20ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுக்களை ஒப்படைக்க முடியாது – அரச அச்சகம்

எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுக்களை ஒப்படைக்க முடியாது என அரச அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரச அச்சகத் திணைக்களத் தலைவர் கங்கானி லியனகே இது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு மற்றும் பொது வாக்கெடுப்பு ஆகியவற்றுக்குத் தேவையான வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் என திறைசேரிக்கு கடந்த இரு வாரங்களில் இரண்டு தடவைகள் எழுத்து மூலமாக முன்வைத்த கோரிக்கைக்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை.

மார்ச் மாதம் 9 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட அச்சிடல் பணிகளுக்கான நிதி முழுமையாக கிடைக்கவில்லை.

நிதி விடுவிப்பு தொடர்பில் திறைசேரி ஒரு உத்தியோகபூர்வமாக அறிவிப்பை விடுக்க வேண்டும் என அரச அச்சகத் திணைக்களத் தலைவர் திறைசேரியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

நிதி கிடைப்பதில் தாமதம் காணப்படுவதால் தபால் மூல வாக்கெடுப்புக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.

எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுக்களை ஒப்படைக்க முடியாது என அரச அச்சகத் திணைக்கள தலைவர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோ பூர்வமாக அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தபால் மூல வாக்கெடுப்பை எதிர்வரும் 28, 29, 30 மற்றும் 31ஆம் திகதிகளில் நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தபால்மூல வாக்குச்சீட்டு விநியோகப் பணிகள் எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு முன்னர் முழுமைப்படுத்தப்பட வேண்டும்.

இந்தநிலையிலேயே குறித்த திகதிக்கிடையில் தம்மாக் வாக்குச்சீட்டுகளை அச்சிட்டு வழங்க முடியாது என அரச அச்சகத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக தேர்தல் மீண்டும் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

போசாக்கின்மையால் யாழில் குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, குடத்தனை பகுதியில் பிறந்து 52 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் குழந்தையின் இறப்புக்கு போதிய போசாக்கின்மையே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்த ஆண் குழந்தை மூச்சயர்ந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

இம் மரணம் தொடர்பில்  திடீர் மரண விசாரணை அதிகாரி   அன்ரலா விஞ்சன்தயான் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

உடற்கூற்று பரிசோதனை 15 ஆம் திகதி (புதன்கிழமை) இடம்பெற்ற நிலையில், போதிய போசாக்கின்மை காரணமாக உயிரிழப்பு இடம்பெற்றதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக  , கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தை பிரசவித்த தாய்மார்கள், குழந்தைகளின் போசாக்கு விடயத்தில் கவனம் செலுத்த வேண்டிய  தேவை இதன் மூலம் உணரப்பட்டுள்ளது.

யாழில் 1814 கர்ப்பிணிகள் வறுமையினால் பாதிப்பு

யாழ்.மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமை நிலையில் உள்ளதாக யாழ். மாவட்ட செயலகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா இடர் காலத்துக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார நிலைமை காரணமாக பல கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களில் கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 370 கர்ப்பிணிப் பெண்கள் வறுமை நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பருத்தித்துறைப் பிரதேச செயலகத்தில் 226 கர்ப்பிணிப் பெண்களும், சங்கானைப் பிரதேச செயலகத்தில் 157 கர்ப்பிணிகளும், தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் 139 கர்ப்பிணிகளும்,

யாழ்ப்பாண பிரதேச செயலகப் பிரிவில் 138 கர்ப்பிணிகளும், கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவில் 128 கர்பிணிகளும், சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 118 கர்ப்பிணிகளும், உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் 117 கர்ப்பிணிகளும்,

மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவில் 98 கர்பிணிகளும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 97 கர்ப்பிணிகளும், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவில் 91 கர்பிணிகளும்,

காரைநகர் பிரதேச செயலகப் பிரிவில் 40 கர்ப்பிணிகளும், வேலணைப் பிரதேச செயலகப் பிரிவில் 49 கர்பிணிகளும், ஊர்காவற்துறை பிரதேச செயலகப் பிரிவில் 25 கர்பிணிகளும், நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் 21 கர்ப்பிணிகள் என 1814 பேர் வறுமை நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்.நாவற்குழி விகாரைக்கு வரும் சவேந்திர சில்வா

யாழ்ப்பாணம் – நாவற்குழியில் விகாரையில் இடம்பெறும் நிகழ்வில் பங்கேற்கும் வகையில் நாளைய தினம்(சனிக்கிழமை) சவேந்திர சில்வா வருகை தரவுள்ளார்.

நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட பகுதியில் இடம்பெறும் நிகழ்வில் பங்கேற்பதற்காகவே சவேந்திர சில்வா இவ்வாறு வருகை தரவுள்ளார்.

சவேந்திர சில்வா வருகை தரும் நிகழ்விற்காக தென்னிலங்கையில் இருந்து 128 பௌத்த பிக்குகளும் அழைத்து வரப்படுகின்றனர்.

இந்த நிகழ்வுகள் நாளை காலை முதல் பிரித் ஓதுதல் மற்றும் விசேட பூசை ஏற்பாடுகள் என மிகப் பெரும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

இலங்கைக்கு எதிராக சர்வதேச கால்பந்து தடை: 197 நாடுகள் ஆதரவு

இலங்கைக்கு எதிரான சர்வதேச கால்பந்து தடைக்கு ஆதரவாக 197 நாடுகள் வாக்களித்துள்ளன.

ருவாண்டாவின் கிகாலி நகரில் நடைபெற்ற உலக கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் சபையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

208 நாடுகள் கலந்து கொண்ட இந்த பொதுச் சபையில் இலங்கைக்கு சர்வதேச கால்பந்து தடை விதிக்க 197 நாடுகள் ஆதரவாக வாக்களித்திருந்தன.

விளையாட்டு அமைச்சின் முறையற்ற செல்வாக்கு, விளையாட்டு சுதந்திரத்தை மீறுதல், தன்னிச்சையாக புதிய விதிமுறைகளை விதித்தல் போன்ற காரணங்களால் பல நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித்துள்ளன.

நெடுந்தீவு வெடியரசன் கோட்டை பாகங்களை பௌத்த தாது கோபுரத்தின் எச்சங்களாக மாற்றி பெளத்தமயமாக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் நெடுந்தீவு மேற்குப் பகுதியில் சிதைவடைந்த நிலையில் காணப்படும் புராதன வெடியரசன் கோட்டைப் பாகங்களை பௌத்த தாதுகோபுரத்தின் எச்சங்களாக நிறுவுவதற்கான நடவடிக்கைகள் நெடுந்தீவில் முனைப்புடன் இடம்பெற்று வருகின்றன.

இந்தக் கோட்டையின் வரலாற்றை திரிபுபடுத்தும் நோக்குடன் நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையிலும் கோட்டை காணப்படும் இடத்திலும் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் இந்தப் புராதன கோட்டையின் பாகங்கள் பௌத்த தாது கோபுரத்தின் எச்சங்கள் என திடீரென விளம்பரப் பலகைகள் முளைத்துள்ளன.

இந்த விளம்பரத்தில் ‘ பல்வேறு தொல்பொருள் கலைப்பொருட்கள் தீவில் உள்ளன. மற்றும் பழங்கால மதிப்புள்ள மூன்று ஸ்தூபிகள்(கோபுரம்) இங்கு காணப்படுகின்றன. இந்தத் ஸ்தூபிகள் வெவ்வேறு அளவுகளில் உள்ளன. மிகப் பெரிய ஸ்தூபியின் கல்லறையில் மூன்று கல்வெட்டுகள் காணப்பட்டன.’

‘பெரிய ஸ்தூபியின் விட்டம் 13.54 மீற்றர். அதன் சுற்றளவு 31.93 மீற்றர். கல்வெட்டுகளில் ஒன்று பிராமி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. பிராமி கல்வெட்டு கி.பி. 1-2 நூற்றாண்டுக்கு முற்பட்டது என்றும் சிங்கள பிராகிருதத்தில் எழுதப்பட்டது என்றும் கல்வெட்டு நிபுணர்கள் நம்புகின்றனர்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த விளப்பரப் பலகையில் ‘பௌத்த இடிபாடுகளைக் கொண்ட இந்தத் தளம் டெல்ஃப்ட் தீவின்(நெடுந்தீவு) புராதன பௌத்த தளம். இது கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது. பெரிய ஸ்தூபி பவளக்கல்லால் ஆனது. ஏனைய இரு ஸ்தூபிகளும் கிழக்கு மேற்காக அமைந்துள்ளன.’ என குறிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் புராதன தளமானது வெடியரசன் மன்னனின் வரலாற்றுடன் தொடர்புடையது எனவும் இவை குறித்த வரலாற்றுப் பதிவுகள் பல்வேறு புராதன தமிழ் ஆவணங்களில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் இந்த நடவடிக்கை திட்டமிட்ட வகையில் தமிழ் வரலாற்றை திரிபுபடுத்தும் பௌத்த ஆக்கிரமிப்பு எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் விளம்பரப்படுத்தலுக்காக பிரதேச சபை அனுமதி பெறப்பட்டதா? விளம்பரப் பலகைகள் நாட்டப்பட்டமை குறித்து உரிய அதிகாரிகள் இதுவரை கவனம் செலுத்தாது இருப்பது ஏன் எனவும் நெடுந்தீவு மக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்தப் பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளை வடக்கில் உள்ள வரலாற்றுப் பேராசிரியர்கள், பல்கலைக்கழக சமூகம், புத்திஜீவிகள் விரைந்து தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என நெடுந்தீவு மக்கள் கோரியுள்ளனர்.

இலங்கைப் பொருளாதாரம் மேலும் 7.8% வீழ்ச்சி

இலங்கையின் பொருளாதாரம் 2022 ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட 7.8% சுருங்கியுள்ளது என்று சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 12.4% சுருங்கியுள்ளதாக குறித்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், உற்பத்திக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் கடந்த பெப்ரவரியில் 42.3 சுட்டெண் மதிப்பைப் பதிவு செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டில் 3 சதவீதத்தால் சுருங்கும் என எதிர்வுகூறியுள்ள மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை, 2024 ஆம் ஆண்டில் அதன் வளர்ச்சி மீண்டும் உயரும் என்று எதிர்பார்க்கப்பதாகவும் கடந்த திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

கொவிட்-19 தொற்றுநோயின் தாக்கம் மற்றும் தவறான பொருளாதார கொள்கை மற்றும் நிர்வாகம் என்பன கடந்த ஆண்டு தொடக்கத்தில் அத்தியாவசிய இறக்குமதிகளுக்கான அந்நிய செலாவணி பற்றாக்குறையை ஏற்படுத்தியது.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 2.9 பில்லியன் டாலர் பிணை எடுப்பு திட்டத்திற்கு எதிர்வரும் 20 அன்று இறுதி செய்யப்படும் என இலங்கை காத்திருக்கிறது.

இந்த ஆண்டு முழுவதும், எதிர்பார்க்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதிகளுடன், மத்திய வங்கி நாணயத்தை வலுப்படுத்தவும், இறுதியில் வட்டி வீதங்களைக் குறைக்கவும், பணவீக்கத்தை தொடர்ந்து குறைக்கவும் முடியுமென ஆசிய செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஆய்வுபிரிவு சிரேஷ்ட உப தலைவர் சஞ்சீவ பெர்னாண்டோவை மேற்கோள் காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

தென்னிலங்கை மக்களால் நிராகரிக்கப்படுகின்ற தீர்வு ஒருபோதும் தமிழருக்கு நிரந்தர தீர்வாக அமையாது – அநுர

தென்னிலங்கை மக்களால் நிராகரிக்கப்படுகின்ற தீர்வு ஒருபோதும் தமிழருக்கு நிரந்தர தீர்வாக அமையாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது உள்ள அரசியலைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலமாகவோ அல்லது அதனை மாற்றியமைப்பதன் மூலமாகவோ தமிழர் பிரச்னைகளுக்கு முழுமையான தீர்வினை வழங்க முடியாது.

அனைத்து இன மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அதன் மூலம் தமிழருக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும்.
தென்னிலங்கை மக்களால் நிராகரிக்கப்படும் தீர்வு ஒருபோதும் தமிழருக்கு நிரந்தர தீர்வாக அமையாது, இதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் கூறியதாக அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு தமிழர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

14 நாட்களுக்குள் கணக்கறிக்கையை சமர்ப்பிக்க தேர்தல் ஆணைக்குழு அரசியல் கட்சிகளுக்கு காலக்கெடு

2021 ஆம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட கணக்கு அறிக்கைகளை இன்று முதல் 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

அவ்வாறு வழங்காவிட்டால், அந்தந்த அரசியல் கட்சிகளின் உரிமைகளை ரத்து செய்யவும் தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

இதேவேளை தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களை 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து விவாதிக்க தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடலை எதிர்வரும் 23 ஆம் திகதி நடத்துவதற்கு இன்று கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

சிறுவர்களுக்காக ஜப்பான் 1.8 மில்லியன் நன்கொடை

இலங்கையில் அபாய நிலையில் வாழும் சிறுவர்களுக்கு உதவுவதற்காக யுனிசெப் நிறுவனத்திடம் ஜப்பான் அரசாங்கம் 1.8 மில்லியன் டொலரை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இதனூடாக 6 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீர், சுகாதார மேம்பாட்டை வழங்கவும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையில், மனிதாபிமான நடவடிக்கைகளை வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக யுனிசெப் நிறுவனம் அறிவித்துள்ளது.