ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கள் (19) ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான வாய்மொழி மூல அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி அமர்வில் வாசிக்கப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமானதுடன். அன்றைய தினமே இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டின் எழுத்துமூல அறிக்கை வாசிக்கப்பட்டது.

அதுமாத்திரமன்றி. அக்கூட்டத்தொடரில் ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் கொண்டுவரப்பட்ட 51/1 என்ற புதிய தீர்மானம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இவ்வாண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52ஆவது கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பான விசேட தீர்மானங்களோ அல்லது விவாதங்களோ உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது கூட்டத்தொடர் இம்மாதம் 19ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி, எதிர்வரும் ஜுலை மாதம் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தொடரில் எதிர்வரும் 21ஆம் திகதி புதன்கிழமை ஜெனிவா நேரப்படி, பி.ப 3 மணிக்கு இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வாய்மொழி மூல உரை இடம்பெறவுள்ளது.

இதன்போது, ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற 51/1 தீர்மானத்தின் பிரகாரம், நாட்டின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும், பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழல் மோசடிகள் என்பன மனித உரிமைகள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

அன்றைய தினம் ஈரான் மற்றும் நிகரகுவா ஆகிய நாடுகளின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து முறையே எழுத்துமூல அறிக்கை மற்றும் உயர்ஸ்தானிகரின் வாய்மொழி மூல அறிக்கை என்பனவும் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இனவழிப்புக்கு நீதி கோரி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்

தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட வகையில், கட்டமைக்கப்பட்டு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இனவழிப்புக்கு நீதி கோரியும் அதனை தடுத்து நிறுத்த கோரியும்,  பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன், தமிழர் தரப்பினர் மாநாடு ஒன்றினை நடத்தியுள்ளனர்.

நேற்று (14.06.2023) பிரித்தானியா பாராளுமன்ற வளாகத்தில் இந்த மாநாடு இடம்பெற்றுள்ளது.

சிறப்பாக தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழிச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள், மற்றும் சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமாகிய வி.எஸ்.எஸ். தனஞ்சேயன் கலந்து கொண்டனர்.

வடக்கு, கிழக்கில் உள்ள தொல்லியல் சின்னங்கள் பிரிவினைவாதிகளாலும், தீவிரவாதிகளாலும் அழிக்கப்படுகின்றன – உதய கம்மன்பில

முல்லைத்தீவு குருந்தூர்மலை உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் சின்னங்களை பிரிவினைவாதிகளிடமிருந்தோ அல்லது தீவிரவாதிகளிடமிருந்தோ அல்ல, தற்போதைய அரசாங்கத்திடம் இருந்துதான் காப்பாற்ற வேண்டியுள்ளது என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இன்று (15) தெரிவித்தார்.

இலங்கையின் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுப் பாரம்பரியங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருப்பதாகத் தெரிவித்த கம்மன்பில, அமைச்சர் சிறில் மத்யூ யுனெஸ்கோ அமைப்பிற்கு அனுப்பியுள்ள முறையீட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த 276 இடங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவை 1983 ஆம் ஆண்டளவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

தற்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதுடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்லியல் சின்னங்கள் பிரிவினைவாதிகளாலும், தீவிரவாதிகளாலும் அழிக்கப்படுவது மட்டுமன்றி, அரசாங்க அதிகாரிகளும் செயலற்றவர்களாகவும், நீதிமன்றங்களுக்கு பொய்யான அறிக்கைகளை வழங்கி ஆதரவளிப்பதாகவும் அவர் கூறினார்.

எனவே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புராதனச் சின்னங்கள் அழிக்கப்பட்டமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்ற பிரேரணையை எதிர்வரும் 19ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிப்பதாக எதிர்பார்ப்பதாக உதய கம்மன்பில தெரிவித்தார்.

பிவித்துரு ஹெல உறுமய கட்சி அலுவலகத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ராஜபக்சர்களை நம்பி பொதுஜன பெரமுன உருவாக்கப்படவில்லை

ராஜபக்சர்களை மட்டுமே இலக்காக கொண்டு பொதுஜன பெரமுன தோற்றம் பெறவில்லை என வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

உடுகம்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற கட்சித் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொhபாக அவர் மேலும் தெரிவிக்கையில், “உண்மையான சில வரலாறு தெரியாத இளம் தலைமுறையினரே ராஜபக்ஷர்கள் தொடர்பில் தவறான நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் உருவாக்குகின்றனர்.

பொருளாதார அரசியல் ரீதியில் நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்ட போது ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் சிறந்தது என்பதை மக்கள் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

எனவே இந்த நிலையில் ஜனாதிபதியின் காலை வாரி விடுவது முறையற்றது. பொதுஜன பெரமுனவுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முரண்பாடு இருப்பதாக கூறப்படுவது அடிப்படையற்றதாகும்.

அவரது அரசியல் அனுபவம், சர்வதேச உறவுகள் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.

தேர்தல் ஒன்று இடம்பெற்றால் பாரிய மாற்றம் ஏற்படும்.

ஒருசில சிரேஷ்ட அரசியல்வாதிகள் அதிருப்தியடைந்துள்ளனர். கடந்த ஆண்டின் நிலையையும் தற்போதைய நிலையையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். பொருளாதார மீட்சிக்காக சிறந்த திட்டங்களை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார்.

எனவே நாட்டினது நலனை முன்னிறுத்திச் செயற்படுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ரஷ்யாவின் உதவியுடன் அணுமின் சக்தித் திட்டம் – சர்வதேச அணுசக்தி நிறுவனம் ஆய்வு

இலங்கையில் அணுமின் நிலையத்தை அமைப்பதற்கான ரஷ்யாவின் திட்டங்களை சர்வதேச அணுசக்தி நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.

இந்தநிலையில் இந்தத் திட்டம், நாட்டின் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டு தற்போது சர்வதேச அணுசக்தி நிறுவன நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே தெரிவித்துள்ளார்.

அதன்படி அணுமின் நிலையத்தை மிதக்க வைப்பதா அல்லது நிலத்தில் நிர்மாணிப்பதா? என்பது பற்றிய விவாதம் தற்போது இடம்பெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அணுமின் நிலையங்களில் பணிபுரியும் நிபுணர்களுக்கான பயிற்சிகளை ரஷ்யாவின், ரஷ்ய அரச அணுசக்தி கூட்டுத்தாபனமான (Rosatom) வழங்கவுள்ளது.

இந்தநிலையில் குறித்த அணு மின்சார நிலையத்தின் உற்பத்தி நிலையத்தின் திறன் 300 மெகாவோட்டாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரத்தை கைப்பற்ற சில குழுக்கள் முயல்வதாக ருவான் விஜயவர்தன குற்றச்சாட்டு

நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற எதிர்க்கட்சியை சேர்ந்த சில குழுக்கள் முயல்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நாடு வங்குரோத்து அடைந்திருந்தவேளையில் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச, எதிர்க்கட்சி தலைவருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கும் ஜே.வி.பியின் தலைவருக்கும் பிரதமர் பதவியை வழங்க முன்வந்தார்.

ஆனால் அனைவரும் அதனை ஏற்க மறுத்தனர் . ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் அதனை ஏற்றுக்கொண்டு நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியுள்ளார்,

எனினும் எதிர்க்கட்சி உட்பட சில குழுக்கள் அதிகாரத்தை கைப்பற்ற முயல்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடவுச்சீட்டுக்களை இணையமூலம் வழங்கும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பம்

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கிலேயே இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய வேலைத்திட்டத்தின் கீழ், விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டை பொதிகள் சேவைமூலம் தமது வீடுகளுக்கே பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒரு நாள் கடவுச்சீட்டு சேவை வழமை போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு செல்வோரிடம் நிதி மோசடியில் ஈடுபடுபவர்கள் தொடர்பிலான தகவல்கள் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்திருந்தது.

இதனையடுத்தே, வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்கான குறித்த இலகு வழி வேலைத்திட்டத்திற்கான யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

இன்று முதல் அமுலுக்கு வரும் இந்த நடைமுறையால், நிதி மோசடியைத் தவிர்த்துக் கொள்ள முடியும் என்பதோடு, பொது மக்களுக்கும் இது பாரிய நன்மையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலைகளில் நெரிசல் 259 % அதிகரிப்பு

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் நெரிசல் 300 முதல் 400 வீதம் வரை அதிகரித்துள்ளதாக கோபா குழு தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 11,762 கைதிகள் மட்டுமே அடைக்கப்படக்கூடிய நிலையில், தற்போது 26,791 கைதிகள் உள்ளதாக கோபா குழு தெரிவித்துள்ளது.

இதனால், சிறைச்சாலைகளில் நெரிசல் 259 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில சிறைகளில் நெரிசல் 300 முதல் 400 வீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் கோபா குழு தெரிவித்துள்ளது.

17,502 கைதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளடன், 9,289 பேர் தண்டனைக் கைதிகளாக உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் பொதுஜன பெரமுனவின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது

நாட்டின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் வெளியிட்டுள்ளது.

ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நாட்டினது நெருக்கடி நிலைமைகளின்போது கட்சிகளின் பங்களிப்புக்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் உள்விவகாரங்களுடன் தொடர்புபட்ட விடயங்களில் தலையிடக்;கூடாது என பொதுஜனபெரமுன வேண்டுகோள் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நிலவும் அரசியல் பொருளாதார நெருக்கடி குறித்த பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மாதமொருமுறை ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்திப்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, பொதுச் செயலாளர் சாகர காரியவசம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

சென்னை – காங்கேசன் துறை முதலாவது பயணிகள் கப்பல் நாளை மறுதினம்

இந்தியாவில் இருந்து ஒரு தொகுதி பயணிகளுடன் கப்பல் ஒன்று காங்கேசன் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் சனிக்கிழமை இந்த கப்பல் காங்கேசன் துறைமுகத்துக்கு வரவுள்ளது.

குறித்த கப்பலை வரவேற்பதற்கு துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு யாழிற்கு விஜயம் மேற்கொள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காங்கேசன் துறைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இதன் முதற்கட்டமாக இந்த பரீட்சாத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.