பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கத்திடம் ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்கள் எதுவும் இல்லை

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்திடம் எந்தவொரு ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களும் கிடையாது.

மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் கிடைக்கவிருக்கும் கடன் உதவி எதிர்காலத்தில் உழைக்கும் வர்க்கத்தினரையும், வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்களையும் நெருக்கடிக்குள் தள்ளும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்காமைக்கான காரணம் என்னவென சிலர் எம்மிடம் வினவுகின்றனர். நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், உழைக்கும் மக்களுக்களினதும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் கொள்கையும், முறையான திட்டங்களையும் நடைமுறைப்படுத்துமாயின் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க தயாராகவே இருக்கிறோம்.

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் மக்களின் வாழ்க்கைக்கு பேரிடியாக அமைந்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவளிப்பதால் நாம் நிராகரிக்கப்படுவோம்.

மேல் மட்டத்தில் உள்ளவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறு எம்மிடம் கேட்கின்றனர். ஆனால் அனைத்து மக்களையும் மீட்டெடுக்கும் பொறுப்பு எமக்குள்ளது.

எதிர்க்கட்சி சமூக பொருளாதார கொள்கையின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறது. சமூக பொருளாதார கொள்கையை அரசாங்கம் பின்பற்றினால் நாம் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தயார். இந்த அரசாங்கம் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட இலங்கைக்கு நிதியளிக்கும் பல்வேறு குழுக்களுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருக்கிறது.

இந்த அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சமூக பாதுகாப்பு வேலைத்திட்டம் பற்றி பேசியது, குறித்த திட்டங்கள் எங்கே? மக்களை தூக்கிலிட்ட பின்னர் மக்களுக்கு உணவளிக்கும் முறைமையே காணப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின் படி இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர்கள் கடன் கிடைக்கவிருக்கிறது. இலங்கை நிதிச் சந்தையில் குறித்த நிதியை எவ்வாறு அரசாங்கம் பயன்படுத்தப் போகின்றது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

கடன் பெறும்போது அவர்களின் ஒப்பந்தந்தங்களுக்கு அடிபணிய நேரிடும். சில சரத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாததனாலேயே நாம் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கவில்லை.

ஒப்பந்தம் வெற்றி என்றாலும் நிபந்தனைகளில் யாருக்கு பாதிப்பு என்று நாம் சிந்திக்க வேண்டும். இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களும், உழைக்கும் மக்களும் பாரியளவில் பாதிப்புகளை சந்திக்கவுள்ளனர்.கடன்பெற்று கொள்ளும்போது வறுமையிலுள்ள மக்களையும் உழைக்கும் மக்களையும் பாதுகாக்கும் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

இந்த கடனை பெற்ற பின்னர் முதலாவது மின்சார கட்டணம் தொடர்பான பிரச்சினைகள் எழும். அதிகளவிலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு, பலரும் தொழிலை இழந்துள்ளனர். மின்கட்டணம் அதிகரிப்பு, உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக மக்களின் வருவாய் இழக்கச் செய்யப்பட்டுள்ளது. இதற்கு இந்த அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்.

கடந்த வருடம் பொ ருளாதார திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இவ்வருடமும் பல திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறு நாட்டு மக்களை தூக்கிட்டு கழுத்தை நெரித்து கொள்வதன் ஊடாக தானா பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும்? சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைத்த பின்னர் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என அரசாங்கம் கூறுவது அப்பட்டமான பொய்யாகும் என்றார்

வங்கிகளினூடாக அனுப்பப்படும் புலம்பெயர் உறவுகளின் நிதியுதவிகள் குறைவடையும் வாய்ப்பு – சுரேந்திரன்

புலம்பெயர் உறவுகளால் தன்னார்வமாக அனுப்பப்படும் நிதி இனி வங்கிகளினூடாக வரக்கூடிய சந்தர்ப்பங்கள் மட்டுப்படுத்தப்படும் என பொருளியல் ஆய்வாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பேச்சாளருமான கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,“புலம்பெயர் உறவுகளால் தன்னார்வமாக அனுப்பப்படும் நிதி இனி வங்கிகளினூடாக வரக்கூடிய சந்தர்ப்பங்கள் மட்டுப்படுத்தப்படும். எனவே அவர்கள் நேரடியாக உண்டியல் முறையூடாகவோ அல்லது உறவுகளின் ஊடாகவோ தான் இனி இந்த பண பரிமாற்றங்களை மேற்கொள்ளக்கூடிய சாத்தியம் புலப்பட்டுள்ளது.

கடந்த வாரங்களில் டொலர் பெறுமதி குறையும் போது பல புலம்பெயர் உறவுகள் அது தொடர்பான கவலையை தெரிவித்திருந்தனர். இருப்பினும் டொலரின் பெறுமதி குறைவது இலங்கையில் இருப்பவர்களுக்கு நல்ல விடயம் என நாம் கூறினோம்.

ஏனென்றால் எமது நுகர்வு பொருட்களுக்கான விலைகள் குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. ஆனால் நிதி அனுப்புபவர்களின் நிலைப்பாடு அப்படி இருக்கவில்லை.

இதனால் நிதி பரிமாற்றம் என்பது வங்கிகளினூடாக அல்லாமல் உத்தியோகப்பூர்வமற்ற பண பரிமாற்றமாக மாறுவதற்கு தான் அதிக சந்தர்ப்பங்கள் உள்ளது.”என தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை தாமதிப்பது நல்லதல்ல: மஹிந்த தேசப்பிரிய

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை தாமதப்படுத்துவது ஏற்புடையதல்ல எனவும், ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் மோசமாக உள்ளதாகவும் உள்ளுராட்சி அதிகார சபைகளுக்கான எல்லை நிர்ணயம் செய்யும் தேசிய எல்லை மீள் நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

“உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமை (19) முடிவடைவதால், கூடிய விரைவில் தேர்தலை நடத்துவது அவசியம்,” என்றார்.

எந்த சூழ்நிலையில் இருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்துவது ஏற்புடையதல்ல என்றார்.

இந்த உள்ளுராட்சி மன்றங்களை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் நீண்டகாலம் நடத்துவது ஏற்புடையதல்ல என தலைவர் தெரிவித்தார்.

“குறைந்தது 3, 4 மாதங்களுக்குள் இந்தத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று நம்புகிறேன். ஏப்ரல் 25 ஆம் திகதி உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் நல்லது. ஆனால் இப்போது அது கடினமாக இருப்பதாகத் தெரிகிறது. ஏனென்றால் தபால் மூல வாக்களிப்பிற்கு கூட அரசாங்க அச்சுத் திணைக்களத்திடம் இருந்து வாக்குச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளவில்லை“ என்று அவர் கூறினார்.

ரணிலால் இவ்வருடம் தேர்தலை நடாத்த முடியாது

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இவ்வருடம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரம் இல்லை என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 40 வது பிரிவின்படி, ஐந்தாண்டுகளின் முழு பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அடுத்த ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 40 வது பிரிவின் விதிகளின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு மட்டுமே அவர் இரண்டாவது தவணைக்கு போட்டியிட்டால், முழு பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு வருடம் முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த அதிகாரம் உள்ளது என்றார்.

கோட்டாபய ராஜபக்ச இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு ஜனாதிபதித் தேர்தலை நடத்தியிருக்க முடியும் என்று கூறிய அவர், அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு அத்தகைய அதிகாரம் இல்லை என்றும் கூறினார்.

2024 நவம்பருக்குப் பின்னரே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இலங்கையின் டொலர் நெருக்கடி முடிவுக்கு வந்தது – மத்திய வங்கி ஆளுநர்

கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்ததை தொடர்ந்து, “டொலர் நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டது” என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நாளை (திங்கட்கிழமை) ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்புப் பொதியை தொடர்ந்து, “தேவையான துறைகளுக்குச் சேவை செய்ய எங்களிடம் போதுமான அந்நியச் செலாவணி உள்ளது, முதலீட்டாளர்களின் உணர்வை மேம்படுத்தி, அதிக நிதி மற்றும் முதலீடுகளுக்கான கதவுகளைத் திறக்கும்“ என தெரிவித்தார்.

இலங்கைக்கான கடனுக்கான முதல் தவணையான 390 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செவ்வாய்கிழமை வழங்கப்படவுள்ள நிலையில், கடனுக்கான அங்கீகாரம் கிடைத்தவுடன் அதனை முறையாக அங்கீகரிப்பதற்காக நாணயநிதிய சபை நாளை கூடுகிறது.

முதன்முறையாக, இந்த கடனில் அரசாங்கத்திற்கான பட்ஜெட் ஆதரவு அடங்கும், இது IMF கடனில் முற்றிலும் புதிய அங்கமாகும்.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் ஜூன் மாதத்திற்குள் கடனுக்கான முதல் மறுஆய்வு நடைபெறும் போது முடிக்கப்பட வேண்டும்.

உள்ளூர் வங்கிகள் உள்நாட்டு மறுசீரமைப்பை எதிர்க்கின்றன மற்றும் IMF உடனான பேச்சுவார்த்தைகளுக்கு வெளியில் உள்ள ஆலோசகர்களை நியமித்துள்ளன.

IMF வசதி நடைமுறைக்கு வந்ததும், ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் உலக வங்கி ஆகியவை பட்ஜெட் ஆதரவிற்காக வரும் புதிய நிதியில் $4.5 பில்லியன் கொள்கை அடிப்படையிலான கடன்கள் மூலம் தங்கள் உறுதிப்பாட்டை மேம்படுத்தும் என்று ஆளுநர் கூறினார்.

2024 ஆம் ஆண்டில் நேர்மறையான வளர்ச்சி எதிர்பார்க்கப்படும் அதே வேளையில், இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து பொருளாதார மீட்சி தொடங்கும் என்று தான் நம்புவதாக அவர் கூறினார்.

ஐஎம்எஃப் இரவு 10.30 மணிக்கு ஒரு செய்தி மாநாட்டை திட்டமிட்டுள்ளது. நாளை இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) பற்றி பேசுபவர்கள், இலங்கைக்கான மூத்த தூது தலைவர் பீட்டர் ப்ரூயர் மற்றும் IMF இல் இலங்கைக்கான தூது தலைவர் மசாஹிரோ நோசாகி ஆகியோர் பேசுவார்கள்.

விரைவில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வர்த்தமானியில் வெளியிட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

புதிய சட்டம் உத்தியோகபூர்வ மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஏப்ரல் தொடக்கத்தில் வர்த்தமானியாக வெளியிடப்படும் என்றும் அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறினார்.

சந்தேக நபர்களை தன்னிச்சையாக காவலில் வைப்பதற்காக பயங்கரவாத தடைச் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக கடந்த மூன்று தசாப்தங்களாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

கடந்த சில வருடங்களாக, பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றியமைப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை உறுதியளித்துள்ளது.

வலுவான இராஜதந்திர அழுத்தத்தைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை கடந்த ஆண்டு மீளாய்வு செய்த அரசாங்கம் பல வருடங்களாக சிறையில் இருந்தவர்களையும் விடுவித்தமை குறிப்பிடத்தக்கது.

நிதியமைச்சின் செயலாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய அநுர- சஜித் தீர்மானம்

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுக்கு எதிராக அடுத்த வாரம் வழக்குத் தாக்கல் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன தீர்மானித்துள்ளன.

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக அமைச்சின் செயலாளர் நடவடிக்கை எடுக்கத் தவறியதன் காரணமாகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதன்படி சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் தலையீட்டில் மஹிந்த சிறிவர்தனவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளன.

உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தாதது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என இரு கட்சிகளும் சுட்டிக்காட்டுகின்றன.

காணிப்பிரச்சினைகளுக்கு அதிகளவில் முகம் கொடுக்கும் மாவட்டமாக கிளிநொச்சி

இடம்பெயர்வுகள் மற்றும் மீள்குடியமர்வின் பின்னரும் அதிக அளவில் காணிப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் மாவட்டம் கிளிநொச்சி என மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற அரச காணிகள் தொடர்பான இலவச சட்ட உதவி நடமாடும் சேவையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் மக்களிடையே ஒரு பாரிய பிரச்சினையாகவும் மாறியுள்ளது என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு வேலை திட்டங்களின் ஊடாக மக்களின் காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படுகின்ற போதிலும் பல பிரச்சினைகள் தீர்க்க முடியாத நிலையில் உள்ளதாகவு குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கி 18 மாதங்களுக்கு விவசாயத்துறைக்கான உதவியை நீடித்தது

நாட்டின் விவசாயத்துறைக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான உதவியை, மேலும் 18 மாதங்களுக்கு நீடிக்க உலக வங்கி இணங்கியுள்ளது.

அண்மையில் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த உலக வங்கியின் பிரதிநிதிகள், அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்தித்தபோது, இந்த இணக்கத்தை வெளிப்படுத்தியதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மே மாதம் முதல், 18 மாதங்களுக்கு இந்தத் திட்டம் நீடிக்கப்பட்டுள்ளது என்றும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக, 30 மில்லியன் டொலர் நிதியை வழங்க உலக வங்கியின் பிரதிநிதிகள் இணங்கியுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாடாளுமன்றில் ஐ.எம்.எப் உடன்படிக்கை முன்வைக்கப்படும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் எதிர்வரும் 20ஆம் திகதி இரவு இடம்பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்.

அத்தோடு சர்வதேச நாணய நிதியதுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் சமர்பிப்பார்என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று சனிக்கிழமை மதியம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய – பசுபிக் வலய பிரதானி, இலங்கை தூதுக்குழுவின் பிரதானி ஆகியோர் இணைந்து அன்றைய தினம், இரவே இது குறித்து ஊடக சந்திப்பை நடத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.