அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை – இந்தியா கைச்சாத்து

ஒரு வருட காலத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை நீடிப்பதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை இன்று இந்தியாவுடன் கைச்சாத்திட்டுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, இந்திய ஸ்டேட் வங்கியின் அதிகாரிகளின் பங்கேற்புடன் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் உதவித் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கைசாத்திட்டமையே உறுதிப்படுத்தினார்.

இதற்கான ஆரம்ப ஒப்பந்தம் மார்ச் 2023 இல் கைச்சாத்திடப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனில் இருந்து 576.75 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பயன்படுத்தியுள்ளது.

எஞ்சியுள்ள 423.25 மில்லியன் அமெரிக்க டொலர்களை மேலும் ஒரு வருடத்திற்கு இலங்கை பயன்படுத்த அனுமதிப்பது இன்றைய உடன்படிக்கையாகும்.

2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை முன்னுரிமை அளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் போராட்டத்தை கேவலப்படுத்தும் நோக்கிலேயே அரசாங்கத்தின் பொது தூபி – சுரேஷ் பிரேமசந்திரன்

விடுதலை போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களை, கொன்றவர்களையும் ஒன்றாக இணைத்து நினைவு தூபி அமைப்பது என்பது தமிழ் மக்களின் விடுதலை போராட்டத்தினை கேவலப்படுத்துவது போன்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

பொது தூபி அமைப்பது தொடர்பில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

அண்மையில் ஜனாதிபதி யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூறும் முகமாக ஒரு தூபியினை கட்டுவதாகவும், அதற்காக முடிவெடுத்துள்ளார் என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன.

அதையடுத்து தமிழ், சிங்கள சமூகங்களிற்கிடையே இது பற்றிய பேச்சுக்கள் எழுந்தன.

தமிழர்களை பொறுத்த வரை விடுதலைக்காக போராடிய இனமே எம் இனம். அவ்வாறான போராட்டத்திற்கு அடக்கு முறையும், ஆட்சியாளர்களும் மூலகாரணம்.

அதிகளவான பொதுமக்கள் , போராளிகள் என்று பலர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் விடுதலைக்காக போராடிய ஒரே ஒரு காரணத்தாலே இடம்பெற்றது.

இவ்வாறாக கொல்லப்பட்டவர்களை, சுட்டு கொன்றவர்களையும் ஒன்றாக இணைத்து பொது தூபி என்ற பெயரினையும் வைத்து அதனை நாம் கொண்டாடுவோம் என்று கருதுவது எமது விடுதலை போராட்டத்தினை கேவலப்படுத்த கூடிய ஒரு செயற்பாடே. அதனால், இவ்வாறான பொது ஏற்பாடு என்பது தேவையற்றது.

ஆனாலும் யுத்தத்தில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களிற்காக பொது விழாக்கள் மேற்கொள்ளப்படுகின்றது. அதனை அவர்கள் தொடர்ந்தும் செய்யலாம்.

அதே போன்று யுத்தத்தில் கொல்லப்பட்ட உறவுகள் ,போராளிகள் மற்றும் தமிழ் மக்களிற்காக அஞ்சலி செலுத்த வேண்டியது தமிழர்களின் கடமையும் தேவையுமாக காணப்படுகின்றது. அதனால் அதற்கான ஏற்பாடுகளை தமிழ் மக்கள் முன்னெடுப்பதற்கு அனுமதிக்க வேண்டும்.

சிங்களவர்களை பொறுத்த மட்டில் இது பயங்கரவாதிகளின் போராட்டமாக இருக்கலாம் ஆனால் எம்மை பொறுத்த மட்டில் இது விடுதலை போராட்டம்.

இவ்வாறாக எமது மக்களையும் போராளிகளையும் நாம் கௌரவப்படுத்துவதை தடை செய்ய கூடாது. அதற்கான உரிமை சர்வதேச ரீதியில் அவர்களிற்கு கிடையாது.

அடக்கி ஒடுக்கி ஆட்சி செய்வதுடன், லட்ச கணக்கான எமது மக்களை கொன்று குவித்து விட்டு அதற்காக ஆதங்கப்பட்டு ஒன்றாக இணைத்து தூபி கட்டுவது என்பது தேவையில்லாத வேலை. மாறாக யுத்தத்தில் கொல்லப்பட்ட உறவுகளிற்காகவும், போராளிகளிற்காகவும் தூபி கட்டுவதற்கு தமிழ் மக்களிற்கு வழி விடுங்கள்.

அதை விடுத்து இணைத்து தூபி கட்ட நடவடிக்கை எடுத்தால் அதனை தமிழ் மக்கள் ஏற்றக்கொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

பொது நினைவுத் தூபி அமைப்பது ஒரு போதும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மாட்டாது

பொது நினைவு தூபி என்பது மேலும் முரண்பாடுகளை வலுப்படுத்தும் எனவும் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த மாட்டாது எனவும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் சமூகம் ஊடகத்திற்கு தொலைபேசி மூலம் வழங்கிய ஒலிப்பதிவிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிங்கள தமிழ் மக்களிற்கு பொது நினைவு தூபி அமைத்தல் தொடர்பாக அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக உங்கள் கருத்து யாது? என எமது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு,

அவர் பதிலளிக்கையில்,

பொது நினைவு தூபி என்பது மாறுபட்ட பிரச்சினைகளை உடையவர்களிற்கு தீர்வாக செய்வது.

மேலும் முரண்பாடுகளை வலுப்படுத்துமே தவிர அது நிச்சயமாக நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கோ அல்லது வேறு ஒரு விடயத்திற்கோ  உதவமாட்டாது.

மேலும், நினைவு தூபியில் பெரும்பாலான சிங்களவர்களும் , படை வீரர்களுமே அஞ்சலி செலுத்த முடியும்.

மாறாக போரிலே பாதிக்கப்பட்ட எமது மக்களிற்காக அஞ்சலி செலுத்த முற்படின் முள்ளிவாய்க்கால் விடயங்களையே நினைவுபடுத்தும்.

இவ்வாறாக பொது நினைவு தூபி என்பது இன பிரச்சினையை மூடி மறைப்பதற்காக அமைக்கப்படும் ஒன்றாகவே இதனைபார்க்க முடியும்.

மாறாக தமிழ் மக்கள் வேறு எந்த வழியிலும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் உணவு பாதுகாப்பின்மை இன்னமும் உயர்மட்டத்தில் உள்ளது- ஐ.நா

இலங்கையில் அனைத்து மாகாணங்களிலும் உணவுப்பாதுகாப்பில் முன்னேற்றம்ஏற்பட்டுள்ளதாக உலக உணவுதிட்டமும் ஐக்கியநாடுகளின் உணவு விவசாய ஸ்தாபனமும் தெரிவித்துள்ளன.

2023 பெப்ரவரி மார்ச் மாதம் முன்னெடுக்கப்பட்ட உணவு பயிர் பாதுகாப்பு மதிப்பீடுகளின் அடிப்படையில் ஐநாவின் அமைப்புகள் இதனை தெரிவித்துள்ளன.

இலங்கையில்தற்போது 3.9 மில்லியன் மக்கள் ( 17 வீதமானவர்கள்) மிதமான மோசமான உணவுப்பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள ஐநா அமைப்புகள் கடந்த வருடம் ஜூன் ஜூலை மாதங்களில் இது 40 வீதமாக காணப்பட்டது என தெரிவித்துள்ளன.

கடந்தவருடம் 60,000 மக்கள் மிகவும் மோசமான உணவுப்பாதுகாப்பின்மையை எதிர்கொண்டிருந்தனர் தற்போது அது பத்தாயிரமாக குறைவடைந்துள்ளது எனவும் ஐநா அமைப்புகள் தெரிவி;த்துள்ளன.

உணவுநுகர்வில் ஏற்பட்ட முன்னேற்றமே உணவுபாதுகாப்பில் ஏறபட்ட முன்னேற்றத்திற்கு காரணம் என தெரிவித்துள்ள ஐநாவின் அமைப்புகள் உணவுவிலைகள் குறைவடைந்துள்ளமையும்,அறுவடை காலத்தில் விவசாய சமூகத்தினர் மத்தியில் காணப்பட்ட முன்னேற்றமும் இதற்கு காரணம் என தெரிவித்துள்ளன.

இந்த சாதகமான மாற்றம் தென்படுகின்ற போதிலும் கிளிநொச்சி நுவரேலியா மன்னார் மட்டக்களப்பு வவுனியா யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உணவுப்பாதுகாப்பின்மை இன்னமும் உயர்மட்டத்திலேயே உள்ளது எனவும் ஐநா அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மலையகத்தில் தோட்டத்தொழிலாளர்கள் மத்தியிலேயே அதிகளவு உணவுப்பாதுகாப்பின்மை காணப்படுகின்றது எனவும் ஐநா அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இலங்கைக்கு மேலும் கடன் வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம்

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக 350 மில்லியன் டொலர் கடனுதவி வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்கை அடிப்படையில் வரவு செலவுத் திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கிலும், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும்  வகையில் இந்த கடன் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து கவலையடைவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்படங்களே சிறுவர்களிடத்தில் வன்முறையை தூண்டுகின்றன – டயானா கமகே

தமிழ் திரைப்படங்கள் சிறுவர்கள் மத்தியில் வன்முறைகளை தூண்டுவதாக பாராளுமன்றத்தில் வெகுஜென ஊடக அமைச்சின் ஆலோசனை செயற்குழு கூட்டத்தின் போது இராஜங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்த கருத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டார்.

அத்துடன் டயானா கமகே தனது கூற்றை மீளப்பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவத்தினரின் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த சம்பவம் நடந்தது.

பாராளுமன்ற உறுப்பினர்கள், அனைத்து ஊடக நிறுவனங்களின் பிரதானிகள், செய்தி பிரிவின் பிரதானிகள், அமைச்சின் அதிகாரிகள், பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக் குழுவின் உறுப்பினர்கள் இந்த கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

ஊடகங்கள் பின்பற்றும் நடைமுறைகள் மற்றும் அதனால் ஏற்படும் சமூக பாதிப்புகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இங்கு கருத்து வெளியிட்ட சுற்றுலா இராஜாங்க அமைச்சர் பயாணா கமகே,

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் தமிழ் திரைப்படங்கள் வன்முறைகளை தூண்டுவதாக அமைவதால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

சிங்கள தொலைக்காட்சிகளில் தமிழ் படங்களை டப் செய்து ஒளிபரப்புவதாகவும், தமிழ் படங்களில் வன்முறை, களியாட்டம் அதிகம் என்றார்.

குறிப்பாக கொலை செய்தல், வெட்டுக் குத்து காயங்கள் வெளிப்படையாக வழங்கப்படும். தண்டனைகள் ஆகிய சிறுவர்கள் மத்தியில் மாறுபட்ட சிந்தனையை தூண்டுவதாக அமர் கூறினார்.

இதன்போது குறிப்பிட்ட மனோ கணேசன் எம்பி, டயானாவின் கருத்தை முற்றாக நிராகரிப்பதாகவும், தமிழ் தமிழ் என கத்த வேண்டாம் என்றும், அது இங்கு வேறு அர்த்தம் தருவதாகவும், பொதுவாக இந்திய திரைப்படங்கள் என பயன்படுத்த வேண்டுமே தவிர தமிழ் திரைப்படங்கள் என இன ரீதியாக பார்க்க கூடாது என தெரிவித்தார்.

இதனால் இதுவருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஏற்பட்டது. வன்முறை காட்சிகள் அனைத்து மொழி திரைப்படங்களிலும் இடம் பெறுகின்றன. தமிழ் திரைப்படங்களினாலே மக்கள் உள ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என மனோ கணேசன் தெரிவித்தார்.

கூட்டத்துக்கு தலைமை தாங்கி அமைச்சர் பந்துல நிலைமையை சுமுகமாக்க முயன்றார்.

இதன் பின்னர், அனைத்து மொழி திரைப்படங்களிலும் அவ்வாறான காட்சிகள் இடம்பெறுகின்றன என்று வைத்துக் கொள்வோம்.

இந்த விடயத்தில் விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டு ஒழுங்குமுறை நடைமுறைப்படுத்த வேண்டுமென டயானா குறிப்பிட்டார்.

நகைச்சுவைக்கு கைதட்டி சிரித்தவர்களை கைது செய்யவுள்ள இலங்கை பொலிஸார் !

நகைச்சுவை கலைஞர் நடாஷா எதிரிசூரிய வெளியிட்ட அவதூறான கருத்துக்களைப் பாராட்டிய நபர்களை அடையாளம் காண இலங்கை காவல்துறைவிசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக திவயின செய்தித்தாள் கூறுகிறது.

பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக நடாஷா எதிரிசூரிய நேற்று கைது செய்யப்பட்டு ஜூன் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

31 வயதான நடாஷா, கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி கொழும்பில் உள்ள பிரதான கத்தோலிக்க பெண்கள் பாடசாலை மண்டபத்தில் நடந்த நகைச்சுவை நிகழ்ச்சியில் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

பௌத்த பெண்கள் பாடசாலைகளையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

திவயின அறிக்கையின்படி, அவரது அறிக்கைகளுக்கு கைதட்டி சிரித்தவர்களை கைது செய்ய போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த வெறுப்பு பேச்சு வேண்டுமென்றே செய்யப்பட்டவை என்று சுட்டிக்காட்டிய காவல்துறை, இந்த விஷயத்தில் நகைச்சுவை நடிகருக்கு அறிவுரை வழங்கிய நபரை அடையாளம் காண்பது குறித்தும் விசாரணை கவனம் செலுத்தும் என்று கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் எதிர்காலத்தில் மேலும் கைதுகள் இடம்பெறலாம் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

நிகழ்ச்சியின் போது சிரித்து பேசியவர்களை எந்த சட்டத்தின் கீழ் போலீசார் விசாரிக்கிறார்கள் என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எவ்வாறாயினும், கைது செய்யப்படக்கூடியவர்கள் தொடர்பான திவயின செய்தியை பொலிசார் இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

இந்தியாவில் இருந்து முதல் கட்டமாக 500MW மின்சாரத்தை பெற திட்டம்

இலங்கையின் மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்தியாவில் இருந்து கம்பி இணைப்பு மூலம் ஆயிரம் மெகாவோட் மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் திட்டப்பணிகள் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட உள்ளதுடன் அது எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு நிறைவடையும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நந்திக பத்திரகே தெரிவித்துள்ளார்.

இந்த மின்சார திட்டம் சம்பந்தமான சுற்றுச்சூழல் அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக 400 மில்லியன் டொலர்கள் செலவாகும்.

தலைமன்னாரில் இருந்து தமிழ்நாடு வரை கடலில் அமைக்கப்படும் தூண்கள் ஊடாக கம்பி இணைப்பு மூலம் மின்சாரம் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதுடன் முதல் கட்டமாக 500 மெகாவோட் மின்சாரமும் இரண்டாவது கட்டமாக 500 மெகாவோட் மின்சாரமும் பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மின் இணைப்பு திட்டத்திற்கான செலவை இந்தியா ஏற்பது அல்லது மூன்றாவது தரப்பின் உதவியை பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இவ்வாறு மினசாரத்தை பரிமாறிக்கொள்கின்றன.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மின்சார விநியோக இணைப்பு தொடர்பில் நீண்டகாலமாக கவனம் செலுத்தப்பட்டு வந்துள்ளதாகவும் பத்திரகே கூறியுள்ளார்.

இரண்டு இணைப்புகளை கொண்டதாக இந்த மின்சார விநியோக திட்டம் நிர்மாணிக்கப்பட உள்ளது.

இலங்கையில் மேலதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் போது இந்தியாவுக்கு வழங்கவும் இலங்கையில் மின்சார தேவை அதிகரிக்கும் போது இந்தியாவிடம் இருந்து விலைக்கு வாங்கவும் இதன் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் பத்திரகே மேலும் கூறியுள்ளார்.

843 பொருட்களுக்கான இறக்குமதித் தடையில் தளர்வு

இலங்கை மத்திய வங்கியால் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது பொருட்களின் மொத்த மதிப்புக்கு சமமான ‘பண வரம்பு தேவை’ (பண வரம்பு) வரம்பை நீக்கியுள்ளது.

இந்த 843 பொருட்களில் கையடக்கத் தொலைபேசிகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள், பழங்கள் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்குவதாகவும், இந்த தீர்மானத்தினால் எதிர்காலத்தில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைவடையும் எனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஜுன் 8 முதல் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்தக் கோரி போராட்டம் – அனுரகுமார

உள்ளுராட்சி தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஜூன் 8 ம் திகதி முதல் மீண்டும் போராட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

ஜூன் 8ம் திகதி தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தின் முன்னாள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

கம்பஹா அம்பாந்தோட்டை அனுராதபுரத்தில் பாரிய போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் இறுதியாக கொழும்பை சுற்றிவளைப்பதற்கான மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆட்சியாளர்கள் மக்களிற்கும் நாட்டிற்கும் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளனர் 68 வீதமான மக்கள் உணவு உண்பதை குறைத்துக்கொண்டுள்ளனர் என்பதை மத்திய வங்கியின் சமீபத்தைய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

40 வீதமானவர்கள் மருந்துகளை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர் மேலும் நாற்பது வீதமானவர்கள் கல்விச்செலவுகளை நிறுத்திவிட்டனர் எனவும் மத்திய வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.சுமார் 500,000 தொழிலாளர்கள் தங்கள் தொழில்களை இழந்துள்ளனர் பெரும்பான்மையான தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேற முயல்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டை மக்கள் வாழக்கூடிய நாடாக மாற்றுவதற்கான முயற்சியில் தேசிய மக்கள் சக்தி ஈடுபட்டுள்ளது தேசிய மக்கள் சக்தி அந்த சவாலை ஏற்றுக்கொள்ள தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தவருடம் ஆகஸ்ட் மாதத்திற்கு முதல் ஜனாதிபதி தேர்தலிற்கு அழைப்பு விடுக்க வேண்டும் அதற்கு முன்னர் உள்ளுராட்சி மாகாணசபை தேர்தல்களை நடத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.