இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் விஜயம் ஒத்திவைக்கப்பட்டமைக்கு உள்நாட்டுக்கு காரணங்கள் எதுவுமில்லை – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விஜயம் ஒத்திவைக்கப்பட்டமைக்கு உள்நாட்டுக்கு காரணங்கள் எதுவுமில்லை என்று தெரிவித்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் விரைவில் இருதரப்புக்கும் பொருத்தமான புதிய திகதி அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வருவதாக நிகழ்ச்சி நிரலிடப்பட்டிருந்தபோதும், வெள்ளிக்கிழமை (01) இரவு திடீரென அவரது விஜயம் ஒத்திவைக்கப்பட்டதாக டெல்லியால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகையின்போது திருகோணமலைக்கு விஜயம் செய்து முன்னெடுக்கப்படவுள்ள எண்ணெய்குழாய் திட்டத்தையும் பார்வையிடுவதாக இருந்தது.

எனினும், குறித்த எண்ணெய்க்குழாய் திட்டத்திற்கு உள்நாட்டில் மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோசலிசக் கட்சி, உட்பட பல தரப்புக்களாலும் பாரிய எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

விசேடமாக, திருகோணமலையில் முன்னெடுக்கப்படும் எண்ணெய்குழாய் திட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்திற்கு அப்பால் சென்று வட மத்திய மாகாணத்தையும் இந்தியாவுக்கு எழுதிக் கொடுக்கும் செயற்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இறங்கியுள்ளதாகவும் அதற்காக 624 சதுர மைல் பரப்பை வழங்கவுள்ளதாகவும் மக்கள் போராட்டக்கள அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த முதலிகே குற்றம் சாட்டியிருந்தார். அத்துடன், 144 குடும்பங்கள் வெளியேற்றப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேற்படி உள்நாட்டு எதிர்ப்புக்கள் காரணமாகவா இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விஜயம் பிற்போடப்பட்டதா, இல்லை வேறெந்த இராஜதந்திர காரணங்களும் உள்ளனவா என்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இல ங்கைக்கு உத்தியோகபூர்வான விஜயம் மேற்கொண்டு வருகை தருவதாக அறிவிக்கப்பட்டபோதும், இறுதி தருணத்தில் தவிர்க்க முடியாத காரணங்கள் அவரது விஜயம் பிற்போடப்பட்டிருப்பதாக எமக்கு உத்தியோக பூர்வமான அறிவிப்புக்கள் கிடைத்துள்ளன.

அவருடைய விஜயம் பிற்போடப்பட்டமைப்புக்கு உள்நாட்டு காரணங்கள் எவையும் காரணமாக இல்லை.

அத்துடன், சில தரப்புக்களின் தவறான கோசங்கள் இராஜதந்திர உறவுகளில் செல்வாக்குச் செலுத்தவில்லை.

மேலும், இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் விரைவில் இடம்பெறவுள்ளதோடு, இரு நாடுகளும் பொருத்தமான திகதியையும் உறுதி செய்யவுள்ளன என்றார்.

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் ஒத்திவைப்பு

இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கான விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே திட்டமிட்டிருந்தவாறு இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விஜயம் செய்யும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் உற்றுநோக்கப்பட்ட இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கைக்கான விஜயம் தொடர்பான ஒத்திவைப்பானது அசாதாரணமான திட்டமிடலை வெளிப்படுத்தியுள்ளது.

சீனா ஆய்வுக்கப்பலின் வருகையும், இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கைக்கான வருகையும் அண்மைக்காலங்களில் உலகளாவிய ரீதியில் பேசுபொருளாக மாறியிருந்தன.

எனினும் இந்தியா இன்று பாதுகாப்பு அமைச்சர் தொடர்பில் வெளிப்படுத்திய விடயம், இலங்கை மீதான இந்தியாவின் நகர்வுகள், திட்டமிடல்கள் தொடர்பில் அதிகமான கேள்விகளை எழுப்பியுள்ளன.

எனினும் இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்குடன் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட இந்திய இராணுவ கப்பல் இன்னும் இலங்கையிலேயே தரித்து நிற்கிறது.

மேலும், சீன மற்றும் இந்தியாவின் இலங்கை மீதான நோட்டமிடல்கள் அதிகரிக்கும் நேரத்தில் இலங்கையில், இந்திய பாதுகாப்பு அமைச்சரின் வருகையின் போது அவருக்கு எதிரான போராட்டங்கள் இடம்பெறவுள்ளதான செய்திகள் சிலவும் வெளிவந்திருந்தன.

கச்சத்தீவு மீட்பு விவகாரம் மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு; நீதிமன்றம் தலையிட முடியாது என அறிவிப்பு

கச்சத்தீவு மீட்பு விவகாரம் மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு எனவும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் இந்திய நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு சென்னை மீனவர்கள் நலன் சங்கம் தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே, தலைமை நீதிபதி இதனை அறிவித்து வழக்கினை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

1974-இல் இந்தியா மற்றும் இலங்கைக்கிடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கச்சத்தீவு இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டது.

குறித்த ஒப்பந்தத்தில் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக்கூடாது என கூறப்பட்டுள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

பிரச்சினைக்கு தீர்வாக 1974 ஆம் ஆண்டின் இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தை இரத்து செய்து கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

எனினும், கச்சத்தீவு மீட்பு விவகாரம் மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு எனவும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் இந்திய உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Posted in Uncategorized

ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது அதிகாரத்தை மீறினாரா?

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறி புவியியல் மற்றும் சுரங்கப்

பணியகத்தின் நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வௌியிடப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கையைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் சமர்ப்பித்த ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு 14 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

மனுதாரரான புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கனிமச் சுரங்கம், அது தொடர்பான அனுமதிகள் வழங்குதல், அவற்றின் நிர்வாகம் போன்றவற்றின் முழு அதிகாரமும் தங்கள் பணியகத்திற்கே ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய திருகோணமலையில் 13 கிலோமீற்றர் பரப்பளவில் தாது மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதற்கு தமது பணியகம் ஆய்வு மேற்கொண்டுள்ளதாகவும், அதற்கான அனுமதிகள் நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட நிலத்தில் தேவையான அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ள, “மிட் வெஸ்ட் ஹெவி சாண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம் ஒப்பந்தம் செய்து, அதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டு, அதன்படி, அகழாய்வு பணியை, சம்பந்தப்பட்ட நிறுவனம் ஆரம்பித்ததாக, மனுவில் கூறப்பட்டுள்ளது. .

இருந்த போதிலும், கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பேரில், கிழக்கு மாகாண செயலாளர் கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பி, தேவையான அனுமதி பெற வேண்டும் என்றும், அதுவரை திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க முடியாது என்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்து.

புவியியல் மற்றும் சுரங்க பணியகம் தனது மனுவில், கனிம வளங்கள் மற்றும் அவற்றின் சுரங்கம் தொடர்பான உரிமங்களை வழங்குவதற்கான முழு அதிகாரமும் மத்திய அரசின் கீழ் செயல்படும் தமது நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனிம வளங்கள் தொடர்பான செயற்பாடுகள் மாகாண சபையின் எல்லைக்கு தொடர்பில்லாதது எனவும், கிழக்கு மாகாண ஆளுநரின் இந்த உத்தரவு அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் கீழ் மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முற்றாக மீறுவதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை மீறி, கிழக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட கடிதம் செல்லுபடியாகாது என ரிட் ஆணையை பிறப்பிக்குமாறும், அந்த கடிதத்தின் அடிப்படையில் மேலதி நடவடிக்கை எடுப்பதை தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரி புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.

சிங்கப்பூர் ஜனாதிபதியாக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம் தெரிவு

இலங்கை தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.

முன்னாள் துணைப் பிரதமரும் ஆளும் கட்சி வேட்பாளருமான தர்மன் சண்முகரத்தினம், 66, சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் 70.4% வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்று, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் சீனரல்லாதவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இவர்களது குடும்பம் 19 ஆம் நூற்றாண்டில் இருந்து, நான்கு தலைமுறைகளாக சிங்கப்பூரில் வசித்து வருகின்றனர். தர்மன் சண்முகரத்தினம் புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் நோயியல் தொடர்பான பல சர்வதேச அமைப்புகளுக்கு தலைமை தாங்கியவரும் Singapore Cancer Registry-இன் நிறுவனருமான பேராசிரியர் K.சண்முகரத்தினத்தின் மகனாவார். பேராசிரியர் K.சண்முகரத்தினம் “சிங்கப்பூரில் நோயியலின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார்.

15% மற்றும் 14% வாக்குகளைப் பெற்ற பெரும்பான்மை சீன சமூகத்தைச் சேர்ந்த மற்ற இரண்டு வேட்பாளர்களையும் தர்மன் சண்முகரத்தினம் எளிதாக தோற்கடித்துள்ளார்.

மிகவும் மதிக்கப்படும், புகழ்பெற்ற அரசியல் தலைவரான அவர், சுதந்திரம் பெற்றதில் இருந்து சிங்கப்பூரை ஆண்ட People’s Action Party (PAP) கட்சியில் இருந்து வௌியேறி, ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதற்கான தீர்மானத்தை மேற்கொண்டிருந்தார்.

பொருளாதார நிபுணரான அவர், 2003 முதல் இரண்டு தசாப்தங்களாக கேபினட் அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் (2007-15) துணைப் பிரதமராகவும் (2011-19) பணியாற்றியுள்ளார்.

பலர் இவரை தற்போதைய பிரதமர் Lee Hsien Loong-இன் அரசியல் வாரிசாகக் கருதினர்.

சிங்கப்பூரில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்றது.

சிங்கப்பூரின் தற்போதைய ஜனாதிபதி Halimah Yacob-இன் 6 ஆண்டு பதவிக்காலம் எதிர்வரும் 13 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

ஜ.நா விசாரணைக்குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டும்! – சந்தியா எக்னெலிகொட

இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக 2022 இல் ஜ.நாவில் நியமிக்கப்பட்ட விசாரணைக்கான குழுவின் விசாவுக்கான அனுமதியை வரத்தமானி மூலம் தடைசெய்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொடவின் துனைவியார் சந்தியா எக்னெலிகொட கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தையிட்டு முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்தத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“காணாமல்போனவர்கள் வெளிநாட்டில் இருப்பதாக ஜனாதிபதி தெரிவிக்கும் நகைச்சுவையினை நிறுத்தும் வரையில் இந்த நாட்டில் என்றுமே நீதியை பெற்றுக் கொள்ள முடியாது.

இந்த நாட்டில் காணாமல் போனவர்கள் என்று ஒன்று இல்லை எனவும் அவர்கள் வெளிநாடுகளில் இருப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

எனவே நீங்கள் ஜனாதிபதி தானே அவர்களை வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரமுடியும் தானே எனவே இவ்வாறான நகைச்சுவையினை நிறுத்துங்கள்.

வடக்கு கிழக்கில் பலாத்தகாரமாக காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்கள் கண்ணீரில் மூச்சுவிட்ட பூமி ஆகும்.

ஏன் என்றால் கொழும்பு கொஸ்வத்தை பிரதேசத்தில் பலவந்தமாக எனது கணவரான ஊடகவியலாளர் பிரதீப் எக்கினா கொட கடத்தி செல்லப்பட்டார்.

அவர் அங்கு எரிக்கப்பட்டாரா அல்லது எங்காவது புதைக்கப்பட்டாரா? அல்லது கடலில் கொண்டு சென்று போட்டார்களா? தெரியவில்லை இருந்தபோதும் இந்த சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் பல காரணங்கள் தெரிவிக்க வேண்டியுள்ளது.

ஒ.எம்.பி காரியாலயம் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக அதிகளவான பணத்தை வீண் செலவு செய்து நடாத்தி வருகின்றது.

இந்த ஓ.எம்.பி. கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை உண்மையாக நீதியாக தேடி கொடுத்துள்ளதா?குறைந்தது உண்மையையாவது அமைப்புகளுக்கு முன்வைத்தா? இல்லை.

இந்த தாய்மாருக்கு தேவையானது உண்மையும் நீதியும் அது இந்த நாட்டில் நடைபெறாது என்பதால் தான் சர்வதேச அமைப்புக்களிடம் செல்லவேண்டியுள்ளது.

2022 ஜ.நாவில் இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான விசாரணைக்கான குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

இந்த விசாரணைக்குழு இறுதிவரை இலங்கைக்கு வரவில்லை. அவர்களுக்கான விசா அனுமதியை வர்த்தமானி மூலம் தடைசெய்து அதனை ஜனாதிபதியின் வீட்டு காப்பற்றின் கீழ் போடப்பட்டுள்ளது.

எனவே சட்டத்தின் கீழ் அவர்கள் இலங்கைக்கு வர அனுமதிக்கவும் அதற்கான நீதியை வேண்டி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்படும்” என அரசாங்கத்துக்கு தெரிவிக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் முதலாவது சினோபெக் எரிபொருள் நிலைய நடவடிக்கைகள் ஆரம்பம்

சீனாவின் சினோபெக் நிறுவனத்துடன் அரசாங்கம் ஒப்பந்தம் செய்து கொண்டதன் பின்னர், நாட்டில் ஸ்தாபிக்கப்பட்ட முதலாவது எரிவாயு நிலையமான மத்தேகொட சி & ஏ பெற்றோல் நிலையம் சினோபெக் என்ற பெயரில் தனது சேவை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த எரிபொருள் நிலையம் முன்னர் சிபெட்கோவின் கீழ் இருந்ததாகவும், சீனாவின் சினோபெக் உடன் ஒப்பந்தம் செய்து கொண்டதன் பின்னர், அதன் உத்தியோகபூர்வ சின்னத்தின் கீழ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புதிய எரிபொருள் நிலையத்தில் 16 எரிபொருள் பம்புகள் ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதுடன், ஒவ்வொரு வகை எரிபொருளுக்கும் மூன்று ரூபா சலுகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், வாடிக்கையாளர் சேவையின் தேவைக்கு ஏற்ப, சினோபெக் நிறுவனம் புதிய பம்புகளை நிறுவி ஒரு வருடத்திற்குள் எரிபொருள் நிரப்பு நிலையத்துடன் பல்பொருள் அங்காடி வளாகத்தை நிர்மாணிக்கவும், எரிபொருள் நிரப்பு நிலையத்தை நவீனப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான தினமான இன்று புதன்கிழமை (30) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்துக்கான பிரதான நிகழ்வு இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றது.

இன்று காலை 10 மணியளவில் மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பமான இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்ட பேரணியானது நகரின் பிரதான வீதிகள் ஊடாக சென்று, மட்டக்களப்பு காந்தி பூங்காவை அடைந்தது.

இந்நிகழ்வில் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து பெருந்தொகையான காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் காணாமல் போனவர்களின் புகைப்படங்கள் மற்றும் பதாகைகளை ஏந்தியவாறு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தமக்குரிய தீர்வுகளை விரைவில் தர வேண்டும் எனக் கூறியும், காலம் கடந்தும் எமக்குரிய தீர்வுகள் கிடைக்கவில்லை என தெரிவித்தும் ‘எங்கே எங்கே… காணாமல் போன உறவுகள் எங்கே’ என கோஷங்களை எழுப்பியவாறும் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

‘எமது உறவுகள் எமக்கு வேண்டும்’, ‘மதவாதம் வேண்டாம்’ என கோஷங்களை எழுப்பியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்தொகையான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இன்றைய இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொடவின் மனைவி, பொதுமக்கள், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்றாகும். சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கின் பல்வேறு இடங்களில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் இலங்கை அரசாங்கத்தின் முப்படைகளால் யுத்ததிற்கு முன்பும் யுத்ததிற்கு பின்பும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி இன்றைய தினம் புதன் கிழமை மன்னார் சதோச மனித புதைகுழியில் இருந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி இடம் பெற்றது.

வடமாகாணம் முழுவதும் உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், சட்டத்தரணிகள், அருட்தந்தையர்கள் உட்பட பலர்  குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மன்னார் சதோச மனித புதைகுழியில் ஆரம்பமான குறித்த போராட்டம் மன்னார் சுற்று வட்ட பாதை ஊடாக தபாலகம் வைத்திய சாலை ஊடாக மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இறுதி நிகழ்வுடன் நிறைவடைந்தது

குறித்த போராட்டதில் ஈடுபட்டவர்கள் கறுப்பு கொடிகளை ஏந்தி காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் புகைப்படங்களை சுமந்து பல்வேறு கோஷங்களை எழுப்புயவாரு போராட்டத்தில் ஈடுப்ட்டனர்

அறகலய போராட்டக்காரர்களை ஏமாற்றவே இனவாத, மதவாதம் தூண்டப்படுகிறது – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்

ஆட்சியாளர்களுக்கு எதிரான பொதுமக்கள் போராட்டத்தை முன்னெடுத்தவர்களை ஏமாற்றவே தற்போது நாட்டில் இனவாத, மதவாத சக்திகள் முளைவிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அறகலய போராட்டக் காரர்களை ஏமாற்றவே இனவாத மதவாத சக்திகள் முனைகின்றன.

இனவாத மதவாத சக்திகள் போராட்டக்காரர்களுக்கு வழங்கிய உறுதிமொழியிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்களா?

இதை ஆட்சி மாற்றத்திற்காக போராடியவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

அறகலய போராட்டக்காரர்களுக்கு முறைமை மாற்றம் ஒன்றை செய்வோம் என்று உறுதிமொழி வழங்கியவர்கள் இன்று இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டுவதன் மூலம் தங்கள் உறுதிமொழிகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முயற்சிக்கிறார்களா?

இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி ஆட்சி பீடம் ஏறியவர்களை நாட்டு மக்களே தவறை உணர்ந்து கொண்டு அறகலயப் போராட்டத்தை முன்னெடுத்து துரத்தினார்கள். போராட்டக்காரர்கள் முன்வைத்த முறைமை மாற்றம் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஆறு மாத காலத்திற்குள் அதை செய்து முடிப்பதாக உறுதிமொழி வழங்கிவிட்டு இன்னும் அது பற்றி எதுவுமே செய்யாது உள்ளனர்.

மாறாக மீண்டும் இனவாத மதவாத கோஷங்களை எழுப்பிக் கொண்டு தாங்கள் போராட்டக்காரருக்கு வழங்கிய உறுதிமொழிகளை மடைமாற்றம் செய்து தப்பித்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். இதை ஆட்சி மாற்றத்திற்காக போராடியவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக சரத் வீரசேகர, உதய கம்மாம்பிள்ள, விமல் வீரவன்ச மற்றும் அரசியலில் ஈடுபட்டுள்ள புத்த பிக்குகள் உட்பட பலர் அறகலய போராட்ட காலத்திலும் பின்னரும் தலைமறைவாக அஞ்சி வாழ்ந்தனர். போராட்டக் காரர்களிடம் இருந்து தப்பிக்க அவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டனர். இன, மத பேதங்களை கட்டவிழ்த்து ஆட்சியாளர்கள் சிங்கள மக்களை ஏமாற்றி நாட்டைக் கொள்ளையடித்தனர் என்பதே போராட்டக் கார்கள் முன்வைத்த வாதம். அதற்கு பரிகாரமாக முறைமை மாற்றத்தை கோரினர். புதிய அரசியல் யாப்பினை உருவாக்கி அக்கோரிக்கையை நிறைவேற்ற உறுதிமொழி வழங்கி மூச்சு விட்டவர்கள் அதை நிறைவேற்றாமல் இனவாத மதவாத கருத்துக்களை எழுச்சி பெற வைத்து நாட்டு மக்களை மீண்டும் ஏமாற்ற முயலுகிறார்கள்.

பொருளாதார சிக்கல்களில் இருந்து நாடு சுமுகநிலையை அடைந்து மீள முயற்சித்துக் கொண்டிருந்தாலும் முறைமை மாற்றம் சம்பந்தமாக எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் இதுவரை கைக் கொள்ளவில்லை. இந்த காலக்கெடு முடிந்து போராட்டக்காரர்கள் மீண்டும் தலையெடுத்து விடக் கூடாது என்பதற்காக தமிழ் மக்கள் மீது இனவாதத்தையும் மதவாதத்தையும் கட்டவிழ்த்துவிட்டு தங்கள் உறுதி மொழிகளில் இருந்து தப்பிப்பதற்கும் போராட்டக்காரர்களை ஏமாற்றுவதற்கும் முயற்சி செய்கிறார்களா என்ற சந்தேகம் உறுதியாகி வருகிறது.

சிங்கள மக்கள் குறிப்பாக போராட்டக் காரர்களை இதை கவனத்தில் கொள்ள வேண்டும். இனவாத மதவாத சக்திகள் மீண்டும் ஆட்சி பீடம் ஏற இடமளிக்கக் கூடாது. இது ஒட்டு மொத்த நாட்டிற்கும் கேடு விளைவிக்கும்

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.