இலங்கையில் எரிபொருள் விநியோகச் செயற்பாடுகளுக்காக மேலும் ஒரு புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கைக்குள் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் பெற்றோலியப் பொருள் இறக்குமதி, களஞ்சியம், விநியோகம் மற்றும் வியாபார நடவடிக்கைளுக்காக இலங்கை அரசாங்கம் ,ஆர்.எம். பார்க்ஸ் (RM Parks Inc) நிறுவனத்துடன் நீண்ட கால ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (08) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னிலையில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் எம்.பீ.டீ.யூ.கே.மாபா பத்திரன மற்றும் ஆர்.எம். பார்க்ஸ் தலைவர் ஜெஸ்டின் டிவிஸ்(Justion Divis) ஆகியோர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொடுக்கப்பட்டதன் பின்னர் ஆர்.எம். பார்க்ஸ் நிறுனவனம் ஷெல் நிறுவனத்துடன் இணைந்து 45 நாட்களுக்குள் முன்னெடுப்புக்களை ஆரம்பிக்க இந்த ஒப்பந்தத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளது.

கடன் பத்திரங்களை திறந்து பட்டியல்களை மீளச் செலுத்துவதற்கு போதியளவான வெளிநாட்டு வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால் கடந்த காலத்தில் இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் எரிபொருள் இறக்குமதியில் நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தன.

அதனால் நுகர்வோருக்கு தொடர்ச்சியான எரிபொருள் விநியோகச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக மேற்படி மின்சக்தி எரிசக்தி அமைச்சினால் இந்த மூலோபாயத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன் முதல் கட்டமாக, அமைச்சரவை அங்கீகாரத்துடன், நாட்டில் செயல்படும் விநியோக முகவர் வலையமைப்புகள் மூலம் பெற்றோலிய உற்பத்திகளை இறக்குமதி செய்தல், களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்வதற்காக எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளில் நிறுவப்பட்டுள்ள புகழ்பெற்ற நிறுவனங்களுக்கு முதலீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது.

இங்கு, சந்தையில் நுழையும் புதிய சில்லறை விநியோகஸ்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள முக்கிய நிபந்தனைகளில் , உள்நாட்டு வங்கிகளில் தங்கியிருக்காமல் அந்நியச் செலாவணித் தேவைகளைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் திறன் இருக்க வேண்டும் என்பது பிரதானமானதாகும். அதன்படி, இந்த நிறுவனங்கள் குறைந்தபட்சம்,செயற்படத் தொடங்கி ஆரம்ப ஓராண்டு காலத்தில் வெளிநாட்டு மூலங்கள் ஊடாக எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு தங்கள் சொந்த நிதியைப் பயன்படுத்த வேண்டும்.இதற்கான அவர்களின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு தங்கள் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க அழைப்பு விடுக்கப்படும்.

2002 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பெற்றோலியப் பொருட்கள் உற்பத்தி (சிறப்பு ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டத்தின் விதிகளுக்கு இணங்க, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழு (CASC) மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு (TEC) ஆகியவை முன்மொழிவுகளை ஆய்வு செய்து, பேச்சுவார்த்தைகளுக்கு உட்பட்டு பின்வரும் நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்க பரிந்துரைத்தன.

அந்த நிறுவனங்கள்,

• Sinopec Fuel Oil Lanka (Private) Limited, F5, ஹம்பாந்தோட்டை மெரிடைம் நிலையம்,மிரிஜ்ஜவெல, ஹம்பாந்தோட்டை

• United Petroleum Pty Ltd, 600, கிளென்பெரி வீதி.ஹேதோன், விக்டோரியா 3122, ஆவுஸ்திரேலியா.

• Shell PLC உடன் ஒத்துழைப்புடன் RM Parks, 1061 N பிரதான வீதி, போர்ட்டர்வில் , கலிபோர்னியா 93257, அமெரிக்கா.

சினோபெக் ஒயில் லங்கா தனியார் நிறுவனம் (M/s Sinopec Fuel Oil Lanka (Private) Limited ) (M/s Sinopec) மற்றும் அதன் தாய் நிறுவனத்துடன் நாட்டில் சில்லறை எரிபொருள் வர்த்தகத்தில் பிரவேசிப்பதற்கு கடந்த மே மாதம் 22 ஆம் திகதி அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர்களான டி.வி.சானக, இந்திக அனுருத்த, ஷெஹான் சேமசிங்க தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்க் மற்றும் குறித்த அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ இராஜினாமா

சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

அவர் தனது இராஜிநாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

டிக்கிரி கொப்பேகடுவவை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுநராக நியமித்திருந்தார்.

வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம் 2300 ஆவது நாளை எட்டியது

வவுனியாவில்வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வியாழக்கிழமை (08) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இன்றுடன் 2300 ஆவது நாட்களாக வவுனியாவில் சுழற்சி முறையிலான போராட்டத்தினை மேற்கொண்டு வரும் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் போராட்ட பந்தலிற்கு முன்பாக குறித்த போராட்டமானது இடம்பெற்றுள்ளது.

இதன் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் படங்களினை ஏந்தியவாறும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை ஏந்தியவாறும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தீர்வு கிடைக்கும் வரை இவ் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.

சென்னை – இலங்கை இடையே சொகுசு கப்பல் சேவை ஆரம்பம்

 சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள சொகுசு கப்பல் இன்று(08) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்திய சுற்றுலா பயணிகள் 744 பேருடன் உலகம் முழுவதும் பயணம் செய்துவரும் பஹாமாஸ் அரசுக்கு சொந்தமான இம்ப்ரஸ் (IMO-8716899) என்ற கப்பல் திருகோணமலை துறைமுகத்தில் உள்ள அஷ்ரஃப் துறையில் நிறுத்தப்பட்டது.

திருகோணமலை துறைமுகத்திலிருந்து இலங்கை வந்திறங்கிய இந்த சுற்றுலாப் பயணிகள் தம்புள்ளை, சிகிரியா, திருகோணமலை போன்ற இடங்களுக்குச் செல்வுள்ளனர்.

அதன் பின்னர், இந்தக் கப்பல் இந்தியாவின் சென்னை துறைமுகத்துக்குப் புறப்படும் என்று துறைமுக அதிகார சபையின் வதிவிட முகாமையாளர் சமன் பெரேரா தெரிவித்தார்.

யாழ் – இரத்மலானை விமான சேவையை அதிகரிப்பது தொடர்பில் ஆராய்வு

இந்தியாவின் விமான சேவை நிறுவனமான அலையன்ஸ் ஏர் இந்தியாவுடன் இணைந்து யாழ்ப்பாணம்மற்றும் இரத்மலானை விமான நிலைய செயற்பாடுகளை அதிகரிப்பது தொடர்பான அலையன்ஸ் விமான அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களை அதிகரிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணத்திற்கும் இரத்மலானைக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இதன்போது ஆரயப்பட்டன.

அலையன்ஸ் ஏர் இந்தியா குழு இந்த திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்ததுடன் மேலும் விமான நிறுவனம் பரிந்துரைகளை பரிசீலிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளது.

இலங்கை முகங்கொடுக்கும் சவால்களை முறியடிக்க அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும்

இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார ரீதியான சவால்களை முறியடிப்பதற்கும், கட்டமைப்பு ரீதியிலான மறுசீரமைப்புக்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்குமென அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவிச்செயலாளர் ரொபர்ட் கப்ரொத் உறுதியளித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த 5 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்திருந்த அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவிச்செயலாளர் ரொபர்ட் கப்ரொத், நேற்று செவ்வாய்க்கிழமை (6) வரை நாட்டில் தங்கியிருந்தார்.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளடங்கலாகப் பல்வேறு முக்கிய தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார்.

அதன்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பின்போது, இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார ரீதியான சவால்களை முறியடிப்பதற்கும், கட்டமைப்பு ரீதியிலான மறுசீரமைப்புக்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்குமென ரொபர்ட் கப்ரொத் உறுதியளித்தார்.

அத்தோடு இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் மறுசீரமைப்புக்களை மேலும் ஆழப்படுத்துவதற்கும், நிலைபேறான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் அவசியமான ஒத்துழைப்புக்களை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச பொதுக்கட்டமைப்புக்களின் அதிகாரிகளையும் அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவிச்செயலாளர் ரொபர்ட் கப்ரொத் சந்தித்துக் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

யாழ்- சென்னை விமான சேவை 100 ஆவது நாள் கொண்டாட்டம்

யாழ். சென்னை விமான சேவை 100 நாட்களை நிறைவு செய்யும் நிலையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மக்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என யாழ் இந்திய துணை தூதர் ராகேஷ் நடராஜ் ஜெபாஸ்கர் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான இந்தியன் ஏர்லைன்ஸ் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டு 100 நாட்கள் நிறைவடையும் நிகழ்வை கொண்டாடிய நிலையில் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த விமான சேவையானது இரு நாட்டு இணைப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பது மட்டுமன்றி சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் உதவியது.

இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவதற்கும் பொருளாதார மீட்சியை சரி செய்வதற்கும் இரு நாட்டு விமான சேவை வாய்ப்பாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு இலங்கை வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி “இந்தியாவுக்காக நான் கனவு காணும் எதிர்காலம் எமது அண்டை நாடுகளுக்கும் நான் விரும்பும் எதிர்காலம்” எனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக ஹர்ஷ டி சில்வா

பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் முன்மொழியப்பட்டிருந்தது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஆர்ப்பாட்டத்தை கலைக்க கண்ணீர்ப்புகை

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் புதன்கிழமை (7) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கு பொலிஸாரினால் நீர்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் நுகேகொட – விஜேராம சந்திக்கு அருகில் இவ்வாறு பொலிஸாரால் நீர்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக பொது மக்களுக்கு இடையூறு ஏற்படக் கூடும் எனக் குறிப்பிட்டு கோட்டை , கொள்ளுபிட்டி மற்றும் கொம்பனித்தெரு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பல இடங்களுக்குள் பிரவேசிப்பதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்திருந்தது.

அதற்கமைய அலரி மாளிகை, பிரதமர் அலுவலகம் , ஜனாதிபதியின் பிரத்தியேக இல்லம் , ஜனாதிபதி செயலகம் , ஜனாதிபதி மாளிகை , நிதி அமைச்சு , காலி முகத்திடல் மற்றும் காலி முகத்திடல் சுற்றுவட்டத்தை அண்மித்த பகுதிகளுக்குள் பிரவேசிப்பதற்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அத்தோடு பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க வேண்டாம் எனவும் , பொது மக்களை தூண்டும் வகையில் வன்முறை சம்பவங்களை மேற்கொள்ள வேண்டாமெனவும் கோட்டை நீதவான் நீதிமன்றம் ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை அதிகரிக்குமாறு வலியுறுத்தியும் , வாழ்க்கை செலவைக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் , பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் என்பவற்றை மீளப் பெறுமாறும் வலியுறுத்தி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கஜேந்திரகுமார் எம்.பி பிணையில் விடுதலை

கைதுசெய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மருதங்கேணி சம்பவம் தொடர்பில் கைதான கஜேந்திரகுமார் எம்.பி. 5 லட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.