தமிழ்ப் பொதுவேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பான கலந்துரையாடல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது – சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான கலந்துரையாடல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற(09) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தென்னிலங்கை கட்சிகள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பரப்புரைகளை ஆரம்பித்துவிட்டன. சிறிலங்கா பொது ஜன பெரமுன சார்பிலும் ஜனாதிபதி வேட்பாளர் களமிறங்கவுள்ள நிலையில், பிரதான போட்டியாளர்களின் எண்ணிக்கை 4 ஆக மாறியுள்ளது.

இவர்கள் யாரும் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் பேசக்கூடியவர்கள் இல்லை. அதைத்தொடுவதற்கும் அவர்கள் தயாராக இல்லை. போர் முடிவடைந்து 14ஆண்டுகளாக நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டேயிருக்கின்றோம். இதனை மாற்றியமைக்கவேண்டும்.

தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்பதை சிங்களச் சமூகத்துக்கு வலியுறுத்தும் நோக்கமாக, அதேபோன்று இங்குள்ள இராஜதந்திரிகளுக்கு வலியுறுத்தும் வகையிலும் தமிழ் மக்களுக்கு ஒரு நியா யமான தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதை வெளிக்கொணரும் முகமாக நாங்கள் ஒரு பொது தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய எல்லாக் கட்சிக ளும் இணைந்து பொது வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தவேண்டும் என்ற பேச்சுகள் கடந்த 6 மாத காலமாகப் பேசப்பட்டு வருகின்றன.

கடந்த 7ஆம் திகதி வவுனியாவில் நடந்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி யில் அங்கம் வகிக்கும் 4 கட்சிகளும் அதற்கான முன் முயற்சிகளில் அனைத்தையும் நாங்கள் கூட்டாக எடுப்பது என்று தீர்மானித்துள்ளோம்.

ஒரு பொது வேட்பாளருடைய தேவையை இந்த ஐந்து கட்சிகளும் வலியுறுத்தும் வகையில் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

மேலும், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் போட்டியிடுவது தொடர்பிலான கலந்துரையாடல் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.

இதுவரை யார் பொது வேட்பாளர் என்பது பிரேரிக்கப்பட வில்லை. ஆனாலும், மதங்களைக் கடந்து வடக்கு – கிழக்கைப் பிரதிநிதித் துவப்படுத்தும் ஒருவரே போட்டியிடுவார். மலையகம் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவை நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

அவர்களுடனும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சம்மதித்தால் அவர்களுடனும் பேச நாம் தயார். நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ் வரன் ஏற்கனவே தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திவிட்டார். தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படவேண்டும் என்பதில் அவர் உடன்பட்டுள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைப் பொறுத்தவரை முக்கியமான தலைவர்கள் எமது நிலைப்பாட்டுக்கு ஆதரவாக உள்ளனர்.

அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மாத்திரமே இதற்கு எதிராக உள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.