அலரி மாளிகையில் மகாத்மா காந்தியின் 154வது பிறந்த நாள் விசேட நிகழ்வுகள்

மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் இன்று(02)அலரி மாளிகையில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பிரதி உயர்ஸ்தானிகர் சத்தியஞ்சல் பாண்டே மற்றும் ஏனைய இராஜதந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன மற்றும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

புலிகளின் வலையமைப்பிற்கு தினமும் ஒரு ரூபாய் வீதம் செலுத்தும் இலங்கை மக்கள் – தனியார் பஸ் சங்க தலைவர்

நாட்டின் ஐம்பது வீதமான மக்கள் விடுதலைப்புலிகளின் புலம்பெயர் வலையமைப்பிற்கு நாளாந்தம் ஒரு ரூபாயாவது செலுத்துகின்றனர் என இலங்கை தனியார் போக்குவரத்து சங்க தலைவர் கெமுனு விஜயரட்ண தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பும் ஐஎஸ் அமைப்புமே தற்போது அதிகளவு நிதியை பெறும் பயங்கரவாத அமைப்புகள் என அவர் தெரிவித்துள்ளார்.

நான் மேற்கொண்ட ஆய்வின் போது இது தெரியவந்தது. அனேக நிதி நிறுவனங்கள் விடுதலைப்புலிகளின் நிதியிலேயே இயங்குகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தாங்கள் சேகரித்த பணத்தை உள்ளுர் அரசியல்வாதிகளிற்கு வழங்குகின்றனர். அரசாங்க ஊழியர்களும் தொழிற்சங்கங்களும் அவர்களை நம்பியே உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் விசாரணைகளை விடுதலைப்புலிகளும் ஐஎஸ் அமைப்பினரும் குழப்புவதால் பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள முடியவில்லை.

இதன் காரணமாகவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கும் உத்தேச ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலத்திற்கும் எதிர்ப்பு உருவாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

யாழ்ப்பாணத்தில் மகாத்மா காந்தியின் 154வது பிறந்த நாள் நிகழ்வு

யாழ்ப்பாணம் – இந்திய உதவித்துணைத் தூதரகம்,மற்றும் காந்தி சேவா சங்கத்தின் இணைந்த ஏற்பாட்டில் இந்திய நாட்டிற்கு சுதந்திரத்தினை பெற்றுக்கொடுத்த மகாத்மா காந்தி அவர்களின் 154ஆவது ஜனதின நினைவேந்தலான அஞ்சலி இன்று திங்கட்கிழமை (02) யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு முன்பாக இருக்கின்ற மகாத்மா காந்தி சிலையின் முன்பாக இடம்பெற்றது.

இவ் நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணம் இந்திய உதவித்துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் கலந்துகொண்டு அவரின் திருச்சுருவத்திற்கான மலர்மாலை அணிவித்து நினைவேந்தல் செலுத்தினார்.

இதன்போது ‘காந்தீயம் ஏடு’ வெளியிட்டு வைக்கப்பட்டு அதன் பிரதி அனைவருக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

 

நிகழ்வில் இந்திய துணைத்தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரன், வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம், சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு திருமுருகன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன் மற்றும் சமய சமூக பிரதிநிதிகள், இந்திய துணைத்தூதரக அதிகாரிகள், அகில இலங்கை காந்தி சேவா சங்க பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

பிள்ளையான் கட்சிக்கு மில்லியன் கணக்கில் பணம் வழங்கிய மைத்திரி மற்றும் கோட்டா

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்சவும் ஜனாதிபதியாக பாதுகாப்பு அமைச்சராக பதவிவகித்த காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்களிற்கு தொடர்ந்தும் பணம் வழங்கினார்கள் என சனல்4 ஆவணப்படத்தில் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த முக்கிய விபரங்களை வெளியிட்ட ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் இறுதி தருணங்களில் மில்லியன் கணக்கில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களிற்கு பணம் வழங்கப்பட்டது.

எனினும் அதனை பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்சவும் குறைத்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதும் பிள்ளையானின் கட்சிக்கு வழங்கப்பட்ட பணம் குறைக்கப்பட்டது. பின்னர் கோட்டபய ராஜபக்ச ஜனாதிபதியானதும் அது மேலும் குறைக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலில் ஆறு மில்லியன் முதல் மூன்று மில்லியன் வரை வழங்கினார்கள் பின்னர் அதனை பெருமளவிற்கு குறைத்தார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் பெயர் விபரங்கள் பாதுகாப்பு அமைச்சிடம் வழங்கப்பட்டதாகவும் மட்டக்களப்பின் மூன்று வங்கிகள் ஊடாக பணம் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் சார்பில் தான் பணத்தை எடுத்து பிள்ளையானிடம் வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சில சந்தர்ப்பங்களில் போலி பட்டியலும் வழங்கப்பட்டது. இந்த விபரங்கள் அடங்கிய ஆவணங்களை கொழும்பிலும் ஜெனீவாவிலும் உள்ள இராஜதந்திர அலுவலகங்களிற்கு வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ் மனிதச்சங்கிலி போராட்டத்தில் கைகோர்க்க அனைத்து தமிழ் மக்களிற்கும் அழைப்பு

யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் 2 நாட்கள் பணிப்புறக்கணிப்பு!

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அவர் நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில் உரிய நடவடிக்கையெடுக்க வலியுறுத்தி யாழ் மாவட்டத்தில் நாளையும், நாளை மறுநாளும் (3,4) சட்டத்தரணிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

யாழ்ப்பாணம், மல்லாகம், பருத்தித்துறை, சாவகச்சேரி சட்டத்தரணிகள் சங்கத்தினர் நாளை, நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

நாளை யாழ்ப்பாணத்திலிருந்து சென்று முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். நாளை மறுநாள் யாழ்ப்பாணத்தில் மனிதச்சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்வர்.

பொதுப்பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலசிற்கு எதிராக அடுத்த வாரம் சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கையளிக்கவுள்ளதாக நாடாளுமன்றத்தில் சுயாதீன அணியாக செயற்படும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்தார்.

நாளை (3) இது தொடர்பில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் ஆதரவளிப்பதாக லலித் எல்லாவல தெரிவித்தார்.

நாட்டில் கொலைகள் தாராளமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இதை கட்டுப்படுத்த பொது பாதுகாப்பு அமைச்சருக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கியதாகவும், காலம் கடந்தாலும் நாட்டில் குற்ற அலைகள் அப்படியே இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதன் காரணமாக பொது பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக சபாநாயகரிடம் நம்பிக்கையில்லா பிரேரணை விரைவில் கையளிப்பதாகத் தெரிவித்த எல்லாவல, நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு போதுமான காரணங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

நீதிபதி சரவணராஜா பதவி விலகல் விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ. சரவணராஜா, மரண அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறையினருக்கோ நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கோ நீதிபதி ஒருபோதும் அறிவிக்காத காரணத்தினால் ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார். எனவே, இந்த சம்பவத்திற்கான மூல காரணத்தை உடனடியாக ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருடன் சம்பவம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24ஆம் திகதி வெளிநாடு சென்றதாக கூறப்படும் நீதிபதி ரீ.சரவணராஜா, தமது பதவி விலகல் கடிதத்தை கடந்த 23ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

சட்டமா அதிபருக்கு எதிராக நீதிபதி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் சட்டமா அதிபரிடம் விளக்கம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில், சுதந்திரம் மற்றும் பக்கச்சார்பற்ற தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சட்டத்தரணிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தமது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறி நீதிபதி ரீ.சரவணராஜா பதவி விலகியுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் தாம் கவலையடைவதாகவும் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பான விடயங்களில் கடுமையான அழுத்தங்கள் இருப்பதால், சுதந்திரம் மற்றும் பாரபட்சமற்ற தன்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுடன் இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.

வெளிப்படைத்தன்மை முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அத்தகைய விசாரணையின் முடிவுகளை தாமதமின்றி பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்’ என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகள் கூட்டமைப்பு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரியன்சி அர்சகுலரத்ன, உபுல் ஜயசூரிய, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, ஜெப்ரி அழகரத்தினம், டினல் பிலிப்ஸ், துலிந்திர வீரசூரிய, அனுர மெத்தேகொட, சாலிய பீரிஸ் உள்ளிட்ட பலர் கையொப்பமிட்டுள்ளனர்.

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை: இடைக்கால அறிக்கை தமிழ் நாடு முதலமைச்சரிடம் கையளிப்பு

முதல்வர் .மு.க. ஸ்டாலினை நேற்று தலைமைச் செயலகத்தில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சரும், இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவின் தலைவருமான செஞ்சி கே.எஸ். மஸ்தான் சந்தித்து, இலங்கைத் தமிழர்களின் நீண்ட கால சட்டத் தீர்வுகள் அடங்கிய இடைக்கால அறிக்கையினை சமர்ப்பித்தார்.

பல்வேறு காலகட்டங்களில் இலங்கையிலிருந்து புகலிடம் தேடி வந்த தமிழர்களுக்கு தாய் உள்ளத்தோடு தமிழ்நாடு அரசானது அவர்களை பாதுகாத்து பராமரித்து பல்வேறு நலத்திட்டங்களை சுமார் 40 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது தற்போது சுமார் 58,357 இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களிலும், 33,479 நபர்கள் காவல்துறை பதிவோடு முகாம்களுக்கு வெளியிலும் தங்கி உள்ளனர்.

இந்திய சட்டங்களின் அடிப்படையில் இவ்வாறு போரினால் தஞ்சம் புகுந்தவர்களை சட்ட ரீதியாக நடத்துவதற்கான முறைமை இல்லாத சூழலிலும், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற தமிழர் வாழ்வியல் மரபின் அடிப்படையிலும், மனிதாபிமான அடிப்படையிலிலும், தாய் தமிழகத்தை நாடி வந்த இலங்கை தமிழ் சொந்தங்களுக்கு, முதல்வர் தலைமையிலான தமிழ்நாடு அரசு உறுதியான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த 2021-ம் ஆண்டு, முதல்வரால் இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு மேம்படுத்தப்பட்ட நலத்திட்ட உதவிகள், வீட்டு திட்டங்கள், வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கான செயல்பாடுகள் ஆகியவை அறிவிக்கப்பட்டு, சிறப்புடன் செயலாக்கம் பெற்று மக்களின் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றில் முக்கியமானதாக இலங்கை தமிழர்களின் நலன் பேணவும், அவர்களின் நீண்ட கால தீர்வுகளை அடையாளம் காணவும் இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவை, மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே. எஸ். மஸ்தான் தலைமையில் முதல்வர் அமைத்தார்.

இக்குழுவில் துணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மரு. கலாநிதி வீராசாமி, உறுப்பினர்களாக – சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, பல்வேறு துறைகளின் உயர் அலுவலர்கள், ஐக்கிய நாடுகளின் அகதிகளின் அமைப்பின் பிரதிநிதி, தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், மூத்த பத்திரிகையாளர், சட்ட வல்லுநர், கல்வியாளர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி, பல்வேறு ஆய்வுகளும், கலந்துரையாடல்களும், சட்ட பகுப்பாய்வுகளும் நடத்தப்பட்டன.

இலங்கைத் தமிழர்களின் நீண்ட கால தேவைகள் மற்றும் தீர்வுகள், அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களின் கல்வி, எதிர்கால நலன் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க அமைக்கப்பட்ட இந்த ஆலோசனைக் குழு, பல கட்டங்களில் வரலாறு மற்றும் சட்ட முறைமைகளை ஆராய்ந்து நீண்டகால தீர்வு, சுயசார்பு மற்றும் வாழ்வாதாரம் குறித்த இடைக்கால அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது.

இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, குழுவின் உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, பொதுத்துறை செயலாளர் நந்தகுமார், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் மற்றும் உறுப்பினர்-செயலர் ஜெசிந்தா லாசரஸ், உள்துறை துணைச் செயலாளர் சித்ரா, ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையாளர் சச்சிதானந்தவளன், கல்வியாளர் இளம்பரிதி, அரசமைப்புச் சட்ட வல்லுநர் மனுராஜ் சண்முகசுந்தரம், ஈழ எதிலியர் மறுவாழ்வு கழகத்தின் செயலாளர் சூரியகுமாரி, அட்வெண்டிஸ்ட் வளர்ச்சி மற்றும் மறுவாழ்வு நிறுவனத்தின் திட்ட இயக்குநர் இக்னேசியஸ், இயேசு சபை புலம்பெயர்ந்தோர் பணி இயக்குநர் அருட்தந்தை பால்ராஜ் மற்றும் பேராசிரியர் கே.எம். பாரிவேலர் ஆகியோர் உடனிருந்தனர்.

புகலிடக் கோரிக்கைக்காகவே முல்லைத்தீவு நீதிபதி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார் – சரத் வீரசேகர

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவை நான் அச்சுறுத்தவில்லை. அவர் புகலிடக் கோரிக்கைக்காக இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளாரா என்ற சந்தேகம் நிலவுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலை விவகாரம் மற்றும் ‘தியாக தீபம்’ திலீபனின் நினைவேந்தல் விவகாரம் போன்றவற்றில் மிகமுக்கிய தீர்ப்புக்களை வழங்கிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா, உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் மிகையான அழுத்தங்கள் காரணமாகத் தனது அனைத்துப் பதவிகளிலிருந்து விலகுவதாக குறிப்பிட்டு நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில், இவரது பதவி விலகல் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே சரத் வீரசேகர மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு நான் அச்சுறுத்தல் விடுத்ததாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் என்னை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளதை அவதானித்துள்ளேன்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி நான் நீதிபதியை அச்சுறுத்தவில்லை. நீதிமன்ற நடவடிக்கையில் தலையிடவும் இல்லை.

உயிர் அச்சுறுத்தல் காரணமாக நீதிபதி பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிடுவது பாரதூரமானது.

நாட்டில் நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண மக்களின் நிலை எவ்வாறு அமையும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சட்டம் மற்றும் பாதுகாப்பு துறை மீதான மக்களின் நம்பிக்கை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இதனை அலட்சியப்படுத்த முடியாது.

நீதிபதி குறிப்பிடுவதைப் போன்று அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்திருந்தால் அவர் உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். அல்லது பொறுப்பான தரப்பினருக்கு அறிவித்திருக்கலாம்.

உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் அவர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தாரா என்பதை அறியவில்லை. கடந்த காலங்களில் வெளிநாடுகளில் புகலிடம் பெற்றுக் கொள்வதற்காக பலர் தமக்கு இலங்கையில் உயிர் அச்சுறுத்தல் உள்ளது என்பதையே சர்வதேசத்திடம் முன்வைத்தார்கள்.

இந்தக் குற்றச்சாட்டும் புகலிடக் கோரிக்கையை நோக்கமாகக் கொண்டுள்ளதா என்பதும் பிரச்சினைக்குரியதாக உள்ளது.

எவ்வாறு இருப்பினும் நீதிபதி குறிப்பிட்ட விடயங்கள் பாரதூரமானவை. இவ்விடயம் தொடர்பில் தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் நீதியமைச்சருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவேன் என தெரிவித்துள்ளார்.