முப்படைகளிலிருந்தும் 18,202 பேர் பதவி விலக விருப்பம்

பாதுகாப்பு அமைச்சின் தகவலின்படி, விடுமுறை பெறாது கடமைக்கு சமூகமளிக்காதிருந்த பாதுகாப்பு படை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தின்போது 18,202 பேர் சேவையிலிருந்து விலக முன்வந்துள்ளனர்.

இராணுவத்தில் 16,174 பேரும், கடற்படையில் 1,061 பேரும், விமானப்படை 967 பேரும் சேவையிலிருந்து விலக முன்வந்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கையில் இராணுவத்தின் 32 அதிகாரிகளும் உள்ளடங்குவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

புதிய வருடத்தில் புதிய கூட்டமைப்பு – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

நாட்டின் எதிர்கால அரசியலுக்கான புதிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டணியை எதிர்வரும் ஜனவரி மாதம் அறிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனுராதபுரம் ஜயஶ்ரீ மா போதியை வழிபடுவதற்காக நேற்று(14) சென்றிருந்த போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்ய தனிநபருக்கு ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 13,810 ரூபா தேவை

ஒரு தனிநபர் தனது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ள அவருக்கு ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 13,810 ரூபா (தேசிய மட்டத்தில்) தேவைப்படுகிறது என புள்ளிவிபரவியல் மற்றும் தொகை மதிப்பு திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

(ஒக்டோபர் மாத தரப்படுத்தல்) மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வாழ்க்கை செலவு தரப்படுத்தலுக்கமைய கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஒருவரது ஒருமாத அடிப்படை தேவைகளுக்கான செலவு 14,894 ரூபாவாக காணப்படுவதுடன்,மொனராகலை மாவட்டத்தில் வாழ்பவரின் ஒருமாத செலவு 13,204 ரூபா என திணைக்களம் வாழ்க்கை செலவு சுட்டியை தரப்படுத்தியுள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கடந்த செப்டெம்பர் மாதம் வெளியிட்ட தரப்படுத்தல் அறிக்கையில் தேசிய மட்டத்திலான மாத செலவு 13,772 ரூபாவாக குறிப்பிடப்பட்டிருந்தது.ஒக்டோபர் மாதம் வாழ்க்கை செலவு 13,810 ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது,அவ்வாறாயின் இடைப்பட்ட காலத்தில் வாழ்க்கை செலவு 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர் மாதம் கொழும்பு மாவட்டத்தின் தனிநபர் வாழ்க்கை செலவு 14,854 ரூபாவாக காணப்பட்டது,ஒக்டோபர் மாதம் இந்த தொகை 14,894 ரூபாவாக காணப்படுகிறது,அவ்வாறாயின் இடைப்பட்ட காலத்தில் வாழ்க்கை செலவு 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ரீதியில் கொழும்பு மாவட்டத்திற்கு 14,894 ரூபா,கம்பஹா மாவட்டத்திற்கு 14,818 ரூபா,களுத்துறை மாவட்டத்திற்கு 14,496 ரூபா,கண்டி மாவட்டத்திற்கு 14,018 ரூபா,மாத்தளை மாவட்டத்திற்கு 13,999 ரூபா,நுவரெலியா மாவட்டத்திற்கு 14,552 ரூபா,காலி மாவட்டத்திற்கு 14,031 ரூபா,மாத்தளை மாவட்டத்திற்கு 13,487 ரூபா அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு 13,417 ரூபா,யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 13,477 ரூபா,மன்னார் மாவட்டத்திற்கு 14,145 ரூபா,

மற்றும் வவுனியா மாவட்டத்திற்கு 13,796 ரூபா,முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 13,713 ரூபா,கிளிநொச்சி மாவட்டத்திற்கு 13,342 ரூபா,மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 13,885 ரூபா,அம்பாறை மாவட்டத்திற்கு 13,920 ரூபா,திருகோணமலை மாவட்டத்திற்கு 13,455 ரூபா,புத்தளம் மாவட்டத்திற்கு 14,097 ரூபா,அனுராதபுரம் மாவட்டத்திற்கு 13,477 ரூபா,பொலன்னறுவை மாவட்டத்திற்கு 13,513 ரூபா,பதுளை மாவட்டத்திற்கு 13,912 ரூபா,மொனராகலை மாவட்டத்திற்கு 13,204 ரூபா,இரத்தினபுரி மாவட்டத்திற்கு 13,871 ரூபா,கேகாலை மாவட்டத்திற்கு 14,440 ரூபா என தரப்படுத்தப்பட்டுள்ளது,(இந்த மாவட்டங்களில் வாழும் தனி நபர் அத்தியாவசிய தேவையை நிறைவேற்றிக் கொள்ள செலவழிக்கும் குறைந்தப்பட்ட தொகை –ஒக்டோபர் மாத தப்படுத்தல்)

இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருந்து வெளியேறியது சீன உளவுக் கப்பல்

சில நாட்களுக்கு முன்னர் இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்த சீன உளவுக் கப்பலான யாங் வாங்-5, அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன உளவுக் கப்பல் வெளியேறினாலும் நீண்ட தூர ஆளில்லா கண்காணிப்பு விமானங்கள் மற்றும் கடல்சார் ரோந்து விமானங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாக கூறப்படும் யாங் வாங்-5 கப்பலை, கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையின் அம்பாந்தோட்டையில் சீனா நிறுத்தியிருந்தது.

தமிழர்களுக்கு தீர்வை வழங்குவது பைத்தியக்காரத்தனம் – உதய கம்மன்பில

நாட்டில் உள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வினை காண்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் முயற்சி பைத்தியக்காரத்தனம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்தார்.

65 வருடங்களாக தீர்க்க முடியாத இனப் பிரச்சினைக்கு 52 நாட்களில் தீர்வினை காண முடியும் என அரசாங்கம் நினைப்பது வேடிக்கையானது என்றும் தெரிவித்தார்.

அனைத்து கட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட விடயம் குறித்து கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த கூட்டத்தில் தமிழ் பிரிவினைவாதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சிங்கள தரப்புக்கள் எதிர்ப்பு வெளியிட்டதாக உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

இதேவேளை பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்பாக, அதிகாரப் பரவலாக்கம் குறித்து அனைவரும் இணக்கத்திற்கு வரவேண்டும் என்று ஜனாதிபதி இதன்போது கேட்டுக்கொண்டதாக கூறினார்.

65 வருடங்களாக இது தொடர்பாக தொடர்ச்சியாக முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் இதன் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட முடிவுகள் தொடர்பாக அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என்றார்.

இந்நிலையில், மீண்டும் இதற்கான முயற்சிகளை எடுக்கும் இந்த அரசாங்கத்திற்கு உண்மையில் பைத்தியம் பிடித்துவிட்டதாகவே கருத வேண்டும் என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார்.

வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் போராட்டம்

வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக பல்வேறுபட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இலங்கை ஆசிரியர் சங்கம் இன்றைய தினம் (புதன்கிழமை) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தது.

“வடமாகாண கல்வி அமைச்சில் காணப்படும் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாகவும் நிர்வாக ஆளுமையற்ற தன்மை காரணமாகவும் குறித்த போராட்டத்தை முன்னெடுத்ததாக ஆசியர்கள் தெரிவித்தனர்.

அதேவேளை, வடமாகாண கல்வித்துறையில் உள்ள சீர்கேடுகள் தொடர்பில் 2021 டிசம்பர் மாதம் வடமாகாண ஆளுநர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க 100 பக்க முறைப்பாடு ஒன்றை வழங்கியிருந்தோம்.

அதற்கு ஒரு விசாரணைக் குழுவை நியமித்தனர். குறித்த விசாரணை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை கேட்டபோதும் அது இதுவரை எமக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

முறைப்பாட்டை வழங்கி அண்ணளவாக ஒரு வருடமாகிய போதும் கூட விசாரணை இன்னும் முடிவுறாத நிலைமையில் எமக்கு இதனுடைய பின்னணி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மூன்றாம் தவணை ஆரம்பித்த போதும் இரண்டாம் தவணைப் பரீட்சையை வைக்கமுடியாத அளவுக்கு வடமாகாண கல்வியமைச்சு மற்றும் வடமாகாண கல்வித் திணைக்களத்தின் நிலைமை போயுள்ளது.

இந்த நிலையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தோம் என்றனர்.

இலங்கையைச் சேர்ந்த சட்டத்தரணிக்கு எதிரான வழக்கு- ஜஸ்மின் சூக்காவிற்கு ஆதரவாக பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பு

பிரிட்டனை தளமாக கொண்ட இலங்கை சட்டத்தரணி ஜயராஜ் பலிகவர்த்தனவிற்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்காவிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜயராஜ் பலிகவர்த்தன ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக தவறான கருத்துக்களை தெரிவித்தமைக்காக நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.

ஜஸ்மின் சூக்கா தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு பக்கச்சார்பானவர் என தெரிவிக்கும் அறிக்கையொன்றை வெளியிட்ட ஜயராஜ் பலிகவர்த்தன 47 தூதரகங்களிற்கு அதனை அனுப்பிவைத்திருந்தார்.

இதனை தொடர்ந்து பிரிட்டனின் 2018 தரவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தரவு பாதுகாப்பு மனுவொன்றை தாக்கல் செய்த ஜஸ்மின் சூக்கா தனது தனிப்பட்ட கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தவறான தகவல் வெளியிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார்.

இயல்பாகவே இந்த குற்றச்சாட்டுகள் தவறானவை, இலங்கையின் மனித உரிமை பாதுகாவலர் என்ற அடிப்படையில் எனது பணிகளிற்கு அவதூறு கற்பிக்கும் நோக்கத்தை கொண்டவை என ஜஸ்மின் சூக்கா நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

மனித உரிமை ஆர்வலர்கள் பாதுகாவலர்களை பயங்கரவாதிகள் அல்லது அவர்களின் ஆதரவாளர்கள் என முத்திரை குத்தும் நடவடிக்கைளில் உலகம் முழுவதும் உள்ள ஒடுக்குமுறை அரசாங்கங்கள் ஈடுபட்டுள்ளன என்பது நீதிமன்றத்திற்கு தெரியும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இலங்கையை சேர்ந்த சட்டத்தரணி தான் தனது அறிக்கையில் ஜஸ்மின் சூக்காவிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த விடயங்களை நீக்க மறுத்ததுடன் ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக நீதிமன்றில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இறுதியில் அவர் ஜஸ்மின் சூக்காவிற்கு குறிப்பிடத்தக்க இழப்பீட்டினை செலுத்த இணங்கியுள்ளதுடன் தனது கருத்துக்களை வாபஸ் பெறுவதற்கும் இணங்கியுள்ளார்.

நீதிமன்றம் அவர் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் இணையத்தில் மன்னிப்பு கோரவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை , மன்னார் நகர சபைகளை மாநகர சபைகளாக தரமுயர்த்த அமைச்சரவை அனுமதி

அம்பாறை மற்றும் மன்னார் நகர சபைகளை மாநகர சபைகளாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அபிவிருத்தி பணிகளை இலகுபடுத்துவதற்காக குறித்த இரு நகர சபைகளும் மாநகர சபைகளாக தரமுயர்த்தப்படவுள்ளன.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.

தற்போது காணப்படும் உட்கட்டமைப்பு வசதிகள், அலுவலக வசதிகள், மனித வளங்களை பயன்படுத்தி மேலதிக நிதியை செலவிடாமல் ஒரு சில மாவட்டங்களில் காணப்படுகின்ற நகரங்களை மாநகரங்களாக தரமுயர்த்தும் நோக்குடன் இந்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

IMF கடன் வசதி இவ்வருடத்தில் சாத்தியமற்றது – ரொய்ட்டர்ஸ் தகவல்

சர்வதேச நாணய நிதியம்(IMF) இலங்கைக்கு வழங்கவுள்ள கடன் உதவி தொடர்பில் இவ்வருட இறுதிக்குள் உடன்பாடு எட்டப்படுமா என்பது சாத்தியமற்றது என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நாட்டின் நிதியத்தின் பிரதிநிதிகள் பரிமாறிக்கொண்ட தகவல்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வௌியிடப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக 2.9 பில்லியன் டொலர் கடன் வசதியைப் பெறுவதற்கு, இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் IMF பிரதிநிதிகள் கடந்த ஜூன் மாதம் ஊழியர்கள் மட்ட இணக்கப்பாட்டிற்கு வந்திருந்தனர்

திருக்கேதீஸ்வர ஆலயத்தை திறந்து மறுமலர்ச்சியை ஏற்படுத்தினோம் – இந்திய வெளிவிவகார அமைச்சர்

“தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வரத்தை மீட்டதன் மூலம் இலங்கையில் இந்தியா மறு மலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார். மகாகவி சுப்பிரமணிய பாராதியாரின் பிறந்தநாளை தேசிய மொழிகள் தினமாக இந்திய மத்திய அரசு பிரகடனப்படுத்தியதை முன்னிட்டு, காசியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும், இலங்கையில் மன்னாரில் உள்ள திருகேதீஸ்வரம் கோவிலை மீட்டுள்ளோம். பிரதமர் சில வருடங்களுக்கு முன்னர் சென்று அந்த ஆலயத்துக்கு சென்றிருந்தார். அந்த ஆலயம் 12 வருடங்கள் மூடப்பட்டிருந்தது. நாம் அந்த ஆலயத்தை புதுப்பித்து திறந்தோம். நாம் காட்டிய ஆர்வத்தால் அது சாத்திய மானது. பிரதமர் மோடி பதவியேற்றதன் பின்னர் எமது கலாசாரத்தையும் மரபுரிமையையும் பாதுகாப்பதோடு, இவ்வாறு மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் ஒத்துழைப்பு வழங்குவதற்காகவும் வெளியுறவுதுறை அமைச்சில் ஒரு தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது- என்றும் கூறினார்.