சிங்கப்பூரில் இருந்து வெளியேறினார் கோட்டாபய!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சிங்கப்பூரில் இருந்து வெளியேறியுள்ளார்.

அவர் இன்று பிற்பகல் பாங்கொக் செல்லும் விமானத்தின் மூலம் தாய்லாந்து பயணமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரது விசா இன்றுடன் காலாவதியாயாகிய நிலையில் சிங்கப்பூரில் இருந்து செல்லவேண்டிய நிலை கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சட்டமா அதிபர் அவருக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்கவிருந்த நிலையில் அவர் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஞ்சனுக்கு விரைவில் பொது மன்னிப்பு!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கான பரிந்துரைகளை நீதி அமைச்சு சமர்ப்பித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதற்காக சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்பான சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் அறிக்கையையும் பெற்றுக்கொண்டதாகவும் அதில் அனைத்து தகவல்களை கருத்திற்கொண்டு நிபந்தனைக்குட்பட்டு ஜனாதிபதிக்கு பரிந்துரையை சமர்ப்பித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் நல்ல நடத்தை உடையவர் என்பதாலும் சமூகத்திற்கு சில பங்களிப்பைச் செய்யக்கூடியவர் என்பதாலும் இந்த நேரத்தில் பொதுமன்னிப்பு வழங்குவது மிகவும் நியாயமானது என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டி 100 நாட்கள் கவனயீர்ப்பு போராட்டத்தின் 10வது நாள் போராட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது,முதலாம் திகதி மன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

“கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப்பொருளில், வடக்கு கிழக்கு உட்பட 8 மாவட்டங்களில் சுழற்சி முறையில் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது,

இன்றைய போராட்டத்தில் கிராம அடிப்படை அமைப்புக்கள், விவசாய, மீனவ சங்கங்கள், பெண்கள் மற்றம் மாணவர் அமைப்புக்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

Posted in Uncategorized

இலங்கை பாராளுமன்றத்தில் புதிய நிதிக் குழு நியமனம்

அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவில் பணியாற்றுவதற்காக 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (10) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் அமைச்சர் நளீன் பெர்னாண்டோ ஆகியோர் அரசாங்கத்தின் நிதிக் குழுவில் பணியாற்றுவதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அநுர பிரியதர்ஷன யாப்பா, விஜித ஹேரத், ர் துமிந்த திசாநாயக்க, ஷெஹான் சேமசிங்க, பிரமித பண்டார தென்னகோன், டாக்டர் ஹர்ஷ டி சில்வா, இந்திக அனுராத்த, சிறிபால கம்லத், டாக்டர் சீதா அரம்பேபொல, சுரேன். எம்.ஏ.சுமந்திரன், காவிந்த ஜயவர்தன, முஜிபுர் ரஹ்மான், ஹர்ஷன ராஜகருண , சமிந்த விஜேசிறி, இசுர தொடங்கொட, அனுபா பாஸ்குவல், பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நிலையியில் கட்டளை 121 இன் விதிகளின்படி தெரிவுக்குழுவினால் இக்குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது சபையில் நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவில் பணியாற்றிய காஞ்சன விஜேசேகர, மனுஷ நாணயக்கார, குமார் வெல்கம, திலான் பெரேரா, சரத் வீரசேகர மற்றும் நாலக கொடஹேவா ஆகியோர் அந்தக் குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

துமிந்த திஸாநாயக்க, ஷெஹான் சேமசிங்க சிறிபால கம்லத், சீதா அரம்பேபொல ஹர்ஷன ராஜகருணா மற்றும் சமிந்த விஜேசிறி ஆகியோர் புதிதாக உள்வாங்கப்பட்ட உறுப்பினர்களாவர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது சபையில் அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவின் தலைவராக பணியாற்றினார். எனினும் புதிய குழுவிற்கான தலைவர் இதுவரை நியமனம் செய்யப்படவில்லை

Posted in Uncategorized

ஆர்ப்பாட்டக்காரர்கள் காலிமுகத்திடலில் இருந்து வெளியேற முடிவு!

காலி முகத்திடல் கோட்ட கோ கம போராட்டக் காரர்கள் அங்கிருந்து வெளியேறத் தீர்◌ானித்துள்ளனர்.

இதன்படி அங்கிருந்து வெளியேறுமாறு பிறப்பத்த பொலிஸாரின் உத்தரவை நிராகரிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் நால்வர் தாக்கல் செய்திருந்த நான்கு ரிட் மனுக்களை இன்று அவர்கள் மீளப்பெற்றுக் கொண்டுள்ளனர்.

இந்த மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணிகளான எம்.ஏ சுமந்திரன் மற்றும் சாலிய பீரிஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகள், தமது தரப்பினர் காலி முகத்திடல் பிரதேசத்தை விட்டு வெளியேற தீர்மானித்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

தாய்லாந்து போகும் கோத்தாபய ராஜபக்‌ஷ!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து செல்ல தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளைய தினம் அவர், தாய்லாந்து செல்லவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் அந்நாட்டில் சிறிது காலம் தங்கியிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் ஜூலை 14 முதல் சிங்கப்பூரில் தங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

கப்பல் விவகாரம் – இலங்கை குறித்த நிகழ்வை இடை நிறுத்தியது சீனா

சீன கப்பலிற்கு இலங்கை அனுமதியளிக்க மறுத்துள்ளமைக்கு பதிலடியாக சீனாவில் உள்ள இலங்கை துாதரகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வொன்றை சீனாவின் சமூக ஊடகமொன்று இடைநிறுத்தியுள்ளது என தவல்கள் வெளியாகியுள்ளன.

வெள்ளிக்கிழமை இலங்கை அதிகாரிகள் இலங்கை குறித்த ஊடக்குவிப்பு பிரச்சாரமொன்றை  டுயினில் ஏற்பாடு செய்திருந்தனர். எனினும் அதனை முன்னெக்க முடியாது என இலங்கை அதிகாரிகளிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யுவான் வாங் 5 கப்பலிற்கு அனுமதியளிக்க மறுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த சமூக ஊடகம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக  இலங்கை அதிகாரிகள் கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் சமூக ஊடகங்களில் இலங்கைக்கு எதிரான எதிர்மறையான கருத்துக்கள் அதிகளவில் காணப்படுவதாகவும் சீனாவின் சில பல்பொருள் அங்காடிகள் இலங்கை பொருட்களை கொள்வனவு செய்ய மறுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Posted in Uncategorized

அரசாங்கத்தின் செலவீனம் 479.43 பில்லியன் ரூபாவால் அதிகரிப்பு

2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதில் இந்த வருடத்திற்கான அரசாங்கத்தின் செலவீனம் 479.43 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி, அரசாங்கத்தின் செலவு ரூ.2,796.44 பில்லியனாக நிர்ணயிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், திருத்தப்பட்ட சட்டமூலத்தின் ஊடாக அரசாங்கத்தின் செலவீனம் 3,275.8 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்துக்கான ஒதுக்கீடு 13.4 பில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கே அதிகளவான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

கூட்டமைப்பை பலப்படுத்தும் கோரிக்கை? Elanadu Editorial

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தேசிய மகாநாட்டின் போது, கூட்டமைப்பை பதிவு செய்யவேண்டும் என்னும் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

கூட்டமைப்பின் பிறிதொரு பங்காளிக் கட்சியான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மேற்படி கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்.

குறித்த மகாநாட்டில் பங்குகொண்டிருந்த இலங்கை தமிழ் அரசு கட்சியின் துணைத் தலைவர், சீ. வீ. கே. சிவஞானம், கூட்டமைப்பை உடைக்கும் முயற்சியில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபடுகிறார் என்று தெரிவித்திருக்கிள்றார்.

கேள்வி – கூட்டமைப்பை உடைப்பதற்கு வெளியிலிருந்து முயற்சிகளை செய்யுமளவுக்கு, கூட்டமைப்பு கட்டுக்கோப்பாகவும், பலமாகவும் இருக்கின்றதா? எதிரிக்கு சவாலாக இருக்கும் ஒரு கட்சி தொடர்பில்தானே எதிரிகள் அச்சம் கொள்வார்கள் – மற்றவர்கள் அச்சப்படுமளவுக்கு கூட்டமைப்பின் செயல்பாடுகள் இருக்கின்றனவா? தன்னைத்தானே சிதைத்துக் கொள்ளும் ஒரு தேர்தல் அரசியல் கூட்டை, எதற்காக மற்றவர்கள் உடைக்க முயற்சிக்க வேண்டும்? தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் ஓர் அரசியல் நோய் உண்டு. அதாவது, சிங்களவர்கள் தமிழ்த் தேசிய சக்திகளை பிளபுபடுத்த முயற்சிப்பதாகப் பலரும் அவ்வப்போது புலம்புவதுண்டு. தங்களுடைய தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியாமல் போகும் போதுதான், இவ்வாறான புலம்பல்கள் எட்டிப்பார்க்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டுக்கோப்புடனும், தெளிவான இலக்குடனும் இருந்தால், அதனை மற்றவர்களால் உடைத்துவிட முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வதன் மூலம், அதனை ஒரு பலமான தேசிய அரசியல் இயக்கமாக வளர்க்க வேண்டுமென்னும் கோரிக்கை 2011இலிருந்து முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஆனால் நடந்ததோ வேறு, 2010இல், இடஒதுக்கீடு தொடர்பான பிரச்னை காரணமாக, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது.

கொள்கை அடிப்படையிலான முரண்பாடாக அவர்கள் கூறிக் கொண்டாலும்கூட, கூட்டமைப்பிலுள்ளவர்கள், இட ஒதுக்கீடடில் ஏற்பட்ட சிக்கல்களின் காரணமாகவே கஜேந்திரகுமார் வெளியேறினாரெனக் கூறுகின்றனர்.

ஏனெனில், இரா.சம்பந்தன், விடுதலைப் புலிகளால் அரசியலுக்கு அறிமுகம் செய்யப்பட்ட சிலருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி வழங்கவில்லை.
பிறிதொரு பங்காளிக் கட்சியான, சுரேஷ் பிறேமச்சந்திரன், 2015, பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர்கள் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருந்தனர்.
சுரேஷ் பிறேமச்சந்திரனுக்கு தேசிய பட்டியல் மூலம் ஓர் ஆசனத்தை வழங்குவதன் மூலம், ஈ. பி. ஆர். எல். எவ்வை தொடர்ந்தும் உள்ளுக்குள் வைத்துக் கொள்ளும் ஆலோசனையை பங்காளிக் கட்சிகள் நிராகரிக்கவில்லை.

ஆனால், சம்பந்தன் அந்த யோசனையை மறுதலித்திருந்தார்.

2013இல், கூட்டமைப்பால், வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக்கப்பட்ட, நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், புதிய கட்சி ஒன்றின் மூலம் தனிவழியில் சென்றார்.

மேற்படி விடயங்களுக்கு பின்னால் மற்றவர்களா இருந்தனர் அல்லது விடயங்களை சரியாகவும் நேர்மையாகவும் கையாளமையின் காரணமாக இவ்வாறான விடயங்கள் இடம்பெற்றனவா? கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டுமென்று சிந்திப்போர் முன்னைய அனுபவங்களிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.

அதேபோன்று கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களும், கூட்டமைப்புக்கு மாற்றான அரசியலை நேர்மையாகவும் முறையாகவும் ஒழுங்காகவும் முன்னெடுக்கவில்லை.

அடிப்படையில் ஒரு விடயம் மட்டும் சரியாகவும் முறையாகவும் நடந்திருக்கின்றது.
அதாவது, தமிழ்த் தேசிய அரசியலை அனைவருமாக ஒன்றிணைந்து சிதைத்திருக்கின்றனர்.
கூட்டமைப்பின் சிதைவில் தமிழ் அரசு கட்சியே பிரதான பங்குவகித்திருந்தது.

ஏனெனில், கூட்டமைப்பை பதிவு செய்யும் கோரிக்கைகளை தொடர்ந்தும் தமிழ் அரசு கட்சியே எதிர்த்து வந்திருக்கின்றது. முக்கியமாக அதன் தலைமை. ஆனால், இறுதியில் தமிழ் அரசுக் கட்சியைக்கூட அவர்களால் கட்டுக்கோப்புடன் பாதுகாக்க முடியவில்லை. தமிழ் அரசு கட்சியின் தலைவரை தேர்தலில் தோற்கடிப்பதற்கு கட்சிக்குள்ளேயே வியூகங்கள் வகுக்கப்பட்டது.

இறுதியில் தமிழ் அரசு கட்சியும் பலவீனமடைந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பலவீன மடைந்திருக்கின்றது.

கூட்டமைப்பை ஒரு கட்சியாகப் பதிவு செய்வதற்கான காலம் அதிகம் கடந்து விட்டது.
எனினும், இப்போது முயற்சிப்பதில் தவறில்லை. ஏனெனில், கூட்டமைப்பின் முற்றிலுமான சிதைவு என்பது, ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு தமிழ்த் தேசிய அரசியல் மூச்சு விடுவதற்கே கடினமான சூழலை ஏற்படுத்தலாம்.

கூட்டமைப்புக்கு மாற்றான கட்சிகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் எவருமே, தமிழ்த் தேசிய அரசியலை முன்கொண்டு செல்லும் ஆற்றலோடு இல்லை.

வவுனியா, திருகோணமலை, மன்னார் நகரசபைகளை மாநகரசபைகளாக்க தீர்மானம் : கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசசபைகள் நகரசபைகளாகின்றன – பந்துல

களுத்துறை, வவுனியா, புத்தளம், திருகோணமலை, மன்னார், அம்பாறை மற்றும் கேகாலை ஆகிய நகரசபைகளை மாநகரசபைகளாக்குவதற்கும் , கிளிநொச்சி , முல்லைத்தீவு மற்றும் மொனராகலை பிரதேசசபைகளை நகரசபைகளாக்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (9) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் உள்ளுராட்சி மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் முன்வைத்த குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவரால் முன்வைக்கப்பட்ட யோசனையில் 7 நகரசபைகளை மாநகரசபைகளாக்குவதற்கும் , 3 பிரதேசசபைகளை நகர சபைகளாக்குவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரையில் 24 மாநகரசபைகளும் , 41 நகரசபைகளும் , 276 பிரதேசசபைகளும் காணப்படுகின்றன. அதற்கமைய 341 உள்ளுராட்சி நிறுவனங்கள் நாட்டில் இயங்கி வருகின்றன.

குறித்த பிரதேசங்களில் ஏற்படுகின்ற சனத்தொகை மாற்றம் , அடிப்படை வசதிகளில் அபிவிருத்தி மற்றும் மக்களின் தேவைகள் அதிகரிப்பு உள்ளிட்டவற்றைக் கவனத்திற் கொண்டு நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய களுத்துறை, வவுனியா, புத்தளம், திருகோணமலை, மன்னார், அம்பாறை மற்றும் கேகாலை ஆகிய நகரசபைகளை மாநகரசபைகளாக்குவதற்கும் , அதே போன்று கிளிநொச்சி , முல்லைத்தீவு மற்றும் மொனராகலை பிரதேசசபைகளை நகரசபைகளாக்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அத்தோடு மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் மதிப்பாய்வு செய்து , அவற்றில் பிரதேசசபைகள் , நகரசபைகள் மற்றும் மாநகரசபைகளாக மாற்றப்படக் கூடியவை தொடர்பில் பரிந்துரைக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அமைச்சரவைக்கு அறிவித்தார் என்றார்.