இந்திய நிதியமைச்சர் திருக்கோணேஸ்வரத்திற்கு விஜயம்

திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை  திருக்கோணேஸ்வரம் கோயிலில் இடம்பெற்ற  விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டிருந்தார்.

குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன் குறித்த நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும்  பங்கேற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தனி பிரதேச செயலகம் கோரி சிங்களவர் நேற்று போராட்டம்

வவுனியா, போகஸ்வெவ பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள சிங்கள மக்கள் நேறறு வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் தினேஸ் குணவர்த்தன தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் ‘ஒரே கிராமம் ஒரே நாடு’ கலந்துரையாடல் நடந்தபோது, இந்த போராட்டம் இடம்பெற்றது. வடக்கு சிங்கள மக்கள் ஒன்றியம் என குறிப்பிட்ட பதாதைகளை தாங்கியவாறு மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தமக்கு தனியான பிரதேச செயலகம் அமைக்கப்பட வேண்டும், கமநலசேவைகள் நிலையம் அமைக்கப்பட வேண்டும், விவசாய நிலம் வழங்க வேண்டும், கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பில் 6 பேர் அழைக்கப்பட்டு, பிரதமருடன் கலந்துரையாட அனுமதிக்கப்பட்டனர்.

தென்னிலங்கையின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த வழக்குகளில் தொடர்புபட்டவர்கள் உள்ளிட்டவர்கள் போகஸ்வெவவில் குடியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மேட்டு நிலம், வயல் நிலங்கள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட போதும், இதுவரை வயல் நிலங்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை. அத்துடன், அந்த குடியேற்ற திட்டத்துக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கவில்லை.

இதேவேளை, தமிழ் மக்களின் இனப் பரம்பலை சிதைக்கும் நோக்கத்துடன் இந்த விதமான குடியேற்றங்கள் இடம் பெறுவதாக தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 13 பாராளுமன்றில் பட்ஜெட் சமர்ப்பிப்பு

2024 ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகள் மீதான விவாதம், 26 நாட்களுக்கு இம்முறை நடைபெறவுள்ளது. வரவுசெலவுத்திட்ட உரை நவம்பர் 13 திங்கட்கிழமை மதியம் 12  மணிக்கு நிதி அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்கவினால்   நிகழ்த்தப்படும்

அதற்கு முன்னர்,  பாராளுமன்றம் நவம்பர் 7 முதல் 10 வரை கூடும் என  பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் 2023 ஒக்டோபர் 19 ஆம் திகதி பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூடிய போதே இது தொடர்பில் இணக்கம் காணப்பட்டது.

 வரவுசெலவுத்திட்ட விவாதம்

எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், 2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இரண்டாம் மதிப்பீடு எனப்படும் ‘வரவுசெலவுத்திட்ட உரை’ பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்படவுள்ளது. அதன்பின்னர், நவம்பர் 14 முதல் 21 வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 7 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (வரவுசெலவுத்திட்ட) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெறவுள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

அத்துடன், வரவுசெலவுத்திட்ட இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப. 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அதனையடுத்து, குழுநிலை விவாதம் நவம்பர் 22 ஆம் திகதி புதன்கிழமை முதல் டிசெம்பர் 13 ஆம் திகதி புதன்கிழமை வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 19 நாட்கள் இடம்பெறவுள்ளது. அதற்கமைய, 2024 நியதியாண்டுக்கான வரவு-செலவுத்திட்ட மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசெம்பர் 13 ஆம் திகதி புதன்கிழமை பி.ப. 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

வரவுசெலவுத்திட்ட விவாதத்தின் போது ஒவ்வொரு நாளும் மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 6.00 மணி வரை விவாதம் இடம்பெறவுள்ளதுடன், வாக்கெடுப்பு இடம்பெறும் நாட்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் பி.ப. 6.00 மணி முதல் பி.ப. 6.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதன விவாதம் இடம்பெறும்.

யாழ்.பல்கலைக்கழக மாவீரர் நினைவுத் தூபியில் ஈகை சுடர் ஏற்றப்பட்டது

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபி துப்புரவு செய்யப்பட்டு ஈகை சுடர் ஏற்றப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபியை துப்புரவு செய்யும் பணிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய தினம் புதன்கிழமை ஈடுபட்டனர்.

அதன்பின் தூபியில் ஈகைச்சுடர் ஏற்றி மாணவர்கள் மரியாதை செலுத்தினர்.

இந்திய நிதிஅமைச்சர் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம்

கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாணத்திற்கு இன்று  இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் விஜயம் செய்துள்ளார்.

திருகோணமலை விமான தளத்தில் நிர்மலா சீதாராமனை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பிரதம செயலாளர் ரத்நாயக்க, ஆளுநர் செயலாளர் மதநாயக்க, ஆளுநரின் பிரத்தியேக  செயலாளர்  அணில் விஜயஶ்ரீ, அரச அதிபர் மற்றும் சுற்றுலா பணியக தவிசாளர் மதன் ஆகியோர் வரவேற்றனர்.

மேலும் ஆளுநரின் ஏற்பாட்டில் நிர்மலா சீதாராமன் நாளை திருக்கோணேச்சரம்  ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்வதுடன், மேலும் பல முக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்க உள்ளார்.

கண்டி மல்வத்து மகாநாயக்கரை சந்தித்து கலந்துரையாடினார் இந்திய நிதி அமைச்சர்

இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டியில் மல்வத்தை மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை இன்று புதன்கிழமை (01) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இவர் மகாநாயக்கருடனான தனது சந்திப்பின் போது இலங்கை மக்களுடனான இந்திய நட்புறவை  மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் நாளை வியாழக்கிழமை (2) இலங்கையில் உள்ள மத ஸ்தலங்களின் சூரிய மின்மயமாக்கலுக்கான  ஒப்பந்தத்தின் பரிமாற்றத்தில் கலந்து கொள்ள உள்ளதாகவும் அதில் பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 107.47 கோடி ரூபாயில் 82.40 கோடி ரூபாயை இந்தியா ஒதுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் பரிமாற்றப்படும் என இந்தியாவின் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவுடனான கலாசார உறவுகளையும் இரு நாடுகளுக்கிடையிலான பாரம்பரியத்தையும் மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் அங்கீகரித்தார்.

மேலும் இந்தியா வழங்கிய பொருளாதார உதவிகளுக்கு  நன்றி தெரிவித்த அவர் இலங்கையின்  பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு உதவுவதற்கு முதலில்  கைகோர்த்த நாடு இந்தியாவே ஆகும் எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து இந்திய நிதியமைச்சர் கண்டியில் சியாம் பிரிவின் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரதனையையும் சந்தித்து கலந்துரையாடினார்.

பின்னர் இந்திய நிதியமைச்சர் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளின் தொடர்ச்சியான பாரம்பரியம் குறித்து விவாதித்தார்.

இந்தியாவின் நிதியமைச்சர் இலங்கையில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களின் சூரிய மின்மயமாக்கல் திட்டம் தொடர்பாகவும் கூறினார்.

மேலும் மகாநாயக்க தேரர்கள் இந்தியாவுக்கு உதவிய விடயங்களுக்காக நன்றி தெரிவித்ததுடன் அவர்களின் ஆற்றல் தேவைகளுக்கு இது ஒரு முக்கிய நடவடிக்கை என்றும் சுட்டிக்காட்டினார்.

தமிழ் தொழிலதிபரான தினேஷ் ஷாப்டர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என நீதிமன்றம் தீர்ப்பு

கழுத்து  மற்றும் முகம்  அழுத்தப்பட்டதன்  காரணமாகவே தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் உயிரிழக்க நேர்ந்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு நீதிவான் நீதிமன்றமே  இன்று (01)  இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதன்  மூலம் குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதாகத் தீர்ப்பளித்த மேலதிக  நீதிவான்,  இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.

மரண விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நிபுணர் குழுவின் அறிக்கைகள் என்பனவற்றை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதிவான் திருமதி ரஜீந்திர ஜயசூரிய இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

சீனாவை பாராட்டினார், அமெரிக்காவினால் விசா மறுக்கப்பட்ட சரத் வீரசேகர

அமெரிக்கா விசா மறுத்துள்ள  நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர ஆசியாவின்  தவிர்க்க முடியாத நம்பகமான நண்பன் சீனா என அந்த நாட்டிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

பிஓஏஓஉச்சிமாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஆசிய நாடுகளிற்கு இடையிலான பிணைப்பை நெருக்கத்தை மேற்குலகினால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பிணைப்பு வர்த்தகம்மூலமும் முக்கியமாக பௌத்தம் மூலமும் வளர்ச்சியடைந்தது வளர்த்தெடுக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ள சரத்வீரசேகர சீனா ஆசியாவின்  தவிர்க்க முடியாத நம்பகதன்மை மிக்க நண்பன் எனவும் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை பேரவையில் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடான சீனா இலங்கைக்கு தொடர்ச்சியாக அளித்துவரும் ஆதரவிற்கு நாங்;கள் நன்றியுடையவர்களாக உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகின் ஈவிரக்கமற்ற  அமைப்பினை நாங்கள் தோற்கடித்தவேளை மேற்குஉலக நாடுகள் எங்களை குற்றவாளிகளாக்கின ஆனால் சீனா எங்களிற்கு ஆதரவாகயிருந்தது எனவும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாரா நிறுவனத்தினால் நாட்டுக்கு வருடாந்தம் 200 மில்லியன் டொலர் இழப்பு

இலங்கையின் கடற்பிராந்தியத்தை நிர்வகிக்கும் பொறுப்பு தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திடம் (நாரா) ஒப்படைக்கப்பட்டிருப்பதன் காரணமாக சுமார் 32 ஆண்டுகளாக நாட்டுக்கு வருடாந்தம் 200 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டிருப்பதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இப்பொறுப்பை திறம்பட முன்னெடுப்பதற்கு ஏற்றவாறு தேசிய நீர்வரைவியல் காரியாலயத்தை உருவாக்கும் நோக்கில் இலங்கை நீர்வரைவியல் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் புதிதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் கொழும்பில் அமைந்துள்ள நீதியமைச்சில் நேற்று செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இலங்கைக்குச் சொந்தமான கடற்பிராந்தியத்தை நிர்வகிப்பதுடன் தொடர்புடைய இலங்கை நீர்வரைவியல் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கின்றோம்.

கடற்பிராந்தியத்தில் உயிர்களின் பாதுகாப்புக்கான சர்வதேச பிரகடனத்தை அடிப்படையாகக்கொண்டே சகல நாடுகளும் அவற்றின் கடற்பிராந்தியத்தை நிர்வகிக்கின்றன.

தமது கடற்பரப்பின் ஊடாகப் பயணிக்கும் கப்பல்களுக்கான கட்டணம் அறவிடல், கடற்பிராந்தியப் பாதுகாப்பின் மூலம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல், கடற்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் இப்பிரகடனத்தின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையானது இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் கேந்திர நிலைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்திருக்கின்றது. உலகின் ஏனைய அனைத்துப் பிராந்தியங்களுக்குமான நுழைவாயிலாகவும், பொருளாதார மற்றும் வாணிப ரீதியில் பெருமளவான நன்மைகளை ஈட்டித்தரக்கூடிய வகையிலும் இலங்கையின் அமைவிடம் உள்ளது.

இலங்கைக் கடற்பரப்பின் ஊடாக நாளாந்தம் சுமார் 200 – 300 வரையான கப்பல்களும், வருடாந்தம் சுமார் 35,000 கப்பல்களும் பயணிக்கின்றன. இவ்வாறு எமது கடற்பரப்பின் ஊடாகப் பயணிக்கும் கப்பல்களிடமிருந்து அதற்கேற்றவாறு கட்டணம் அறவிடப்படும்.

அதற்குரிய அதிகாரம் கடந்த 1981 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் மூலம் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கு (நாரா) வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடற்பிராந்திய விவகாரங்களை உரியவாறு கையாள்வதற்கான நிபுணத்துவம் அக்கட்டமைப்புக்கு இல்லை. அதன் விளைவாக கடந்த 32 ஆண்டுகளாக (1981 தொடக்கம்) எமது நாட்டுக்கு வருடாந்தம் 200 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி எமது கடற்பிராந்தியத்தை உரியவாறு நிர்வகிப்பதற்கும், அதனுடன் தொடர்புடைய தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் ஏற்ற பொருத்தமான கட்டமைப்பு இன்மையால், அதுபற்றிய தீர்மானங்கள் ஏனைய வெளிநாட்டு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இது நாட்டுக்கான வருமானத்தை இல்லாமல் செய்வதுடன் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கின்றது.

குறிப்பாக கொழும்பு துறைமுகத்துக்கு வருகைதந்த கப்பல்களின் எண்ணிக்கை கடந்த 2015 ஆம் ஆண்டு 4,197 ஆகப் பதிவாகியிருந்த நிலையில், அது 2022 இல் 3,648 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அதேபோன்று 2015 ஆம் ஆண்டு திருகோணமலை துறைமுகம், காலி துறைமுகம், காங்கேசன்துறை மற்றும் காரைநகர் துறைமுகம் ஆகியவற்றுக்கு வருகைதந்த கப்பல்களின் எண்ணிக்கை முறையே 164, 72, 32 ஆகப் பதிவாகியுள்ளன. இருப்பினும் கடந்த ஆண்டு அவை முறையே 95, 7 மற்றும் 0 ஆக வீழ்ச்சிகண்டுள்ளன.

இவையனைத்தையும் கருத்திற்கொண்டு எமது நாட்டுக்குரிய கடற்பிராந்தியத்தை முறையாக நிர்வகிக்கும் நோக்கிலேயே தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் எதிர்ப்பையும் மீறி இலங்கை நீர்வரைவியல் சட்டமூலத்தைத் தயாரித்து, பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கின்றோம். இச்சட்டமூலத்தின் ஊடாக தேசிய நீர்வரைவியல் காரியாலயம் என்ற புதிய கட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டு, அதற்கான தலைமைத்துவத்தை வழங்கும் விதமாக சிரேஷ்ட நீர்வரைவியலாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டு, அதற்குப் பொருத்தமான ஒருவர் நியமிக்கப்படுவார். அதன்மூலம் நாட்டின் கடற்பிராந்தியத்தை முறையாக நிர்வகிக்கவும், அதனூடாக வருமானமீட்டவும் முடியும் என்று தெரிவித்தார்.

இலங்கை அரசு மீது சர்வதேச சமூகத்தின் கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டும்

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை எட்டும் முயற்சியை இழுத்தடிக்கும் இலங்கை அரசு மீது சர்வதேச சமூகத்தின் கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத் தூதுக்குழுவினர், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனை இன்று நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

குறித்த சந்திப்பின்போதே இரா.சம்பந்தன் ஐரோப்பிய நாடாளுமன்றத் தூதுக்குழுவினருக்கு இதனை வலியுறுத்தினார்.

அதேவேளை, வடக்கு – கிழக்கில் பௌத்த பிக்குகள், தமிழ் மக்களுக்கும், அவர்களின் பிரதிநிதிகளுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்றனர்.

அவர்கள் இனவாதத்தைக் கக்கி மதவாதத்தைத் தூண்டி வருகின்றனர். தமிழர் தாயகத்தில் என்றுமில்லாதவாறு பௌத்த மயமாக்கல் தற்போது தீவிரமடைந்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரச தரப்பினரிடம் நாம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.”

“அரசியல் தீர்வை எட்டும் முயற்சி அரசால் இழுத்தடிக்கப்படுகின்றது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இன்னமும் நீக்கப்படவில்லை. இந்த விடயங்களில் இலங்கை அரசு மீது சர்வதேச சமூகத்தின் கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டும் எனவும் இரா.சம்பந்தன் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.