இனப் பிரச்சனை தீர்வுக்கு 5 யோசனைகளை முன் வைத்தார் தயான் ஜயதிலக

தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வினைக் காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்னெடுக்கப்படும் சர்வகட்சி மாநாட்டின் ஊடாக வெற்றி பெறுவதாக இருந்தால் அதில் காணப்படுகின்ற தடைகளை முதலில் இனங்கண்டு களைய வேண்டுமென கலாநிதி தயான் ஜயத்திலக வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், குறித்த தடைகளை களைந்து பேச்சுவார்த்தை முயற்சிகள் வெற்றி பெறுவதற்காக யதார்த்தமாக முன்னெடுக்கப்படக்கூடிய ஐந்தம்ச யோசனைகளையும் அவர் முன்வைத்துள்ளார்.

அந்த யோசனைகளில் முதலாவதாக, 13ஆவது திருத்தச்சட்டம் பற்றிய விவாதம் முடிவுறுத்தப்பட வேண்டும் என்பதோடு, அதற்கமைவாக இறுதி நிலை ஒப்பந்தமானது உச்சநீதிமன்றத்தின் வரையறுக்கப்பட்ட காலப்பகுதியில் (15 ஆண்டுகள் வரை) முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்ற உத்தரவினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் ஊடாகவே, இனங்களுக்கு இடையிலான துருவமுனைப்படுத்தலின்றி முழுமையாக நடைமுறைச்சாத்தியமாக்க முடியும்.

இரண்டாவதாக, பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் இந்தியாவினையும் உள்ளீர்த்ததானதொரு கிரமமான அணுகுமுறை அவசியமாகின்றது.

மூன்றாவதாக, மாகாண சபைகள் தற்போதுள்ள நிலைமைகளை விடவும் மேலும் வினைத்திறனாக செயற்படுவதற்கு அனைத்து தரப்பினரும் இணங்குவதோடு அதுபற்றிய விவாதத்தங்கள் நீடித்துச் செல்லாது பூச்சியமாக்கப்பட வேண்டும்.

நான்காவதாக, பொறுபுக்கூறல் குறித்து டெஸ்மண்ட் டி சில்வாவின் அறிக்கையை செயற்படுத்த முடியும். அதேநேரம், போர்க்கால பொறுப்புக்கூறல் தொடர்பிலான விடயங்களை படையினருக்கு பின்னடைவுகளை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்க கூடாது.

ஐந்தாவதாக, பிரஜைகளுக்கு இடையிலான பாகுபாடுகளை எதிர்க்கும் அதேநேரம், சமத்துவமான நிலைமைகளை ஏற்படுத்துவதற்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அத்தோடு, இனப்பாகுபாடு, இனவாதம், மற்றும் சகிப்புத்தன்மை குறைவடைதல் ஆகியவற்றை எதிர்த்துப்போராடுவதற்காக டேர்பன் பிரகடனம் மற்றும் ஐ.நாவின் வழி வரைபடத்தினை பின்பற்ற வேண்டும்.

மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2008-2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்மொழியப்பட்ட செயற்றிட்டத்தினை நடைமுடைப்படுத்துவதோடு உண்மையான சமத்துவத்தினை  அறிவார்ந்த சமூகங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, சிங்கள பேரினவாதத்தின் மீளமுடியாத வெற்றியின் அவதாரம் என்று கருதிய கோட்டாபய ராஜபக்ஷ, அரகலவியின் எழுச்சியால் பதவி கவிழ்க்கப்பட்டு வெளியேற்றப்பட்ட படிப்பினை நம்முன்னே உள்ளது. ஆகவே, இனங்களுக்கு இடையிலான துருவப்படுத்தலை தொடர்ச்சியாக வளர்த்துச் செல்லாது அரசியல்தலைவர்கள் இதயசுத்தியுடன் செயற்படுவார்கன் என்று நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இளைஞர்களின் கோரிக்கைப்படி அரசியல் முறைமையில் மாற்றம் – புத்தாண்டு வாழ்த்தில் ஜனாதிபதி

புத்துணர்ச்சியுடன் புதிய வருடம் ஒன்று பிறக்கிறது. புதிய சிந்தனைகள், திடமான நோக்கு என்பவற்றுடன் எண்ணங்களைப் புதுப்பித்துக் கொள்ள இதுவொரு சிறந்த சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

எண்ணிலடங்கா  சிரமங்கள், நிச்சயமற்ற சூழ்நிலைகள், ஏமாற்றங்களுடனான ஒரு வருடத்தை முடித்துக்கொண்டு, நாம் 2023 எனும் புதிய ஆண்டுக்குள் காலடி எடுத்து வைக்கின்றோம்.

முன்னெப்போதும் இல்லாதவாறு நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் நம் அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள பாரிய சுமை மற்றும்  நம்மில் பெரும்பாலானோர் சந்தித்த பின்னடைவு ஆகியவற்றை நான் நன்கு அறிவேன்.

எனினும், நாம் ஏற்கனவே நெருக்கடியான நிலையைக் கடந்துவிட்டதாக கருதுகின்றேன். 2023 புதிய ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு புதிய திருப்புமுனையைக் குறிக்கும் ஒரு தீர்க்கமான ஆண்டாக இருக்கும்.

பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து இலங்கை சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. எனினும் பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுதலையடைந்த ஏனைய நாடுகள் அடைந்துள்ள முன்னேற்றத்தை நாம் இன்னும் அடையத் தவறிவிட்டோம்.

நாட்டில் உள்ள பெரும்பான்மையான இளைஞர்கள் தற்போதுள்ள அரசியல்  முறைமையில் மாற்றம் வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

அக்கோரிக்கையைப் புறக்கணிக்க முடியாது. எதிர்வரும் தசாப்தத்திற்குள் வளமான இலங்கையை கட்டியெழுப்ப உத்தேசித்துள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை நாம் அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வேலைத்திட்டத்தில் நாட்டை முன்னிலைப்படுத்தி, அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும்  தீர்க்கமான ஆரம்ப நடவடிக்கைகளுக்காக பொறுமையுடனும் தைரியத்துடனும் காத்திருந்த அனைத்து இலங்கை மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

புதிய நம்பிக்கைகளுடன் நாட்டிற்காக ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து, வளமான இலங்கைக்கான கதவுகளைத் திறக்கும் வெற்றிகரமான ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமைய வேண்டுமென பிரார்த்திப்பதுடன் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேவ அன்னையின் பாதுகாப்பில் நம்பிக்கை வைத்து 2023 ஆம் ஆண்டை தொடங்குங்கள் – யாழ் ஆயர் வாழ்த்துச் செய்தி

2023ஆம் ஆண்டை  தேவ அன்னையின் பாதுகாப்பில் நம்பிக்கை வைத்து தொடங்குங்கள் என யாழ் ஆயர் அருட்கலாதிதி ஐஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் புதுவருட வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2023ஆவது புதிய ஆண்டு மலருகின்ற வேளை இப்புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும்  இப்புதிய ஆண்டு உங்கள் உள்ளத்து எண்ணங்கள், ஏக்கங்கள் அனைத்தையும் நிறைவு செய்யும் இறை ஆசீர் மிக்க ஆண்டாக அமைய முதலில் வாழ்த்துகிறோம்.

உலகக் கத்தோலிக்க திரு அவையானது ஒவ்வொரு ஆண்டின் முதல் தினத்தையும் தேவ அன்னையின் தினமாகப் பிரகடனப்படுத்தி அன்றைய தினத்தில் அந்த புதிய ஆண்டு முழுவதிற்குமான தேவ அன்னையின் தாய்க்குரிய அன்பையும் பாசமிகு பராமரிப்பையும் வல்லமை மிக்க இறை பாதுகாப்பையும் பெற செபிக்கும்படி பணித்து நிற்கிறது.

நான் ஆண்டவரின் அடிமை உமது சொற்படியே  எனக்கு நிகழட்டும்; (லூக்கா1:38) என்று தேவ அன்னை இறைசித்தத்தை ஏற்று பல இன்ப துன்ப அனுபவங்கள் வழி தன் அர்ப்பண வாழ்வை வாழ்ந்து  இறைவனின் தாயாகவும் இறை மக்களின் தாயாகவும் விளங்கும் பாக்கியம் பெற்றவர்.

இன்று உலக மக்கள் அனைவரையும் தன் அன்பு மக்களாக அரவணைத்துப் பாதுகாத்துப் பாரமரித்து வருகிறாள்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஆண்டு பல இன்பமான  அனுபவங்கள் வழியும்,  பல துன்பமான அனுபவங்கள் வழியும்  எம்மை  அழைத்துச் சென்று தன் பயணத்தை முடித்து எம்மை விட்டுக் கடந்து சென்று விட்டது.

மலர்கின்ற 2023ஆம் புதிய ஆண்டு எப்படி அமையுமோ என்ற ஏக்கமும், இனியதாய் அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எம் எல்லோர் மனதுகளிலும் நிறையவே உண்டு.2023ஆம் ஆண்டை  தேவ அன்னையின் பாதுகாப்பில் நம்பிக்கை வைத்து தொடங்குங்கள். இப்புதிய ஆண்டு முழுவதும் தேவ அன்னை தன் தாய்க்குரிய அன்போடும் பாசத்தோடும் எம்மைப் பாதுகாப்பாள்   என்ற  நம்பிக்கை உங்கள் மனதில் நிறைந்திருக்கட்டும்.

தேவ தாயை எப்போதும்   எங்கிருந்தாலும் என்ன நடந்தாலும் உங்கள் அன்னையாக மனதிலிருத்தி என்ன செய்தாலும் அன்னையின் துணையுடன் செய்யுங்கள். அன்னை வெற்றியையே  பெற்றுத் தருவாள்.

இந்த ஆண்டு முழுவதும் என்ன நடந்தாலும் நான் ஆண்டவரின் அடிமை உமது சொற்படியே  எனக்கு நிகழட்டும் என மனதில் அடிக்கடி சொல்லிச் செபியுங்கள். இந்த வார்த்தைகளே  இந்த ஆண்டு முழுவதும் உங்கள் அனைவரையும் வழிநடத்தும் வார்த்தைகளாகட்டும்.

இறைவனின் அன்னையும், இறைமக்களின் அன்னையுமான  தேவ அன்னை தாய்க்குரிய அன்போடு எம் அனைவரையும் இவ்வாண்டு முழுவதும்  எத்தீங்குமின்றி பாதுகாத்து,வழிநடத்தி, எம் அனைத்துத் தேவைகளிலும் உடனிருந்து நிறைவு செய்ய, இறையாசீர் மிக்க வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம் என்றுள்ளது.

Posted in Uncategorized

அரசாங்கத்தின் முடிவுகளால் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைகின்றது – ஷெஹான் சேமசிங்க

அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களினால் பொருளாதாரம் படிப்படியாக ஸ்திரத்தன்மை அடைந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட சவாலான தீர்மானங்கள் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை நோக்கிச் செல்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களில் பணவீக்கம் குறைந்திருப்பது பொருளாதாரம் சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதற்கான அறிகுறி என்றும் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நவம்பரில் 61.0 சதவீதமாக இருந்த பணவீக்கம் டிசம்பரில் 57.2 சதவீதமாகவும் உணவுப் பணவீக்கம் நவம்பரில் 73.7 சதவீதத்திலிருந்து டிசம்பரில் 64.4 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதேவேளை 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிவாஸரணம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

தேங்காய் எண்ணெயின் மூலப் பொருள் செலவை சுமக்க வேண்டியுள்ளது – உற்பத்தியாளர்கள்

சந்தையில் கொப்பரையின் விலை அதிகரித்துள்ளதால், உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் தரம் குறித்து எந்த கட்டுப்பாடும் இல்லை என்றும், தேவையான மூலப்பொருட்களுக்கு பெரும் செலவை சுமக்க வேண்டியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக தமது வாடிக்கையாளர்கள் பெருமளவு குறைந்துள்ளதாகவும், தற்போதைய மின்சார விநியோகத் தடை, மின்கட்டண அதிகரிப்பு என்பனவும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

அயல் நாடுகளுடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த திட்டம்

இந்தியா, சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை கைச்சாத்திடுவதற்கான முன்மொழிவுகள் இராஜதந்திர மட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

பல நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வைத்த பிரேரணைக்கு தாய்லாந்து மட்டுமே விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இதன்படி, சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் தாய்லாந்து அரசாங்கத்தின் தலைவர்களுடன் ஜனவரி 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கலந்துரையாடப்படவுள்ளது.

இதற்காக தாய்லாந்திற்கு அதிகாரிகள் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கடந்த அரசாங்கத்தின் போது பங்களாதேஷுடன் ஆரம்பித்த பேச்சுவார்த்தையை தொடர்ந்தும் முன்னெடுக்கவும் இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தேர்தல் காலம் தாழ்த்தப்படின் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

அரசாங்கம் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு முயற்சிக்குமானால் அதனை தடுத்து நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கேட்டுக்கொண்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்கள் காலாவதியாகிவிட்ட நிலையில் விரைவில் புதிய ஆட்சி உருவாக தேர்தல் நடைபெற வேண்டும் என அக்கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு தீர்மானித்தன் பின்னர், நீதிமன்றம் அதற்கு முரணான தீர்ப்பை வழங்கினால் அரசாங்கம் படுதோல்வியடையும் என்றும் குறிப்பிட்டார்.

புதிய உள்ளூராட்சி மன்றங்களும் புதிய நாடாளுமன்றமும் தெரிவு செய்யப்பட்டு சர்வதேசத்துடன் தொடர்புகளைப் பேண முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் மீது சர்வதேசத்திற்கு நம்பிக்கையில்லாத இந்த சந்தர்ப்பத்தில் உள்ளூராட்சித் தேர்தலுக்கு பின்னர் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

சீனாவின் கொவிட் தொடர்பில் வெளிப்படைத் தன்மையை பேண வேண்டும்- உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்

நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதால், சீன அதிகாரிகள் நாட்டில் கொவிட் பற்றிய நிகழ்நேர தகவல்களைப் பகிர வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களாக நாட்டின் பல கடுமையான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன, ஆனால் தொற்றுகள் உயர்ந்துள்ளன மற்றும் பல நாடுகள் இப்போது சீனாவிலிருந்து பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், தீவிர சிகிச்சைப் பிரிவு சேர்க்கைகள் மற்றும் இறப்புகள் பற்றிய கூடுதல் தகவல்களைப் பார்க்க விரும்புவதாகக் கூறுகின்றனர். தடுப்பூசிகள் பற்றிய புள்ளிவிபரங்களையும் ஆராய விரும்புகிறது.

அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், தென் கொரியா, இந்தியா, இத்தாலி, ஜப்பான் மற்றும் தாய்வான் ஆகிய நாடுகள் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கொவிட் சோதனைகளை விதித்துள்ளன, ஏனெனில் அவர்கள் வைரஸ் மீண்டும் பரவக்கூடும் என்று அஞ்சுகிறார்கள்.

மேலும், சீனாவில் இருந்து பிரித்தானியாவுக்கு வரும் பயணிகள் விமானத்தில் ஏறும் முன் சோதனையை வழங்க வேண்டும்.

யாழ் நகர சபையை கலைப்பது தொடர்பில் சட்ட மா அதிபரிடம் ஆலோசனை

யாழ். மாநகர சபைக்கு மேயர் தேர்வு இனி இடம்பெறாது என வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இன்று (சனிக்கிழமை) ராஜினாமா செய்யவுள்ள நிலையில் யாழ் மாநகர சபையின் அடுத்த கட்டம் தொடர்பாக கேள்வியெழுப்பியபோது இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் ,மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் படி இனி மேயர் தெரிவை மேற்கொள்ள முடியாது. சபையை கலைப்பது தொடர்பாக நான் தீர்மானிக்க முடியாது என்பதோடு அது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டு தேர்வு நடைபெறும்.

இதேவேளை கிழக்கு மாகாணத்yaaதிலும் இவ்வாறான நிலைமை காணப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலம் கையகப்படுத்தும் புதிய திட்டம் வடகிழக்கில் நிறுத்தப்பட வேண்டும் – சபா குகதாஸ்

ஜனாதிபதி ரணில் அரசாங்கம் பயிர் செய்கை செய்யப்படாத நிலங்களை அரச உடைமையாக கையகப்படுத்தும் புதிய வடிவிலான நில அபகரிப்பு நடவடிக்கையை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது.

அதன் முதற் கட்டமாக வடக்கு மாகாணம் உட்பட பதுளை, குருணாகல் மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான சபா. குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது, வடக்கு கிழக்கு மாகாணங்களை பொறுத்த வரையில் கடந்த 30 ஆண்டு போர் காரணமாக இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வேறு தேசங்களில் வசிப்பதால் அவர்களுக்கு சொந்தமான பெரும் தொகையான பயிர்ச்செய்கை நிலங்கள் தரிசு நிலங்களாக மாறியுள்ளன.

அதனை அவர்கள் பயன்படுத்த ஒரு நிலையான அரசியல் தீர்வு மிக அவசியமானது. ஆகவே இனப் பிரச்சினைக்கான தீர்வுவை முன்னெடுப்பதை தவிர்த்து நிலத்தை கையகப்படுத்தல் புதிய வடிவிலான இன அழிப்பாகவே மாறியுள்ளது. இத்தகைய செயற்பாடுகளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.

வவுனியா, மன்னார் மாவட்டங்களில் 14000 ஏக்கர் காணி அபகரிக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது நிறுத்தப்பட வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிரந்தர அரசியல் தீர்வு உறுதிப்படுத்தப்படும் வரை பயிர்ச்செய்கை நிலங்களை கையகப்படுத்தல் மற்றும் அரச திணைக்களங்கள் மூலமாக நிலத்தை அபகரிக்கும் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.

அத்தோடு வடக்கு கிழக்கில் மாகாணத்திற்கு சொந்தமான அரச காணிகள் வடகிழக்கில் வாழம் மக்களில் சொந்தக் காணி இல்லாதவர்களுக்கும் தொழில் வாய்ப்பு இல்லாது ஆயிரக்கணக்காக தொழில் தேடி அலையும் இளையோருக்கும் வழங்கப்பட வேண்டும் – என குறிப்பிடப்பட்டுள்ளது.