இலங்கையில் எரிசக்தி துறையில் முதலீடு செய்ய இந்தியா விருப்பம்

நிலையான சக்தி மூலங்களிலிருந்து அதிக எரிசக்தியை உற்பத்தி செய்ய இலங்கையில் தொடர்ந்து முதலீடு செய்ய இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை மேற்கோள் காட்டி, மறுபயன்பாடு, மறுசுழற்சி, மறுவடிவமைப்பு, மறுஉருவாக்கம் போன்ற நிலைத்தன்மையை நோக்கிய முக்கியமான படிகள் இந்தியாவின் கலாசார நெறிமுறைகளின் ஒரு பகுதியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அபரிமிதமான புதுப்பிக்கத்தக்க சக்தி உள்ளது என்பதை எடுத்துக்காட்டிய பாக்லே, நிலையான சக்தி மூலங்களிலிருந்து அதிக சக்தியை உற்பத்தி செய்வதற்காக இலங்கையில் இந்தியா தொடர்ந்து முதலீடு செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கிய துறையாக கல்வி விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தொழில்நுட்ப நிறுவனம், மெட்ராஸ், இலங்கை தொழில்நுட்ப வளாகத்தில் முதுகலைப் படிப்புகளை விரிவுபடுத்தத் தொடங்கியுள்ளது.

மேலும், இலங்கை மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இளங்கலை முதல் முனைவர் பட்ட படிப்பு வரை நூற்றுக்கணக்கான முழு நிதியுதவியுடன் கூடிய புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன.

இலங்கையில் கல்வியைத் தொடரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு நிதி உதவித் திட்டங்கள் தனித்தனியாக வழங்கப்படுவதாக கோபால் பாக்லே மேலும் தெரிவித்துள்ளார்.

ஒற்றுமையை சீர்குலைக்கும் சக்திகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர் – சபா குகதாஸ்

சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர் தரப்பை ஒற்றுமையாக வாருங்கள் கேலி செய்யும் விதமாக தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் சக்திகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினன் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

தமிழின விடுதலைக்கான தியாகத்தில் உருவான கூட்டமைப்பை சீரழிக்கும் எந்த சக்திகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் எதிர் காலத்தில் மக்கள் தக்க பாடம் புகட்டுவர் கடந்த காலத்தில் பலர் விட்ட தவறுக்கு நடந்த வரலாற்றை மறந்து ஒற்றுமையாக இருக்க வேண்டிய தருணத்தில் எதிரிக்கு சாதகமாக பிளவினை ஏற்படுத்துவது மக்களுக்கு பாரிய ஏமாற்றத்தையும் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.

கூட்டமைப்பு என்பது ஆயிரக்கணக்கான மாவீரர்களின் உயிர்த் தியாகத்தாலும் தன்நிகர் அற்ற தலைவனின் வழி காட்டலினாலும் உருவாக்கப்பட்டது இத்தகைய தியாகத்தை பயன்படுத்தி பதவிகளை பெற்ற சிலர் சிங்கள பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற ஒற்றுமையை சீர்குலைப்பதை தமிழ் மக்கள் இனியும் அனுமதிக்க மாட்டார்கள்.

சிங்கள் ஆட்சியாளர்கள் ஒற்றுமையாக வாருங்கள் என தமிழர் தரப்பை பார்த்து கேலி செய்யும் போது தொடர்ந்து தமிழ் மக்களை பலவீனப்படுத்தும் வகையிலும் தமிழர் தரப்பே இருப்பது மிக வேதனையாக உள்ளது இதற்கான பதிலடி எதிர்காலத்தில் கிடைக்கும்  என குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து கட்சிகள் கூட்டணி; நாளை புரிந்துணர்வு ஒப்பந்தம்

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணியை அறிவித்தன. யாழ்ப்பாணத்திலுள்ளதனியார் விடுதியில் இன்று வெள்ளிக்கிழமை(13) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே கட்சிகளின் தலைவர்களால் புதிய கூட்டணி அறிவிக்கப்பட்டது

புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஆரம்பித்த சந்திப்பின் பின்னர் கூட்டணி தொடர்பாக அறிவிக்கப்பட்டது.

சின்னம் தொடர்பில் இழுபறி காரணமாக விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் இன்றைய கூட்டத்திலிருந்து வெளியேறினர்.

இந்நிலையில் மீதமிருந்த ஏனைய கட்சிகள் உடன்பாட்டுக்கு வந்து கூட்டாக கூட்டணி அமைக்க முடிவு எடுத்தது தமிழரசி கட்சி தனியாக போட்டியிட முடிவெடுத்த பின்னர் ஏனைய தமிழ் தேசிய கட்சிகளை இணைத்து குறித்த கூட்டணி உருவாக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

வடகிழக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குறித்த கூட்டணி அமைக்கப்பட்டு போட்டியிடவுள்ளது. இது தொடர்பாக ஆராய்ந்து நாளை காலை 10 மணிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்றார்.

பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி இடையே சந்திப்பு

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் ஸ்டீபன் டுவிக் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டார்.

கோட்டாபயவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளுமாறு பொலிஸ் விசேட குற்றப்பிரிவுக்கு நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட 17.5 மில்லியன் ரூபாய் பணம் தொடர்பிலேயே   வாக்குமூலம் பதிவு செய்யுமாறு பொலிஸ் விசேட குற்றப் பிரிவிற்கு  கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தயார் : நீதிமன்றுக்கு அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உச்ச நீதிமன்றத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை (13) தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் ஆஜரான சட்டத்தரணி  சாலிய பீரிஸ் உச்ச நீதிமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்ற  தேர்தலுக்கு எதிரான மற்றும் ஆதரவான மனுக்கள் மீதான விசாரணைகள்  பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, ஜனத் சில்வா மற்றும் எஸ்.  துரைராஜா  ஆகியோர் முன்னிலையில்  எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இலங்கை இராணுவத்தை 2030 இனுள் 100,000 ஆக குறைக்க திட்டம்

இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிடுகின்றது.

தற்போது 200783 ஆக காணப்படும் இராணுவத்தினரின் எண்ணிக்கையை 2024 இல் 135,000 ஆகக்குறைப்பதற்கு எண்ணியுள்ளது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

2030 இல் இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒருஇலட்சமாக குறைக்கவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரெமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு தேவைகளிற்கு ஏற்ப எதிர்கொள்ளக்கூடிய பாதுகாப்பு சவால்களிற்கு தீர்வை காண்பதற்காக சிறந்ததிறன் உள்ள இராணுவத்தை உருவாக்கும் நோக்கம் குறித்தும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கெதிராக யாழில் ஆர்ப்பாட்டம்

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் அத்தகைய அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் யாழில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் குருநகர் மீனவ சங்கத்தின் ஏற்பாட்டில் குருநகரில் இன்று காலை இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து பேரணியாகச் சென்று பல தரப்பினர்களிடமும் மகஜர்களை கையளித்துள்ளனர். குருநகரில் ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டமானது தொடர்ந்து பேரணியாக சென்று யாழ் நகரிலுள்ள கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திலும், அதனைத் தொடர்ந்து கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரிடம் மகஜர்களை கையெழுத்துள்ளனர்.

Posted in Uncategorized

இலங்கைக்கு பங்களாதேஷ் 6 மாத கால அவகாசம்

இலங்கையின் கோரிக்கைக்கு பதிலளித்த பங்களாதேஷ் அரசாங்கம் கடனை செலுத்துவதற்கு மேலும் 6 மாத கால அவகாசத்தை  வழங்கியுள்ளது.

பங்களாதேஷ் மத்திய வங்கி வழங்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்துவற்கே இவ்வாறு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் நீண்டகால பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடிக்குமாறு பங்களாதேஷிடம் இலங்கை கோரிக்கை விடுத்திருந்தது.

முன்னாள் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே காலமானார்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட தலைவரும், மேல் மாகாண முன்னாள் முதலமைச்சரும்,வடமாகாண முன்னாள் ஆளுநருமான ரெஜினோல்ட் குரே தனது 74 ஆவது வயதில் காலமானார்.

வட்டுவையில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று (12) இரவு இடம்பெற்ற சந்திப்பின் போது மாரடைப்புக்கு உள்ளான முன்னாள் முதலமைச்சர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

முன்னாள் முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் நோயாளர் காவுகை வண்டி மூலம் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் மற்றும் வேட்பாளர் தெரிவு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுக் கொண்டிருந்தவேளையே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கலந்துரையாடலில் தேசிய சுதந்திர முன்னணி மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் குழுவும் கலந்துகொண்டதாக களுத்துறை மாவட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.