வடக்கில் இருந்து இந்தியாவுக்கு மின்சார விநியோகத் திட்டம்

வடக்கில் இருந்து இந்தியாவுக்கு மின்சார விநியோகத் திட்டம்

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மின்சார கட்டமைப்புகளை இணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரண்டு மாதங்களுக்குள் கையெழுத்திடப்படும் என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட Reuters செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மின்சார கட்டமைப்புகளை ஒன்றிணைக்கும் உடன்படிக்கையை எற்படுத்திக்கொண்டதன் பின்னர் செயலாக்க ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஒரு தசாப்தத்திற்கு முன்னதாக முன்மொழியப்பட்ட இந்த திட்டம் இதுவரை சிறிய அளவிலான முன்னேற்றத்தையே எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ள மிலிந்த மொரகொட, இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் மின் கட்டமைப்பை உருவாக்கி, தீவில் உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை இந்தியாவிற்கு விற்க முடியும் என இலங்கை நம்புவதாகவும் கூறியுள்ளார்.

இலங்கையின் பொருளாதார மீட்சித் திட்டத்தின் முக்கியப் பகுதியானது, தீவின் வடக்கில் அதன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை அபிவிருத்தி செய்வதில் தங்கியுள்ளது. இங்கிருந்து, எல்லை தாண்டிய மின்சார பரிமாற்ற கேபிள் மூலம் மின்சாரத்தை தென்னிந்தியாவிற்கு கொண்டு செல்ல முடியும் என நம்பப்படுகிறது.

மின் வெட்டு இல்லை ; மின் கட்டணம் அதிகரிப்பு

இன்று(16) முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மின் கட்டணத்தை செலுத்துவதில் நிதி நெருக்கடியை எதிர்கொள்பவர்கள் தொடர்பில் நிதி அமைச்சு எதிர்காலத்தில் தீர்மானிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று(15) முதல் அமுலாகும் வகையில் 66 வீதத்தால் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

புதிய மின் கட்டண திருத்தங்களுக்கு அமைவாக 60 அலகுகளை பயன்படுத்தும் வீடொன்றுக்கான மின் கட்டணம் 276 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, 60 அலகுகளை பயன்படுத்தும் வீடொன்றுக்கு இதுவரை அறவிடப்பட்ட 680 ரூபா மின் கட்டணம், 2560 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.

30 அலகுகள் பயன்பாட்டை கொண்ட வீடொன்றிற்கு இதுவரை காணப்பட்ட 360 ரூபா மின் கட்டணம், 1300 ரூபா வரை அதிகரிக்கப்படும்.

இது 261 வீத அதிகரிப்பாகும்.

90 அலகு பயன்பாட்டிற்காக இதுவரை அறவிடப்பட்ட 1800 ரூபா மின் கட்டணம், புதிய திருத்தத்திற்கு அமைவாக 4430 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

200 அலகுகளுக்கும் மேற்பட்ட மின்சார பாவனையை கொண்ட வீடுகளுக்காக மின் கட்டணம் 32 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு சீனா ஆதரவு

வறிய நாடுகளிற்கு கடன்வழங்கியவர்களின்  மாநாட்டிற்கு முன்னதாக இலங்கைக்கு சீனா  ஆதரவை வெளியிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள வறிய நாடுகளிற்கு கடன்வழங்கியவர்கள் மாநாட்டிற்கு முன்னதாக இலங்கைக்கு சீனா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.

எனினும் இலங்கையை பெரும் பொருளாதார அரசியல் நிதி நெருக்கடிக்குள் தள்ளியுள்ள பலமில்லியன் கடன்தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது என்பது குறித்து சீனா எதனையும் தெரிவிக்கவில்லை.

இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான சாதகமான பங்களிப்பை வழங்குவதற்காக சீனா உரிய நாடுகள் மற்றும் நிதியமைப்புகளுடன் இணைந்து செயற்படும் என சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங்வென்பின் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் கடனிற்கு இலங்கை விண்ணப்பித்துள்ளமைக்கு சீனா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கருணா துப்பாக்கியை காட்டி அச்சுறுத்துகிறார் – பொது மக்கள் குற்றச்சாட்டு

முன்னாள் பிரதி அமைச்சர் கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன் பொதுமக்கள் மீது கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஈச்சையடி தடான எனும் பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன் அப்பகுதியில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள், தனது கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தல் விடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இன் நிலையில் கருணாவால் போடப்பட்ட சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி வயல் காவலாளி ஒருவர் பலியான சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஈச்சையடி தடான பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் கருணா என்கிற முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்பவர் தனது வயல் பாதுகாப்புக்காக சட்ட விரோத மின்சார வேலிகளை அமைத்துள்ளார்.

அதோடு குறித்த மின்சார வேலியால் அப்பகுதியில் விவசாயம் மற்றும் பண்ணை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருந்த நிலையில் அது குறித்து கேள்வி எழுப்பிய பொதுமக்களை தனது கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியும் உள்ளார்.

இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் வாழ்ந்து வந்த நிலையில் கருணாவின் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி இரு வாரங்களுக்கு முன்பு பெறுமதியான பசுமாடு ஒன்று உயிரிழந்த போது கருணாவுக்கு பயந்து அப்பகுதி மக்கள் பொலீசில் முறைப்பாடு செய்யாத நிலையில் தற்போது அதே மின்சார வேலியில் சிக்கி வயல் காவலாளி ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் கருணா மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர். வாகன போக்குவரத்து அற்ற மேற்படி பிரதேசத்தில் உள்ள மக்களின் சுமார் 80 ஏக்கர் காணிகளை அடாத்தாக பிடித்து கருணா விவசாயம் செய்துவருகின்றார்.

தனது விவசாய நடவடிக்கைகளுக்காக பாதைகளை மறித்து சட்டவிரோதமாக மின்சார வேலி அமைத்துள்ளதால். அப்பகுதியில் விவசாயம் மற்றும் பண்ணை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் உயிர் அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கருணாவின் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்த பொது மகனின் பிரேதத்தை கொண்டு செல்வதற்கு வாகனம் இல்லாத நிலையில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு உயிரிழந்தவரின் உடலை இளைஞர்கள் சுமந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் மூத்த இராஜதந்திரி அடங்கிய குழுவினர் இலங்கைக்கு

அமெரிக்காவின் மூத்த இராஜதந்திரி உட்பட 20 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.

அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான இரண்டு சிறப்பு விமானங்களில் அவர்கள் நேற்று மாலை பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அமெரிக்க தூதுக்குழுவின் வருகையையொட்டி விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் மூன்று நாட்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

மார்ச் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியச் சபையின் அனுமதி கிடைக்கும் – ஜனாதிபதி நம்பிக்கை

இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியச் சபையின் அனுமதி கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன்படி இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை மார்ச் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என்ற அறிவிப்பை சர்வதேச நாணய நிதியம் வெளியிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது பொருளாதார ஸ்திரத்தன்மையின் கட்டத்தில் இருப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதிய சபையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு, நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சமூகத்தில் புதிய அணுகுமுறைகள் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள இந்திய தூதரக விசா பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் விசா விண்ணப்ப மையம் நேற்று இரவு பதிவான பாதுகாப்பு சம்பவம் காரணமாக மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அனைத்து விண்ணப்பதாரர்களும் விசா பிரிவுடனான உடனான தங்கள் சந்திப்புகளை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

விசா விண்ணப்பதாரர்கள் ஏதேனும் அவசர தூதரகம் அல்லது விசா விஷயத்திற்கு உயர் ஸ்தானிகராலயத்தை தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், நேற்றிரவு இந்த வளாகம் உடைக்கப்பட்டுள்ளதாகவும், பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

தபால்மூல வாக்களிப்பு திட்டமிட்டபடி நடக்கும்!

தபால் மூல வாக்களிப்பு திகதி பிற்போடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் பிரசாரம் முற்றிலும் பொய்யானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவ தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி 22-23-24 அன்று தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தபால் மூல வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் திகதி மாத்திரமே தாமதமாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டதாக ஆணைக்குழுவில் எவரும் அறிவிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைக்காக 38 மில்லியன் டொலர்களை வழங்கியது ஜப்பான்

தடையற்ற அத்தியாவசிய மற்றும் சுகாதார சேவைக்காக 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இலங்கைக்கான ஜப்பானின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த உதவி கிடைப்பதாக அவர் கூறியுள்ளார்.

சுகாதாரத் துறைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த எரிபொருளை குறிப்பாக டீசல் கொள்வனவு செய்வதற்கு ஜப்பான் நிதி வழங்கவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தபால் மூலமான வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைப்பு

2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூலமான வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தபால் மூலமானவாக்களிப்பிற்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான நிதி கிடைக்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பை நடத்த தேசிய தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டிருந்தது.

இருப்பினும் முன்னதாக திட்டமிட்டபடி நாளை தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுகளை விநியோகிக்க முடியாது ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற இன்றைய சந்திப்பின்போதே அரசியல் கட்சி செயலாளர்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.