டுமே பூர்த்தி

சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெறுவதற்கு முன்னர் நிறைவேற்றப்பட வேண்டிய 62 நிபந்தனைகளில் இதுவரை இருபத்தைந்து நிபந்தனைகள் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் செய்து கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் இரண்டாவது தவணையைப் பெறுவதற்கு முன்னர் இந்த ஒப்பந்தங்களை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றப்படவிருந்த புதிய மத்திய வங்கிச் சட்டத்திற்கு நாடாளுமன்ற அனுமதியைப் பெற்றுக்கொள்ளாமல் உள்ளது.

மேலும் பந்தயம் மற்றும் கலால் வரிகளை அதிகரிப்பது ஆகிய இரண்டு உடன்படிக்கைகளை இலங்கை அரசாங்கம் இன்னும் நிறைவேற்றவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு நிதி வெளிப்படைத்தன்மைக்கான இணைய முறையை உருவாக்குவது என்ற உறுதிப்பாடும் நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 30 ஆம் திகதிக்குள், சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையைப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் 37 நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

போதிய சமையல் கலைஞர்கள் நாட்டில் இல்லை; ஜனாதிபதி கவலை

நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு சுற்றுலாத்துறையின் ஒத்துழைப்புகளை முழுமையாக பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் சமையல் கலையானது சர்வதேச சுற்றுலா பயணிகள் இடையே பிரசித்தி பெற்றுள்ளதாகவும் அதன் வளச்சிக்கு அரசாங்கம் ஒத்துழைப்புகளை வழங்குமெனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

2023 சமையல் கலை உணவுக் கண்காட்சியை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சமையல் கலை தொடர்பான பாடசாலை ஒன்றினை ஆரம்பிக்கவும், துறைசார் சமையல் கலைஞர்களை உருவாக்குவதற்குத் தேவையான முறைமையை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது கருத்து வௌியிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களில், நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதே முதற்கட்ட நோக்கம் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, நாட்டிலிருந்து பெருமளவிலான மனித வளங்கள் வெளியேறுவதாகவும் போதிய சமையல் கலைஞர்கள் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லிணக்க செயல்திட்டங்களுக்கான சட்டங்கள் தயாரிப்பதை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

நல்லிணக்கத்திற்கான செயற்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான சட்டங்கள் தயாரிப்பதை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நல்லிணக்கத்திற்கான செயற்திட்டம் தொடர்பில் வியாழக்கிழமை (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

சட்ட வரைவு, நிறுவன நடவடிக்கைகள், காணிப் பிரச்சினைகள், கைதிகளை விடுதலை செய்தல், அதிகாரப் பரவலாக்கம் ஆகிய 05 பிரதான பகுதிகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் இங்கு மீளாய்வு செய்யப்பட்டது.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (TRC)பரிந்துரைகளை அமுல்படுத்துதல், தேசிய காணி சபையொன்றை நிறுவுதல் மற்றும் தேசிய காணி கொள்கையை உருவாக்குதல், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை மிகவும் திறம்பட செயற்படுத்துதல், அதன் டிஜிட்டல் மயமாக்கல் செற்பாடுகளை நிறைவு செய்தல் மற்றும் இதுவரை தகவல் சேகரிக்க முடியாத காணாமல் போனவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கும் பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும் இங்கு ஆலோசிக்கப்பட்டது.

அத்துடன், இழப்பீடுகளுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் என்பவற்றை ஸ்தாபித்தல் மற்றும் அது தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டதோடு எதிர்வரும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் அவற்றைப் பூர்த்தி செய்து, அது தொடர்பான அறிக்கையை வழங்குமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்தார்.

இக்கலந்துரையாடலில், காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறைமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம், அரச துறையினரால் பயன்படுத்தப்படும் தனியார் காணிகளை விடுவித்தல்,மகாவலி காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

கைதிகளின் விடுதலை மற்றும் பொதுமன்னிப்பு தொடர்பில் நீதி அமைச்சின் ஊடாக விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தார்.

அதிகாரப் பரவலாக்கம், மாகாண மட்டத்தில் அமுல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மாகாண ஒம்புட்ஸ்மன் நியமனம் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் மற்றும் தொடர்புடைய நிறுவன பிரதானிகள் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர். காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்ட செயலாளர்கள் மற்றும் கிழக்கு மற்றும் வடமாகாண காணி ஆணையாளர்கள்ஆகியோர் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இந்தக் கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.

யாழில் தரம் 9 க்குட்பட்ட மாணவர்களுக்கு வெள்ளி,ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புக்கள் நடாத்தத் தடை

ஜுலை முதலாம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில் தரம் ஒன்பதிற்குட்பட்ட மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் தனியார் வகுப்புக்களை நடாத்துவதை நிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

பாடசாலை கல்விக்கு மேலதிகமாக வாரத்தில் ஏழு நாட்களும் ஓய்வின்றிக் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடுவதனால் மாணவர்களுக்கும் சமுதாயத்திற்கும் ஏற்படும் சாதக மற்றும் பாதக விளைவுகளும் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களும் தொடர்பாக தனியார் கல்வி நிலையங்களுக்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரனின் தலைமையில் இன்று(09) காலை 09 மணி தொடக்கம் 1 மணிவரை கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

இதில் சுகாதாரம், கல்வி, மதத் தலைவர்கள், பொலிஸ், தனியார் கல்வி நிலைய நிறுவனங்கள், பெற்றோார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இன்றைய கலந்துரையாடல் நிறைவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:-

1 . பெற்றோருக்கு முதலில் விழிப்புணர்வு கருத்தமர்வுகளை தனியார் கல்வி நிலையங்களையும் இணைத்து மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு பிரதேச செயலக மட்டங்களில் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

2 . ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் தரம் 9 வரையான மாணவர்களுக்கான பிரத்தியேக கல்வி நடவடிக்கை முற்றுமுழுதாக ஞாயிற்றுக்கிழமையும் வெள்ளிக்கிழமை மாலையும் நிறுத்தப்பட வேண்டும்.

3 . தனியார் கல்வி நிலையங்கள் சுகாதார வசதி, வகுப்பறை பிரமாணம் கட்டடங்கள் போன்றவற்றுக்கமைய அமைந்திருக்க வேண்டும்.

4. தனியார் கல்வி நிலையங்கள் உள்ளூராட்சி நிறுவனம், பிரதேச செயலகத்தில் பதிவு செய்தல் கட்டாயமாகும்.

5 . தனியார் கல்வி நிலையங்கள் 15 தொடக்கம் 30 நிமிடம் வரை ஆன்மிகம், சமூகம் சம்பந்தப்பட்ட விடயங்களை போதிக்க வேண்டும்.

6 . இந்த செயற்பாடுகள் ஒழுங்காக நடைபெறுதை அவதானித்து பிரதேசமட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும் குழு உருவாக்கப்படவுள்ளது.

இத் தீர்மானங்களை பின்பற்றாத தனியார் கல்வி நிலையங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

சென்னை – யாழ்ப்பாணம் கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிக்கும்; இந்திய துணைத்தூதர் நம்பிக்கை

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவையை, விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னைக்கும் – யாழ்ப்பாணத்துக்கும் இடையில், அலையன்ஸ் எயார் மூலம் இயக்கப்படும் 100ஆவது விமானச் சேவைக்கான நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே தொடர்பினை பேணுவதற்கு போக்குவரத்து மிக முக்கியமானதாகும்.
அந்த போக்குவரத்தை மேம்படுத்த, இருநாட்டு அரசாங்கங்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.