ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான செனல் 4 குற்றச்சாட்டுகளுக்கு விசேட பாராளுமன்ற குழு நியமிக்க தீர்மானம்

இலங்கையில் இடம்பெற்ற ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் செனல் 4 தயாரித்துள்ள ஆவணப்பட நிகழ்ச்சி

தொடர்பில் விசேட பாராளுமன்ற குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய (04) அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

அது குறித்து இன்று (05) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அவர், தேவைப்பட்டால் சர்வதேச விசாரணை குறித்தும் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நியமனம் தொடர்பில் நேற்று கூடிய அமைச்சரவை தீர்மானம் எடுத்தது. அது தொடர்பில் எதிர்காலத்தில் அறிவிப்போம். மேலும் சர்வதேச விசாரணை அவசியமானால் அது பற்றியும் கலந்துரையாடினோம். ஜெனிவா மனித உரிமைகள் சபை கூட்டம் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் செனல் 4 இது போன்ற வீடியோக்களை தொடர்ந்து வௌியிடுகிறது. இந்த வீடியோவில் உள்ள விடங்களை நாம் கண்டிப்பாக ஆய்வு செய்ய வேண்டும்.

“இங்கும் கூறப்படும் திட்டத்தின்படி கோட்டாபய ராஜபக்ஷவை நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்படியயென்றால் அது வருந்தத்தக்க விடயமாகும் என்றார்.

இலங்கையில் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான சர்ச்சைக்குரிய ஆவணப்பட நிகழ்ச்சியின் ட்ரெய்லரையும் பிரித்தானியாவின் செனல் 4 வௌியிட்டுள்ளது.

அதன் முழு வீடியோ பிரித்தானிய நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு ஒளிபரப்பப்படவுள்ளது.

2018ஆம் ஆண்டு இலங்கை அரச புலனாய்வு சேவையின் சிரேஷ்ட அதிகாரியான சுரேஷ் சலேவுக்கும் ஏப்ரல் தாக்குதல் குண்டுதாரிகளுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றதாக வெளியான செய்தியின் அடிப்படையில் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் த டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, பிள்ளையான் குழுவின் ஊடகப் பேச்சாளராக இருந்த அசாத் மௌலானாவின் வௌிப்படுத்தலுக்கு அமைய இது அமைந்துள்ளது.

இன்று வெளியான ட்ரெய்லரின்படி, தொலைதூரப் பண்ணையில் அப்போதைய இராணுவப் புலனாய்வு பிரதானி சுரேஷ் சாலேவுக்கும் தவ்ஹீத் ஜமாத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே சந்திப்பை ஏற்பாடு செய்தது தாம் என ஆசாத் மௌலானா கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்தை ஒழுங்கமைக்குமாறு பிள்ளையான் என்ற இராஜாங்க அமைச்சர் சிவனேஷ்துரை சந்திரகாந்தன் தன்னிடம் கோரியதாக ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

அதற்கு முன்னர் சைனி மௌலவியை சந்திக்குமாறு அறிவுறுத்தியிருந்ததாகவும் ஆசாத் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.

அவர் ஏப்ரல் 21 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சஹாரானின் சகோதரர் என்பதை பின்னர் தான் கண்டுபிடித்ததாகவும் ஆசாத் மௌலானா கூறினார்.

நாட்டில் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கி, அதிகார மாற்றத்தை எளிதாக்க வேண்டும் என்ற வகையில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக செனல் 4 வீடியோவில் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இது தொடர்பான குற்றச்சாட்டுகளை சுரேஷ் சலே மறுத்துள்ளார் என்றும் செனல் 4 தெரிவித்துள்ளது.

சஹாரன் உள்ளிட்டோரை சந்தித்ததாக கூறப்படும் காலத்தில் தாம் மலேசியாவில் இருந்ததாகவும், ஏப்ரல் 21 தாக்குதல் நடந்தபோது இந்தியாவில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

வடக்கு ரயில் மார்க்கத்தை ஜனவரி முதல் மூட நடவடிக்கை

நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்காக எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வடக்கு ரயில் மார்க்கத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

06 மாதங்களுக்குள் வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயப்படுத்த திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை மணித்தியாலத்திற்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, கொழும்பு முதல் பாணந்துறை வரையிலான ரயில் மார்க்கத்தை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகள் எதிர்வரும் சில நாட்களுக்குள் ஆரம்பிக்கப்படுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

களனி மிட்டியாவத்தை ரயில் பாதையின் வேகக் கட்டுப்பாட்டை நீக்கி, வேகத்தை அதிகரிப்பதற்கான புனரமைப்பு பணிகளையும் இம்மாத முற்பகுதியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்திக்கு தாவிய அரசியல் பிரபலம்

ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அசங்க நவரத்ன, ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்ததன் பின்னர் அவர் இதனை அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசங்க நவரத்ன, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி குருநாகல் மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

பின்னர் அரசாங்கத்தில் இருந்து விலகி உத்தர லங்கா கூட்டணியில் இணைந்து செயற்பட்ட அவர் நேற்று (04) ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.

அதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

வடக்கு கிழக்கில் சட்டவிரோத விகாரைகளை அமைக்கலாம் என எந்த சட்டத்தில் உள்ளது? சபா குகதாஸ்

வடக்கு கிழக்கில் விகாரைகள் அமைக்கக் கூடாது என எந்த சட்டத்தில் இருக்கிறது? என்ற கேள்வியை தொல்லியல் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஊடகங்களில் முன் வைத்துள்ளார் அத்துடன் இலங்கை முழுவதும் இந்து ஆலயங்கள் இருக்குமாயின் ஏன் வடக்கு கிழக்கில் விகாரைகள் அமைக்க முடியாது என்ற கேள்வியையும் கேட்டுள்ளார்.

பௌத்த விகாரை தேவநம்பியதீசனால் இலங்கையில் அமைக்கப்படுவதற்கு முன்னர் இலங்கையின் ஐந்து திசைகளிலும் பஞ்ச ஈச்சரங்கள் அமைந்திருந்ததுடன் அனுராதபுரம் பொலநறுவை கதிர்காமம் போன்ற அனைத்து இடங்களிலும் சைவ ஆலயங்கள் அமைந்திருந்தன அத்துடன் இலங்கையின் சகல பாகத்திலும் அமைந்துள்ள இந்து ஆலயங்கள் சட்டரீதியாகவே அமைக்கப்பட்டுள்ளன நாட்டின் சட்டத்துக்கு முரணாகவோ அல்லது நீதிமன்ற கட்டளைகளை அவமதித்தோ கட்டப்பவில்லை என்பதை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிற்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றோம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் சட்டவிரோத விகாரைகள் அமைப்பதை நிறுத்துமாறும் தொல்லியல் என்ற போர்வையில் தமிழர்களின் பூர்வீக அடையாளங்களை சிங்கள பௌத்த அடையாளங்களாக மாற்றுவதை நிறுத்துமாறும் தமிழ் அரசியல்வாதிகள் மாத்திரமல்ல ஒவ்வொரு பிரதேச மக்களும் எதிர்க்கின்றனர் அத்துடன் அதனை ஒரு அநீதியாக பார்க்கின்றனர் என்பதை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும் நாட்டின் அனைத்து மக்களின் உரிமைகளுக்கும் ஆன தொல்லியல் திணைக்களத்தை இனவாத ரீதியாக ஒருதலைப் பட்சமாக வழி நடாத்துவதை ஐனநாயகம் என்ற பெயரில் நடைபெறும் அராஐயகமாகத் தான் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பார்க்கின்றனர்.

சட்டம் பற்றி பேசும் அமைச்சரே குருந்தூரில் நடந்தது சட்டமா? இந்த நாட்டின் நீதிமன்றம் சட்டவிரோத கட்டடம் என கட்டளை வழங்கிய பின்னரும் அதனை கையில் எடுத்து உங்கள் அமைச்சு கட்டி முடித்து என்ன? சட்டரீதியான செயற்பாடா? நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் காரணம் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய உங்கள் அமைச்சும் திணைக்களமும் நீதிமன்ற கட்டளையை அவமதித்தமை தொடர்பில்.

Posted in Uncategorized

நாட்டை விட்டு வெளியேறும் முன்னாள் ஜனாதிபதி!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பான புதிய தகவல்கள் கடந்த வாரம், ‘ஸ்டேட் சீக்ரெட்ஸ்’ அலைவரிசைக்கு தெரிவிக்கப்பட்டது.

இதன்படி அடுத்த சில வாரங்களுக்குள் கோட்டாபய ராஜபக்ஷ எகிப்து செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ஷ இரண்டு தடவைகள் துபாய், மியான்மர் போன்ற நாடுகளுக்கு உல்லாசப் பயணங்களுக்காக சென்றிருந்தார். இம்முறை எகிப்து செல்கிறார்.

தனது எகிப்து பயணத்தின் போது பெரும் அனுபவமாக கருதப்படும் நைல் நதியை ஒட்டிய ‘நைல் குரூஸ்’ பயணத்தில் கோட்டாபயவம் இணைந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.

யாழ்.மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் திறந்து வைப்பு

யாழ். மாவட்ட தேர்தல்கள் அலுவலக திறப்பு விழா இன்று(03) இடம்பெற்றது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் R.M.A.L.ரத்நாயக்க, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

முக்கிய வீடியோவை வௌியிடப்போகும் Channel 4

இலங்கை தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோவை நாளை ஒளிபரப்ப பிரித்தானியாவின் channel 4 ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2018ஆம் ஆண்டு இலங்கை அரச புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவருக்கும் ஏப்ரல் 21 தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சந்திப்பைக் குறிப்பிட்டு இந்த நிகழ்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் ‘த டைம்ஸ்’ நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானியாவின் Channel 4 இலங்கையில் போர்க்குற்றங்கள் நடந்ததாக பல சர்ச்சைக்குரிய வீடியோ காட்சிகளை ஒளிபரப்பி இலங்கையில் பிரபலமடைந்தது.

யுத்தம் முடிவடைந்த பின்னர், “இலங்கையின் கொலைக்களம்” (Sri Lanka’s Killing Fields) என்ற சர்ச்சைக்குரிய வீடியோவில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் பல சந்தர்ப்பங்களில் அப்போதைய அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக நிராகரிக்கப்பட்டன.

ஆனால் இலங்கையை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியவர்களை மேற்கோள்காட்டி இத்தகைய குற்றச்சாட்டுகள் அடங்கிய வீடியோக்கலை Channel 4 தொடர்ச்சியாக ஒளிபரப்பியது.

மீண்டும் நாளை இலங்கை தொடர்பான மற்றுமொரு சர்ச்சைக்குரிய வீடியோவை ஒளிபரப்பப் போவதாக அறிவித்துக்கொண்டு களம் இறங்குகிறது பிரித்தானியாவின் Channel 4.

தற்போது நாட்டை விட்டு வெளியேறி சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி வரும் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் குழுவின் ஊடகப் பேச்சாளராகப் பணியாற்றிய ஒருவரே இது தொடர்பான தகவல்களைத் தெரிவித்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

அதிகார மாற்றத்திற்கு தகுந்தாற்போல் நாட்டில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த சந்திப்பை ஏற்பாடு செய்ததாக குறிப்பிடப்படும் நபர் அதில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Posted in Uncategorized

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நீண்டகால தேவையினை பூர்த்தி செய்ய நடவடிக்கை – ஜனா எம்.பி

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நீண்டகால தேவையாகயிருந்த இருதய சிகிச்சைப்பிரிவிற்கான இருதய சோதனைக்கான இயந்திரத்தினை சுகாதார அமைச்சு வழங்குவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளதாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேசிய அமைப்பாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்று(02.09.2023) அவரது மட்டக்களப்பிலுள்ள அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை கூறியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முன்னுரிமை வழங்கி குறித்த இயந்திரத்தினை வழங்குவதற்கு சுகாதார அமைச்சரும் சுகாதார அமைச்சரின் செயலாளரும் உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 2021ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கென கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரமொன்று வேறுமாவட்டத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அதனை பெறுவதற்கு பல்வேறு பிரயனத்தனங்கள் செய்து கொண்டுவரப்படாத நிலையில் இந்த இயந்திரத்தினை கொண்டுவர அனைவரும் நடவடிக்கையெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது மயிலத்தமடு,மாதவனை பகுதியில் இடம்பெறும் சம்பவங்கள் குறித்து மாவட்ட அபிவிருத்திக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து வெளியிட்டுள்ளார்.

பிரதமர் வேட்பாளராகக் களமிறங்கப் போகும் விமுக்தி குமாரதுங்க?

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த அரசாங்கத்துக்கு உதவி வரும் எதிர்க்கட்சியின் முக்கிய அரசியல் அணியொன்று நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவருகிறது.

கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், விமுக்தி குமாரதுங்கவை வெளிநாடு ஒன்றில் சந்தித்து இது தொடர்பாக அறிவித்துள்ளார்
எனக் கூறப்படுகிறது.

இதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆசிர்வாதமும் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.

எது எப்படி இருந்தபோதிலும் விமுக்தி குமாரதுங்க இந்த விடயம் தொடர்பில் தனது இறுதி முடிவை அறிவிக்கவில்லை எனவும் பேசப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் அரசியலுக்கு வர உள்ளதாக கடந்த காலங்களில் பல செய்திகள் வெளியாகி இருந்தன.

எனினும் பிரிட்டனில் கால்நடை மருத்துவராக சேவையாற்றி வரும் விமுக்தி குமாரதுங்கவுக்கும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் கிடையாது எனக் கூறப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் விமுக்தியை அரசியலில் களம் இறக்கும் நோக்கமில்லை என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு-கிழக்கில் விகாரைகளை நிர்மாணிக்கக் கூடாது என எந்தச் சட்டத்தில் உள்ளது? – அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் தமிழர்களுக்காக இந்து ஆலயங்கள் உள்ளன. அவர்கள் அங்கு சென்று சுதந்திரமாக வழிபடுகின்றார்கள். இந்நிலையில், 25 மாவட்டங்களிலும் சிங்களவர்களுக்காகப் பௌத்த விகாரைகள் இருப்பதில் என்ன பிரச்சினை? வடக்கு – கிழக்கில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கக்கூடாது என்று எந்தச் சட்டத்தில் உள்ளது.”

– இவ்வாறு கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க.

‘திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேசத்தில் 10 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் 238 சிங்களவர்களுக்கு 23 பௌத்த விகாரைகள் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளன. 10 சிங்களவர்களின் வழிபாட்டுக்காகத் தலா ஒரு விகாரை வீதம் அமைக்கப்படவுள்ளது. குச்சவெளி பகுதியில் இந்தப் புதிய விகாரைகளை அமைக்கும் திட்டத்துக்கான அனுமதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது’ – என்று கடந்த வாரம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் பௌத்த விகாரைகள் இருக்கக்கூடாது – புதிதாக நிர்மாணிக்கப்படக் கூடாது என்று யார் சொன்னது? அப்படியாயின் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்களா? வடக்கு – கிழக்கில் மாத்திரம் தமிழர்களுக்கு இந்து ஆலயங்கள் அமைக்கப்படவில்லை. நாட்டின் 25 மாவட்டங்களிலும் தமிழர்களுக்காக இந்து ஆலயங்கள் உள்ளன. சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் இந்து ஆலயங்கள் பெருமளவில் உள்ளன. உதாரணத்துக்குக் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் எத்தனை இந்து ஆலயங்கள் உள்ளன? அங்கு மூலைமுடுக்கெல்லாம் பெரிய, சிறிய இந்து ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிராகச் சிங்கள பௌத்தர்கள் போர்க்கொடி தூக்கினார்களா? பல இடங்களில் இந்து ஆலயங்களுக்குச் சென்று சிங்கள பௌத்தர்கள் கூட வழிபடுகின்றார்கள்.

எனவே, தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஊடகங்களும் இனவாதத்தை – மதவாதத்தைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.

இன்று நாட்டு மக்களுக்கிடையில் இனவாத, மதவாதப் பிரச்சினைகள் இல்லை. தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஊடகங்களும்தான் இப்படியான பிரச்சினைகளைத் தூண்டி விடுகின்றன.” – என்றார்.