வருட இறுதியில் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 400 ரூபாயை எட்டும் – பிட்ச் மதிப்பீடு

டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இந்த வருட இறுதிக்குள் மீண்டும் வீழ்ச்சியடைய ஆரம்பிக்கலாம், வருட இறுதிக்குள் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 20 வீதத்தால் வீழ்ச்சியடையலாம் என ஃபிட்ச் மதிப்பீடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வருட இறுதிக்குள், டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 390 ஆக வீழ்ச்சியடையும் என Fitch Ratings கணித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவின் அனுமதியை இலங்கைக்கு மிக விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என நம்பிக்கையுடன் நம்புவதாக Fitch தரமதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

செயற்குழுவின் அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர், இலங்கையின் பலவீனமான பொருளாதார நிலை மற்றும் நடைபெறவுள்ள தேர்தல்கள் காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு இணங்குவது இலங்கைக்கு கடினமாக இருக்கலாம் என Fitch தரமதிப்பீட்டு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிள்ளையார் திருமணம் போன்றது – மஹிந்த தேசப்பிரிய

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தனது முகநூல் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான நேற்றைய போட்டியின் போது திமுத் கருணாரத்ன மற்றும் குசல் மெண்டிஸ் இடையேயான வெற்றிகரமான ஆட்டம் குறித்து, மஹிந்த தேஷப்பிரிய தனது முகநூலில் வாழ்த்து தெரிவித்து பதிவொன்றினை வெளியிட்டிருந்தார்.

இந்தப் பதிவிற்கு கருத்துக்களை பதிவிட்ட ஒருவர்‘அதிகாலை எழுந்தவுடன் கிரிக்கெட் பற்றிப் பதிவிட வேண்டும், அப்போதுதான் தேர்தலை மக்கள் மறந்து விடுவார்கள்’ எனப் பதிவிட்டிருந்தார்.

அதற்குப் பதிலளித்து மஹிந்த தேஷப்பிரிய,“இந்த தேர்தல் பிள்ளையார் திருமணம் போல, நாளைக்கு உன் திருமணம்னு சிவன் சொன்னாராம். பொன் தாளில் எழுதிக் கொடுத்தாராம்.

தினமும் காலையில எழுந்து பார்க்கிறவர், “ஆ நாளைக்கு கல்யாணம்” என்று சொல்லிவிட்டு, தன் காரியத்தில் இறங்குகிறாராம். .” என்று பதிவிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக கடுமையான பதில் நடவடிக்கைகள்; இணை அனுசரணை நாடுகள் கவலை

இலங்கையில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்ளில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குறித்து மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய நாடுகள் கரிசனை வெளியிட்டுள்ளன.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக கடுமையான பதில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குறித்து கடும் கரிசனை வெளியிட்டுள்ள இணை அனுசரணை நாடுகள் அமைதியான ஆர்ப்பாட்டங்களிற்கான அமைதியான விதத்தில் கருத்து வெளியிடுவதற்கான உரிமைகளை இலங்கை அரசாங்கம் பாதுகாக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான எந்த வன்முறை குறித்தும் பொறுப்புக்கூறல் அவசியம் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் என தெரிவித்துள்ள இணைஅனுசரணை நாடுகள் மனித உரிமைகளை பாதுகாப்பத ஊக்குவிப்பதில் சிவில் சமூகம் முக்கிய பங்களிப்பை வழங்கவேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளன.

எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்டக்கூடிய எந்த சட்டமூலம் மூலமாகவும் சிவில் சமூகத்தின் செயற்பாட்டிற்கான தளத்தை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை நாங்கள் வலியுத்துகின்றோத் என தெரிவித்துள்ள இணை அனுசரணை நாடுகள் அனைத்து இனத்தவர்கள் சமயத்தவர்களின் உரிமைகளை பாதுகாப்பது குறித்த இலங்கையின் சமீபத்தைய வாக்குறுதியை வரவேற்றுள்ளன.

சுயேச்சையான ஸ்தபானங்கள் ஆட்சி மூலம் சட்டத்தி;ன் ஆட்சியை பாதுகாப்பது பிரதிநிதித்துவஜனநாயகத்தை உறுதி செய்யவேண்டியதன் முக்கியத்துவத்தையும் இணை அனுசரணை நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி பலரை தற்கொலைக்கு தூண்டுகிறது

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, பலரை தூக்கிட்டு தற்கொலைக்கு கொண்டு சென்றுள்ளதாக ஆய்வு ஒன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், அதிக வாழ்க்கைச் செலவை எதிர்கொள்வது முதல் குழந்தைகளுக்குக் குறைவாக உணவளிப்பது வரை, இந்த நெருக்கடியானது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மீது அதிக பாதிப்பை ஏற்படுத்தியதால், நாடு முழுவதிலும் உள்ள அனைத்து குடும்பங்களையும் பாதித்துள்ளதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இன்றைய இளைஞர்களும் தங்களின் செலவுகளைச் சமாளிக்க பொருத்தமான வேலைவாய்ப்பைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

நாட்டை விட்டு வெளியேற பலர் ஆவலுடன் காத்திருக்கும்போது, தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் உணவளிக்க நாட்டிலேயே தங்க விரும்புபவர்களும் உள்ளனர்.

இந்தநிலையில், பணத்தை உழைப்பதற்காக, சில குடும்பங்கள் பயன்படுத்தும் சமீபத்திய உயிர்வாழும் முறை பாலியல் தொழிலாகவும் மாற்றம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிகமான பெண்கள் இந்த தொழிலில் ஈடுபடும் அதேவேளையில், 20 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களும் வாழ்வாதாரத்திற்காக இந்தத் தொழிலில் ஈடுபடுகின்றனர் என்ற தகவலையும் ஆங்கில ஊடகமொன்று ஒன்று வெளியிட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மோசமடைந்து கடந்த சில மாதங்களுக்குள், அதிகமான ஆண்கள் ‘ஆண் பாதுகாப்பு’ சேவைகளை வழங்கும் இணையத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.

பல்வேறு நாடுகளில் இருந்து பாலியல் நோக்கங்களுக்காக, ஆண்களை வழங்குவதற்காக வெளிநாடுகளில் இருந்து இந்த இணையத்தளங்கள் செயல்படுவதாகவும், ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

ஜப்பான் இலங்கைக்கு மேலும் 6.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

அவசரகால உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவிக்காக இலங்கைக்கு மேலதிகமாக 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஜப்பான் வழங்குகின்றது.

ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு மிக முக்கியமான உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவியை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகளின் உலக உணவு நிகழ்ச்சித்திட்டத்திற்கு (WFP)மேலதிகமாக 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்கயே இவ்வாறு ஜப்பான் வழங்குகின்றது.

இந்த நிதியுதவியின் மூலம் WFP குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் அடங்கிய உணவுப் பொதிகளை வழங்கி, அவர்களின் மாதாந்த உணவுத் தேவைகளில் பாதியை இரண்டு மாதங்களுக்குப் பூர்த்தி செய்யும்.

மேலும் இந்த நன்கொடையானது நான்கு மாத காலத்திற்கு சோளம் மற்றும் சோயா பீன்ஸ் கொள்வனவு மூலம் திரிபோஷா போன்ற வலுவூட்டப்பட்ட உணவுப் பொருட்களின் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும், இது ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிகளவு பாதிக்கப்படும் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

“இந்த முக்கிய தருணத்தில் இலங்கைக்கு மேலதிக மனிதநேய உதவியை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளமையை அறிவிப்பதில் நாம் மகிழ்வு கொள்கின்றோம். கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி தொடங்கியதில் இருந்து ஜப்பான் அரசாங்கத்தால் WFP மூலம் உணவு உதவியானது மொத்தம் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

நாடு முழுவதும் முடிந்த அளவு மக்களுக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அத்தியாவசிய உணவு வழங்கப்படும் என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம்.”என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மேன்மைதங்கிய மிகொசி ஹிதேகி தெரிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பின்மை இன்னும் அதிக அளவில் இருப்பதாக WFP இன் அண்மைய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

ஒவ்வொரு 10 குடும்பங்களிலும் ஏழு பேர், புரதம் மற்றும் பால் போன்ற சத்தான உணவைக் குறைப்பது அல்லது உணவை முற்றிலுமாகத் தவிர்ப்பது போன்ற எதிர்மறையான சமாளிக்கும் உத்திகளைக் கடைப்பிடிப்பதாக அது தெரிவிக்கின்றது.

“பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களும் குழந்தைகளுமே எங்களின் மிகப் பெரிய கவலையாகும்” என WFP இலங்கையின் பிரதிநிதியும் நாட்டுப் பணிப்பாளருமான அப்துர் ரஹீம் சித்திக்கி கூறினார்.

“பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் தங்களுக்குத் தேவையான உணவு மற்றும் ஊட்டச்சத்தைப் பெறும் வகையில் எங்கள் முயற்சிகளை அளவிடுவதற்கு ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.ரூஙரழவ் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜப்பான் நாடானது இலங்கை அரசாங்கத்திற்கும் றுகுPக்கும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நீண்டகாலமாக நன்கொடை அளித்து வருகிறது, அவசரநிலைகளில் முக்கியமான உதவிகளை வழங்குகிறது. அதே நேரத்தில் நாட்டில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நீண்டகால மீட்பு மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கிறது.

ஜப்பானின் சமீபத்திய நிதியுதவியானது பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சமூகங்களைப் பாதுகாப்பதற்கு உதவுவதற்காக இலங்கை மக்களுக்கு அதன் ஆதரவின் விரிவாக்கமாகும்.

WFPஆனது கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது அவசரச் செயல்பாட்டைத் தொடங்கியதில் இருந்து இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களைச் சென்றடைந்துள்ளது மற்றும் உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவி மூலம் 3.4 மில்லியன் மக்களை அடையும் இலக்கை நெருங்கி வருகிறது.

கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இருதரப்பு வர்த்தக கடன்வழங்குநர்களும் பங்கெடுக்கவேண்டும் – சீனா

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இருதரப்பு மற்றும் வர்த்தக கடன்வழங்குநர்களும் பங்கெடுக்கவேண்டும் என சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது.

சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

சுமையை பகிர்ந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்டுள்ள மாவோநிங் இலங்கை தற்போதைய நிலைமைக்கு தீர்வை காண்பதற்கும் இலங்கையின் கடன்சுமையை குறைப்பதற்கும் பேண்தகு அபிவிருத்தியை எட்டுவதற்கும் உரிய நாடுகள் மற்றும் சர்வதேச நிதியமைப்புகளுடன் சேர்ந்து செயற்படுவதற்கு சீனா தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு அதிக கடன்வழங்கிய நாடான சீனா தனது எக்சிம் வங்கி இலங்கையுடன் கடன் விவகாரம் குறித்து ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதை ஆதரிக்கின்றது எனவும் சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொதுப்பாதுகாப்பு அமைச்சர் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை அவர் ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு கோரப்பட்டுள்ளது.

கடந்த 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் இடம்பெற்ற போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் எவ்வாறு செயற்பட்டார்கள் என்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பிலேயே அமைச்சருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இது தொடர்பான போராட்டங்களை கட்டுப்படுத்த களப்பணியாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் பட்டியலை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு எழுத்துமூல அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பு முறைமை ஏப்பிரலினுள் அறிவிக்கப்படும் – மத்திய வங்கி

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முறை ஏப்ரல் மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

வணிக கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த நம்புவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதிப் தொகுப்பு குறித்த முதலாவது மீளாய்வு 6 மாதங்களில் மேற்கொள்ளப்படும் எனவும் அதற்கு முன்னர் இது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பத்தினரால் கைவிடப்பட்ட முன்னாள் போராளி காட்டுப்பகுதியிலிருந்து மீட்பு

முன்னாள் போராளிகளி ஒருவர், நடு காட்டில் இருந்து சடா முடியுடன் மீடக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளைப் பிரதேசத்துக்கு உட்பட்ட  தாந்தாமலைக் காட்டுப் பகுயிலிருந்து முன்னாள் போராளி ஒருவர் நேற்று (புதன்கிழமை) மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 4 வருடங்களாக குடும்பத்தினரால் கைவிடப்பட்ட, முன்னாள் போராளியான மனநலம் குன்றிய பாலா என்பவர் தாந்தாமலைப் பகுதியிஅமைந்துள்ள ரெட்பாணா எனும் கிராமத்திற்கு அப்பாலுள்ள காட்டுப்பகுதியில் தூர்ந்துபோன கொட்டகை ஒன்றில் வசித்து வந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்யில் தற்போது தகவலறிந்த ஜனநாயகப் போராளிகள் கட்சியினர், மற்றும் அவரது சக முன்னாள் போராளிகளும் அவரை அணுகியுள்ளனர்.
இவர்களைக் கண்டதும் பாலா கட்டுப் பகுதிக்குள் மறைந்து விடுவார். பின்னர் அவரை தொடர்ந்து இரவு பகலாக அவதானிந்து வந்துள்ளனர்.

பின்னர் அவரது உறவினர்கள், மற்றும் அப்பகுதி கிராம சேவைகர் ஆகியோரது உதவியுடன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின்
உதவியுடன்,  உரிய இடத்திற்கே நோய்காவு வண்டி வரவழைக்கப்பட்டு அதில் சிகிச்கைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதுவரை காலமும் காட்டிலுள்ள பழங்களை உண்டு கொண்டு,சுகாதார சீர்கேடான முறையில் அவர் வாழ்ந்து வந்துள்ளார்.

Posted in Uncategorized

வாக்குச் சீட்டுகளை அச்சிட தேவையான பணத்தை வழங்க கோரி நிதி அமைச்சுக்கு கடிதம்

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான பணத்தை வழங்குமாறு கோரி நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவிற்கு அரச அச்சக அதிகாரி கங்கானி லியனகே கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை அல்லது கூடுதல் தொகையை வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு விடுவிக்க வேண்டும் என அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்காரணமாக உடனடியாக வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட வேண்டியுள்ளதாக கங்கானி லியனகே தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

வாக்குச் சீட்டு அச்சடிக்கும் காலத்தில் பகலில் 35 பொலிஸ் அதிகாரிகளும் இரவில் 28 பொலிஸ் அதிகாரிகளும் தேவைப்படுவதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சேவையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரச அச்சக அதிகாரி அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.