குரங்கு ஏற்றுமதிக்கும் தமக்கும் தொடர்பில்லை – சீன அரசாங்கம்

இலங்கையிடம் குரங்குகள் கோரப்பட்டுள்ளதாக கூறப்படும் விடயம் தொடர்பாக தமக்கு எந்த தகவல்களும் தெரியாது என சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விலங்குகள் மற்றும் தாவரங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை மேற்பார்வையிடும் சீன நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளதாக சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், பரிசோதனை நோக்கத்திற்காக தனியார் சீன நிறுவனமொன்றுக்கு, ஒரு இலட்சம் மக்காக் குரங்குகளை இலங்கை ஏற்றுமதி செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

அத்தகைய கோரிக்கை குறித்து தமக்கு எந்த தகவல்களும் தெரியாது என்றும், எந்தத் தரப்பிலிருந்தும் அத்தகைய விண்ணப்பத்தை தாம் பெறவில்லை என்றும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, அழிந்துவரும் வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாட்டின் ஒப்பந்த உறுப்பினராகவுள்ள சீனா, 1988 ஆம் ஆண்டின், அதன் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை பல திருத்தங்களுடன் ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை தூதரகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

சீன அரசாங்கம் எப்போதும் வனவிலங்கு பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுடன், சர்வதேச கடமைகளை தீவிரமாக நிறைவேற்றுகிறது.

வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான சட்டம் அமுலாக்கத்தில் சிறந்த நாடுகளில் சீனாவும் உள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகுச்சேவைக்கான அனுமதி இதுவரை இந்திய அதிகாரிகளால் வழங்கப்படவில்லை

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் படகு சேவையை ஆரம்பிப்பதற்கு தேவையான அனுமதிகளை வழங்கியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்த்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் படகு சேவைக்கு நான்கு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன என்றும் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்குத் தேவையான அனுமதி இதுவரை இந்திய அதிகாரிகளால் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் காரைக்கால் துறைமுகத்துக்கும் இடையிலான படகு சேவையை தொடங்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்த்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்; வளி மண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களும் மொனராகலை, குருணாகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் மனித உடல் வெப்பநிலை தீவிர எச்சரிக்கை நிலை வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியிடங்களில் தேவையற்ற விதமாக நடமாடுவதை தவிர்க்குமாறும் அதிக நீரை பருகுமாறும் வெளிர்நிறத்திலான மெல்லிய ஆடையை அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பால்மா விலையை மேலும் குறைக்க நடவடிக்கை

எதிர்காலத்தில் பால்மாவின் விலைகளை மேலும் குறைப்பதற்கு நாட்டிலுள்ள பிரதான பால் மா இறக்குமதி நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கத்தை வெளிப்படுத்தியதாக முகநூலிலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பான அறிக்கை விரைவில் வர்த்தக அமைச்சுக்கு அனுப்பப்பட உள்ளதாக வர்த்தக அமைச்சர் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைகளில் தட்டுப்பாடான மருந்துகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை

நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு நிலவும் 60 வகையான மருந்துகளை தனியாரிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது மருந்து பற்றாக்குறை படிப்படியாகக் குறைவடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மாதத்திற்கு முன்னதாக நாட்டில் 170 இற்கும் அதிகமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்.பண்ணை பகுதியில் நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சித்திரை புத்தாண்டு தினத்தில் அன்று தீவக நுழைவாயிலில் நயினாதீவு அம்மனின் சிலை ஒன்று வைக்கப்பட்டு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.

இதனை அடுத்து யாழ்ப்பாண பொலிஸாசாரினால் குறித்த சிலையினை அகற்ற அனுமதி கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்ப்பாண நீதிமன்றினால் குறித்த சிலையுடனு தொடர்புடையோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் அழைப்பு கட்டளை விடுதிருந்தது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, சிறிகாந்தா, எம்.ஏ.சுமந்திரன் உட்பட பல சட்டத்தரணிகளும் முன்னிலையாகியிருந்தனர்.

குறித்த வழக்கு தொடர்பாக பொலிஸாரின் வழக்கீட்டு தகமை மற்றும் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் குறித்து கேள்வி எழுப்பி இருவரும் நீண்ட சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.

இதனை அடுத்து எழுத்துமூல சமர்ப்பணங்களிற்காக வழக்கு எதிர்வரும் 04 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன் பின்னர், சட்டத்தரணி சிறிகாந்தா இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

உலகளாவிய பௌத்த உச்சி மாநாட்டை ஆரம்பித்து வைக்கிறார் பாரதப் பிரதமர்

உலகளாவிய பௌத்த உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியில் நாளை மறுதினம் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இந்த உச்சிமாநாடு முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை, வியட்நாம், அமெரிக்கா, லாவோஸ், பிரேசில் உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக இந்திய மத்திய கலாசார அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் திபேத் ஆன்மிக தலைவர் தலாய்லாமாவும் பங்கேற்பார் என எதிர்பார்ப்பதாகவும், இன்னும் அவரின் வருகை உறுதிச்செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாநாட்டில் 30 நாடுகளைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் மற்றும் அறிஞர்கள் ஒன்றிணைவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

கலாசார அமைச்சு மற்றும் சர்வதேச பௌத்த கூட்டமைப்பு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்படும் இரண்டு நாள் உச்சிமாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து 150 பிரதிநிதிகளும், வெளிநாட்டிலிருந்து 171 பிரதிநிதிகளும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் வியாழன் முதல் காலி முகத்திடலில் சமய நிகழ்வுகள் சார்ந்த ஒன்றுகூடல்களுக்கு மாத்திரமே அனுமதி

கொழும்பு – காலி முகத்திடலை பொது மக்கள் இடையூறு இன்றி நேரத்தை செலவிடும் இடமாக மாத்திரம் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில், காலி முகத்திடலில் சமய நிகழ்வுகள் தவிர்ந்த எந்தவொரு இசை நிகழ்வுகள், அரசியல் கூட்டங்கள் அல்லது பிற ஒன்றுகூடலுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை 220 மில்லியன் செலவில் காலி முகத்திடலை அபிவிருத்தி செய்யும் பணியை இலங்கை துறைமுக அதிகாரசபை முன்னெடுத்துள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் காலிமுகத்திடலில் போராட்டம் இடம்பெற்ற காலத்தில் காலி முகத்திடலுக்கு ஏற்பட்ட சேதங்களைத் தொடர்ந்து புனரமைப்புக்காக 6.6 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

மக்கள் அதிகளவில் கூடினால் காலி முகத்திடலின் அழகைப் பேண முடியாத நிலை ஏற்படும் என்பதால் 20ஆம் திகதி முதல் சமய நிகழ்வுகளுக்கு மாத்திரம் காலி முகத்திடலைப் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சீன அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

இலங்கையில் சீன அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்க கூடிய செயற்பாடுகளுக்கு வடக்கு கிழக்கில் இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் நேற்று இடமபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்

சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கோரி முல்லைத்தீவில் போராட்டம்

முல்லைத்தீவு கடலில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சுருக்குவலை மற்றும் ஒளிபாச்சி மீன்பிடித்தல் போன்ற சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கோரி வட்டுவாகல் பாலத்தில் இருந்து கோட்டபாய கடற்படை முகாம் வரை சென்ற கடற்தொழிலாளர்கள் அங்கு கடற்படை முகாமை முற்றுகையிட்டு தங்கள் கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த கடற்தொழில் அமைப்புக்கள் ஏற்பாடு செய்த இந்த கவனயீர்ப்பு போராட்டநடவடிக்கையின்போது முல்லைத்தீவு கடலினை நம்பி 5ஆயிரத்திற்கு மேற்பட்ட கடற்தொழிலாளர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.

இந்த நிலையில் சாலை தொக்கம் கொக்கிளாய் வரையான கடற்பரப்பில் சுருக்குவலை ஒளிபாச்சி மீன்பிடித்தல் போன்ற சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இதனால் மீனவர்களின் வலைகள் அறுக்கப்படுவதால் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் சிறுமீன் இனங்கள் அழிக்கப்படுகின்றன.

கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை இலங்கை கடற்படையினர் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கடற்தொழில் அமைச்சர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்ப்டட தீர்மானத்திற்கு அமைய காவல் அரண்களை அமைத்து கட்டுப்படுத்தி தருமாறும் கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இந்த நிலையில் கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளை தளபதிற்கும் கோட்டபாய கடற்படை முகாம் தளபதிற்கும் கடற்தொழிலாளர்கள் மனு கையளித்துள்ளதுடன்.

கடற்தொழில் அமைச்சருக்கும் விடையத்தினை தெரியப்படுத்தி இன்று இரவிற்குள் முடிவு சொல்லப்படும் என அறிவித்துள்ளதை தொடர்ந்து கடற்தொழிலாளர்கள் கலைந்து சென்றுள்ளார்கள்.