யாழில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச ஊடக சுதந்திர தினமான இன்று ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி யாழ்.ஊடக அமையத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.ஊடக அமையத்தின் முன்றலில் இன்றையதினம்(03.05.2023) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும், கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மூத்த ஊடகவியலாளரின் கருத்து

இந்த போராட்டத்தின்போது மூத்த ஊடகவியலாளர் குமாரசாமி செல்வகுமார் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படும்போதும் பேனாவுடனே அலைந்த எமக்கு ஊடக சுதந்திரம் உறுதிபடுத்தபடுத்தப்பட வேண்டும் என மூத்த ஊடகவியலாளர் குமாரசாமி செல்வகுமார் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஊடகவியலாளர்களது பிரச்சினை தொடர்ந்த வண்ணமே உள்ளன. ஊடகவியலாளர்களின் கருத்துக்களை காது கொடுத்து கேட்க கூட இந்த அரசாங்கம் தயங்குகின்றது.

பயங்கவாத சட்டம் என்பது மூன்று தசாப்த காலம் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட போது இங்கே இருந்தது. இப்பொழுது அந்த சட்டத்தை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கிறார்கள்.

எமக்கும் உரிமை இருக்கிறது

ஆனால் இந்த சட்டத்தை கண்டு நாங்கள் பயப்படவில்லை. அதாவது எமது சக ஊடகவியலாளர்கள் வீதிகளில் சுடப்பட்ட பொழுது நாம் பேனாவை மட்டுமே கையில் கொண்டு அலைந்தோம். இந்த அட்டூழியங்களை பேனா கொண்டு தான் சர்வதேசத்திற்கு சொன்னோம். இந்த நாட்டில் இருக்க எமக்கு உரிமை இருக்கிறது.நாங்கள் புதிதாக ஒன்றும் கேட்கவில்லை.

இந்த நாட்டிலே வாழுகின்ற மக்கள் கேட்கின்ற அதே விடயங்களை தான் நாமும் கேட்கின்றோம். நாங்கள் புதிதாக எதனையும் கேட்கவில்லை .எமது சக ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணம் என்ன?

நீதி வேண்டும்

சுடப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு விசாரணை வேண்டும் நீதி வேண்டும் சர்வதேசம் இதனை பார்க்க வேண்டும். உலகில் சின்ன நிலபரப்பாக இருக்கும் இங்கு இடம்பெறும் விடயங்கள் பெரிதாக பேசப்படுகின்றனவே தவிர எந்தவொரு நடவடிக்கையும் எடுத்ததாக இல்லை.

விலை பேசும் உலகில் ஒவ்வொரு நாடுகளும் தம்முடைய தேவைக்காக இலங்கையை பயன்படுத்துகின்றன. இந்த மக்கள் சிறுபான்மையினரை கண்டுகொள்ளாமல் இருப்பதை நாங்கள் சுட்டிகாட்டிகொண்டே இருப்போம்.

எங்கள் ஊடகவியலாளர்கள் பணியாற்றி படுகொலை செய்யப்பட்டவர்களின் பாதையில் நாமும் பயணிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஊழியர் குற்றப்பத்திரத்தை திருத்த அனுமதி

2019ஆம் ஆண்டு வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக பொய்க் குற்றச்சாட்டை முன்வைத்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஊழியர் கனியா பனிஸ்டர் பிரான்சிஸுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை திருத்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலேல்ல சட்டமா அதிபருக்கு, புதன்கிழமை (03) அனுமதி வழங்கினார்.

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி அல்லது அண்மித்த காலப்பகுதியில் கொழும்பு கறுவாத் தோட்டம் பகுதியில் வைத்து வெள்ளை வாகனத்தில் வந்த ஐவர், தன்னைக் கடத்திச் சென்று துப்பாக்கி முனையில் மிரட்டி பல மணிநேரம் தடுத்து வைத்ததாக கறுவாத் தோட்டம் பொலிஸில் முறைப்பாடு கனியா பனிஸ்டர் பதிவு செய்தார்.

எனினும், மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் பொய்யான சாட்சியங்களை சோடனை செய்ததாக கனியா பனிஸ்டர் மீது சட்டமா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

இலங்கை அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்காக பொய்யான தகவல்களை வழங்கியதாகவும், தனது கடத்தல் குறித்த விடயத்தில் பொய்யான ஆதாரங்களை உருவாக்கியதாகவும் கனியா பன்னிஸ்டர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தையிட்டியில் காணிகளை விடுமாறு போராடியவர்களை கைது செய்ய முயற்சி!

தையிட்டியில் காணிகளை விடுமாறு போராடியவர்களை கைதுசெய்வதற்கு பொலிஸார் முயன்றதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து விகாரை அமைக்கப்பட்டதை எதிர்த்தும், சிங்கள குடியேற்றத்தை நிறுவும் நோக்கில் விகாரையை சுற்றி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறு கோரியும் அப்பகுதி மக்களால் ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டத்தில் உள்நுழைந்த இராணுவத்தினரும், பொலிஸாரும் அப்பகுதிச் செல்லும் வீதிகளை மூடி அங்கிருப்பவர்களை கைது செய்ய முயன்றதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Posted in Uncategorized

மக்கள் ஆணையின்படி பேசுவதற்கு தமிழர் தரப்பு தயார்: ரெலோ

இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காக மக்கள் ஆணையின் படி பேசுவதற்கு தமிழர் தரப்பு தயார் என ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (03.05.2023) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இந்த ஆண்டின் இறுதியில் ஒரு முடிவை புதிய அரசியலமைப்பு மூலம் காண இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மே தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.

சந்தர்ப்ப வாதம்

இனப்பிரச்சினைக்கான தீர்வை எதன் அடிப்படையில் பேசுவதாக ரணில் விக்ரமசிங்க வெளிப்படையாக இதுவரை பொது வெளியில் கூறவில்லை.

அத்துடன் நம்பிக்கை தரும் வகையில் அவரது ஏனைய நடவடிக்கைகள் அமையவில்லை. அத்துடன் ஜனாதிபதியின் உரைகள் பதவி ஏற்பில் இருந்து மாறி மாறி சந்தர்ப்ப வாதமாகவே அமைந்துள்ளது.

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இலங்கை ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக நடாத்திய சனநாயக தேர்தல்களில் மக்கள் ஆணையாக அறுதிப் பெரும்பான்மையான மக்கள் சமஷ்டித் தீர்வு வேண்டும் என்றே ஆதரவு கோரியுள்ளனர்.

இனப்பிரச்சினை

இதற்கு ஒவ்வொரு தேர்தல் முடிவுகளும் மிகப் பெரும் ஆதாரம் அதன் பிரகாரம் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வான சமஷ்டி அடிப்படையில் பேச வருமாறு வெளிப்படையாக அரசாங்கம் அறிவித்தால் தமிழர் தரப்பு எப்போதும் தயாராகவுள்ளனர்.

இந்த நாட்டின் மீள முடியாத பின்னடைவுக்கு இனப்பிரச்சினைக்கான தீர்வு கொடுக்கப்படாமை என்ற உண்மையை உணர்ந்தும் சிங்கள ஆட்சியாளர்கள் கபடத்தனமாக மறைக்காது வெளிப்படையாக இன நல்லிணக்கத்துடன் மேசையில் உக்கார தயார் என்றால் அது தான் தீர்வுக்கான ஆரம்பம் எனத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தமிழ் மக்களை ஏமாற்றாமல் இனப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தர வேண்டும்: கோவிந்தன் கருணாகரம்

‘மக்களை ஏமாற்றாமல் உண்மையாக சிந்தித்து இனப்பிரச்சினைக்கான தீர்வினை வைத்துவிட்டு எங்களுடன் பேச வாருங்கள் நாங்கள் பூரண ஒத்துழைப்பினை தருகின்றோம்‘‘ என நாடாளுமன்ற உறுப்பினரும், நாயகம் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) செயலாளருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசு தமிழ் தரப்புகளை ஏமாற்றி அரசாங்கத்தில் இணைய வைத்து பொருளாதாரத்தினை நிலை நிறுவுவதற்காக முயற்சி செய்வதாகவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி நேற்றைய தினம் (01.05.2023) தமிழ் கட்சிகளுக்கு விடுத்த அழைப்பு தொடர்பில் (02.05.2023) மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினை

இது தொடர்பில் மேலும் கூறுகையில், ‘‘நேற்றை மேதின உரையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முக்கியமான கருத்தினை வெளியிட்டிருந்தார்.

இந்த வருட இறுதிக்குள் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வினை காணுவதற்கு உத்தேசித்துள்ளதாக கூறியிருக்கின்றார்.

இதேபோன்று தான் கடந்த ஆண்டும் சென்ற சுதந்திரதினத்திற்கு முன்னர் தீர்வினை காண வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த ஆண்டுக்குள் தீர்வினை காணுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தமிழ் தரப்புகள் இந்த தீர்வு காணும் விடயத்தில் பின்னடிப்பதாகவும் விலகி தூர நிற்பதாகவும் கூறியிருந்தார்.

பேச்சுவார்த்தை

ஆனால் போராட்டம் நடைபெற்ற காலம் தொடக்கம் ஒரு பக்கம் ஆயுதப் போராட்டம் நடைபெற்றாலும் மாறிமாறி வந்த ஆட்சியாளர்களுடன் தமிழ் தரப்புகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டே வந்தார்கள்.

இலங்கையில் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட தன் பின்னர் மகிந்த ராஜபக்சவுடன் 18 சுற்று பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதியை விட அதிகாரம் கூடியவராக இன்றைய ஜனாதிபதி பிரதமராகயிருந்தார்.

அப்போது நாடாளுமன்றத்தினை இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்கும் ஒரு சபையாக மாற்றி பல கூட்டங்களை நடத்திய போதும் அது ஏமாற்றப்பட்டதாகவே சென்றுவிட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்

அந்தவகையில் இலங்கையிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தன்னுடன் இணைந்து இனப்பிரச்சினைக்கான தீர்வினை காணுவதற்கு முன்வர வேண்டும்.

இந்த நாட்டின் பொருளாதாரம் இந்த நிலைமைக்கு மாறியதற்கு இலங்கையின் இனப்பிரச்சினை தான் காரணம் என்பதை சிங்கள மக்களுக்கும் பேரினவாதிகளுக்கும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூறி அவர்களை தங்களுடன் இணைத்து இந்த இனப்பிரச்சினைக்கு தீர்வினை காண்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

அதன் ஊடாக கொண்டு வரப்படும் தீர்வுத் திட்டத்தினை நாடாளுமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் வைத்துவிட்டு தமிழர்தரப்புடன் பேசவேண்டும்.

நாங்கள் என்றும் பேச்சுவார்த்தைக்கு பின்னடிப்பவர்களோ விலகி நிற்பவர்களோ அல்ல என்பதை நாங்கள் உறுதியாக தெரியப்படுத்துவோம்.

அதனைவிடுத்து தற்போதைய பொருளாதார நிலைமையினை சீர்செய்வதற்காக மீண்டும் மீண்டும் தமிழ் தரப்புகளை ஏமாற்றி அரசாங்கத்தில் இணைய வைத்து இலங்கையின் பொருளாதாரத்தினை நிலை நிறுத்துவதற்காக மக்களை ஏமாற்றாமல் உண்மையாக சிந்தித்து இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தினை முன்வைத்துவிட்டு எங்களுடன் பேசவாருங்கள்.

நாங்கள் பூரண ஒத்துழைப்பு தருவதுமட்டுமல்லாமல் புலம்பெயர்ந்துள்ள மக்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தினை கூட நிலை நிறுத்த உதவிசெய்வார்கள் என்பதை உறுதியாக கூறிக்கொள்கின்றோம்‘‘ என தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

நாட்டின் இனப்பிரச்சினைக்கு இவ்வருடத்துக்குள் தீர்வு – ஜனாதிபதி

நாட்டின் நீண்டகாலமாக இருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்த ஆண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தமிழ் அரசியல் கட்சிகள் பின்னடிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இது மிகவும் முக்கியமானது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய நியாயமான, புதிய போட்டித்தன்மையுள்ள மற்றும் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது அவசியம் என்றும் கூறியுள்ளார்.

ஆகவே அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இந்திய விமானப்படை அதிகாரி இலங்கையை வந்தடைந்தார்

இந்திய விமானப் படை பிரதானி ஏர் சீஃப் மார்ஷல் சவுத்ரி, நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இலங்கைக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை ஏர் சீஃப் மார்ஷல் சவுத்ரி சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் சொந்தமாக காணி வாங்கி விகாரை அமைக்க விண்ணப்பித்துள்ள பிக்கு

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் தனியார் காணி ஒன்றினை கொள்வனவு செய்துள்ள பௌத்த பிக்கு ஒருவர், அக்காணியினுள் விகாரை ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுன்னாகம் கந்தரோடை பகுதியில் தமிழ் – பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான அடையாளங்களும், அதன் எச்சங்களும் காணப்படுகின்றன. அவை தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.

தமிழ் – பௌத்த எச்சங்கள் காணப்படும் இடத்திற்கு அருகில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான சுமார் 06 பரப்பு காணியினை தென்னிலங்கையை சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்னர் பணம் கொடுத்து வாங்கியுள்ளார்.

இந்நிலையில் குறித்த காணிக்குள் புதிய விகாரை ஒன்றினை அமைக்கவுள்ளதாகவும், விகாரை அமைக்கவுள்ள காணிக்கு அருகில் தொல்லியல் எச்சங்கள் காணப்படுவதனால், விகாரை அமைப்பதால் அதற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா ? அக்காணியில் விகாரை அமைக்கலாமா ? என தொல்லியல் திணைக்களத்திடம் அனுமதி கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.

தொல்லியல் திணைக்களம் விகாரை அமைக்க அனுமதி வழங்கியவுடன், ஏனைய அனுமதிகளை விரைந்து எடுத்து, விகாரை கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க பிக்கு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழின விடுதலையே தொழிலாளர்களுக்கான விடுதலை – சபா குகதாஸ்

மே ஒன்று உலக தொழிலாளர் தினம். எமது தமிழர் தாயகத்தில் உள்ள ஒட்டு மொத்த தொழிலாளர்களும் தங்களது உரிமைகளை இழந்து ஒடுக்கப்படுகின்ற சமூகமாக தொடர்ந்து தங்கள் வாழ்வில் போராடி வருகின்றனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் 29.04.2023 அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிங்கள ஆட்சியாளர்களின் நிலையற்ற பொருளாதார கொள்கையினால் தொழிலாளர்களின் உரிமைகள் பெயரளவில் வரையறை செய்யப்பட்டாலும் பாதிக்கப்படும் போது தொழிலாளர்களுக்கான நியாயங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவதுடன், அரசின் அதிகார வர்க்கம் மேற்கொள்ளும் சுரண்டல்களும், ஊழல்களும் தொழிலாளர் வர்க்கத்தை மீண்டெழ விடாது தொடர்ந்து ஒடுக்குமுறையில் வைத்துள்ளது.

தமிழர்களின் மறுக்கப்பட்ட சுயநிர்ணய உரிமைக்கான விடுதலை கிடைக்கும் வரை தமிழர் தேசத்தின் தொழிலாளர்கள் சிங்கள ஆட்சியாளர்களால் ஒடுக்கப்படுவார்கள். எனவே தமிழின விடுதலையே தொழிலாளர்களின் விடுதலை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைகளை கவனத்தில் எடுக்க முடியாது

“வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சியினர் நாட்டை பிளவுபடுத்துவதிலேயே குறியாகவுள்ளனர். அவர்களின் ஆட்டத்துக்கு ஆட முடியாது” என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

தமிழ்க் கட்சிகளின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தனவிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“தமிழ் மக்களை உசுப்பேத்தி விடுவதுதான் தமிழ்க் கட்சியினரின் அன்றாட தொழிலாக உள்ளது.

இதனூடாக அவர்கள் தங்கள் சுயலாப அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்.

ஹர்த்தால் போராட்டங்கள் மூலம் எதையும் சாதிக்க முடியாது. தமிழ் மக்களை ஏமாற்றவே இப்படியான போராட்டங்களைத் தமிழ்க் கட்சியினர் நடத்துகின்றனர்.”என தெரிவித்துள்ளார்.

தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் சிங்கள – பௌத்த ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வடக்கு – கிழக்கில் கடந்த 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, ஹர்த்தால் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்று நீதிமன்றத்தின் ஊடாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

எஞ்சிய கோரிக்கைகள் தொடர்பில் அரசு கவனம் செலுத்துகின்றது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.