தமிழ்ப் பொதுவேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பான கலந்துரையாடல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது – சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான கலந்துரையாடல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற(09) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தென்னிலங்கை கட்சிகள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பரப்புரைகளை ஆரம்பித்துவிட்டன. சிறிலங்கா பொது ஜன பெரமுன சார்பிலும் ஜனாதிபதி வேட்பாளர் களமிறங்கவுள்ள நிலையில், பிரதான போட்டியாளர்களின் எண்ணிக்கை 4 ஆக மாறியுள்ளது.

இவர்கள் யாரும் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் பேசக்கூடியவர்கள் இல்லை. அதைத்தொடுவதற்கும் அவர்கள் தயாராக இல்லை. போர் முடிவடைந்து 14ஆண்டுகளாக நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டேயிருக்கின்றோம். இதனை மாற்றியமைக்கவேண்டும்.

தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்பதை சிங்களச் சமூகத்துக்கு வலியுறுத்தும் நோக்கமாக, அதேபோன்று இங்குள்ள இராஜதந்திரிகளுக்கு வலியுறுத்தும் வகையிலும் தமிழ் மக்களுக்கு ஒரு நியா யமான தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதை வெளிக்கொணரும் முகமாக நாங்கள் ஒரு பொது தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய எல்லாக் கட்சிக ளும் இணைந்து பொது வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தவேண்டும் என்ற பேச்சுகள் கடந்த 6 மாத காலமாகப் பேசப்பட்டு வருகின்றன.

கடந்த 7ஆம் திகதி வவுனியாவில் நடந்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி யில் அங்கம் வகிக்கும் 4 கட்சிகளும் அதற்கான முன் முயற்சிகளில் அனைத்தையும் நாங்கள் கூட்டாக எடுப்பது என்று தீர்மானித்துள்ளோம்.

ஒரு பொது வேட்பாளருடைய தேவையை இந்த ஐந்து கட்சிகளும் வலியுறுத்தும் வகையில் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

மேலும், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் போட்டியிடுவது தொடர்பிலான கலந்துரையாடல் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.

இதுவரை யார் பொது வேட்பாளர் என்பது பிரேரிக்கப்பட வில்லை. ஆனாலும், மதங்களைக் கடந்து வடக்கு – கிழக்கைப் பிரதிநிதித் துவப்படுத்தும் ஒருவரே போட்டியிடுவார். மலையகம் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவை நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

அவர்களுடனும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சம்மதித்தால் அவர்களுடனும் பேச நாம் தயார். நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ் வரன் ஏற்கனவே தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திவிட்டார். தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படவேண்டும் என்பதில் அவர் உடன்பட்டுள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைப் பொறுத்தவரை முக்கியமான தலைவர்கள் எமது நிலைப்பாட்டுக்கு ஆதரவாக உள்ளனர்.

அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மாத்திரமே இதற்கு எதிராக உள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு இலங்கை ஆதரவு வழங்கும் – ஜேக் சல்லிவன்

இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கு முழு ஆதரவு வழங்கும் என தேசிய பாதுகாப்பு தலைவர் ஜேக் சல்லிவன் இதனை தெரிவித்துள்ளார்

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்கவுடன் இன்று (10) தொலைபேசி கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

விரைவான பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கு இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளை பாராட்டினார்.

மேலும் அவர் , சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தால் சுட்டிக்காட்டப்பட்ட பொது நிதி, பணம் மற்றும் கட்டுப்பாடு ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளதுடன் சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இதன் போது பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் மேலும் இது குறித்த எதிர்கால எதிர்பார்ப்புகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர இலக்குகளை அடைவதற்காக இலங்கையுடன் தொடர்ந்த ஈடுபட செய்வதில் உறுதியாக இருப்பதாக சல்லிவன் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் இந்த உரையாடல் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் புதிய செயலாளராக நா.ரட்ணலிங்கம் தெரிவு

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் புதிய செயலாளராக நா.ரட்ணலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ந. நல்லநாதர் மறைவின் பின்னர், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் பதவி வெற்றிடமாக இருந்த நிலையில், நா.ரட்ணலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) காலை வவுனியா கோயில் புளியங்குளத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது.

இதன்போதே கூட்டணியின் செயலாளர் பதவிக்கான தெரிவு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் பதவி எதிர்வரும் இரு வருடங்களுக்கு புளொட் அமைப்புக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம், மறைந்த மூத்த தலைவர் நல்லநாதர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் அண்மையில் காலமானதால், தற்போது அவரது பதவிக்கு புளொட் அமைப்பைச் சேர்ந்த நாகலிங்கம் ரட்ணலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகக் களமிறங்கத் தயார் – சம்பிக்க

பரந்துபட்ட அரசியல் கூட்டணியொன்று எதிர்காலத்தில் மலரவுள்ளதாகவும், அதன்மூலம் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகக் களமிறங்குமாறு கோரிக்கை விடுத்தால் அதனை ஏற்பதற்கு நான் தயார்” என்றும், ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“ஜனாதிபதித் தேர்தல்தான் தற்போது நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துவதற்கு எவராவது முற்பட்டால் அது வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு விவகாரத்தால் தாக்கம் செலுத்தும்.

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பை எதிர்வரும் ஜூலை மாதத்துக்குள் செய்தாக வேண்டும். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தலாம்.

ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகக் களமிறங்குமாறு எனக்கு இன்னும் கோரிக்கை விடுக்கப்படவில்லை.

எதிர்காலத்தில் பரந்துபட்ட அரசியல் கூட்டணி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்தக் கூட்டணி கோரிக்கை விடுத்தால் பொதுவேட்பாளராகக் களமிறங்கத் தயார்” என தெரிவித்துள்ளார்.

கச்சதீவு விவகாரம் ஏற்கனவே முடிந்து போன விடயம் – இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

கச்சதீவு சம்பந்தமாக பல்வேறு விதமான கருத்துக்கள் வெளிப்பட்டு வருகின்ற நிலையில், அந்த விவகாரம் இந்தியாவின் உள்ளகப் பிரச்சினையாகும் என்று வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அரை நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே நிறைவடைந்த கச்சதீவு விடயம் சம்பந்தமாக தற்போது எவ்விதமான உரையாடல்களும் இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்குச் சொந்தமாக கச்சதீவு தற்போது கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. இந்த கச்சதீவானது 1974இல் அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியினால் இலங்கைக்கு வழங்கப்பட்டதாகும்.

இந்நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி கச்சதீவு மீட்புக் கோசத்தினை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளது. அத்துடன், காங்கிரஸ் கட்சியும் தமிழகத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான திராவிட முன்னேற்ற கழகமும் தான் கச்சதீவினை இலங்கைக்கு தாரைவார்த்தது என்பதையும் வெளிப்படுத்தி வருகிறது.

இவ்வாறான நிலையில் கருத்து வெளியிடுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி தமிழ்நாட்டில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இத்தகையதொரு சூழல் தான் கச்சதீவு விடயம் இந்திய அரசியல் கட்சிகளால் சீர்தூக்கப்பட்டுள்ளது. ஆகவே எம்மைப் பொறுத்தவரையில் இந்தியா இந்த விடயம் சம்பந்தமாக எம்முடன் உத்தியோகபூர்வமாக இன்னமும் உரையாடவில்லை. எனினும், அயல்நாடு என்ற வகையில் நாம் குறித்த விடயம் சம்பந்தமாக கரிசனைகளைக் கொண்டுள்ளோம்.

உண்மையில் கச்சதீவு 50 ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கைக்கு வழங்கப்பட்ட நிலமாகும். ஆகவே, கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதாகிவிட்டது. இவ்வாறான நிலையில், தற்போது அதனைப் மீளப்பெறுமாறு வலியுறுத்துவதானது யதார்த்ததுக்கு புறம்பானதாகும். அதுமட்டுமன்றி, தமிழகத்தில் காணப்படுகின்ற உள்ளக அரசியல் நிலைமைகளே இந்த விடயம் சம்பந்தமாக பல்வேறு கருத்துக்கள் வெளிப்படுவதற்கு காரணமாகின்றது.

எனவே, பிறிதொரு நாட்டின் உள்ளக அரசியல் விடயங்கள் சம்பந்தமாக தலையீடு செய்ய முடியாது. அதுவொரு முடிந்துபோன விடயமாகும் என்றார்.

முதலில் எந்தந் தேர்தல் என ஜனாதிபதியே தீர்மானிக்கலாம் – பசில் ராஜபக்ச

எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்பதை ஜனாதிபதியே தீர்மானிக்கலாம் அதற்கு பொதுஜனபெரமுன இடமளிக்கும் என முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்தவேண்டும் என்ற எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் அவருக்கு தெளிவுபடுத்தியுள்ளோம் அத்துடன் அது முடிவடைந்துவிட்டது இனி அவரே தீர்மானிக்கலாம் என பசில் ராஜபக்ச சண்டே டைம்ஸிற்கு தெரிவித்துள்ளார்.

எங்கள் கட்சி எந்த வகையிலும் ஜனாதிபதிக்கு அழுத்தங்களை கொடுக்காது என பசில்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை பசில் ராஜபக்ச ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ள நிலையிலேயே பசில்ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலை முதலில் நடத்தவேண்டும் என்ற தனது தனிப்பட்ட கோரிக்கைக்கு அப்பால் எந்த தேர்தலை முதலில்நடத்தவேண்டும் என்பது குறித்து வேறு எந்த பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளவில்லை முடிவு என்பது முற்றிலும் ஜனாதிபதியின் கரங்களிலேயே உள்ளது எனவும் முன்னாள் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இரண்டு தேசிய தேர்தல்களையும் எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தயாராகிவருகின்றது 9ம் திகதி கட்சியின் மத்திய நிறைவேற்றுகுழுவின் கூட்டம் இடம்பெறவுள்ளது எனினும் இந்த கூட்டத்தில் தேர்தல்கள் குறித்து ஆராயப்படாது எனவும் அவர் தெரிவித்;துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் இல்லை – ஜனாதிபதி

ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் இல்லை எனவும், அதன் பொருளாதாரக் கொள்கையை மொட்டுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட குழுவே தற்போது கையாள்வதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உரிமையை பிரகடனப்படுத்தி 2020ஆம் ஆண்டு சிறிகொத்தவைக் கைப்பற்றுவதற்கு தயாரான ஜக்கிய மக்கள் சக்தி, இன்று மொட்டுக் கட்சித் தலைவர் உள்ளிட்டோருக்கு அடிபணிந்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

2022 ஜூலையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்துடன், நாட்டின் கட்சி அமைப்பிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தான் எந்த அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், அனைவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெனவும் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

”பொருளாதார நெருக்கடி காரணமாக ஜூலை 2022 இல் ஏற்பட்ட அரசியல் எழுச்சியுடன், நாட்டின் கட்சி முறைமையிலும் மாற்றம் ஏற்பட்டது. இன்று அனைவரினதும் ஒத்துழைப்புடன் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்துள்ளது. இந்த நிலையைப் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்வது நம் அனைவரின் பொறுப்பாகும்.

கடந்த இரண்டு வருடங்களாக எமது பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்டங்களை சிலர் தமது பாராளுமன்ற பதவிக் காலத்தில் மேற்கொள்ளவில்லை. நாட்டில் பொருளாதார சிக்கல்கள் இருந்தபோதிலும், குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக அஸ்வெசும திட்டத்தை ஆரம்பித்து, அதுவரை இருந்த கொடுப்பனவை மூன்று மடங்காக உயர்த்த பாடுபட்டோம். மேலும், 20 இலட்சம் பேருக்கு நிரந்தர காணி உறுதிப்பத்திரம் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. இவை நாட்டின் பொருளாதாரம் ஒழுங்காக இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்காத வேலைத்திட்டங்கள் என்றே கூற வேண்டும்.

இந்த வேலைத் திட்டங்களை தொடர பாராளுமன்றத்தின் பெரும்பான்மையானவர்கள் எனக்கு ஆதரவளித்துள்ளனர். பொதுஜன பெரமுனவின் ஒரு பகுதி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவை இதில் அடங்கும். ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இதில் உள்ளனர். இந்த கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து முன்னேற வேண்டும்.

பொதுஜன பெரமுனவில் இருந்தாலும் சரி, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தாலும் சரி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்தாலும் சரி, வேறு கட்சியாக இருந்தாலும் சரி, அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

கடந்த காலத்தில் அரசியல் கட்சிகளில் பிளவுகள் ஏற்பட்டன. மொட்டுக் கட்சியில் இருந்து சிலர் எதிர்க்கட்சிக்கு சென்றனர். இப்போது அந்தக் குழு ஐக்கிய மக்கள் சக்தியை வழிநடத்துகிறது. ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த தாங்கள் சிறிகொத்தாவைக் கைப்பற்ற வேண்டும் என்று 2020 இல் ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்திருந்தது. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி என்று அழைக்கப்படும் குழு தற்போது மொட்டுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இன்று ஐக்கிய மக்கள் சக்தியில் ஐக்கிய தேசியக் கட்சி இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாத்தவன் நான். ஜே.ஆர் ஜயவர்தன, ஆர், பிரேமதாச, டி.பி. விஜேதுங்க, இவர்கள் அனைவருடனும் நாங்கள் பணியாற்றினோம்.

இன்று ஐக்கிய தேசியக் கட்சி என்று தங்களை அழைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு எந்த உரிமையும் இல்லை. இன்று எமக்கு பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டியுள்ளது. நாட்டு நலனுக்காக நாம் இணைந்து செயற்பட வேண்டும். இன்று அரசியல் போக்கு மாறிவிட்டது.

நீங்கள் அனைவரும் கிராமங்களுக்குச் செல்ல வேண்டும். 20 இலட்சம் நிரந்தர காணி உறுதிப் பத்திரங்களில் 10 இலட்சம் இதுவரை தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் அந்தப் பத்திரங்களை மக்களுக்குப் பகிர்ந்தளிக்க முடியும். எனவே இந்த கண்டி மாவட்டத்தில் உள்ள நீங்கள் அனைவரும் நல்ல ஒருங்கிணைப்புடன் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பீர்கள் என நான் நம்புகிறேன்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்றத்தின் ஏற்பாட்டில் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளுராட்சி மன்ற தலைவர்களின் சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (07) கலந்துகொண்டார்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கிராமங்களை ஒன்றிணைத்து முன்னாள் உள்ளுராட்சி மன்ற தலைவர்களின் அங்கத்துவத்துடன் ஆலோசனை அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு தெரிவித்தார்.

இதன்படி கிராமங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நேரடியாக அறிவிக்கும் பொறிமுறையொன்று நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் “அஸ்வெசும” வேலைத்திட்டம் மற்றும் “உறுமய” காணி உறுதி வேலைத்திட்டத்தில் நேரடியாக பங்குபற்றுமாறு முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்த ஜனாதிபதி, தேவையான வசதிகளை செய்து தருவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், அரசாங்க வேலைத் திட்டங்களை அமுல்படுத்துவதற்கு முன்னோடிகளாக உள்ளூராட்சி பிரதேசங்களில் உள்ள இளைஞர்களை முன்னோக்கி கொண்டு வர வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் மனுஷ நாணயக்கார, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஶ்ரீங்கா சுதந்திர கட்சிக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சதி செய்வதாக மைத்திரிபால குற்றச்சாட்டு

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சதி செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.

சுதந்திரக் கட்சியை அரசாங்கத்துடன் இணையச் செய்யும் நோக்கில் தாம் தலைமைப் பதவியில் நீடிப்பதனை தடுக்க நீதிமன்றின் உதவி நாடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த சதி திட்டத்தின் பின்னணியில் சந்திரிக்கா செயற்பட்டு வருவதாக மைத்திரி குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மீண்டும் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்து உண்மை நிலைமையை நீதிமன்றில் எடுத்துரைக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்த உள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள், மாணவர்களை பொலிஸ் நிலையம் அழைத்து விசாரித்தமை தொடர்பில் பொலிஸாருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை

யாழ் தெல்லிப்பழை பாடசாலையொன்றில் அண்மையில் இடம்பெற்ற இல்ல மெய்வன்மை போட்டியின் இல்ல அலங்காரங்கள் தொடர்பில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி தொடர்பில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டமை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கான விசாரணைக்கு தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை நாளைய தினம்(05) பிற்பகல் 2.30 மணிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனலைதீவில் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்திக்கான பூமி பூஜை நிகழ்வு

யாழ்.அனலைதீவு பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள சூரிய ஒளி மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்திக்கான பூமி பூஜை நிகழ்வு இன்றையதினம்(04) இடம்பெற்றது.

இலங்கை இந்திய அரசுகள் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்திய தனியார் நிறுவனத்தின் நிதி உதவியுடன் அனலைதீவில் அமைக்கப்படவுள்ள சூரிய ஒளி மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்திக்கான காற்றாலை அமையவுள்ள அனலைதீவு தெற்கு பகுதியில் இந்திய நிறுவன மின் பொறியியலாளர் தினேஷ் பாண்டியன் முன்னிலையில் “பூமி பூஜை” ஆரம்ப நிகழ்வு இன்று காலை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது