கஜேந்திரகுமார் எம்.பிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – சிங்கள ராவய

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி சிங்கள ராவய அமைப்பினால்  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம்  கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு செவ்வாய்க்கிழமை (6) காலை வந்த அக்மீமன தயாரட்ன தேரர் தலைமையிலான  சிங்கள ராவய அமைப்பினர்   சபாநாயகரை சந்திக்க முயன்றபோதும்  அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

சபாநாயகருக்கு பதிலாக பாராளுமன்ற உதவி செயலாளர் நாயகம்  ஹன்ஸ  அபேரத்ன கடிதத்தை பெற்றுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து இந்த கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற உறுப்பினர்  சிறப்புரிமை, அதிகாரத்தை பயன்படுத்தி குழப்பங்களை விளைவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளார்.

ஆகவே அவருக்கு எதிராக aமென அக்கடிதத்தில் சிங்கள ராவய அமைப்பினர்  வலியுறுத்தியுள்ளதாக  அறிய முடிகிறது.

மலையக மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கலந்துரையாடல்

மலையக பெருந்தோட்ட மக்களின் எதிர்கால பாதையை மாற்றுவதற்கான தருணமே இது. மலையக மேம்பாட்டுக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் அழைப்பின் பேரில் நுவரெலியா மாவட்டத்துக்கு களப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க தூதுவர், பல தரப்பு சந்திப்புகளில் ஈடுபட்டதுடன், மக்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் சந்தித்து பேச்சு நடத்தினார்.

இவ்விஜயத்தின் ஓரங்கமாக அட்டனில் உள்ள தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்துக்கு சென்ற அமெரிக்க தூதுவருக்கு, உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

அதன்பின்னர் அதிகாரிகள் மற்றும் அங்கு பயிற்சிபெறும் மாணவர்களுடன் தூதுவர் கலந்துரையாடினார். இதன்போது, இருதரப்பு உறவுகளுக்கான நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி காந்தி சௌந்தர்ராஜன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, அமைச்சர் ஜீவன் தொண்டமானின் இணைப்புச்செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ் ஆகியோருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட அமெரிக்க தூதுவர் ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப கல்விக்கு உதவிகள் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

அத்துடன், கல்வி, சுகாதாரம் என மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் இணக்கம் தெரிவித்தார்.

மேலும், ” நுவரெலியா மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மலையக பெருந்தோட்ட மக்கள் கடந்த காலங்களில் பல சவால்களை எதிர்கொண்டனர். பல தடைகள் இருந்தன. இதனை நான் அறிவேன். எனவே, மலையக பெருந்தோட்ட மக்களின் எதிர்காலத்துக்கான பாதையை மாற்றுவதற்கான சிறந்த தருணமே இது.

இலங்கை தற்போது மீண்டெழுகின்றது. வர்த்தகம் மற்றும் முதலீடுகளை கொண்டு வருவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். உங்களுக்கு உதவுவதற்கான பங்காளியாக நாம் இருப்போம்.” – என்றார்.

துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் – சபா நாயகர் மஹிந்த யாப்பா இடையே சந்திப்பு

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற தையிப் எர்டோகனின் உத்தியோகபூர்வ அரச வைபவத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கலந்துகொண்டார்.

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பல வருட கால இராஜதந்திர உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு சபாநாயகர் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சமீபத்தில் உலகையே உலுக்கிய துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முன் வந்த இலங்கைக்கு ஜனாதிபதி எர்டோகன் நன்றியும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் இலங்கையுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பிலும் இலங்கையும் அமெரிக்காவும் கலந்துரையாடியுள்ளன.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கும், ஆசியாவிற்கான அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபேர்ட் கப்ரோத்துக்கும் இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இக்கலந்துரையாடல் பலனளித்ததாகவும், இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாட்டை படிப்படியாக தளர்த்துவதற்கான திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பேசப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார மீட்புச் செயற்பாட்டிற்கான தொடர்ச்சியான ஆதரவிற்காக அமெரிக்க அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவிற்கும் இராஜாங்க அமைச்சர் இதன்போது பாராட்டு தெரிவித்தார்.

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு கஜேந்திரகுமார் எம்.பிக்கு அழைப்பு

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் நாளையதினம் ஆஜராகுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் நாடாளுமன்றத்தில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்கு செல்லும் நிலையில் இந்த அழைப்பு பொலிஸாரினால் விடுக்கப்பட்டுள்ளது என அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தான் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவுள்ளதால் இது குறித்து சபாநாயகருக்கு அறிவிக்க உள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

சபாநாயகரிடம் கலந்துரையாடிய பின்னர் அடுத்த நடவடிக்கைகள் குறித்து முடிவை எடுப்பேன் என பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிக்கு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் சபாநாயகரை தொடர்புகொள்ள எடுத்த முயற்சி பயனளிக்கவில்லை என்றும் குறுஞ்செய்தி ஒன்றினை அவருக்கு அனுப்பியுள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் இச்சம்பவம் தொடர்பாக பிரதி சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற அமர்வுகள் முடிவடைந்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க ஒப்புக்கொண்டார் என்றும் கூறியுள்ளார்.

பொன் சிவகுமாரனின் அர்ப்பணிப்பினாலேயே தமிழ் மக்கள் போராட்டம் சர்வதேசம் கவனம் பெற்றது – சிவாஜிலிங்கம்

தியாகி பொன் சிவகுமாரனின் அர்ப்பணிப்பினாலேயே தமிழ் மக்களின் போராட்டம் மிக வேகமாக முன்னேறி சர்வதேசம் கண்காணிக்குமளவிற்கு மாற்றப்பட்டது என முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இன்றையதினம் யாழ் உரும்பிராயில் இடம்பெற்ற தியாகி பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களிட்ம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழினத்திற்கெதிரான அடக்குமுறைகள் கட்டங்கட்டமாக முன்னேறிக்கொண்டிருந்த காலப்பகுதியில் தமிழ் மக்களின் உயர் கல்வியைப் பறிக்கின்ற தரப்படுத்தலு்கெதிராக போராட முற்பட்ட மாணவரணியில் முன்னணியி்ல் செயற்பட்டவர் தான் தியாகி பொன் சிவகுமாரன்.

தமிழாராய்ச்சி மாநாட்டில் 9 பேர் பொலிசாரால் கொலை செய்யப்பட்ட சம்பவமும் அவரது மனதில் காயத்தை ஏற்படுத்திய காரணத்தினால் அவர் வன்முறையைதன தவிர வேறு வழியில்லை எனப் பல தாக்குதல்களைத் தொடுத்திருந்தார்.

அந்த காப்பகுதியில் பணத்தேவைக்காக வங்கியைக் கொள்ளையிட முயன்ற போது பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்ட வேளையில் சயனைட் அருந்தி வீரமரணத்தைத் தழுவி்க்கொண்டார்.

வீர மரணத்தைத் தழுவிய மறுநாள் ஒரு சிலரே இறுதிக்கிரியைகளில் பங்கெடுத்திருந்த நிலையில் மறுநாள் இறுதிக்கிரியைகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் பல்லாயிரக்கணக்கில் தமிழ்த் தலைவர்கள் மற்றும் மக்கள் திரண்டிருந்தனர்.

உரும்பிராய் வேம்பன் மயானத்திலே பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த வேளையிலே அவரது உடல் வைக்கப்பட்ட.பெட்டியை செங்குத்தாக மக்களுக்கு காண்பிக்கக்கூடிய நிலைகூடத் தோன்றியது.

முதலாவது போராளியாக தன்னை ஈகம் செய்த இழப்பு பேரிழப்பாகும். அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் கூட நாங்கள் சந்தித்துப் பேசியிருந்தோம். அவ்வாறு அர்ப்பணிப்பற்ற முறையிலே அவர் செய்த ஈகம் தான் போராட்டத்திற்கான வீச்சை வழங்கியது. அது பின்னாளியே நடைமுறை அரசாங்கமாக கட்டியெழுப்பப்படுவதற்கு வழிவகுத்தது.

அவரது தியாகம் பலரது கண்களை விழிக்க வைத்ததுடன் தமிழீழப் போராட்டத்தின் திருப்பு முனையாக இருந்தது. அதன் பின்னே இளைஞர்கள் இயக்கங்களில் இணைந்து போராட்டம் மிக வேகமாக முன்னேறி சர்வதேசம் கண்காணிக்குமளவிற்கு மற்றப்பட்டதும் சிவகுமாரனின் அர்ப்பணிப்பே காரணம்.

அண்மையிலும் லண்டனில் இவர்களுடன் செயற்பட்ட பல தலைவர்களைச் சந்தித்த போது தியாகி சிவகுமாரன் பற்றிய பல விடயங்களை உரையாடியிருந்தனர்.

இவரது திருவுருவச் சிலை பல சந்தர்ப்பங்களில் உடைக்கப்பட்டது. 1975 ம் ஆண்டு 1 வது நினைவேந்தலிலே கவிஞர் காசியானந்தன் தலைமையில் இடம்பெற்ற சிலை திறப்பு விழாவிற்கு தந்தை செல்வா கூட பிரசன்னமாயிருந்தார்.

பல்லாயிரக்கணக்கான மக்களின் இதயத்திலிருக்கும் தலைவராக சிவகுமாரன் விளங்கினார் என்றால் மிகையாகாது. தமிழீழ இலட்சியத்திற்காக தன்னுயிரை ஈந்த அவரின் தியாகம் போற்றப்பட வேண்டும். – என்றார்

நீண்ட போராட்டத்திற்கு எங்களைத் தயார்ப்படுத்தாமல் விட்டால் இவளவு காலமும் செய்த தியாகங்கள் விழலுக்கு இறைத்ததாகிப் போய்விடும் – சுரேஸ் பிரேமச்சந்திரன் கவலை

நீண்ட போராட்டத்திற்கு எங்களைத் தயார்ப்படுத்தாமல் விட்டால் இவ்வளவு காலமும் செய்த தியாகங்கள் விழலுக்கு இறைத்ததாகிப் போய்விடும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற சிவகுமாரின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

1974 ம் ஆண்டு தமிழாராட்சி மாநாட்டில் பல பேர் கெல்லப்பட்டமைக்கு காரணமாயிருந்த பொலிஸ் பொறுப்பதிகாரியை பழி தீர்க்க வேண்டுமென சிவகுமாரன் உட்பட்டோரால் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் பல கட்டங்களைக் கண்டு ஆயுதப் போராட்டமாக 2009 வரை நீடித்தது.

24 வயதில் தனது உயிரை ஈழ விடுதலைக்காக ஈந்த பொழுது நாங்கள் மாணவனாக இருந்தோம். பொன் சிவகுமாரனின் இறுதியஞ்சலியில் கலந்து கொண்டது. இன்றும் பசுமையாக ஞாபகத்தில் இருக்கின்றது.

அவருக்கும் எனக்கும் 7 வயது இடைவெளி காணப்படும் வேளை இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால் 73 வயதை அடைந்திருப்பார்.

வருகின்ற வருடம் அவர் இறந்து 50 வது வருடத்தைக் கொண்டாடவுள்ள நிலையில் ஈழ விடுதலைக்காக அவர் ஆரம்பித்து வைத்த யுத்தம் 2009 வரை பல்லாயிரக்கணக்கான மக்கள் , போராளிகள் எனக் கொலை செய்யப்பட்டாலும் இன்றும் நாங்கள் இராணுவ அடக்குமுறைக்குளிருக்கும் துப்பாக்கிய சூழ்நிலைக்குள் தான் இருக்கின்றோம்.

இன்றைய நிலையில் வடகிழக்கு முழுவதும் சி்ங்கள பௌத்த மேலாதி்கத்தை நிறுவுவதற்கான போக்கையே காண முடிகின்றது. ஆகவே நாங்கள் பல தூரம் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

நீண்ட போராட்டத்திற்கு எங்களைத் தயார்ப்படுத்தாமல் விட்டால் இவளவு காலமும் செய்த தியாகங்கள் விழலுக்கு இறைத்ததாகிப் போய்விடும்.

இன்று இலங்கை பொலிஸ் , இராணுவம் உட்பட உயர் மட்டத்திலுள்ளோர் தமிழ் மக்களை குத்திக் குதறப்பட வேண்டிய இனமாகத்தான் பார்க்கின்றார்கள்.அன்று பாராளுமன்ற உறுப்பினர்களான அமிர்தலிங்கம் , யோகேஸ்வரன் தாக்கப்பட்டதைப் போன்று இன்று தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்கப்படும் நிலை தோன்றியுள்ளது.

அந்த வகையில் தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுத்து சுயாட்ச பிரதேசத்தில் தமது பிரச்சினைகளை கௌரவமாக வன்றெடுக்கக்கூடியநிலைக்கு மாற்றப்பட வேண்டுமாயின் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்கள் ஐக்கியப்பட்டு செயற்படத் தவறும் பட்சத்தில் தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைக்கின்றோம் என்பதே கருத்தாகும் எனக் குறிப்பிட்டார்.

முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி பொறுப்பாளர் கைது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி பொறுப்பாளர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி பொறுப்பாளர் சற்குணதேவியின் வீட்டினை சுற்றிவளைத்த மருதங்கேணி பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

அவர் கைது செய்யப்பட்ட காரணத்தை தெரிவிக்காமல் வாகனத்தில் ஏற்றிச் சென்ற பொலிஸார் அவரை தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேநேரம் சற்குணதேவியின் வீட்டிற்கு சென்ற இனந்தெரியாதவர்கள் அவரை அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் நேற்று தெரிவித்திருந்தார்.

இராணுவ புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்கள் என கூறி அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஓ.எம்.பி அலுவலகத்தில் எமக்கு நம்பிக்கை இல்லை; வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் தெரிவிப்பு

ஓ.எம்.பி அலுவலகத்தில் எமக்கு நம்பிக்கை இல்லை எனவும் அதேவேளை தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு அறிமுகப்படுத்தப்படும் பொறிமுறை எமக்கு நம்பிக்கையில்லை என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தூதரக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர் சமூகம் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

இன்றைய தினம் அமெரிக்க தூதரகத்தில் இருந்து வருகை தந்த 4 அதிகாரிகளை சந்திப்பதற்காக வந்திருந்தோம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கவிதா ரதீஸ்வரனும், யாழ்மாவட்டத்தினை சேர்ந்த ஸ்ரீ நிலோயினியும் இந்த சந்திப்பில் என்னுடன் கலந்து கொண்டனர்.

நான்கு அதிகாரிகளில் ஒருவர் கொழும்பு தலைமையகத்தில் இருந்தும் ஏனைய மூவரும் அமெரிக்க ராஜாங்க அமைச்சில் இருந்து வந்தும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறைக்கு பொறுப்பானவர்கள். அதில் மனித உரிமை, மத சுதந்திரம் மற்றும் நீதி பொறிமுறைகளை என வேறு வேறு துறைகளிற்கு பொறுப்பானவர்கள்.

அந்த வகையில், எமது துயரங்களை மனம் விட்டு அவர்களிடம் தெரிவித்தும் நாம் எதிர்பார்க்கும் தீர்வுகளை பொறுமையாகவும், விளக்கமாகவும் கூறியிருந்தோம்.

அத்துடன் ஓ.எம்.பி அலுவலகத்தில் நம்பிக்கை இல்லை என்றும் அத்துடன் தற்பொழுது தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு அறிமுகப்படுத்தப்படும் பொறிமுறை குறித்தும் அதிருப்தியை வெளியிட்டோம்.

அவர்கள் நாம் கூறியவற்றை பொறுமையாக கேட்டனர். நம்பிக்கை தரும் விதமாக நாம் உரையாடியதன் காரணமாக எமது பேச்சுவார்த்தையை 1 மணித்தியாலங்களில் முடித்து கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

சீனாவில் இருந்து மீளவும் நேரடி விமான சேவைகள் – ஹரின் பெர்னாண்டோ

சீன சுற்றுலா குழுமத்தின் தலைவர் சென் யிம், சீன தேசிய சுற்றுலா பயணிகளை சிறிலங்காவிற்கு அழைத்து வர தேவையான உதவிகளை வழங்குதல் தொடர்பில் உறுதியளித்துள்ளதாக சுற்றுலா மற்றும் காணி விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சீனக் குடியரசில் சுற்றுலா சேவைகளை வழங்கும் பிரதான அமைப்பான சீன சுற்றுலா குழுமத்தின் தலைவர் சென் யிம் உள்ளிட்ட குழுவினர் சிறிலங்காவிற்கு வருகை தந்த போது சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுடன் கலந்துரையாடியதன் பின்னர் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், உலகளாவிய தொற்றுநோய் நிலைமைக்கு முன்பு இருந்ததைப் போலவே சீனாவிலிருந்து நேரடி விமான சேவைகளை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்திருந்ததாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சீனாவில் இதுவரை விமான சேவைகளை ஆரம்பிக்காத விமான நிறுவனங்களை அழைக்க முன்மொழிவொன்றை முன்வைத்திருந்ததாக ஹரின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைவாக, சீன சுற்றுலா குழுமத்தின் தலைவர் சென் யிம், பிரதான குழுவின் உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.