சென்னை – இலங்கை இடையே சொகுசு கப்பல் சேவை ஆரம்பம்

 சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள சொகுசு கப்பல் இன்று(08) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்திய சுற்றுலா பயணிகள் 744 பேருடன் உலகம் முழுவதும் பயணம் செய்துவரும் பஹாமாஸ் அரசுக்கு சொந்தமான இம்ப்ரஸ் (IMO-8716899) என்ற கப்பல் திருகோணமலை துறைமுகத்தில் உள்ள அஷ்ரஃப் துறையில் நிறுத்தப்பட்டது.

திருகோணமலை துறைமுகத்திலிருந்து இலங்கை வந்திறங்கிய இந்த சுற்றுலாப் பயணிகள் தம்புள்ளை, சிகிரியா, திருகோணமலை போன்ற இடங்களுக்குச் செல்வுள்ளனர்.

அதன் பின்னர், இந்தக் கப்பல் இந்தியாவின் சென்னை துறைமுகத்துக்குப் புறப்படும் என்று துறைமுக அதிகார சபையின் வதிவிட முகாமையாளர் சமன் பெரேரா தெரிவித்தார்.

யாழ் – இரத்மலானை விமான சேவையை அதிகரிப்பது தொடர்பில் ஆராய்வு

இந்தியாவின் விமான சேவை நிறுவனமான அலையன்ஸ் ஏர் இந்தியாவுடன் இணைந்து யாழ்ப்பாணம்மற்றும் இரத்மலானை விமான நிலைய செயற்பாடுகளை அதிகரிப்பது தொடர்பான அலையன்ஸ் விமான அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களை அதிகரிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணத்திற்கும் இரத்மலானைக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இதன்போது ஆரயப்பட்டன.

அலையன்ஸ் ஏர் இந்தியா குழு இந்த திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்ததுடன் மேலும் விமான நிறுவனம் பரிந்துரைகளை பரிசீலிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளது.

இலங்கை முகங்கொடுக்கும் சவால்களை முறியடிக்க அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும்

இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார ரீதியான சவால்களை முறியடிப்பதற்கும், கட்டமைப்பு ரீதியிலான மறுசீரமைப்புக்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்குமென அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவிச்செயலாளர் ரொபர்ட் கப்ரொத் உறுதியளித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த 5 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்திருந்த அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவிச்செயலாளர் ரொபர்ட் கப்ரொத், நேற்று செவ்வாய்க்கிழமை (6) வரை நாட்டில் தங்கியிருந்தார்.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளடங்கலாகப் பல்வேறு முக்கிய தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார்.

அதன்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பின்போது, இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார ரீதியான சவால்களை முறியடிப்பதற்கும், கட்டமைப்பு ரீதியிலான மறுசீரமைப்புக்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்குமென ரொபர்ட் கப்ரொத் உறுதியளித்தார்.

அத்தோடு இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் மறுசீரமைப்புக்களை மேலும் ஆழப்படுத்துவதற்கும், நிலைபேறான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் அவசியமான ஒத்துழைப்புக்களை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச பொதுக்கட்டமைப்புக்களின் அதிகாரிகளையும் அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவிச்செயலாளர் ரொபர்ட் கப்ரொத் சந்தித்துக் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

யாழ்- சென்னை விமான சேவை 100 ஆவது நாள் கொண்டாட்டம்

யாழ். சென்னை விமான சேவை 100 நாட்களை நிறைவு செய்யும் நிலையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மக்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என யாழ் இந்திய துணை தூதர் ராகேஷ் நடராஜ் ஜெபாஸ்கர் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான இந்தியன் ஏர்லைன்ஸ் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டு 100 நாட்கள் நிறைவடையும் நிகழ்வை கொண்டாடிய நிலையில் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த விமான சேவையானது இரு நாட்டு இணைப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பது மட்டுமன்றி சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் உதவியது.

இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவதற்கும் பொருளாதார மீட்சியை சரி செய்வதற்கும் இரு நாட்டு விமான சேவை வாய்ப்பாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு இலங்கை வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி “இந்தியாவுக்காக நான் கனவு காணும் எதிர்காலம் எமது அண்டை நாடுகளுக்கும் நான் விரும்பும் எதிர்காலம்” எனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக ஹர்ஷ டி சில்வா

பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் முன்மொழியப்பட்டிருந்தது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஆர்ப்பாட்டத்தை கலைக்க கண்ணீர்ப்புகை

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் புதன்கிழமை (7) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கு பொலிஸாரினால் நீர்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் நுகேகொட – விஜேராம சந்திக்கு அருகில் இவ்வாறு பொலிஸாரால் நீர்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக பொது மக்களுக்கு இடையூறு ஏற்படக் கூடும் எனக் குறிப்பிட்டு கோட்டை , கொள்ளுபிட்டி மற்றும் கொம்பனித்தெரு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பல இடங்களுக்குள் பிரவேசிப்பதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்திருந்தது.

அதற்கமைய அலரி மாளிகை, பிரதமர் அலுவலகம் , ஜனாதிபதியின் பிரத்தியேக இல்லம் , ஜனாதிபதி செயலகம் , ஜனாதிபதி மாளிகை , நிதி அமைச்சு , காலி முகத்திடல் மற்றும் காலி முகத்திடல் சுற்றுவட்டத்தை அண்மித்த பகுதிகளுக்குள் பிரவேசிப்பதற்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அத்தோடு பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க வேண்டாம் எனவும் , பொது மக்களை தூண்டும் வகையில் வன்முறை சம்பவங்களை மேற்கொள்ள வேண்டாமெனவும் கோட்டை நீதவான் நீதிமன்றம் ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை அதிகரிக்குமாறு வலியுறுத்தியும் , வாழ்க்கை செலவைக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் , பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் என்பவற்றை மீளப் பெறுமாறும் வலியுறுத்தி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கஜேந்திரகுமார் எம்.பி பிணையில் விடுதலை

கைதுசெய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மருதங்கேணி சம்பவம் தொடர்பில் கைதான கஜேந்திரகுமார் எம்.பி. 5 லட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்து சமுத்திர பாதுக்காப்பை உறுதிப்படுத்த பங்குதாரர்கள் பேச்சுவார்த்தை

இந்து சமுத்திர வலயத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து பங்குதாரர்களும் சாதகமான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்ற 20 ஆவது ஷங்ரிலா உரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை சுட்டிக்காட்டினார்.

ஆசியாவின் பிரதான பாதுகாப்பு மாநாடுகளில் ஒன்றான Shangri-La Dialogue சிங்கப்பூரில் ஜூன் 2 ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் ஆவுஸ்திரேலியப் பிரதமர் அன்டனி அல்பனீஸ் தலைமையுரை ஆற்றியதோடு இந்தியா, ஓமான், பிரான்ஸ், பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் முக்கிய பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

நிலையான மற்றும் சமநிலையான ஆசிய-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குதல், பிராந்திய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, ஆசியாவில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல், இந்து-பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலைமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான புவிசார் மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து இந்த உச்சிமாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டது.

இதேவேளை, ஷங்ரிலா உரையாடலில் கலந்துகொண்ட சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாளர் கிரெக் மொரியாட், அமெரிக்காவின் இந்து-பசுபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் ஜோன் அக்விலினோ, இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விக்ரம் மிசிறி, உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ் ஆகியோருடன் விசேட சந்திப்புக்களை நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கஜேந்திரகுமார் எம்.பி இன்று காலை கொழும்பில் அவரது வீட்டில் கைது

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று காலை 5 மணியளவில் அவரது கொழும்பு இல்லத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். மருதங்கேணியில் பொலிஸாருடன் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கடமையில் இருந்த பொலிஸாரைத் தாக்கி, அவர்களைக் கடமையைச் செய்யவிடாது நடந்துகொண்டார் என்பதனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

நேற்று அவரது வீட்டிற்குச் சென்ற பொலிஸார், மருதங்கேணிப் பொலிஸ் நிலையத்தில் இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் வாக்குமூலம் வழங்கும் வரையில் நாட்டைவிட்டு வெளியேறக் கூடாது என்று கிளிநொச்சி நீதிமன்றம் வழங்கிய உத்தரவை வாசித்துக் காட்டியிருந்தனர். அதன் பின்னர் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார். அவரது கைதுக்கு முன்பாக சபாநாயகரின் அனுமதி பொலிஸாரினால் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உத்தேச ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு சட்டமூலம் தொலைக்காட்சி ஒளிபரப்பை கடுமையாக பாதிக்கும்

உத்தேச ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு  சட்டமூலத்தின் மூலம் என்ன செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதென்றால், ஒலிபரப்பு அதாவது, தொலைக்காட்சிளுடைய செய்திகளை வெளியில் விடக் கூடியதையெல்லாம் கட்டுப்படுத்துவதற்காகவும் தங்களுக்குச் சாதகமாகச் செய்திகளைத் தவிர வேறு செய்திகளை ஒலிபரப்ப விடாது கட்டுக்கடுத்துவதற்கும், அதற்கு மீறி செய்யக்கூடிய விடயங்களை அவர்களுக்குத் தண்டிப்பதற்குமான ஒரு சட்டமூலமாகவே நாம் இதைப் பார்க்கலாம் என  நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (05.06.2023) யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு சட்ட மூலம் ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சியிலே இப்போது அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

அது மட்டுமல்ல, இதனை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த சட்டமூலத்தின் பெயரே மிகவும் தெளிவாக ஒரு விடயத்தைக் காட்டுகின்றது. ஒழுங்குபடுத்தும் என்றால் கட்டுப்பாடு விதிக்கும். ஒலிபரப்புக்கான அதாவது, தொலைக்காட்சிகளே இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றது.

அவர்கள் ஒலிபரப்புகின்ற விடயங்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு சட்டமூலம், அதற்காக ஐந்து பேர்கொண்ட ஆணைக்குழு. இதிலே இருவர் அமைச்சுகளுடைய செயலாளராக இருப்பார்கள். முக்கியமாகத் தலைவர் ஜனாதிபதியுடைய தெரிவாக இருப்பார்கள் என்றார்.

Posted in Uncategorized