இலங்கைக்கான உதவி குறித்து மூத்த இராஜதந்திரி சர்வதேசநாணய நிதியத்துக்கு எச்சரிக்கை

ஜனநாயகத்தை நசுக்குவதற்கான நியாயப்படுத்தலாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தைக் குறிப்பிடவேண்டாமெனவும், தேர்தலொன்றின் மூலம் தமது தலைவர்களைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு இலங்கை மக்களுக்கு வழங்கப்படவேண்டும் எனவும் ஓப்பன் சொஸைட்டி பவுண்டேஷன் அமைப்பின் தலைவரும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கியின் முன்னாள் இராஜதந்திரியுமான மார்க் மலோச்-பிரவுன் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் கடந்த வாரம் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ‘தேர்தலை நடாத்தவேண்டமென எதிர்க்கட்சியில் பலர் எம்மிடம் கூறியிருக்கின்றார்கள்.

தேர்தலை நடாத்துவதற்கான திகதியைத் தேர்தல்கள் ஆணைக்குழு இன்னும் தீர்மானிக்கவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின்படி எம்மால் பணத்தை அச்சிடமுடியாது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அதனை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்த வெரிட்டே ரிசேர்ச் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் நிஷான் டி மெல், ‘தேர்தல்களை நடாத்துவதற்கான நிதியை அரசாங்கத்தினால் வழங்கமுடியாமல் இருப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளே காரணமென ஜனாதிபதி கூறுகின்றார்.

தேர்தல்களை நடாத்துவதற்கான நிதியை வழங்குவதற்கு அரச திறைசேரி மறுப்பதன் ஊடாக ஜனநாயகம் நசுக்கப்படும் விவகாரத்தில் சர்வதேச நாணய நிதியம் பலிகடாவாக மாற்றப்படும் சம்பவத்தை இப்போதுதான் முதன்முறையாகக் கேள்விப்படுகின்றேன்’ என்று தெரிவித்துள்ளார்.

நிஷான் டி மெல்லின் டுவிட்டர் பதிவை மேற்கோள்காட்டி, உலகளாவிய ரிதீயில் தமது மக்களுக்குப் பொறுப்புக்கூறத்தக்க அரசாங்கத்தைக்கொண்ட ஜனநாயக நாடுகளைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு பணியாற்றிவரும் ஓப்பன் சொஸைட்டி பவுண்டேஷனின் தலைவரும் ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டம், உலக வங்கி உள்ளிட்ட முக்கிய சர்வதேசக்கட்டமைப்புக்களின் முன்னாள் பிரதிநிதியுமான மார்க் மலோச்-பிரவுன் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்துள்ளார்.

ஜனநாயகத்தை நசுக்குவதற்கான நியாயப்படுத்தலாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டம் ஒருபோதும் அமையாது என்று அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ள மார்க் மலோச்-பிரவுன், தற்போது நாடு மிகமுக்கியமான தருணத்திலுள்ள நிலையில், வாக்களிப்பின் மூலம் தமது தலைவர்களைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு இலங்கை மக்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச நாணய நிதிய உதவியைப்பெற பூரண ஒத்துழைப்பை வழங்க சீனா தயார்

இலங்கை கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கும் அவசியமான முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கத்தயாராக இருப்பதாகவும், அதனை முன்னிறுத்தி சர்வதேச நாடுகள் மற்றும் நிதியியல் கட்டமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவதாகவும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

இலங்கை முகங்கொடுத்திருக்கும் குறுங்காலக்கடன் மீள்செலுத்துகை நெருக்கடிக்குத் தீர்வை வழங்கும் நோக்கில் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இலங்கை மீளச்செலுத்தவேண்டியுள்ள கடன்களைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை வழங்குவதாகக் குறிப்பிட்டு சீன ஏற்றுமதி – இறக்குமதி வங்கி (எக்ஸிம் வங்கி) நிதியமைச்சிடம் நிதியியல் ஒத்துழைப்பு ஆவணமொன்றை வழங்கியிருப்பதாக மாவோ நிங் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுதவிகோரி விண்ணப்பித்துள்ள நிலையில், அச்செயன்முறைக்கு உதவுவதாக எக்ஸிம் வங்கி நிதியமைச்சிடம் சமர்ப்பித்த ஆவணத்தில் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள மாவோ நிங், அனைத்து வர்த்தகக் கடன்வழங்குனர்களும் ஒத்தவிதத்திலான கடன்சலுகைகளை வழங்கவேண்டும் என்றும் உதவிகளை ஒருங்கிணைப்பதற்குப் பல்தரப்புக்கடன்வழங்குனர்கள் தமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

‘சீனாவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் அதன் தற்போதைய கொள்கையையும் கடன்சார் விவகாரங்களில் அதன் நிலைப்பாட்டையும் அடிப்படையாகக்கொண்டவையாகும். அதேவேளை இந்த நடவடிக்கைகள் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைப் பிரதிபலிக்கின்றது.

இலங்கை கடன் ஸ்திரத்தன்மையை அடைந்துகொள்வதற்கு உதவுவதில் சீனா கொண்டிருக்கும் அக்கறை மற்றும் கடப்பாடு ஆகியவற்றையே அதன் நடவடிக்கைகள் புலப்படுத்துகின்றன’ என்றும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை முகங்கொடுத்திருக்கும் கடன்நெருக்கடியை உரியவாறு கையாள்வதை முன்னிறுத்தி, சம்பந்தப்பட்ட அனைத்து நிதியியல் கட்டமைப்புக்களுடனும் ஒத்துழைப்புடன் செயலாற்றுவதற்கு சீனா தயாராக இருப்பதாகவும் மாவோ நிங் உறுதியளித்துள்ளார்.

அத்தோடு தற்போதைய நெருக்கடிநிலையிலிருந்து இலங்கை மீட்சியடைவதற்கும், அதன் கடன்நெருக்கடியைக் குறைப்பதற்கும், இலங்கை நிலைபேறான அபிவிருத்தியை அடைந்துகொள்வதை உறுதிசெய்வதற்கும் உதவுவதில் ஏனைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதியியல் கட்டமைப்புக்களுடன் கூட்டாக இணைந்து செயற்படத்தயாராக இருப்பதாகவும் சீன வெளிவிவகாரப்பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விரைவில் யாழ். மாநகர சபைக்கு புதிய முதல்வர் தெரிவு

யாழ். மாநகர சபையின் எஞ்சியுள்ள ஆட்சிக் காலத்துக்குப் புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ளது.

2022 டிசம்பர் மாதம், யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வாக்கெடுப்பின் முதலாவது சமர்ப்பிப்பில் அங்கீகரிக்கப்படாததன் காரணமாக முன்னாள் முதல்வரும், சட்டத்தரணியுமான வி. மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இதனையடுத்து, கடந்த ஜனவரி 20 ஆம் திகதி இடம்பெற்ற முதல்வர் தெரிவில் இ.ஆனோல்ட் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அவரது நியமனம் குறித்த கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் அவர் தனது 2023 ஆம் ஆண்டுக்கான முதலாவது சமர்ப்பிப்பிப்பைக் கடந்த 14 ஆம் திகதி நடாத்தியிருந்தார். அந்த  பாதீடு சமர்ப்பிப்பு உறுப்பினர்களுக்கிடையிலான வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டது.

அதன் பின் பாதீட்டின் இரண்டாவது வாக்கெடுப்பு  கடந்த மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்றது. அந்த வாக்கெடுப்பிலும் ஆனோல்ட் சமர்ப்பித்த பாதீடு 6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து அவர் பதவி விலகினார்.

நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி சபைகளினதும் பதவிக் காலம் 2022 மார்ச் மாதம் 18 ஆம் திகதி நிறைவுக்கு வந்த நிலையில், உள்ளூராட்சி சபைகள் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் படி மேலும் ஒரு வருட காலத்துக்கு – எதிர்வரும் மார்ச் 19 வரை நீடிக்கப்பட்டிருந்தன. இந்த நீடிப்பின் படி, எதிர்வரும் மார்ச் 19 வரை சபை நடவடிக்கைகளைக் கொண்டு நடத்துவதற்காகப் புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வதற்காகவே தேர்தல் நடாத்தப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் நாட்டிலுள்ள 340 உள்ளூராட்சி சபைகளின் ஆயுட் காலம் மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிப்பது பற்றி அமைச்சரவை மட்டத்தில் ஆராயப்பட்டு வருகிறது. உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோக பூர்வ பதவிக் காலத்தை மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இலங்கைக்கு புதிய அணுமின் நிலையம்

இலங்கைக்கு விரைவில் அணு உலைகள் ஊடாக மின்வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை அணு சக்தி சபையின் தலைவர் எஸ்.ஆர்.டீ.ரோசா தெரிவித்துள்ளார்.

இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக அணுசக்தி சாசனத்தில் இலங்கை கைச்சாத்திடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதன் பின்னர் ரஷ்ய அரசாங்கத்துடன் கதைத்து இலங்கையில் 100 மெகாவோட் மின்சாரத்தை பெறும் வகையிலான சிறிய அணு உலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் விடுவிக்க கோரிய மைத்திரியின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை 21,000 ரூபா கட்டணத்திற்கு உட்படுத்தப்பட்டு மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சஞ்சீவ மொரேஸ் மற்றும் பிராங் குணவர்தன ஆகிய  இருவரடங்கிய நீதிபதிகள்  குழு முன்னிலையில் புதன்கிழமை (1) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈட்டினை வழங்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் நிராகரித்து , அவற்றிலிருந்து தன்னை விடுவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த மேன்முறையீடு  மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

போதியளவு புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அதற்கமைய போதுமான புலனாய்வு தகவல்கள் இருந்தும் உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களை  தடுக்க  தவறியதன் ஊடாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள்  தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சிசிர மெண்டிஸ் ஆகியோர்  அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி 12ஆம் திகதி தீர்ப்பளித்தது.

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாவை நட்ட ஈடாக செலுத்த வேண்டுமெனவும்  முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் தலா 75 மில்லியன் ரூபாவையும் , முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபாவையும் , சிசிர மென்டிஸ் 10 மில்லியன் ரூபாவையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடாகச் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாணய நிதியத்தின் கடனுதவி குறித்து உன்னிப்பாக அவதானம் – ஐரோப்பிய முதலீட்டு வங்கி

இலங்கைக்கு வழங்குவதாக சர்வதேச நாணய நிதியத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் உதவி தொடர்பில் கண்காணித்துவருவதாக ஐரோப்பிய முதலீட்டு வங்கி தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் பிரதித்தலைவர் கிறிஸ் பீற்றர்ஸ் மற்றும் பெல்ஜியம் நாட்டுக்கான இலங்கைத்தூதுவர், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதுக்குழுவின் தலைவர் கிரேஸ் ஆசீர்வாதம் ஆகியோருக்கு இடையில் லக்ஸம்பேர்க்கில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் பிரதித்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைவரம் தொடர்பிலும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் உள்ளடங்கலாக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கிரேஸ் ஆசீர்வாதம் ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் பிரதித்தலைவர் கிறிஸ் பீற்றர்ஸுக்கு விளக்கமளித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி ஏற்றுமதியை மையப்படுத்திய போட்டித்தன்மைவாய்ந்தும், சூழலுக்கு நேயமானதும், தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்டதுமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்கு கொள்கை தொடர்பிலும் அவர் கிறிஸ் பீற்றர்ஸுக்கு எடுத்துரைத்துள்ளார்.

அதற்குப் பதிலளித்த கிறிஸ் பீற்றர்ஸ், இலங்கையின் பொருளாதார மீட்சி தொடர்பிலும், குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி குறித்தும் ஐரோப்பிய முதலீட்டு வங்கி உன்னிப்பாக அவதானித்துவருவதாகத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் 50 மில்லியன் யூரோ நிதியுதவியில் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் கழிவுநீர் முகாமைத்துவ செயற்திட்டம் குறித்து பிரஸ்தாபித்துள்ள கிறிஸ் பீற்றர்ஸ், இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைக்கப்பெற்றவுடன் இலங்கையில் பசுமை செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அவசியமான நிதியுதவிகளை வழங்குவது குறித்துத் தம்மால் பரிசீலனை செய்யமுடியும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் பணிப்பகிஷ்கரிப்பு

நியாயமற்ற வரிக்கொள்கை, வங்கி  வட்டி வீதம் அதிகரிப்பு, சம்பளம் மற்றும் கொடுப்பனவு அதிகரிக்கப்படாமை உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து பல துறைகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் இன்று (01)  பணிப்பகிஷ்கரிப்பில்  ஈடுபட்டன.

தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு இன்று அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த நிலையில், பெட்ரோலிய, மின்சக்தி, துறைமுகம், ரயில்வே, ஆசிரியர் மற்றும் தபால் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் உணவு இடைவேளையின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அவர்களுக்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.

இன்று காலை 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை மெதுவாக வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை  முன்னெடுத்துள்ள துறைமுக தொழிற்சங்கங்கள் , இன்று பகல் கொழும்பு துறைமுக நுழைவாயிலுக்கு அருகிலுள்ள கான் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக ஒன்றுகூடி எதிர்ப்பில் ஈடுபட்டன.

நியாயமற்ற வரிக்கொள்கையை விரைவாக மாற்றுமாறு அவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர். கான் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக வீதியை மறித்து சுமார் ஒரு மணித்தியாலம் துறைமுக தொழிற்சங்கத்தினர் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

துறைமுக தொழிற்சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பினர் திருகோணமலை சீனன்குடா துறைமுக சந்தியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழில்முறை தொழிற்சங்க ஒன்றியத்தின் பங்குதாரரான இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் இன்று கம்பஹா ரயில் நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

குருநாகல் மாவட்ட வங்கி ஊழியர்களும் இன்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததோடு, கவனயீர்ப்பிலும் ஈடுபட்டனர்.

காலி, மாத்தறை, அநுராதபுரம் மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருந்தன. நாட்டில் பல பகுதிகளிலும் இன்று வங்கி சேவைகள் முடங்கியிருந்தன.

புத்தளம், மட்டக்களப்பு, வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள அரச வங்கிகள் முழுமையாக இன்று மூடப்பட்டிருந்தன.

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்களும்  சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் ஊழியர்களும் இன்று எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இன்று முற்பகல் அரச வைத்தியசாலைகளின் சேவைகள் பாதிக்கப்பட்டன. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகள் மாத்திரமே அளிக்கப்பட்டன. தேசிய வைத்தியசாலையின் தாதியர்கள் இன்று பகல் எதிர்ப்பிலும் ஈடுபட்டனர்.

சுகாதார தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்த மற்றுமொரு எதிர்ப்பு நடவடிக்கை தேசிய கண் வைத்தியசாலைக்கு முன்பாக நடத்தப்பட்டது. சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையிலும்  குருநாகல் போதனா வைத்தியசாலையிலும் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

கம்பளை ஆதார வைத்தியசாலையின்  தாதியர்கள்,  வைத்தியர்கள் , ஊழியர்கள் ஒன்றிணைந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கம்பளை ஆதார வைத்தியசாலை வளாகத்திலிருந்து கம்பளை நாவலப்பிட்டி பிரதான வீதி வரை  பேரணியாக சென்றவர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

மாத்தளை, புத்தளம், திருகோணமலை, கிளிநொச்சி, மன்னார்  ஆகிய மாவட்டங்களின் வைத்தியசாலைகளில் இன்று முன்னெடுக்கப்பட்ட  பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வைத்தியசாலை சேவைகள் பாதிக்கப்பட்டன.

பாடசாலை ஆசிரியர்கள் கறுப்பு ஆடையணிந்து இன்று பணிக்கு சமூகமளித்திருந்தனர். இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம் இணைந்து கொட்டாவையில் இன்று மாலை எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

நீர்கொழும்பில் உள்ள பெரும்பாலான பாடசாலைகளில்  ஆசிரியர்களும் அதிபர்களும்   கறுப்பு ஆடை  அணிந்தும் கறுப்பு பட்டி அணிந்தும் பாடசாலைகளுக்கு சமூகமளித்திருந்தனர்.

கம்பளையில் அதிபர்கள், ஆசிரியர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கம்பளை ரயில் நிலையத்திற்கு முன்பாக  பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

நாவலையில் திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

அம்பாறையில் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், வங்கி ஊழியர்கள், வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட  பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வங்கி ஊழியர் சங்கம், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், மின்சார சபை பொறியியலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டன.

தேசிய நீர் வழங்கல் சபை ஊழியர்கள் இரத்மலானை தலைமை அலுவலகத்தில் இருந்து சொய்சாபுர வரை இன்று காலை  ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.

ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஏற்பாடு செய்த எதிர்ப்பு நடவடிக்கை ரயில்வே தலைமையகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை உடன் நடத்த அமெரிக்க செனட்டின் வௌியுறவு குழு வலியுறுத்தல்

இலங்கை அரசாங்கம் சுதந்திரமான நியாயமான உள்ளுராட்சி தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் என அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார உறவுகளிற்கான குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

டுவிட்டர் செய்தியொன்றில் அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

இலங்கை மக்களின் குரல்கள் ஒலிக்காமலிருப்பதற்காக மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியும் மறுக்க முடியாதபடி ஜனநாயக விரோதமானது இலங்கையர்களின் உரிமைகளை நேரடியாக மீறும் செயல் என அமெரிக்க செனெட் குழு தெரிவித்துள்ளது.

வாக்குச்சீட்டு அச்சிடும் பணி காலவரையறையின்றி ஒத்திவைப்பு

வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளன.

தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை மற்றும் வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான வசதிகள் கிடைக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டுகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சம் குறிப்பிட்டுள்ளது.

தேர்லுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான பொலிஸ் பாதுகாப்பு கிடைக்காமை, வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கு தேவையான பணம் கிடைக்காமை போன்ற காரணிகளால், அண்மை நாட்களில் வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகளுக்கு பாரிய தடை ஏற்பட்டிருந்தது.

தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்குமாயின் 25 முதல் 30 நாட்களுக்குள் அனைத்து வாக்குச்சீட்டுகளையும் அச்சடிக்கும் இயலுமை தமது நிறுவனத்திற்கு உள்ளதாக அரச அச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

புதிய பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு சட்டமா அதிபர் ஒப்புதல்

பயங்கரவாத தடைச் சட்டத்தை மறுசீரமைப்பதற்காக புதிதாக தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வௌியிடுவதற்கும், பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரால் இதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு நேற்று (27)  கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பங்கரவாத தடைச்சட்டத்தை மீள் கட்டமைப்பதற்கு ஏற்கனவே அமைச்சரவை வழங்கிய அனுமதிக்கு அமைய, புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.