மாகாண அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்த அரசுக்கு ஒரு வார கால அவகாசம் : இல்லையெனில் பேச்சில் இருந்து வெளியேறவும் தமிழ்க் கட்சிகள் தீர்மானம்

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட மாகாண அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கத்திற்கு ஒரு வார கால அவகாசம் வழங்குவதென்றும், அந்த காலஅவகாசத்திற்குள் அதிகாரங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், அரசாங்கத்துடனான பேச்சை தொடர்வதில்லையென்றும் தமிழ் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இரா.சம்பந்தனின் வீட்டில் இன்று (9) மாலை கூடிய தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் இந்த முடிவை எடுத்தனர்.

இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. நாளை 10ஆம் திகதி அரசாங்கத்திற்கும், தமிழர் தரப்பிற்குமிடையில் பேச்சுக்கள் ஆரம்பமாகவுள்ள நிலையில், பேச்சின் போது முன்வைக்கப்பட வேண்டிய விடயங்களை ஆராய இன்று தமிழ் தேசிய கட்சிகள் சந்திப்பில் ஈடுபட்டன. இதன்போது, அரசியலமைப்பின்படி மாகாணங்களிற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், பிடுங்கப்பட்ட அதிகாரங்களை மீளளிக்கவும் அரசாங்கத்திற்கு குறுகிய கால அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அரசியலமைப்பின்படி மாகாணங்களிற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், பிடுங்கப்பட்ட அதிகாரங்களை மீளளிக்கவும் அரசாங்கத்திற்கு குறுகிய கால அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 17ஆம் திகதிக்கள்- ஒரு வாரத்திற்குள்- மாகாண அதிகாரங்கள், ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரத்தின் மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ முழுமையாக மீளளிக்கப்பட வேண்டும்.

ஏற்கெனவே வழங்கப்பட்ட அதிகாரங்களை ஒரு வாரத்திற்குள் மீளளிக்கவில்லையென்றால், இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்கி தீர்வை தருமென்பது பகல் கனவாகவே அமையும் என்ற அடிப்படையில், அரசாங்கத்துடனான பேச்சை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று (ஜன. 10) காலை 10.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியில் திரள கோரி முன்னாள் போராளி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்

தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் அனைத்து கட்சிகளையும் ஓரணியில் திரள வலியுறுத்தி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் போராளியொருவர் ஆரம்பித்துள்ளார். இன்று (9) காலை முதல் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

புதுக்குடியிருப்பு சந்தியில், இலங்கை வங்கி கட்டிடத்திற்கு அண்மையில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் அனைத்து கட்சிகளும் தமக்கிடையிலான ஆசன பங்கீட்டு பிரச்சினைகளை கைவிட்டு, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை வென்றெடுப்பதற்காக ஓரணியில் திரள வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

சாகும் வரையான போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ள அந்த நபர், இதுவரை நீராகாரமும் அருந்தாமல் போராட்டத்தை தொடர்கிறார். முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த, முன்னாள் போராளியான வேலுப்பிள்ளை மாதவமேயர் என்பவரே போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். தனது தந்தை நாட்டுப்பற்றாளர் கௌரவமளிக்கப்பட்டவர் என்றும், 3 உடன்பிறப்புக்கள் மாவீரர்களாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணி- மணிவண்ணன் அணி இணைந்து போட்டியிட தீர்மானம்

உள்ளூராட்சி தேர்தலில் மணிவண்ணன் அணியுடன் ஒன்றாக இணைந்து போட்டியிட நாங்கள் தீர்மானித்து உள்ளோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

யாழ் மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி தலைவர் விக்னேஸ்வரன் சந்திப்புக்கு பின்னர் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

குறித்த ஊடக சந்திப்பில் யாழ் மாநகர முன்னாள் முதல்வர் மணிவண்ணன் மற்றும் விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கை – இந்திய மத்தியஸ்தம் கோரி இந்திய துணை தூதுவரிடம் மகஜர்

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு யாழில் மேற்கொண்டு வருகின்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்றைய தினம் யாழில் உள்ள இந்திய துணை தூதுவரை சந்தித்து மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர். வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவானது அரசுடனான பேச்சுவார்த்தையின் போது சமஸ்டி அடிப்படையிலான தீர்வை தமிழ் தரப்புகள் ஒருமித்து வலியுறுத்த வேண்டுமென கோரி யாழ்ப்பாணம் நாவற்குழியில் கடந்த வியாழக்கிழமை முதல் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்றைய தினம் யாழில் உள்ள இந்திய துணைத் தூதுவராலயத்தில் துணைத் தூதரை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை நடத்தி இருந்தனர். இதன்போது தூதுவரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் கையளித்துள்ளனர்.

சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு அவர்கள் கருத்து வெளியிடும் போது- தமிழ் மக்கள் தேசிய இன பிரச்சனைக்கு தீர்வான சமஸ்டி அடிப்படையிலான தீர்வுக்கு அனைத்து தமிழ் தரப்புக்களும் ஓரணியில் திரள வேண்டும் என்பதால் அத்தகைய ஒற்றுமைக்கு உதவ வேண்டுமென தூதுவரிடம் வலியுறுத்தியதாக கூறினர். மேலும் அரசிற்கும் தமிழர் தரப்பிற்கும் இடையிலான இந்த பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் மத்தியஸ்தம் வேண்டுமெனவும் தூதுவரிடம் வலியுறுத்தியதாகவும் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

வடக்கு உட்பட அனைத்து தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியாக போட்டி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு உட்பட அனைத்து தொகுதிகளிலும் பங்காளிகளுடன் இணைந்து ஐக்கிய மக்கள் கூட்டணியாகவே போட்டியிடவுள்ளோம். அதற்கான பேச்சுவார்த்தைகள் பங்காளிக் கட்சிகளுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (9) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் இளைஞர் மற்றும் மகளிர் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது எமது இலக்காகும். அதற்கமைய வேட்புமனு தாக்கலுக்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து கூட்டணி அமைக்கவுள்ளதாக கூறுகின்றனர். அந்த கூட்டணி எந்த வகையிலும் ஐக்கிய மக்கள் சக்திக்கு சவாலாக அமையாது. காரணம், இவ்விரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்ற அச்சத்திலேயே தேர்தலில் போட்டியிடுகின்றன.

தேர்தலை நடத்துவதற்கு பணம் இல்லை என்று அரசாங்கம் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யாகும்.

வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 10 பில்லியனை வழங்கினால் செலவுகளை கட்டுப்படுத்தி, அந்த தொகைக்குள் தம்மால் தேர்தலை நடத்தி முடிக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எனவே, பொருளாதார நெருக்கடியை குறிப்பிட்டு தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இடமளிக்காது.

தற்போது சமூக வலைத்தள ஊடகங்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

தேர்தல் காலத்தில் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்களை முடக்குவதற்காகவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால், அதற்கான அதிகாரம் அரசாங்கத்துக்கு கிடையாது. அது மக்களின் அடிப்படை உரிமையாகும்.

நாடு வங்குரோத்து அடைந்தமையால் ஜே.வி.பி.க்கும் பங்குண்டு. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கங்களில் ஜே.வி.பி. பங்கேற்றிருக்கிறது.

அந்த அரசாங்கத்தில் இருந்தவர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதற்கு ஜே.வி.பி.யே அனுமதி பத்திரத்தை வழங்கியது. எனவே தற்போது தம்மை தூய்மையானவர்களாக காண்பித்துக்கொள்ள முயற்சிக்கும் ஜே.வி.பி.யை பற்றி வரலாறு தெரிந்தவர்கள் நன்கு அறிவர்.

நாம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எமது பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய மக்கள் கூட்டணியாகவே போட்டியிடுவோம். வடக்கிலும் கூட்டணியாகவே களமிறங்குவோம். இது தொடர்பில் தற்போது எமது கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம் என்றார்.

கரைதுறைப்பற்று தவிசாளரை விசாரணைக்கு அழைத்த முள்ளியவளை பொலிஸார்

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு உறுப்பினர்களான ரெலோ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரமான கமலநாதன் விஜிந்தன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான சின்னராசா லோகேஸ்வரன், திருச்செல்வம் இரவீந்திரன், தவராசா அமலன், சமூக செயற்பாட்டாளர்களான ஞானதாஸ் யூட் பிரசாந், பாஸ்கரன் வனஜன் ஆகியோரிடமே வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

குறித்த பணிக்குழு உறுப்பினர்கள் ஆறு பேரையும் இன்று பொலிஸ் நிலையம் வருமாறு பொலிஸார் வீடுகளுக்கு சென்று நேற்று அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது குறித்த ஆறு பேரும் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில், கடந்த நவம்பர் 27ஆம் திகதி நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாக வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

குறிப்பாக, மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்காக முதல் நாள் 26ஆம் திகதி மாங்குளம், முல்லைத்தீவு வீதியில் மாவீரர் துயிலும் இல்ல வாசலில் அமைக்கப்பட்ட வளைவில், தமிழீழ வரைபடம், துப்பாக்கி, மாவீரர்கள் சிலரது புகைப்படங்கள் காணப்பட்டமை தொடர்பிலேயே குறித்த வாக்குமூலத்தை பதிவுசெய்துள்ளதாக தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பில் பணிக்குழு உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கையில்,

ஏற்கனவே 2019ஆம் ஆண்டு நாம் நினைவேந்தல் நிகழ்வினை நடத்தியபோது இதே வளைவே இருந்தது. அது தொடர்பில் எந்த விடயமும் எங்களுக்கு தெரியப்படுத்தவில்லை.

ஆகவே, அதே வளைவையே நாம் இம்முறையும் அமைத்தோம்.

குறிப்பாக, மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்காக 26ஆம் திகதி மாங்குளம், முல்லைத்தீவு வீதியில் துயிலும் இல்ல வாசலில் அமைக்கப்பட்ட வளைவில் தமிழீழ வரைபடம், துப்பாக்கி, மாவீரர்கள் சிலரது புகைப்படங்கள் முதலான சின்னங்களை காலை 8.30 மணிக்கு முன்னரே நாங்கள் அகற்றுவதற்கு இணக்கம் தெரிவித்து, இரவே அந்த சின்னங்களை தீந்தை பூசி மறைத்திருந்தோம்.

எனினும், அதனை மாற்றம் செய்து மறைக்கும் முன்னர் பொலிஸார், அந்த சின்னங்களை அகற்றி, அவற்றை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டனர். அதுதான் நடந்தது என கூறினர்.

குறித்த விடயம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்துள்ள நிலையிலேயே குறித்த நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்வதாகவும், மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களுக்கு சேவை செய்வதே எனது முதன்மை இலக்கு – பழனி திகாம்பரம்

“நான் வாயால் வடைசுடும் அரசியல்வாதி அல்லன். அதேபோல அரசியலுக்கு வந்து மக்கள் சொத்துகளை சுருட்டியதும் கிடையாது. மக்களுக்கு சேவை செய்வதே எனது முதன்மை இலக்கு. அந்த வழியிலேயே பயணம் தொடரும்.” என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அக்கரப்பத்தனை மற்றும் டயகம பிரதேசத்தின் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியுடைய செயற்பட்டாளர்களுக்கான விசேட கூட்டம் ஒன்று இன்று (08) தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தலைமையில் அக்கரப்பத்தனை லக்ஷ்மி மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் விசேட அதிதியாக கலந்து கொண்டார்.

அத்தோடு, கட்சியின் பொது செயலாளர் எஸ்.பிலிப், பிரதி பொது செயலாளர் பா. கல்யாணகுமார், நிதி செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன், உப தலைவர்களான ராஜமாணிக்கம், சிவானந்தன், தேசிய அமைப்பாளர் நகுலேஷ்வரன், இளைஞர் அணி தலைவர் பா.சிவநேசன், பிரதி தேசிய அமைப்பாளர் டி.கல்யாணகுமார் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

” மலையக மக்களுக்காக உரிமை அரசியலை முன்னெடுப்பதற்காகவே தொழிலாளர் தேசிய சங்கம் உருவாக்கப்பட்டது. அந்த கொள்கையின் அடிப்படையிலேயே சங்கம் தற்போதும் பயணித்துக்கொண்டிருக்கின்றது.

2015 ஆம் ஆண்டு நான் அமைச்சராக பதவியேற்றேன். குறுகிய காலப்பகுதிக்குள் தனிவீட்டுத் திட்டம் உட்பட மலையக மக்களுக்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தேன். அமைச்சராக நான் நேர்மையாக செயற்பட்டதால்தான் எனக்கு அதிகூடிய விருப்பு வாக்குகளை வழங்கி மக்கள் நாடாளுமன்றம் அனுப்பிவைத்தனர். மக்கள் நம்பிக்கைக்கு விரோதமாக செயற்படமாட்டேன்.

நான் மற்றையவர்களைபோல வாயால் வடை சுடும் அரசியல்வாதி கிடையாது. சொல்வதை செய்து காட்டுவதே என் பழக்கம். அரசியலுக்கு வந்து சொத்துகளை இழந்துள்ளேன். மாறாக சேர்த்தது கிடையாது. எமது மக்களை முன்னேற்ற வைப்பதே எனது இலக்கு. மாறாக மக்களை வைத்து பணம் உழைக்க முற்படவில்லை.

மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் ஆகின்றன. இதனை கொண்டாட முடியாது. ஏனெனில் மக்களின் வாழ்க்கை நிலை முழுமையாக முன்னேறவில்லை. இந்நிலைமையை இந்தியா, பிரிட்டன் மற்றும் இலங்கை அரசுகளுக்கு எடுத்துகூறுவதற்காக நினைவுகூரல் நிகழ்வுகள் நடத்தப்படும். பெப்ரவரி 26 ஆம் திகதி நுவரெலியா சினிசிட்டாவில் இந்நிகழ்வை நாம் நடத்தவுள்ளோம். ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர், இந்திய தலைவர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எமது தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்கி அவர்களை முதலாளிகளாக்க வேண்டும்.” – என்றார்.

சிறைச்சாலையினுள் சேபால் அமரசிங்க தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  சமூக செயற்பாட்டாளர் சேபால் அமரசிங்க மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அதன்படி, குறித்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று (08)  கொழும்பு விளக்கமறியல்சாலையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு  விளக்கமறியல் சிறைச்சாலையில் விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ள  சேபால் அமரசிங்க,  சிறைச்சாலையில் உள்ள சில கைதிகளால்   தாக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், அவரை  தாக்கியவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

ஸ்ரீ தலதா மாளிகையை  அவமதித்த சம்பவம் தொடர்பில் சேபால் அமரசிங்க கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டம்

வாழ்க்கை செலவுப் படியை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

சிறிலங்கா ஜனரய சுகாதார சேவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது வாழ்க்கை செலவுப் படியை அதிகரித்தல், வங்கிகளில் அதிகரித்த வட்டியை நிறுத்துதல் , முறையற்ற நியமனத்தை நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குவைத்தின் பாலைவனத்தில் பணிபுரிந்த 6 இலங்கையர்கள் அந்நாட்டு இராணுவத்தின் உதவியுடன் மீட்பு

குவைத் நாட்டின் ஈரான் எல்லைக்கு அருகாமையில் உள்ள பாலைவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த 6 இலங்கை இளைஞர்கள் மீட்கப்பட்டு இன்று நாடு திரும்பினர்.

குறித்த இளைஞர்கள் 6 பேரும் கடுமையாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டு, தாக்கப்பட்டு உணவும் சம்பளமும் வழங்கப்படாத நிலையிலேயே பெரும் முயற்சியில் மீட்கப்பட்டு இன்று (09) காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்கள் அனைவரும் திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் வசிப்பவர்களாவர். இவர்கள் கிண்ணியாவில் உள்ள சட்டவிரோதமான தரகர் ஊடாக குவைத்துக்கு வேலைக்குச் சென்றுள்ளனர். இந்த இலங்கையர்கள் குவைத்தில் ஷேக் ஒருவரால் நடத்தப்படும் பண்ணையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு இந்த இலங்கையர்கள் இரவு நேரத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமது நிலைமை குறித்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்களை மீட்கும் நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இவர்களை மீட்பதற்காக குவைத்தின் உயர் பாதுகாப்பு பிரிவின் மேஜர் ஜெனரல் ஒருவரின் உதவியுடன் சிறப்பு இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு இவர்கள் மீட்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.