ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக யாழில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் மீது நீர்த்தாரை பிரயோகம்

யாழ்ப்பாணத்தில் தேசிய பொங்கல் விழாவினை கொண்டாடுவதற்காக வடக்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமலாக்கப்படடோரின் உறவுகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் ஜனாதிபதியின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் ஏனைய சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டு குறித்த பகுதியிலிருந்து போராட்டகாரர்களை கலைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களினால் இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையினர் அதனைத் தடுத்து நிறுத்தியதால் குழப்ப நிலை ஏற்பட்டது.

பேரணி காரணமாக பொலிஸார், இராணுவத்தினர் உட்பட பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய தைப்பொங்கல் விழா இடம்பெறவுள்ள நல்லூர் பகுதியை சுற்றிலும் வீதிதடைகள் ஏற்படுத்தப்படுவதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போராட்டம் நடத்த சென்ற உறவுகளை பேருந்தில் தடுத்து நிறுத்திய இராணுவம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை யாழ்ப்பாணம் நோக்கி அழைத்துச் செல்லும் பேருந்தை இலங்கை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் வட்டுவாகலில் பேருந்தை நிறுத்தி, பேருந்தின் சாரதி மற்றும் அதில் சென்றவர்களின் விபரங்களை பொலிஸார் பதிவு செய்தனர்.

கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை ஏற்றிச் சென்ற பேருந்துகளும் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டன.

சீன எக்ஸிம் வங்கியிடமிருந்து சாதகமான சமிக்ஞை – ஷெஹான்

சீன எக்ஸிம் வங்கியுடன் (சீன ஏற்றுமதி இறக்குமதி வங்கி) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்கள் ‘சாதகமானவையாக’ அமைந்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க கடந்த வியாழக்கிழமை நிகழ்நிலை முறைமை ஊடாக சீன எக்ஸிம் வங்கியின் தலைவர் வூ ஃபுலினுடன் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடலொன்றை முன்னெடுத்திருந்தார்.

இக்கலந்துரையாடலின்போது ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சீன எக்ஸிம் வங்கியின் தலைவரால் வெளிக்காட்டப்பட்ட பிரதிபலிப்பு சாதகமானதாக அமைந்திருந்ததாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

‘அதேவேளை நாம் இந்தியாவுடனும் மிகநெருக்கமாகப் பணியாற்றிவருகின்றோம். எனவே தற்போது அவர்களிடமிருந்து ‘உத்தரவாதத்தை’ (கடன் ஸ்திரத்தன்மை தொடர்பான) பெற்றுக்கொள்ளவேண்டிய அவசியமுள்ளது.

அந்த உத்தரவாதத்தை வெகுவிரைவில் பெற்றுக்கொள்ளமுடியும் என்று நிச்சயமாக நம்புகின்றேன். இந்நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து சர்வதேச நாணய நிதியம் இதுவரை எதனையும் கூறவில்லை’ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நீடித்த நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான முதற்கட்ட உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் எட்டப்பட்ட நிலையில், அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இவ்வுதவியை வழங்குவதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியைக் கடந்த ஆண்டு இறுதியில் பெற்றுக்கொள்ளமுடியும் என்று அரசாங்கம் எதிர்வுகூறியிருந்தது.

இருப்பினும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு மிகவும் அவசியமான விடயமாகவுள்ள கடன்வழங்குனர்களுடனான கடன்மறுசீரமைப்பிற்கான இணக்கப்பாடு இன்னமும் எட்டப்படாத நிலையில், இவ்வுதவியைப் பெற்றுக்கொள்வதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் பீ.சீ.ஆர் அறிக்கை, தடுப்பூசி உறுதிப்படுத்தல்களை சமர்பிக்க அறிவுறுத்தல்

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மீது புதிய கொவிட் விதிமுறைகளை அறிமுகப்படுத்த சுற்றுலா துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைவாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய கொவிட் எதிர்ப்பு தடுப்பூசியைப் பெற்றதற்கான  அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்று சுற்றுலா துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

சுற்றுலா துறை அமைச்சு விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய கொவிட் எதிர்ப்பு தடுப்பூசியைப் பெற்றதற்கான  அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் கொவிட்  எதிர்ப்பு தடுப்பூசியைப் பெறாத சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் பெறப்பட்ட பீ.சீ. ஆர் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

அதேவேளை  இலங்கைக்கு வருகை தரும் அனைத்து நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தும் என்றும் உலகளாவிய ரிதியில் மீண்டும் கொவிட் தொற்று நோயின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகின்றமையால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக சுற்றுலா துறை அமைச்சு விடுத்துள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்புக்கு சீனாவை இணங்கச் செய்ய சர்வதேச நாணய நிதியம் முயற்சி

சர்வதேச நாணய நிதியம் சீனாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருவதுடன் இலங்கையின் கடன்களை மறுசீரமைப்பதில் சீனாவை இணங்கச்செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றது.

ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா, கடன் ஸ்திரத்தன்மை மற்றும் அதுசார்ந்த நெருக்கடிகள் தொடர்பில் முழுமையாகப் புரிந்துகொள்வதற்கும், இவ்விடயத்தில் தாம் எத்தகைய பங்களிப்பை வழங்கமுடியும் என்பது குறித்துச் சிந்திப்பதற்கும் சீனாவிற்கு உதவத்தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

‘அந்தவகையில் நாம் சீன அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருப்பதுடன் இரு முக்கிய விடயங்கள் தொடர்பில் செயற்பட்டுவருகின்றோம். முதலாவதாக தீர்வொன்றை நோக்கிய கலந்துரையாடலுக்கு ஏற்றவாறு சீனாவின் அனைத்துக் கடன் முகவரங்களுக்கும் இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தியிருக்கின்றோம். மிகநீண்ட செயன்முறையான இது தற்போதும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது’ என்று கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சாட், சாம்பியா, இலங்கை மற்றும் சுரினாம் ஆகிய நாடுகளுக்கான கடன் தீர்வை நோக்கிய பாதையை வகுப்பது குறித்து சீனாவுடன் கலந்துரையாடிவருகின்றோம் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

‘இவ்விவகாரத்தில் பெருமளவிற்கு சீனாவின் முயற்சியையும் அவதானிக்கமுடிகின்றது. குறிப்பாக நாங்கள் சீனாவில் இருந்தபோது சீன நிதியமைச்சு மற்றும் சீன மக்கள் வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு அனுமதிகோரினோம். அதேபோன்று சீனாவின் பாரிய கடன்வழங்குனர்களான சீன எக்ஸிம் வங்கி மற்றும் சீன அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகளையும் சந்திக்க விரும்பினோம். அதற்கமைவாக அவர்கள் இச்சந்திப்பிற்கு வருகைதந்ததுடன் இவ்விவகாரம் தொடர்பில் மிகவும் ஆரோக்கியமாகவும் நேரிடையாகவும் கலந்துரையாடினோம்’ என்று கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு ஆசியப்பிராந்தியத்தின் தற்போதைய நிலைவரங்களால் இந்தியா பாதிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், ‘இலங்கை மற்றும் பாகிஸ்தான் என்பன இந்தியாவின் அயல்நாடுகளாக இருக்கின்றன. இந்நாடுகள் நிலையற்றதும், தளம்பலானதுமான நிலையில் உள்ளன.

எனவே இப்போது நான் இந்தியாவில் இருந்திருந்தால், உலகில் என்ன நடக்கின்றது என்பது குறித்தும் அந்நிகழ்வுகள் என்னை எவ்வாறு பாதிக்கப்போகின்றது என்பது குறித்தும் பெரிதும் கவலைப்பட்டிருப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை இயற்கையோடு இணைந்து வெற்றி கொள்வோம் – எதிர்க்கட்சித் தலைவர்

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை இயற்கையோடு இணைந்து வெற்றி கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ பொங்கல் வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.

அவரது பொங்கல் வாழ்த்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களுக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

உழவர்கள் தங்கள் உழவுக்கு உதவிய சூரியனுக்கும் ஏனைய உயிர்களுக்கும் நன்றியறிதலாக தை முதலாம் திகதியை தைப்பொங்கல் விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.

தைப்பொங்கல் விழாவானது, மனிதனுக்கும் மற்றும் இயற்கைக்கும் உள்ள உன்னத உறவை புலப்படுத்துவதாக அமைகிறது.

அனைத்து இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தின் வெளிப்பாடாகவும்,பரஸ்பர புரிந்துணர்வுடன் கூடிய நட்பின் அடையாளமாகவும் தை பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

தைப்பொங்கல் பண்டிகை, தமிழர்களின் பாரம்பரிய, கலாச்சார அடையாளத்தை பேணுவதுடன்,மனிதனுக்கும் இயற்கையுக்கும் இடையிலான பிரிக்க முடியாத தொடர்பை அடையாளப்படுத்துவதாகவும் அமைகிறது.

மக்களிடையே ஒற்றுமை மற்றும் சமூகத்தின் நட்புணர்வைப் புதுப்பிப்பதுடன்,எதிர்கால வெற்றிக்கான ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் பெறுவதற்கு ஏதுவாக தைத்திருநாள் அமைகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருங்கடியான இக்காலகட்டத்தில் விவசாயத்துறையின் பங்களிப்பு அளப்பரியது.ஆகவே இலங்கையின் பொருளாதார நெருக்கடியை இயற்கையோடு இணைந்து வெற்றி கொள்வதற்கான நாளாக தைத்திருநாள் அமையப் பிரார்த்திப்போம்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கு அமைவாக இலங்கையர்களாக இனம் – மதம் கடந்து சகோதரத்துவத்துடன் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி,நாட்டை ஒன்றாய் முன்னோக்கி கொண்டு செல்ல உறுதி பூணுவோம்.

இனம்,மதம்,சாதி போன்ற குறுகிய வேறுபாடுகளை மறந்து இயற்கையோடு இணைந்து வாழ்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி,அனைத்து இந்து பக்தர்களுக்கும்,உலக மக்கள் அனைவருக்கும் தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டைக் கட்டியெழுப்ப அனைத்து இலங்கையர்களும் தைப்பொங்கல் தினத்தில் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி

தமிழர்கள் கொண்டாடும் உழவர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பொங்கல் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

விவசாயத்துடன் தொடர்புடைய தைப்பொங்கல் பண்டிகையின் போது, அதிக விளைச்சலைப் பெறுவதற்கு ஆசிர்வாதம் வேண்டி சூரிய பகவானுக்கு  வழிபாடு செய்கின்றோம்.

கிழக்கின் தானியக் களஞ்சியம் என்று அழைக்கப்படும் இலங்கையில் உணவுப் பாதுகாப்பையும் போஷாக்கையும் உறுதிசெய்து, தன்னிறைவு பெற்ற நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கான அர்த்தமுள்ள சந்தர்ப்பமாக இவ்வருட தைப்பொங்கல் பண்டிகையை நாம் கருதுவோம்.

விவசாயத்தை நவீனமயப்படுத்துவதில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ள அதேவேளை சர்வதேச சந்தையின் போட்டித் தன்மைக்கேற்ப தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட வினைத்திறனுடனான இலாபகரமான விவசாயத்தை உருவாக்கவும் எதிர்பார்த்துள்ளது.

அரசாங்கத்தின் இப்புதிய பொருளாதார மற்றும் சமூக மறுசீரமைப்புத் திட்டத்திற்கு பங்களிப்பதன் மூலம்  பொருளாதாரச் செழிப்புடைய நாட்டைக் கட்டியெழுப்ப அனைத்து இலங்கையர்களும் இந்த தைப்பொங்கல் தினத்தில் ஒன்றிணைய வேண்டுமென நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

சூரிய பகவானை வணங்கி, உலக மக்களுக்கு உணவளித்து உயிர்க்காக்கும் உழவர்களைப் போற்றுவதுடன் விவசாயம் செழிப்படைந்து, வறுமை  நீங்கி, செழிப்பான நாட்டை உருவாக்கும் பயணத்திற்கு இத்தைப்பொங்கல் பண்டிகை ஆசிர்வாதமாக அமைய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும்  அனைத்து தமிழர்களும் இத்தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வாழ்த்துகின்றேன் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்சிகள் முரண்பாடுகளையும் வேற்றுமைகளையும் மறந்து நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டும் – யாழ் ஆயர்

தமிழ் கட்சிகள் அனைத்தும் தமது கட்சி முரண்பாடுகளையும் வேற்றுமைகளையும் மறந்து செயற்பட வேண்டுமெனவும் திரும்பவும் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தை ஐனாதிபதி  ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சம்பந்தப்பட்ட தமிழ்த் தலைமைகளுக்கும் இடையில் ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்கது என யாழ் மறைமாவட்ட  ஆயர் மேதகு கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் பொங்கல் தினவாழ்த்து செய்தி  தெரிவித்தார்.

அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பொங்கல் விழா ஒரு நன்றியின் விழா. நம்மை என்றும் நன்றி கூறிக்கொண்டே இருக்க அழைப்பு விடுக்கும் ஒரு விழா.

தமிழ் மக்கள் கொண்டாடும் இந்த நன்றியின் பெருவிழாவை உலககெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் 2023ஆம் ஆண்டில் கொண்டாடும் வேளை இறையாசீர் மிக்க வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்வடைகிறோம்.

இந்த நன்றியின் பெருவிழாவை இறைவன் – இயற்கை அயலவர் என்ற மூன்று நிலைகளில் அனுஷ்டித்துக் கொண்டாட நாம் அழைக்கப்படுகிறோம்.

இறைவன் நம்மைப் படைத்து  பாதுகாத்து அன்றாடம் பராமரித்து வழி நடத்தி வருகிறார். எமது அன்றாட அனைத்துத் தேவைகளிலும் தேடல்களிலும் அவரே முதலாகவும் முடிவாகவும் இருக்கிறார்.

இறைவனின் இந்த அளப்பரிய மாபெரும் செயலுக்காக இறைவனுக்கு நன்றி சொல்லுவோம். இயற்கை என்றும் எம்மோடு இணைந்திருக்கிறது.

இயற்கையைப் பகைத்து நாம் வாழ முடியாது. இயற்கை அனைத்து நிலைகளிலும் எமக்குத் துணை புரிகிறது. நிலம் எம்மைத் தாங்குகிறது.

எம்மை வாழ்விக்கும் நீரைத் தருகிறது.  நாம் உண்ண நல்ல விளைச்சலைத் தருகிறது. இயற்கையை நேசியுங்கள். இயற்கையோடு இணைந்து வாழுங்கள். மரங்களை நடுங்கள். இயற்கைச் சூழல் மாசடையாமல் பாதுகாருங்கள்.

எம்மோடு வாழும் மனிதர்கள் அனைவரும் இறைவனின் படைப்புக்கள். அவர்கள் எம்மோடு வாழ இறைவனால் அனுப்பப்பட்டவர்கள்.

அவர்கள் அனைவரோடும் நல்ல உறவை பேணுங்கள். அவர்கள் அனைவரையும் அவர்கள் நிலைகளில் வைத்து நன்கு புரிந்து கொள்ளுங்கள்.

அவர்களின் மனித குணங்களோடு அவர்களை அன்போடு ஏற்றுக் கொள்ளுங்கள். வாழும் குறுகிய காலத்தில் அனைத்து மனிதர்களையும் மகிழ்வியுங்கள். நீங்கள் சந்திக்கும் மனிதர் மனதுகள் மகிழ்ச்சியால் பொங்கட்டும்.

இலங்கை நாடு 1948ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்று  இவ்வாண்டு 75 ஆண்டுகள் நிறைவாகின்றன. பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற நாடுகளில் முழு வளர்ச்சி அடையாத நாடாக இலங்கை நாடு இருக்கிறது எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று தசாப்த காலப்போர் நிகழ்ந்து ஏறக்குறைய 13 ஆண்டுகளாயும்  இன்னும் நீதியோடு கூடிய நிரந்தர தீர்வு ஏற்படவில்லை என்பது வேதனையானது.

அண்மைக் காலத்தில் திரும்பவும் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான பேச்சு வார்த்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சம்பந்தப்பட்ட தமிழ்த் தலைமைகளுக்கும் இடையில் ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்று.

இப்போது ஆரம்பிக்கப்பபட்ட இந்த பேச்சுவார்த்தையில் தமிழ்த்தரப்புக்கள் மிக கவனமாகவும் அவதானமாகவும் இருக்கும் வகையிலும் சிங்களத் தலைமைகள் ஓரளவு நேர்மையாக இருக்கும் எனப் பரவலாக  எண்ணப்படுகின்ற வகையிலும் நல்லது நடக்கும் என நம்புவோம்.

இந்த பேச்சுக்கள் வழி இலங்கை நாட்டில் நிரந்தர தீர்வையும் ஏற்படுத்த தமிழ் கட்சிகள் அனைத்தும் தமது கட்சி முரண்பாடுகளையும் வேற்றுமைகளையும் மறந்து செயற்பட வேண்டுமெனத் தமிழ் மக்கள் பெயரால் அன்புடன் வேண்டுகிறோம் என்றுள்ளது.

Posted in Uncategorized

இலங்கை போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் – பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர்

இலங்கையில் தமிழ் மக்களை கொன்றொழித்த போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்த பிரித்தானியா அரசாங்கம் செயற்படவேண்டும் என பிரித்தானியாவின் எதிர்க்கட்சித் தலைவரும், தொழிற்கட்சித் தலைருமான சேர் கெயர் ஸ்ராமர் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று தனது தைப்பொங்கல் வாழ்த்து செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செய்தியில், இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தக் கொடுமைகளைச் செய்த குற்றவாளிகள் இன்னும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. பிரித்தானிய தொழிற்கட்சி தமிழ் சமூகத்துடன் இணைந்து இருப்போம். இந்த நாளில் தமது எண்ணங்கள் இலங்கையில் இன்னல்களை அனுவித்த மக்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையில் பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு ஆளானவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க தொழிற்கட்சி மீண்டும் உறுதியளிக்கிறது.

பிரித்தானிய அரசாங்கம் தமிழர்களுடன் இணைந்து இலங்கையில் கொடுமைகளை செய்த முகங்களை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பவும், ஐ.நா மனித உரிமை பேரவை ஆணையாளரின் உயர்ஸ்தானிகராலயத்தின் பரிந்துரைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பொங்கல் எனும் போர்வையில் ரணில் யாழில் காலடி வைக்க கூடாது – அருட்தந்தை மா.சத்திவேல்

தை பொங்கல் என கூறிவிக்கொண்டு ஜனாதிபதி தமிழர் தாயகத்தில் காலடி வைப்பதோ அவரின் வருகையை வரவேற்பதையோ ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது என அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அரச திணைக்களங்கள் பேரினவாத சிந்தனையோடு தமிழர்களின் நிலத்தையும் வாழ்வையும் தொடர்ந்து சூறையாடிவரும் காலம் இது என குற்றம் சாட்டியுள்ள அவர், மக்கள் பூர்வீகமாக விவசாயம் செய்த நிலங்கள் இராணுவத்திடம் சிக்கி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தேசிய தை பொங்கல் என்பது அரசியல் நாடகம் என்றும் இதனை ஏற்க தமிழர்கள் ஏமாளிகள் அல்ல என்பதை போலி தேசியவாதிகள் உணர வேண்டும் என்றும் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

கலாசார அழிவை தமிழர் தாயகத்தில் விதைத்து அதன் அறுவடையில் மகிழ்ந்த ஜனாதிபதி ராணி ல்விக்ரமசிங்க, தேசிய பொங்கல் என கூறிக்கொண்டு தமிழர் தாயகத்தில் காலடி எடுத்து வைக்க கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தைப்பொங்கல் என்பது பானையும், அரிசியும், அடுப்பும் சம்பந்தப்பட்ட விடயம் மட்டுமல்ல உழைப்பாளரின் வியர்வை, அதனால் விளைந்த விளைச்சல் உழைப்பு, உழைப்புக்கு அடிப்படை காரணமான மண் அதனுடைய உரிமை கலந்த விடயமாகும். இதிலே வாழ்வும் வளமும் தங்கி இருக்கின்றது.

கலாசார சிறப்போடு தேச உணர்வும் அதன் பாதுகாப்பும் அதற்கான உறுதியும் மேலோங்கி இருக்கின்றது. இவற்றையெல்லாம் சிதைத்தழித்து தொடர் அழிவுகளுக்கும் திட்டமிட்டு கொண்டு தேசிய பொங்கல் என்று அதிபர் தமிழர் தாயகத்தில் காலடி வைப்பதோ அவரின் வருகையை வரவேற்பதையோ நாம் எந்த வகையிலும் அங்கீகரிக்க முடியாது.

வியர்வை விதைத்த நிலம், உழுது விளைந்த நிலம், பொங்கலிட்டு மகிழ்ச்சியோடு உறவுகளோடு கூடி பகிர்ந்து உண்ட நிலம், இராணுவத்திடம் சிக்கி உள்ளது. அரச திணைக்களங்கள் பேரினவாத சிந்தனையோடு தமிழர்களின் நிலத்தையும் வாழ்வையும் தொடர்ந்து சூறையாடிவரும் காலமிது.

இதற்கு மத்தியில் தேசிய தை பொங்கல் என அரசியல் நாடகம். இதனை ஏற்க தமிழர்கள் ஏமாளிகள் அல்ல என்பதை போலி தேசியவாதிகள் உணர வேண்டும். தமிழர்களின் கலாசாரத்தை முற்றாக அழிப்பதற்கு போதை பொருட்களின் பாவனையும் எங்கும் வியாபித்துள்ளது.

இதற்குப் பின்னால் அரச படைகள் உள்ளதாகவும் மக்கள் சந்தேகிக்கின்றனர். நாட்டில் வேறெந்த பிரதேசத்திலும் இல்லாத அளவிற்கு முப்படையினரும் காவல்துறையினரும் அவர்களுக்கு உதவியாக இரகசிய காவல்துறையும் அவர்களின் புலனாய்வாளர்களும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களும் பலமாக இருக்கும் போது போதை பொருட்கள் வடகிழக்கில் அதிகரித்துள்ளதென்றால் அதற்கு பொறுப்பு கூற வேண்டியது பாதுகாப்பு அமைச்சும் பாதுகாப்புக்கு பொறுப்பான அதிபருமே.

இத்தகைய கலாசார அழிவை தமிழர் தாயகத்தில் விதைத்து அதன் அறுவடையில் மகிழ்ந்தா அதிபர் தேசிய தைப் பொங்கல் என தமிழர் தாயகத்தில் காலடி வைக்கின்றார் என்றே கேட்கின்றோம்.

தமிழர்களின் தேசிய பாதுகாப்பிற்காக போராடி உயிர்த்தியாகமானோரை சொந்த மண்ணிலே நினைவு கூர முடியாது. இறுதி யுத்தத்தில் வான் தாக்குதலாலும், நச்சு குண்டுகளாலும் படுகொலை செய்யப்பட்டோரை கூட்டாக நினைவு கூருவதற்கு முடியாதுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்டோர்க்கு நீதி இல்லை. தமிழர் தேச தேசியத்தின் உயிர்த் துடிப்போடு இயங்கியவர்கள் அரசியல் கைதிகளாகி விடுதலை இன்றி வாடுகின்றனர்.

இவற்றுக்கெல்லாம் அடிப்படை காரணர்களில் ஒருவரான தற்போதைய அதிபர் தேசிய தைப்பொங்கல் என தமிழர்கள் மத்தியில் வந்து உழைப்பின் விழாவை பாரம்பரிய தேசிய நிகழ்வை அசிங்கப்படுத்துவதற்கு இடமளிக்கக் கூடாது.

அத்தோடு தேசிய தைப்பொங்கல் என தமிழர்களை கூட்டுச் சேர்க்கும் செயற்பாட்டிலும் பல அரசியல் கைக்கூலிகள் நம்மத்தியிலே தோன்றி இயங்கத் தொடங்கியுள்ளனர்.

இது இவர்களின் அரசியலாகும் இவர்கள் காலாகாலமாக எமக்கு எதிராகவே செயல்பட்டு வந்துள்ளனர். இத்தகைய புல்லுருவிகளை அகற்றி தமிழர் தாயக அரசியலை காப்பதற்கு உறுதி கொண்டு நிலம் காக்கும் பொங்கல் எம் மண்ணிலே பொங்க சக்தி கொள்வோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.