இலங்கைக்கு வழங்கிய கடனுக்கான கால அவகாசத்தை நீடித்தது பங்களாதேஷ்

இலங்கை பெற்றுக்கொண்ட கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை பங்களாதேஷ் அரசாங்கம் மேலும் நீடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை 06 மாதங்களுக்கு நீடிக்க பங்களாதேஷ் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கடனுக்கான முதல் தவணையை ஓகஸ்ட் மாதத்திலும் மற்றொரு தவணையை செப்டம்பர் மாதத்திலும் செலுத்த இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இலங்கை அதிகாரிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, இந்த ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி, பங்களாதேஷ் மத்திய வங்கி, இலங்கைக்கு வழங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடித்தது.

மஹிந்த ராஜபக்சவின் பங்களாதேஷ் விஜயத்தின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட 2021 ஆம் ஆண்டு நாணய மாற்று ஒப்பந்தத்தின் கீழ் இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்களை பங்களாதேஷ் வழங்கியது.

பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக ஆசிய கிளியரிங் அசோசியேஷன் பொறிமுறைக்கு வெளியே நடைபெறும் முதல் நாணய பரிமாற்றம் இதுவாகும்.

ஆசிய கிளியரிங் அசோசியேஷன் என்பது பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, ஈரான், மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை மற்றும் மாலதீவுகளை உள்ளடக்கிய ஒரு ஏற்பாடா குறிப்பிடத்தக்கது.

ஈழ விடுதலைப் போராளி குட்டிமணி சிங்களவர்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து எச்சரித்தது உண்மையாகியுள்ளது

ஈழ விடுதலைப் போராளியான குட்டிமணி சிங்களவர்கள் தொடர்பில் 40 வருடங்களுக்கு முன்னர் சொன்ன உண்மை தற்போது நிஜமாகியுள்ளதாக சமூக ஊடகவியலாளரான அபேஷிக்கா என்ற பெண் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் பிரபல யூரிப்பர்களில் ஒருவரான இந்த பெண்ணின் கருத்து அதிகமான சிங்களவர்களுக்கு சென்றடைந்துள்ளது.

பயங்கரவாத சட்டம் மூலம் தற்போது தமிழர்களை கொடுமைப்படுத்தும் அரசு, ஒருநாள் இதே சட்டம் மூலம் சிங்களவர்களையும் துன்புறுத்துவார்கள் என குட்டிமணி தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1983ஆண்டு வெலிக்கடையில் உயிரிழக்க முன்னர் குட்டிமணி இதனைக் கூறியுள்ளார். 1981ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் கொலை செய்யப்பட்ட குட்டிமணி இவ்வாறான கருத்து ஒன்றை வெளியிடுகின்றார்.

@slvlog_community

♬ Sad Music – Max-Music

மற்றவர்களின் சுதந்திரம் குறித்து அக்கறை செலுத்தாதவர்கள் தங்களின் சுதந்திரத்தை குழி தோண்டி புதைத்துக் கொள்வார்கள். தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையாக பயன்படுத்தவே இந்த பயங்கரவாத தடைச்சட்டம் என்ற மோசமான சட்டம் கொண்டுவரப்பட்டது.

எங்களுக்கு ஏற்பட்ட விதி இலங்கை சிங்களவர்களுக்கும் ஏற்படும் என்பதனை அனுதாபத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். வடக்கில் மாத்திரம் இருக்கும் இந்த அநீதியான சட்டம் என்றாவது ஒரு நாள் தெற்கிற்கும் வரும் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

வெலிக்கடை வதை முகாம் ஹம்பாந்தோட்டைக்கு கொண்டுவரப்படும். குருநகர் வதை முகாம் குருநாகலுக்கு கொண்டுவரப்படும். இன்று தமிழ் இளைஞர்கள் சித்திரவதைக்குள்ளாகும் நிலைமை இனி சிங்கள இளைஞர்கள் அனுபவிக்க நேரிடும்.

இதனால் இன்று முதல் சுதந்திரத்திற்காக இந்த அநீதியான சட்டத்திற்கு எதிராக குரல் கொடுப்போம் என குட்டிமணி தெரிவித்ததாக குறித்த சிங்கள பெண் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு – கிழக்கு தழுவிய கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு

இன்று யாழ்ப்பாணத்திலே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சி தலைவர்களும் பிரதானிகளும் அதேபோன்று தமிழ் அரசுக் கட்சியினுடைய தலைவரும் ஒன்று கூடி வருகின்ற 25ஆம் தேதி வடக்கு கிழக்கு தழுவிய பாரிய கதவடைப்பு போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு மக்களுக்கு அறைகூவல் விடுப்பதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை எதிர்த்து அதே போன்று தொல்லியல் நடவடிக்கைகளினாலே எங்களுடைய பூர்வீகத்தை அழித்தொழிக்கின்ற அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இந்த கதவடைப்பு போராட்டத்தை நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது.

இது சம்பந்தமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முதல் யாழ்ப்பாணத்தில் கூடிய தமிழ் தேசிய கட்சிகள் மதத் தலைவர்கள் சமூக அமைப்புக்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி இதற்கான எதிர்ப்பு போராட்டம் என்று நடத்துவதாக முடிவு எட்டப்பட்டிருந்ததது. எதிர்வரும் 24ஆம் தேதி இந்த போராட்டம் நடத்தப்படலாம் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அது இறுதி முடிவாக இருக்கவில்லை.

இன்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்வரும் 25ஆம் தேதி வடக்கு கிழக்கு தழுவிய கதவடைப்பு போராட்டத்தை நடத்துவதாக கட்சி தலைவர்கள் தீர்மானத்தை எட்டி உள்ளனர். இதற்கு அனைத்து சமூக அமைப்புக்கள் மதத்தலைவர்கள் பொது அமைப்புகள் அனைவருடைய ஆதரவையும் கோரியுள்ளார்கள். பாராளுமன்றத்திலும் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படுகின்ற பொழுது பாராளுமன்ற உறுப்பினர்களும் அங்கு அதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் முடிவு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரபுரிமைகளை பேண யாழில் உண்ணாவிரத போராட்டம்!

தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்பு போராட்டமும் தமிழர் தாயகம் தழுவிய கையெழுத்துப் போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பால் அழைப்பு விடுக்கப்பட்ட குறித்த போராட்டம் இன்று(16) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முன்றலில் ஆரம்பமானது

தமிழ் மக்கள் சார்ந்த தேசிய சக்திகள், சமய சமூக தன்னார்வ அமைப்புக்கள் என பல தரப்புக்கள் இணைந்து முன்னெடுக்கும் போராட்டத்தின் பிரதான கோரிக்கைகள்

1.அழிக்கப்பட்ட வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் சிவலிங்கம், தெய்வ சிலைகள் உடனடியாக மீள் நிர்மாணம் செய்யப்பட வேண்டும். நீதியான விசாரணை துரிதப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

2.குருந்தூர் மலை, கன்னியா வெந்நீரூற்று ஆதி சிவன் வழிபாட்டு உரிமைகள் உடனடியாக மீள வழங்கப்படுவதுடன் புதிய பௌத்த கட்டுமானம் மற்றும் பௌத்த தொல்லியல் புதிய வர்த்தமானி இரத்து நடைமுறையில் செயற்படுத்தப்பட வேண்டும்.

3.இன மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தமிழர் தாயகத்தின் தொன்மங்களை, மரபுரிமைகளை மாற்றியமைக்கும் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

4.மட்டு. மயிலத்தனை மடு மேய்ச்சல் தரையில் பெரும்பான்மை இன மக்களின் ஆக்கிரமிப்புக்கள் சகலதும் நிறுத்தப்பட்டு தமிழ் பண்ணையாளர்களின் மரபுரிமையான மேய்ச்சலுக்கான வாழ்வுரிமை உறுதிப்படுத்த வேண்டும்.

5.போருக்கு பிந்திய இன மதப்பரம்பலை மாற்றி அமைக்கும் திட்டமிட்ட பாரிய குடியேற்றம் உள்ளிட்ட செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

ஆகிய பிரதான கோரிக்கைகளை முன்வைத்து அடையாள உண்ணாநோன்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் குறித்து நீதித்துறையே முடிவு செய்ய வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு

நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க திறைசேரி தவறியதால், உள்ளூராட்சித் தேர்தல் குறித்து நீதித்துறையே முடிவு செய்ய வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கான திகதி நிச்சயமற்ற நிலையில் இருக்கும் அதேவேளை தம்மால் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத நிலையில் இருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நேற்று தெரிவித்துள்ளார்.

பிரதமருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தேர்தலை நடத்துவது குறித்த எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி 25ஆம் திகதி தேர்தல் நடத்தப்படாது என இரண்டாவது தடவையாக உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழில் நாகபூசனி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்ற பொலிஸார் கடும் முயற்சி

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நயினாதீவு நாகபூசனி அம்மனை குறிக்கும் நாகபூசனி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்றுவதற்கு பொலிஸார் தீவிரம் காட்டியுள்ளனர்.

நயினாதீவு விகாராதிபதியின் தலையீட்டினாலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசனி அம்மன் திருவுருவச் சிலைக்கு தமிழ் புதுவருடப் பிறப்பில் பால் அபிசேகம் உருத்திர சேனா அமைப்பினால் செய்யப்பட்டது.

இந்த நிலையில் உருத்திர சேனா அமைப்பின் பிரதிநிதிகள் நேற்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு 3 மணிநேரம் தீவிர விசாரைணக்கு உள்படுத்தப்பட்டனர்.

உருவச் சிலையை அமைத்தவர்கள் தொடர்பில் தமக்கு தகவல் தெரியாது என்றும் தாம் பால் அபிசேகம் செய்ததாகவும் உருத்திர சேனா அமைப்பினர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

எந்தவொரு அனுமதியுமின்றி அமைக்கப்பட்ட நாகபூசனி அம்மனின் சிலையை அகற்ற தீவிர நடவடிக்கையில் யாழ்ப்பாணம் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, குறிகாட்டுவான் இறங்குதுறையில் வைக்கப்பட்டு மறைக்கப்பட்டிருந்த அரச மரத்தை கடற்படையினர் திறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பினை வெளியிட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையின் உத்தேச பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தனது எதிர்ப்பை வெளியிடவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை மக்களின் உரிமைகளை முக்கியமானவையாக பெறுமதிமிக்கவையாக பைடன் நிர்வாகம் கருதினால் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நிர்வாகத்திற்கு பைடன் நிர்வாகம் தெளிவான செய்தியை தெரிவிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மனித உரிமையின் அனைத்து அளவுகோல்களிலும் தோல்வியடைந்துள்ளது என சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசியாவிற்கான பரப்புரை இயக்குநர் கரொலின் நாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களின் உரிமைகள் மிக முக்கியமானவை என பைடன் நிர்வாகம் கருதினால் இந்த சட்டம் முற்றிலும் மாற்றியமைக்கப்படவேண்டும் அல்லது முற்றாக கைவிடப்படவேண்டும் என்ற செய்தியை ஜனாதிபதி ரணில்விக்கிரமசி;ங்க அரசாங்கத்திற்கு தெரிவிக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நான்கு தசாப்தகாலமாக சிறுபான்மையினத்தவர்களையும் தன்னை விமர்சிப்பவர்களையும் தடுத்துவைத்து சித்திரவதை செய்வதற்காக இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து பைடன் நிர்வாகமும் அமெரிக்க காங்கிரசும் அமைதியாகயிருந்தால் அது மாற்றுநிலைப்பாடுடையவர்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்கும் இலங்கை அரசாங்கத்தின் திறனை மேலும் வலுப்படுத்தும் என தெரிவித்துள்ள நாஸ் பல தசாப்தகாலங்களாக மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக குரல்கொடுத்துவந்துள்ள இலங்கையின் சிவில் சமூகத்தை அவமதிக்கும் செயலே உத்தேச சட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன் அல்லது மோசமான சட்டத்தை மாற்றியமைக்கும் நோக்குடன் அதிகாரிகள் உத்தேச சட்டத்தை கொண்டுவரவில்லை மாறாக அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை இலக்குவைத்து அவர்களை மௌனமாக்கும் நோக்கத்துடனேயே இந்த உத்தேச சட்டம் கொண்டுவரப்படுகின்றது எனவும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசியாவிற்கான பரப்புரை இயக்குநர் கரொலின் நாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்கான பேச்சுவார்த்தை இலக்கினை ஆரம்பிக்கவுள்ளது – பாரிஸ் கிளப்

இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்கான பேச்சுவார்த்தை இலக்கினை ஆரம்பிக்கவுள்ளதாக பாரிஸ் கிளப் தெரிவித்துள்ளது.

வாஷிங்டன், ஜப்பான், இந்திய நிதி அமைச்சர்கள் மற்றும் இலங்கையின் தலைவர், பிரதிநிதிகள், கடன் வழங்குநர்கள் என பலரும் கலந்துக்கொண்டு இந்த பேச்சுவார்த்தை தளத்தினை அமைத்துள்ளதாக கடந்த வியாழக்கிழமை(12.04.2023) பாரிஸ் கிளப் தெரிவித்திருந்தது.

இதற்கமைய கடன் வழங்கும் குழுக்கள் எதிர்கால கடன் நிவாரண ஒப்பந்தத்திற்கான விதிமுறைகள் பற்றியும் பேசப்பட்டு வருகின்றது.இதேவேளை நியாயமான சுமை பகிர்வு, வெளிப்படைத்தன்மை மற்றும் மறுசீரமைப்பின் ஒப்பீடு ஆகியவற்றை உறுதி செய்வதற்காக, அனைத்து தொடர்புடைய பங்குதாரர்களுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க விரும்புவதாக பாரிஸ் கிளப் அறிவித்துள்ளது.

மேலும் இச்செயற்பாட்டில் பொதுத்துறை கடன் வழங்குநர்களும் வரவேற்கப்படுகிறார்கள் என பாரிஸ் கிளப் அழைப்பு விடுத்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

90 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன

எதிர்வரும் 19ஆம் திகதியன்று ஏல விற்பனையினூடாக 90 மில்லியன் ரூபாய் மதிப்பிலான திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி, 91நாட்களில் முதிர்வடையும் 40 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்களில் முதிர்வடையும் 25 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலத்திற்கு விடப்படவுள்ளன.

மேலும் 364 நாட்களில் முதிர்வடையும் 25 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலத்திற்கு விடப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

ஏற்பாடுகள் பூர்த்தியாகும் வரை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட மாட்டாது

ஏற்பாடுகள் மற்றும் ஏனைய வசதிகள் பூர்த்தியாகும் வரை உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி மீண்டும் அறிவிக்கப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், இப்போது பேச யாரும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.