சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான நீதியை இலங்கை அரசு வழங்க வேண்டும் – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

இலங்கை அரசு கொண்டிருக்கும் சர்வதேச கட்டுப்பாடுகளுக்கு அமைவாக சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும், அவர்கள் முகங்கொடுத்த அநீதியிலிருந்து முழுமையாக மீள்வதற்கு அவசியமான புனர்வாழ்வளித்தல் செயன்முறை உரியவாறு பூர்த்திசெய்யப்படுவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவு தொடர்பான சர்வதேச தினத்தை (26) முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது.

அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

சித்திரவதைகளிலிருந்து விலக்கீடு பெறுதல் என்பது எந்தவொரு சூழ்நிலையிலும் மட்டுப்படுத்தப்படமுடியாத மனித உரிமையாகும்.

இருப்பினும் இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் உளவியல் மற்றும் உடலியல் ரீதியான சித்திரவதைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன.

இந்த மிகமோசமான மனித உரிமை மீறலின் பாரதூரமான பின்விளைவுகளை சித்திரவதைக்கு உள்ளான தரப்பினர் மாத்திரமன்றி, அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நேரில் பார்த்த சாட்சியங்களும் அனுபவிக்கவேண்டியுள்ளது.

எனவே சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவு தொடர்பான சர்வதேச தினத்தில் (நேற்று முன்தினம்) மேற்குறிப்பிட்டவாறு பாதிக்கப்பட்ட தரப்பினர், அவர்களது குடும்பத்தினர் மற்றும் சாட்சியங்களுக்கு அவசியமான ஆதரவு அனைத்து வழிகளிலும் வழங்கப்படுவதை உறுதிசெய்யவேண்டுமென மீளவலியுறுத்துகின்றோம்.

நாம் எமது விசாரணை செயன்முறையின் ஊடாக எமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்கீழ் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நியாயத்தையும், இழப்பீட்டையும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றோம்.

இருப்பினும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீட்டுக்கு அப்பால், அவர்கள் முழுமையாக மீள்வதற்கு அவசியமான உளவியல் ஆலோசனை வழங்கல் மற்றும் புனர்வாழ்வளித்தல் என்பன அவசியமாகின்றன.

அதேவேளை ஒடுக்குமுறைகள் தொடர்பான அச்சம் மற்றும் கடந்தகாலங்களில் பதிவாகியுள்ள தண்டனைகளிலிருந்து விலக்கீடு பெறும் போக்கு என்பவற்றின் காரணமாக சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களும், சாட்சியங்களும் அநேக சந்தர்ப்பங்களில் நீதிக்கட்டமைப்பை அணுகுவதிலிருந்து விலகியிருக்கின்றனர்.

எனவே இலங்கை அரசு கொண்டிருக்கும் சர்வதேச கடப்பாடுகளுக்கு அமைவாக எவ்வித ஒடுக்குமுறைகளுமின்றி பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும், அவர்கள் முகங்கொடுத்த அநீதியிலிருந்து முழுமையாக மீள்வதற்கு அவசியமான புனர்வாழ்வளித்தல் செயன்முறை உரியவாறு பூர்த்திசெய்யப்படுவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகின்றோம்.

அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்ட தரப்பினருக்குரிய மருத்துவ, சட்ட, சமூக மற்றும் உளவியல்சார் உதவிகளை வழங்குவதை முன்னிறுத்தி சமூக நலனோம்பு அமைப்புக்கள், விசேட நிபுணர்கள், தனிநபர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயலாற்ற முன்வரவேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரித் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரித் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தின் அனுமதிக்கு சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சமூகப் பாதுகாப்புப் பங்களிப்பு வரிச் சட்டத்திற்கான திருத்தப்பட்ட சட்டமூலத்தை தயாரிப்பதற்கு கடந்த ஜனவரி 30 ஆம் திகதி அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டது.

இதேவேளை, மத சுதந்திரத்தை இழப்பதையும், மத விடயங்களை திரிபுபடுத்துவதை தடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தவும் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, சம்பந்தப்பட்ட குழுவில் அனைத்து மதங்களின் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் ஊடகங்கள் மற்றும் சிவில் சமூக செயற்பட்டாளர்கள் உள்ளடக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவு பட்டியலில் உள்வாங்கப்படாதவர்கள் மேன்முறையீடு செய்ய 10 ஆம் திகதி வரை கால அவகாசம்

யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி பதிவுகளில் ஏதாவது முறைகேடு இடம்பெற்றிருந்தால் அதற்கு மேன்முறையீடு செய்வதற்கு 10 ஆம் திகதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ஆ,சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி பதிவுகளில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து நேற்று திங்கட்கிழமை யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இந்த விடயம் தொடர்பாக வினவிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி பதிவுகளில் முரணப்பாடுகள் இருந்தால் அனுப்பிவைக்கப்படும் மேல்முறையீடுகள் பரிசீலனை செய்யப்பட்டு அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடைய தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் முதியோர்கள், விதவைகள் என வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாததால் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் இடமபெற்றமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு துறைமுக நகரத்தில் சீனா 1.2 பில்லியன் டொலர்கள் முதலீடு

கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக China Harbour Engineering ஒத்துழைப்பு தெரிவித்துள்ளது.

பெய்ஜிங்கில் இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி மற்றும் CHEC இன் தலைவர் Bai Yinzhan ஆகியோருக்கு இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச நிதி மையத்துடன் CHEC தனது முதலீடுகளை ஆரம்பிக்கும் என சீனாவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சீனாவின் Exim வங்கி தலைவர் ஆகியோருக்கிடையில் சந்திப்பில் கடன் மறுசீரமைப்பு செயல்முறை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு சீனாவின் Exim வங்கி ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து மாகாண சபைகளுக்கும் மேலதிக அதிகாரப்பரவலாக்கம் வழங்க பேச்சுவார்த்தை முன்னெடுப்பு – ஜனாதிபதி

வடக்கு மாகாணசபைக்கு மாத்திரமல்லாது நாட்டிலுள்ள ஏனைய மாகாணசபைகளும் உள்ளடங்கலாக மேலதிக அதிகாரப் பரவலாக்கம் குறித்துப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய விஜயத்தின் போது பிரான்ஸ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.

வேறுபட்ட தரப்பினருடன் விவாதங்கள் நடந்து வருகின்றன. கடன் மறுசீரமைப்பு திட்டம் புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும், வார இறுதியில் அவர்கள் அதை இறுதி செய்வார்கள். அது வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்திற்கு செல்லும்.

பின்னர் பொது நிதிக் குழுவிலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்படும். அதன்பிறகு, கடனாளிகளுடன் எஞ்சிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முடியும்.

கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிப்பதற்கும், செலுத்த வேண்டிய தொகையை ஏதேனும் ஒரு வகையில் குறைப்பதற்கும் இலங்கை பரிசீலித்து வருகின்றது.

இதேநேரம் அரசியல் தீர்வு , அதிகார பரவலாக்கம் குறித்து தமிழ்த் தலைவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை சாதகமான முறையில் அணுகுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஜெனிவா கூட்டத் தொடரிலும் இவ் ஆணைக்குழுவின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இலங்கை தெளிவுபடுத்தியுள்ளது.

சர்வதேச கண்காணிப்பாளர்களின் பங்குபற்றலுடன் அந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். ஓகஸ்டில் இந்நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.

குறிப்பாக தமிழ் அரசியல் தலைவர்கள் அரசியல் தீர்வு குறித்தும் அதிகார பரவலாக்கம் குறித்தும் கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றனர்.அந்த கோரிக்கைகளை சாதகமான முறையில் அணுகுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

எவ்வாறாயினும் ஏற்கனவே நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் மாகாணசபைக்கு குறிப்பிட்டளவு அதிகார பகிர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் தலைவர் மேலும் சில அதிகாரங்களைக் கோருகின்றனர்.

வடக்கு மாகாணசபைக்கு மாத்திரமல்லாது நாட்டிலுள்ள ஏனைய மாகாணசபைகளும் உள்ளடங்களாக மேலதிக அதிகார பரவலாக்கம் குறித்தும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருகிறது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மத சுதந்திரம் தொடர்பில் ஆராய குழு

மத சுதந்திரத்தை பறித்தல் மற்றும் மத உண்மைகளை திரிபுபடுத்துதல் போன்றவற்றை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பௌத்த, முஸ்லிம், இந்து, கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள், ஊடகங்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட குழுவை நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், மத போதனைகளை அவதூறு செய்வதைத் தடுக்கவும் சட்ட விதிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இந்தியாவுக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு இலங்கையை ஒரு தளமாகப் பயன்படுத்த முடியாது – ரணில் விக்கிரமசிங்க

இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் இலங்கையை ஒரு தளமாகப் பயன்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ‘பிரான்ஸ் 24’ இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்தார்.

இலங்கையில் சீனாவின் பிரசன்னம் தொடர்பாக குறித்த நேர்காணலில் கேள்வியெழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில். “அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து ஊகங்கள் நிலவுகின்றன. சீன வர்த்தகர்களுக்கு அது வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. தெற்கு கடற்படை கட்டளை அம்பாந்தோட்டைக்கு மாற்றப்படும். ஹம்பாந்தோட்டை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் எங்களிடம் ஒரு படையணி உள்ளது.

சீனாவின் இராணுவப் பயன்பாடு குறித்து நிச்சயமாக எந்தப் பிரச்சினையும் இல்லை. இதே நிறுவனம் கொழும்பு துறைமுகத்தில் தெற்கு துறைமுகத்தில் ஒரு முனையத்தையும் நடத்தி வருகிறது. அதனால்தான் எல்லா நாடுகளிலிருந்தும் போர்க்கப்பல்கள் வருகின்றன. முனையம் பற்றி யாரும் குறை கூறவில்லை; அவர்கள் கொழும்பைச் சுற்றி பயணிக்கின்றனர், ஆனால் அவர்கள் முனையத்தைப் பற்றி மட்டுமே புகார் செய்கிறார்கள். அவர்கள் நிர்வகிக்கும் துறைமுகம் அம்பாந்தோட்டை. எனவே, சீனாவுடன் எங்களுக்கு இராணுவ ஒப்பந்தம் இல்லை; இராணுவ உடன்படிக்கைகள் எதுவும் இருக்காது, சீனா அதில் நுழையும் என்று நான் நினைக்கவில்லை.

இலங்கை ஒரு நடுநிலை நாடு, ஆனால் இந்தியாவிற்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் இலங்கையை ஒரு தளமாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்பதையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சினுள்ளும் வாகனங்கள் மாயம்!

சுகாதார அமைச்சின் 1794 வாகனங்கள் காணாமல் போயுள்ள அதேநேரம் 259 வாகனங்கள் வெளி தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனங்கள் 1950 மற்றும் 1996 க்கு இடையில் பதிவு செய்யப்பட்டவை என பொதுக் கணக்குகள் தொடர்பான நாடளுமன்றக் குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

இந்த வாகனங்களில் 679 கார்கள் மற்றும் 1115 மோட்டார் சைக்கிள்கள் அடங்கும் என்றும் இந்த வாகனங்கள் தொடர்பான வருவாய் உரிமம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1115 மோட்டார் சைக்கிள்களில் பதினொரு மோட்டார் சைக்கிள்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே தெரியவந்துள்ளதாகவும் அதில் பெரும்பாலான மோட்டார் சைக்கிள்கள் கள அதிகாரிகளுக்கே வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், இந்த மோட்டார் சைக்கிள்கள் ஒப்பந்தத்தின் கீழ் கள உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படுவதாகவும், அவர்கள் ஓய்வு பெற்ற பின்னர் தனிப்பட்ட முறையில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 425 வாகனங்கள் பற்றிய தகவல்களை வெளிக்கொணர முடிந்த போதிலும், அவை விற்கப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டதா என்பதை கண்டறிவது கடினமாக உள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இங்கு வாகன நிர்வாக முறைமை தொடர்பில் கோபா குழுவின் தலைவர் விசாரணைகளை மேற்கொண்டதுடன், அந்த முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாகனங்கள் காணாமல் போவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோபா குழுத் தலைவர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

மகாவம்சம் உலக நினைவக மரபுரிமை ஆவணமாக யுனெஸ்கோவினால் அங்கீகாரம்

இலங்கையின் வரலாற்றைக் கூறும் நூலான மகாவம்சத்திற்கு யுனெஸ்கோ ஸ்தாபனத்தினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாச்சார ஸ்தாபனமான யுனெஸ்கோ (UNESCO), தமது சர்வதேச நினைவகத்தில் பாதுகாத்துவரும் ஆவணப் பொருட்களின் பட்டியலில் மகாவம்சத்தினையும் இணைத்துள்ளது.

கி.பி 6 ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்து இலங்கையின் வரலாற்றைக்கும் கூறும் மகாவம்சத்தின் நம்பகத்தன்மை இலங்கையிலும் இந்தியாவிலும் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

மேலும் மகாவம்சம் தென்கிழக்கு ஆசியாவில் பௌத்தத்தை பிரபலப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது எனவும் மகாவம்சத்தின் பல கையெழுத்துப் பிரதிகள் பல நாடுகளில் இருப்பதுடன், இந்நூல் பேரரசர் அசோகரின் வரலாற்றை அறிய பெரும் பங்காற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் 13ஐ நடைமுறைப்படுத்த இந்தியா துணைநிற்கும் – பிரிட்டன் தமிழர் மத்தியில் அண்ணாமலை

காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழர்களுக்கு இந்தியா துணைபுரியும் என்று இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கு. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

லண்டன் – பர்மிங்ஹாமில் “தமிழராய் இணைவோம் – என் மண் – என் மக்கள்” என்ற இலங்கை – இந்திய புலம் பெயர் தமிழர்கள் பங்கேற்ற நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அத்துடன், “2009 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் மீது பெரும் போரை நடத்தியபோது, அதனைத் தடுக்க அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி, தி. மு. க. கூட்டணிகள் தவறிவிட்டன.

ஆனால், பாரதிய ஜனதா கட்சி இந்தப் போரை எதிர்த்தது”, என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தல், மற்றும் பா. ஜ. க. அரசாங்கத்தின் கடந்த 9 ஆண்டுகால சாதனைகள் குறித்தும் அவர் இதன்போது விளக்கமளித்தார்.